privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !

ஜப்பானில் மோடி – துன்பத்தில் மக்கள் !

-

ட்டு போட்ட மக்களிடம் நோட்டு செல்லாது, கொஞ்சம் சிரமம்தான் என்று வாழ்த்து தெரிவித்த கையோடு ஜப்பானுக்கு விமானமேறிவிட்டார் திருவாளர் மோடி. அவருக்கோ, அவரது கூட்டத்திற்கோ செல்லாத நோட்டெல்லாம் பிரச்சினையில்லை. கார்டு வைத்துக் கொண்டோ இல்லை அதிகாரத்தை காட்டிக் கொண்டோ அடிப்படை மற்றும் ஆடம்பரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அரசு பயங்கரமாக பல்வேறு முறைகளில் யோசித்திருக்காதா, இதெல்லாம் பிரச்சினையா என்று பட்டையுடன் சின்னத்திரையில் தோன்றும் காவிக்கறை சமூக ஆர்வலர்கள் எக்காளம் செய்கிறார்கள்.

KURUPPU PANAM MODI
ஓவியம் – முகிலன்

மூன்று நாட்களுக்கு அரசு துறைகள் அந்த நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் என்றார்கள். அப்படி எந்த அரசுத் துறையும் பெறவில்லை. அது அம்மாவின் டாஸ்மாக்கோ இல்லை ஆவின் பால் நிலையமோ, அரசு பேருந்துகளோ எங்கும் யாரும் அந்த நோட்டுக்களை தீண்டவில்லை. விமானமேறும் மேன்மக்களிடம் மட்டும் அந்த நோட்டுக்களை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டார்கள். இதுவே இப்படி என்றால் தனியார் கடைகள், மருத்துவமனைகள், இதர நிறுவனங்கள், பெட்ரோல் வங்கிகளைச் சொல்லவே வேண்டாம்.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகளில் கூட்டம் அலை பாய்கிறது. அப்போதும் குறைந்தது 4000 ரூபாய் மட்டும்தான் அதையும் 2000 ரூபாய் புதிய நோட்டாக அளிக்கிறார்கள். பழைய நூறு ரூபாயோ இல்லை புதிய 500 ரூபாயோ கிடையாது. ஏழை எளிய மக்கள் வெறும் 500 அல்லது 1500, 3,500 என்று கொண்டு சென்றால் பெரும் பிரச்சினை. குறைந்தது புதிய 2000 ரூபாய் பெறுமளவு நீங்கள் நான்கு 500 அல்லது இரண்டு 1000 ரூபாய் கொண்டு செல்லவேண்டும். பிறகு அது ரவுண்டாக ஆயிரங்களில் முடியவில்லை என்றால் மிச்சமிருக்கும் 500க்கு நோட்டுக்கள் கிடையாது.

வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அதை அடிக்கடி பயன்படுத்தியிராத மக்கள் கணக்கில் இருக்கும் சொற்ப பணத்தோடு போடும் பணத்தையும் சேர்த்து 1500 ரூபாய் கேட்டால் கிடையாது. மக்களுக்கு எதுவும் புரியவில்லை.

MODI 1சரி வாங்கிய 2000 ரூபாயும் இப்போது செல்லாத நோட்டு போலவே உள்ளது. அதை வைத்து 100 இல்லை 500 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் சில்லறை கிடையாது என்பதால் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருக்கிறது. மருத்துவம், திருமணம், அன்றாடக் கூலி, கடன் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இந்த இரண்டு நாட்களில் மக்கள் படாதபாடு படுகிறார்கள். தயக்கத்துடன் சில கடைகளில் 500 ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா என்று கேட்கும் பெண்களுக்கு யார் கொடுக்க முடியும்?

பட்டினி கிடப்போர், மருந்து வாங்க முடியாதோர், திருமணச் செலவு செய்ய முடியாமல், மூகூர்த்தத்தையும் விட முடியாமல் மக்கள் படும் துன்பங்களெல்லாம் இந்த அயோக்கியர்களுக்கு தெரியுமா? தெரிந்தாலும் தேசத்திற்க்காக நீங்கள் கஷ்டப்படுங்கள் என்று நீரோ போல சிரிக்கிறார்கள். அனைத்து ஏ.டி.எம்களும் பணத்தை வெளயிடவில்லை. இயங்கும் எந்திரங்களும் ஒரிரு மணிகளுக்குள் முடங்கிப் போய்விடுகின்றன. ஒரு நாள் வாங்கியவர்களுக்கு மறுநாள் கிடையாது என வங்கிகள் கைவிரிக்கின்றன. கேட்டால் எங்களுக்கு வந்த உத்திரவு அப்படித்தான் என்கிறார்கள்.

சென்னை கோயம்பேட்டில் காய்கள் வாங்க ஆளில்லாமல் வியாபாரிகள், வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் வணிகர்கள் தவிக்கிறார்கள். விடுதிகள், கடைகள், உணவகங்களில் இருக்கும் சில்லறைகளுக்கேற்ப சொற்பமாகவே வியாபாரம் நடக்கின்றன. அன்றாடம் புழங்கும் பணத்தைக் கொண்டு வாழும் கோடிக்கணக்கான மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

இந்தியாவில் கடன் அட்டைகள் (டெபிட் மற்றும் கிரெடிட்) தோராயமாக மொத்தம் எட்டு கோடி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. இதில் கிரமமாக பயன்படுத்துவோர் ஒரு கோடிக்கும் குறைவே. இவர்கள் மட்டும் கார்டுகளை தேய்த்து கொண்டு தமது வாழ்க்கையை பிரச்சினையின்றி நடத்துகிறார்கள். மீதிப்பேர் விதியை நொந்தவாறு அலைவதைத் தவிர வேறு வழியில்லை.

எந்த நாட்டிலிருந்தும் கருப்புப் பணத்தை கொண்டு வர இயலாத மோடி எல்லா நாட்டிற்கும் விடாமல் சுற்றுலா சென்று கொண்டே இருக்கிறார். அதில் இந்த முறை ஜப்பான். அதுவும் அவர் பிரதமரான பிறகு இரண்டாவது முறையாக சென்றிருக்கிறார். செல்லும் வழியில் தாய்லாந்து மன்னனுக்கு அஞ்சலி செலுத்தவும் அவர் மறக்கவில்லை. செல்ஃபிக்களுக்கான வாய்ப்பை மோடி ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.

மோடியின் ஆசை விளம்பரமென்றால் ஜப்பான் போன்ற நாடுகளின் திட்டம் முதலீடு! அதிவேக ரயில்களை இயக்கும் சக்தியை பெற்றிருக்கும் சீனாவும், ஜப்பானும் அதை மற்ற நாடுகளின் தலையில் கட்ட எப்போதும் போட்டி  போடுகின்றன. வெறும் கௌரவத்தின் சின்னமாக ஆகி வரும் இந்த அதிவேக ரயில் சீனாவில் கூட ஒரு வழித்தடத்தை தவிர மற்றவற்றில் இலாபகரமாக இல்லை. ஜப்பானிலோ இந்த ரயில்களை விரிவாக்கும் அளவு நாட்டின் எல்லையும், சந்தையும இல்லை. இந்நிலையில் இவர்கள் மூன்றாம் உலக நாடுகளை குறிவைக்கிறார்கள்.

ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாதான் மிகப்பெரும் நாடு. வேறு எந்த ஆசிய நாட்டையும் விட தனது வளங்களையும், மக்களையும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கும் இது போன்ற பெரிய நாடு நம் கண்டத்தில் வேறு இல்லை. ஆகவே மோடிக்கு விருந்தும், ஃபோட்டோவும் கொடுத்துவிட்டு இருநாடுகளும் போட்டி போட்டதில், ஜப்பான் வெற்றி பெற்றிருக்கிறது.

MODI 2(1)இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கும், இந்துத்துவத்தின் ‘தலை’ நகரமான அகமதாபாத்திற்கும் இடையே உள்ள 508 கி.மீட்டர் தூரத்தை  கடக்கும் இந்த அதிவேக ரயில் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பானையே தெரிவு செய்தார் மோடி. காரணத்தையும், பூரணத்தையும் நாம் அதானியிடம்தான் கேட்க வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு என்ன தெரியுமா? ஒரு இலட்சம் கோடி ரூபாய்! மதுரைக்கும், நெல்லைக்கும் மந்தைகள் போல அடைபட்டு முன்பதிவற்ற பெட்டிகளில் மக்கள் செல்லும் நாட்டில் குஜராத் பனியாக்கள் பயணிப்பதற்கு இத்தனை பெரிய செலவில் அதிவேக ரயில்! சமீபத்தில் கூட உயர்நீதிமன்றம் ஒரு ரயில் வண்டியில் ஏன் முன்பதிவற்ற பெட்டியை குறைத்தீர்கள், அவர்களெல்லாம் மனிதர்களில்லையா என்று கேட்டிருக்கிறது. அவர்களையெல்லாம் மனிதர்களாக மதித்தால் இங்கு மோடியோ, ஜெயாவோ ஆள முடியுமா? என்ன?

போகட்டும் மேற்கண்ட ஒரு இலட்சம் கோடி ரூபாய் திட்டத்திற்கு பிறகு இன்னும் ஐந்து அதிவேக ரயில் திட்டங்களை வைத்திருக்கும் இந்தியாவை கவனிக்க வேண்டிய தேவை ஜப்பானுக்கிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் வசம் சேரும் நிலையை விரும்பும் மோடி இந்த ஆர்டர்களை கண்டிப்பாக ஜப்பானுக்கே கொடுப்பார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாட்டின் திட்டங்களை சீனா பெற்றதற்கு போட்டியாக வியட்நாமையும், தைவானையும் பிடித்த ஜப்பானுக்கு இப்போது இந்தியாதான் மிகப்பெரிய ஆறுதல்.

தினமும் இரண்டு கோடியே முப்பது இலட்சம் மக்களை சுமந்து செல்லும் இந்திய ரயில்வேயின் தண்டவாளங்களுக்கு வயதாகி விட்டதாம். அவற்றில் பல ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டிருப்பதால், பல ரயில்கள் மெதுவாகவே பயணிக்கின்றனவாம். இதைப் பார்த்து மனம் நொந்த மோடி 8.5 இலட்சம் கோடி ரூபாய் செலவில் புதிய பாதைகள், புல்லட் ரயில்கள், நவீன ஸ்டேசன்கள் என பெரும் திட்டத்தை போட்டிருக்கிறாராம். இவற்றிற்காக 2020-ஆண்டிற்குள் முதலீடு செய்வாராம். சென்னை – குமரிக்கான இருவழிப்பாதையே ஆண்டுக்கு நூறு மீட்டர் போடுகிறார்கள். இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடத்திற்கும் என்ன நவீன மாற்றம் வரும்?

நம்மைப் போன்ற பாமரர்களின் பார்வையில் இவர்கள் ரயில்வேத் துறையை பார்க்கவில்லை. புல்லட் ரயில் போன்ற அதி உயர் செலவு பிடிக்கும் மாற்றத்தைத்தான் மோடி கம்பெனி குறிப்பிடுகிறது. இவ்வளவு பெரிய முதலீடு இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து பிடுங்கப்பட்டு அவை முறையே ஜப்பான் போன்ற ஏகாதிபாத்திய நாடுகள், அதானி, ரெட்டி பிரதர்ஸ் போன்ற தரகு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்படும். பிறகு மாநகரங்களின் கார் – மாளிகை மனிதர்கள் புல்லட் வேகத்தில் பயணிப்பார்கள். நாமோ ஓட்டைப் பேருந்துக்காக காத்திருப்போம்.

சரி கிட்டத்தட்ட பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு மோடியோ, இந்தியாவோ எங்கே போவார்கள் என்று கேட்டால் ஜப்பான் அதற்கு உதவி செய்கிறது. இந்தியாவின் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு சுமார் 81% கடனை அளிக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது. பிறகென்ன அந்தக் கடனுக்கான கந்து வட்டியை மாதந்தறும் இந்தியா அளித்து விடும். மேட்டுக்குடிகள் இங்கே மகிழ்ச்சியாக பயணிக்கலாம். புல்லட் ரயில் கொண்டு வந்த புல்லட் பாண்டி என்று மோடிக்கு கோவில் கட்டலாம்.

இந்த திட்டத்தில் யார் யார் எவ்வளவு ஆதாயம் பெறுவார்கள்? இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த நத்தம் விஸ்வநாதனை, அதே நாட்டில் நிலக்கரி சுரங்க உரிமையாளராக மாற்றியவர் அதானி. எனில் ஜப்பான் இப்போது அதானியை என்னவாக மாற்றப்போகிறது? ஒரு வேளை தாய்லாந்தின் உரிமையாளராக மாற்றுமோ தெரியவில்லை.

முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக உழைக்கும் மோடியின் இந்த கருப்பு பண ஒழிப்பு நாடகத்தில் இதுதான் கிளைமேக்ஸ்!

ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.

  1. இந்திய மக்களுக்கு எந்த நல்லது நடந்தாலும் அதை எதிர்க்கும் முதல் ஆள் வினவு (இடதுசாரிகள்) போல இருக்கு

    1964ல் ஜப்பானில் முதல் முதலாக புல்லட் ட்ரைன் கொண்டு வந்த போது அவர்கள் உலக வங்கியிடம் 80 மில்லியன் டாலர் கடன் வாங்கினார்கள், அப்போது எல்லோரும் ஏன் இவ்வுளவு பெரிய பணம் கடன் வாங்கி புல்லட் ட்ரைன் கொண்டு வருகிறார்கள் என்று பெரிய போராட்டம் எல்லாம் நடத்தினார்கள், ஆனால் இன்று ஜப்பானில் புல்லட் ட்ரைன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அவர்களின் பொருளாதாரத்தையே அது மேம்படுத்தியது. ஜப்பானை பார்த்து ஜேர்மன் பிரான்ஸ் சீனா போன்ற நாடுகள் எல்லாம் புல்லட் ட்ரைன் கொண்டு வந்து இருக்கிறார்கள் அவர்களின் பொருளாதாரமும் அதனால் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது.

    இன்று ஜப்பான் புல்லட் ட்ரைன் அமைக்க கொடுக்கும் கடனுக்கு வட்டி 0.1 சதவீதம். உங்கள் சீனா செய்வது போல் கந்துவட்டி பிசினஸ் அல்ல இது.

    இந்திய ஜப்பான் நட்புறவு வாழ்க…

    • Again the bluff by Manikandan.Even persons employed in big companies do not travel by fast train(not a bullet train but the next level fast train) in Germany because of the costly ticket.Recently,I visited Sweden.The fast train(not a bullet train) from Stockholm Central to Arlanda airport is used by the locals only when it is absolutely necessary since it is costly.With Rs 1 lakh crore to be spent on the bullet train from Mumbai to Ahemedabad,we can implement many rail projects kept pending for want of funds.In TN itself,many such projects are kept pending for more than a decade.Moreover,even businessmen from Ahemedabad will not use bullet train since the train ticket will be costlier than the air ticket and they can save time by flying.After the rise in train fare in Shadapti,Rajadhani and Duranto trains,people are increasingly travel by air.

  2. கருப்பு பணம் ஒழிந்ததற்க்கான ஏதாவது ஒரு முகாந்திரம் தென்படுகிறதா?அம்பானியையும் அதானியையும் விட்டுவிடுங்கள்.இவர்களுக்கு அடுத்தடுத்துள்ள படித்தரங்களின் பண முதலைகளையும் விட்டுவிடுங்கள்.நான் சொல்வது கீழுக்கு சற்று மேலே உள்ளவர்கள். உதாரணமாக சொல்வதாய் இருந்தால்,நீங்கள் நகரம் அல்லது சிறு நகரங்களின் கடைத்தெருக்களை பார்க்கிறீர்கள். அங்கு இருக்கக்கூடிய ரீடைலர்கள் என்று சொல்லக்கூடிய வணிகர்கள்.அது துணி கடையாக இருக்கலாம்.செருப்பு கடையாக இருக்கலாம்.பேன்ஸி கடை என்று சொல்லக்கூடிய வீட்டுக்குத்தேவையான சில்லரை சாமான் கள் விற்க்கும் கடையாக இருக்கலாம்.நான் சொல்வது ஒரு முதலாளி மூன்று நான்ங்கு தொழிலாளிகள் அல்லது ஒரு முதலாளி துணைக்கு ஒரு பையன் என்று நடக்கிற கடைகளுக்கு சரக்குகள் தருவது யார். பெரும்பாலும் மார்வாடிகள்.கல்கத்தா பம்பாய் டெல்லி லூதியானா சூரத் என்று வட மாநிலங்களில் உள்ள பொருட் களை மொத்தமாக எடுத்து வந்து நான் மேலே சொன்ன கடைகளுக்கும் அதை விட பெரிய கடைகளுக்கும் க்ரெடிட் என்ற கடன் முறையில் இரண்டு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை தொழிலுக்கு ஏற்ப்ப கடன் கொடுத்து வியாபாரம் செய்வது பெரும்பாலும் அந்த மார்வாடிகள்தான்.அதிலும் பெரும்பாலும் இந்த வர்த்தகம் பில் இல்லாமல் அல்லது குறைவான தொகைக்கு பில் என்ற வகையில்தான் நடக்கிறது.பிற மாநிலங்களில் இருந்து வருகிற சரக்குகளுக்கு C பாரம் என்று சொல்லக்கூடிய மத்திய வரியும் பெரும்பாலும் கட்டுவதில்லை.அதை உள்ளூரில் விற்ப்பதற்க்கு மாநில வரியும் பெரும்பாலும் கட்டுவதில்லை. மாநிலம் முழுக்க ஆயிரக்கணக்கில் சில்லரை வியாபாரிகளை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.இவர்களிடம் சரக்கு வாங்கி வியாபாரம் பண்ணும் நிலையிதால்தான் சிறு வியாபாரிகளும் இருக்கிறார்கள். மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை நம் மாநிலத்தின் அந்த சிறு வியாபாரிகளை பதறச்செய்ததே அன்றி மொத்த மொத்தமாய் சரக்குகளை இறக்கி இந்த வியாபாரிகளுக்கு பிரித்து கொடுத்து பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யும் அவர்களை எந்த பதட்டத்திற்க்கும் உள்ளாக்கவில்லை. காரணமென்ன இதை எப்படி சமாளித்து அஞ்சு பைசா இழப்பில்லாமல் வெளியே வரவேண்டும் என்று அவர்களுக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.இவர்களே இப்படி என்றால் … நாம் அம்பானி அதானிக்காக விசனப்படுகிறோம்.இவர்களுக்கும் அதானிக்கும் இடையில் எத்தனை படித்தரங்களில் வரி ஏய்க்கும் பண முதலைகள் உள்ளன.பிறகு எந்த கருப்பு பணத்தை யாரிடம் உள்ள கருப்பு பணத்தை ஒழித்து விட்டார்.. ஒழிக்க போகிறார் மோடி.பைத்தியாரப்பைய ஊர்ல பணியார மழை பெஞ்சிதாம்…போங்கடா போங்கடா..

  3. மக்களை கால் தூசுக்குக்கூட மதிக்காத பெரும் பணக்காரர்களின் ஆணவத் திமிர் ஆர்.எஸ்.எஸ்.ன் பார்ப்பனத் திமிர் இரண்டும் கலந்த கலவைதான் திருவளர் செல்வன் நரேந்திர மோடி.மோடியின் கள்ளக் குழந்தைகள்(வாரீசுகள்) அதே திமிர்த் தனத்தில் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறார்கள்.இவர்களை நினைத்துப் பார்த்தாலே நாட்டுமக்களின் குலையே நடுங்குகிறது.இவர்களை வேரறுக்காமல் மக்களுக்கு விமோச்சனமே இல்லை.

  4. புல்லட் ட்ரைன் நம் நாட்டிற்கு மிகவும் அவசியம்… இதனால் நேரம் மிச்சம் ஆகும், விமானத்தில் செல்வதை விட குறைவான கட்டணம், குறைவான நேரம், பெரும்பாலான விமான நிலையங்கள் நகரத்தில் வெளியில் தான் இருக்கின்றன, ஆனால் ட்ரைன் மூலம் நகரத்தின் மத்திய பகுதிக்கே செல்லலாம், மேலும் புல்லட் ட்ரைன் பிரயாணம் மிக மிக பாதுகாப்பான ஒன்று, ஜப்பானில் இதுவரையில் விபத்தே நடந்தது இல்லை (ஆனால் சீனாவின் புல்லட் ட்ரைன் பல விபத்துகளை சந்தித்து இருக்கிறது)

    தற்போது சென்னை டெல்லிக்கு இடையில் புல்லட் ட்ரைன் அமைக்க சீனா feasibility study செய்கிறார்கள், வினவு சீனாவின் இந்த செயலை எதிர்க்கும் என்று ninaikkiren.

    புல்லட் ட்ரைனை எதிர்ப்பவர்கள்

    மாட்டு வண்டி இருக்கும் போது ஏன் பஸ் என்று எதிர்ப்பார்கள்.
    பஸ் இருக்கும் போது ஏன் ட்ரைன் என்று எதிர்ப்பார்கள்.
    ட்ரைன் இருக்கும் போது ஏன் விமானம் என்று எதிர்ப்பார்கள்.
    விமானம் இருக்கும் போது ஏன் புல்லட் ட்ரைன் என்று எதிர்ப்பார்கள்.

    இவர்களின் முட்டாள்தனமான எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு புல்லட் ட்ரைனை கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    • சீன நிறுவனங்களுக்கு இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்த இந்திய அரசு தான் வெட்கி தலைகுனிய வேண்டும் மணிகண்டன்… பாக்கிஸ்தானை ஆதரிக்கும் சீனா, மோடிக்கு மட்டும் எப்படி நட்பு நாடாக இருகின்றது? என்பதனை விளக்கவும் மணி….
      //தற்போது சென்னை டெல்லிக்கு இடையில் புல்லட் ட்ரைன் அமைக்க சீனா feasibility study செய்கிறார்கள், வினவு சீனாவின் இந்த செயலை எதிர்க்கும் என்று ninaikkiren.//

    • ம்ணிகண்டன் போன்ற தரை டிக்கட்டுகள் விசிலடித்து கொண்டாடுவதற்க்குத்தான் இந்த ஆட்சியும் இதன் திட்டங்களும்.உண்மையில் நாடு முன்னேறுவதற்க்கு திட்டங்கள் தீட்டப்படுவது மாதிரி தெரியவில்லை.முட்டாள்களை குஷி படுத்த திரைக்கதைதான் தீட்டப்படுகிறது.தங்கள் தலைவன் மோடி திரைக்கதை நாயகன் திரையில் பறந்து பறந்து அடித்து விளையாடுவதைப்போல நிஜத்தில் விளையாடுவதாய் காட்ட வேண்டும் என்று அரசாங்கத்தில் திரைக்கதைதான் தீட்டப்படுகிறது.கொஞச நாட் களுக்கு முன் பாகிஸ்தானோடு சண்டை காட்சி முடிந்துவிட்டது. மணிகண்டன் போன்ற சில்லறைகளுக்கு பாகிஸ்தானை எந்திரிக்க முடியாமல் வீழ்த்திவிட்டார் என்றே நினைப்பு.அடுத்து 100, 500 ரூபாய் தாள்களை செல்லாதென்று அறிவித்து ஒட்டுமொத்த கருப்பு பணத்தையும் நொடி நேரத்தில் அழித்து விட்டார் என்ற நினைப்பு. இதில் கவனிக்க வேண்டியது, இந்த செல்லாகாசு அறிவிப்பு வந்தவுடன் ரஜினிகாந்திலிருந்து அத்தனை நடிகன் களும் காங்கிரஸ் காரனிலிருந்து அத்தனை கட்சி காரன் களும் வரவேற்று அறிக்கை.அதாவது கருப்புபணம் என்றால் இவர்களை நோக்கித்தான் கவனம் திரும்பும் என்று “நான் யோக்கியன் நான் யோக்கியன்” என்று காட்டுவதற்க்குத்தான் இந்த ஊளையிடல் என்பது நமக்கு தெரியாது என்று அவன் களுக்கு நினைப்பு.மோடியின் அடுத்த சாகச காட்சி, புல்லட்ட்ரைன்.நாடு அனைத்திலும் முன்னேறி வந்து விட்டது.புல்லட் ட்ரைன் ஒன்றுதான் குறை ஆகவே புல்லட் ட்ரைனை புடித்துக்கொண்டு வரப்போகிறார். கைய்யிலேயே கூட சுருட்டிக்கொண்டு வந்து விடுவார் புல்லட்டு ட்ரனை.

    • நாட்டில் மக்களுக்கு அடிப்படைத் தேவையை முதலில் நிறைவேற்று அப்புறம் புல்லட் ட்ரைனுக்குப் போகலாம். சீனா தயாரிக்கும் எந்தப் பொருளும் வேண்டாம் என்றால் அவர்களின் நாட்டுப் பொருள்களையும், அவர்கள் கண்டுபிடித்தவற்றையும் எதற்காக பயன்படுத்துகிறீர்கள். நம் நாட்டில் உள்ள பெரும் முதலைகள் செய்யும் முள்ளமாறித்தனத்தை சீனா, பாகிஸ்தான் தான் செய்தது என்று கூறுவது கேவலமாக உள்ளது.

    • @ மனிகன்டன் : புல்லெட் ட்ரைன் விடலாம் மனிகன்டன்…..முதலில் லஞ்சம் வாங்காம ஒரு கழிவறை கட்ட சொல்லுங்க உங்க அரசாங்கத்தை…

      • __________

        _________
        உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ன படித்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? இதை எல்லாம் தெரிந்து கொண்டு நீங்கள் சரியான வேட்பாளருக்கு வாக்கு அளித்திர்களா ? இந்த வேட்பாளர்களின் எத்தனை பேர் தேசவிரோத குணம் கொண்டவர்கள் என்று உங்களுக்கு தெரியும்மா ?

        இது எதுவுமே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு அவரவர் இஷ்டத்திற்கு வாக்கு அளித்து விட்டு இன்று சுத்தமான கழிவறை இல்லை என்று குறை சொன்னால் என்ன அர்த்தம். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர ஆராய்ந்து அதில் யார் நல்லவரோ யார் நல்ல திறமைசாலியோ அவருக்கு எல்லோரும் வாக்கு அளித்து வெற்றி பெற செய்த பிறகு கேளுங்கள் உங்கள் தேவைகளை அப்போது உங்கள் தொகுதியில் எல்லாம் சரியாக நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.

  5. ஒரு பேருந்து நிலையத்துல சுத்தமான கழிவறை கட்ட துப்பு இல்ல, அதுக்கு ஒரு தனியார் ஒப்பந்தம் , அதுக்கு ஒரு மாபியா கும்பல் ..துதுது….இதுல புல்லட் ட்ரெயின் வேணுமாம், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவாங்கலாம்…..

    • உங்களை போன்றவர்கள் எங்கள் நாட்டை பற்றி இப்படி தான் பேசுவீர்கள்… செய்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டது எங்களை போன்ற சாதாரண இந்திய மக்களுக்கு மிக பெருமை தான், இதன் மூலம் இந்திய விண்வெளி துறைக்கு(இந்திய அரசுக்கு) பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

      வறுமை ஒழிப்பதற்கு முன் ஏன் புல்லட் ட்ரெயின் என்று எல்லாவற்றிலும் பேசலாம், வறுமை ஒழியும் வரை மற்ற வளர்ச்சிகள் தேவையில்லை என்று சொல்வது மடத்தனம். அனைத்து வகையிலும் நாடு முன்னேறும் போது தான் வறுமையும் ஒழியும்.

      கழிவறை கட்ட வேண்டியது கார்பொரேஷன் வேலை, இது பற்றி நீங்கள் கேட்க வேண்டியது மாநில அரசை. மேலும் இன்று நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை இருக்கிறதோ இல்லையோ எல்லோர் வீட்டிலும் டிவி இருக்கிறது… காரணம் மக்களுக்கு கழிவறையை விட டிவி தான் முக்கியமாக இருக்கிறது.. ஒரு டிவி வாங்கும் பணத்தில் (அரசு கொடுக்கும் மானியத்தோடு) சுலபமாக கழிவறையை கட்டலாம் ஆனால் சிலர் இதை செய்யாமல் இருக்கிறார்கள்.

      மக்களுக்கு சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு வராதவரையில் இந்த மாதிரியான விஷயங்களில் மாற்றங்கள் வராது. மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் அதை மோடி செய்கிறார்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க