ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு!
முதலாளித்துவத்துக்கு மாற்று கம்யூனிசமே !
கோவையில் காவிகள் காக்கிகளோடு இணைந்து கலவரம் நடத்திய பகுதியான துடியலூரில் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டோம். ஏற்கெனவே கலவரத்தைக் கண்டித்து அனுமதி கேட்க மறுத்து கடிதம் கொடுத்தனர். இந்த முறை கைதானாலும் நடத்துவோம் என அறிவித்தோம். எனவே இந்த முறை துடியலூர் வேண்டாம் என்று கவுண்டம்பாளையத்தில் நடத்த அனுமதி கொடுத்தனர்.
மாலை 5 மணிக்கு பு.மா.இ.மு தோழர்களின் பறையிசையுடன் விழா துவங்கியது. பு.ஜ.தொ.மு மாவட்டக்குழு சார்பில் தோழர் சரவணன் தலைமை தாங்கி உரையாற்றினார். மகஇக மாவட்டச் செயலர் தோழர் சித்தார்த்தன் காவல்துறையின் அயோக்கியத்தனத்தையும் டாஸ்மாக் பிரச்சினையையும் கடுமையாக சாடினார்.
புமாஇமு தோழர் வினோத் தனது உரையில், இந்திய நீதித்துறை எப்படி தன்னளவில் மோசமான தீர்ப்புகள் மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திப் பேசினார். மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் சூர்யா மற்றும் தோழர் மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக பு.ஜ.தொ.மு மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில், நவம்பர் புரட்சி என்பது என்ன ? ஆலையில் மெஷின்களை இயக்கிய தொழிலாளி வர்க்கம் அரசு இயந்திரத்தை இயக்கிய நாள். இரும்பைக் கடையவும் முடியும் எதிரிகளின் இடுப்பை உடைத்து புதிய அரசை அமைக்கவும் முடியும் என அகிலத்துக்கு நிரூபித்த நாள் நவம்பர் 7. பஞ்சாலைகளிலும் பட்டறைகளிலும் 14 மணி நேரம் உழைத்த ரசியத் தொழிலாளர்கள் அதற்கு பிறகு அரசியல் கற்று அமைப்பாகத் திரண்டு போராடி வெற்றி கண்டார்கள்.
நிலங்களை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கிய பிறகு நாடு முழுவதும் எட்டு மணி நேர வேலையை சட்டமாக்கினார் தோழர் லெனின். அதன் பின்னர் உலகமெங்கும் எட்டு மணி நேர வேலை வந்தது. இப்பொழுது எட்டு மணி நேர வேலை, இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட இதர பலன்களை அனுபவிக்கும் தொழிலாளி வர்க்கம் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். ருஷ்யத் தொழிலாளர்களின் வாரிசுகளாக உருமாறி நவம்பர் புரட்சியை போன்றதொரு புரட்சியை நமது நாட்டிலும் நிகழ்த்த வேண்டும்.
தமிழ் இந்து பத்திரிக்கையில் எட்டப்பன் தா.பாண்டியன் பேட்டி முழு பக்கம் வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என தலைப்பு கொடுத்துள்ளான். இது நவம்பர் 7 நூற்றாண்டு விழாவை குறி வைத்து திசை திருப்ப வந்துள்ள பேட்டி. குழப்புவதெற்கென்றே பேட்டி வந்துள்ளது.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழாவின் தாக்கம் தமிழ்நாட்டில் வந்து விடக் கூடாது என்று எட்டப்பன் பேட்டியை வெளியிட்டு உள்ளார்கள். தா.பாண்டியனும் 84 வயதிலும் நயவஞ்சகத்துடன் நவம்பர் புரட்சியை பற்றி பேசவே இல்லை. நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா உண்மையான கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் புரட்சி உழைக்கும் மக்களின் படைப்பாற்றலை கட்டவிழ்த்து விட்டது. மேலும் உயர்த்தியது. இதனால் சுரண்டலற்ற ஒரு சமூக அமைப்பை சாத்தியமாக்க முடிந்தது.அதே போல் நமது மண்ணிலும் நாம் உழைக்கும் மக்களிடம் மறைந்து கிடக்கும் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொருவரையும் போராளிகளாக மலர்விக்க வேண்டும். மவுலிவாக்கம் கட்டிடம் போல் முதலாளித்துவத்தை வெடி வைத்து தகர்க்க வேண்டும். முதலாளித்துவம் உள்ளுக்குள் உளுத்துப் போய் உள்ளது.
அதே போல ரத்தன் டாடா-சைரஸ் மிஸ்திரி விவகாரம் என்பதே முதலாளித்துவத்தின் ஓட்டாண்டித்தனத்தை வெளிப்படுத்துகிறது. உடனே ரத்தன் டாடா எல்ஐசி சேர்மன் வி.கே.சர்மாவை வீட்டுக்கு போய் சந்தித்து விளக்கம் கொடுக்கிறார். சைரஸ் மிஸ்திரி சம்பந்தப்பட்ட ஐந்து டாடா நிறுவனங்களில் 1,18,000 கோடி ரூபாய் திவால் என செய்தி வருகிறது.
உடனே ரத்தன் டாடா எல்ஐசி சேர்மன் வீடு தேடிப் போய் விளக்கம் கொடுக்கக் காரணம் என்ன ? ஏனென்றால் டாடா நிறுவனங்களில் ஏறத்தாழ 56,700 கோடி எல்ஐசி-யின் முதலீடு உள்ளது. எல்ஐசி தனது முதலீட்டை திரும்பப் பெற்றால் டாடா கவிழ்ந்து விடுவான். ஆக இப்பொழுது டாடாவை காப்பாற்றுவது மக்கள் எனத் தெரிந்து கொள்ளலாம். பொதுத் துறையால்தான் தனியார் துறை காப்பாற்றப்படுகிறது. இது முதலாளித்துவத்தின் படு தோல்வி. இனி இடித்து தள்ள வேண்டியது தான் பாக்கி.
அடுத்த நெருக்கடி ஜெர்மன் டாயிஷே வங்கி திவால் ஆகும் நிலையில் உள்ளது. சப் பிரைம் நெருக்கடியை விட கூடுதலாக முதலாளித்துவத்தை பாதிக்கக் கூடியது. ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இற்று விழும் டாலரா யூரோவா? பிரேக்ஸிட் என்றும் கேட்கத் துவங்கி விட்டன. அடுத்து டாயிஷே வங்கி திவால் ஐரோப்பா எங்கும் செங்கொடி எழும்.
1930 ஆண்டு நெருக்கடி இரண்டாம் உலகப்போரை உருவாக்கியது. இனி வரும் ஜெர்மன் வங்கி நெருக்கடி இன்னோர் போரை உருவாக்கும். நெருக்கடிகள் முற்றும் போது தலைமை தாங்கக் கூடிய தகுதியை பாட்டாளி வர்க்கம் அடைய வேண்டும்.
கோவைப் பகுதியில் கூடுதலான சம்பளம், போனஸ் பெறுவதில் ஓட்டுக்கட்சிகளை விட நமது சங்கம் முன்னிலையில் உள்ளது. கதவடைப்புக்கு எதிரான போராட்டத்திலும் கிறீகம்பெனியில் 600-ஆவது நாளை தாண்டி நமது போராட்டம் நக்சல்பாரியின் கம்பீரத்தை பறை சாற்றுகிறது. என்பெஸ்ட் முதலாளித்துவ பயங்கர வாதத்தை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
கோவையில் வீதியில் இறங்கி போராடும் சங்கமாக நாம் மட்டுமே உள்ளோம். நவம்பர் புரட்சியின் வாரிசுகளாக உள்ளோம்.
ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ்-களால் தான் நாட்டை ஆள முடியும் என்பதை நவம்பர் புரட்சி தகர்த்தெறிந்தது. சாதாரண உழைக்கும் மக்களும் நாடாளும் சாதனையை நிகழ்த்த முடியும் என நிரூபித்தோம். கோவை கலவரத்தின் போது இங்கு ஐபிஎஸ் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் 23-ஆம் தேதி முழுவதும் கையாண்ட லட்சணத்தை நேரில் பார்த்தோம். ஐ.ஏ.எஸ் படித்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ன செய்தீர் என்பதையும் பார்த்தோம். எதற்கும் இலாயக்கற்றவர்கள் என்பதையும் கண்டோம். நம்முடைய தொழிலாளர்கள் கோவை நகரத்தை பரிபாலனம் செய்தால் இதை விட நன்றாக செய்ய முடியும். உலகை வியாக்கியானம் செய்வதல்ல உலகை மாற்றுவதுதான் நமது நோக்கம்.
புதிய அரசு அமைக்க நவம்பர் புரட்சி நாளில் சபதமேற்போம் எனக் கூறி முடித்தார். தோழர் கோபி மற்றும் நித்தி ஆகியோரின் நிறைவுக் கருத்துக்களும் பின்னர் சிற்றுண்டிகளோடும் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கோவை
***
நவம்பர் தின கொடியேற்று விழா – கும்பகோணம்
கும்பகோணம் அருகில் உள்ள அரித்துவாரமங்கலம் பகுதியில் நவம்பர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றுவிழா சுமார் மாலை 6 மணியளவில் புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி அரித்துவாரமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. தோழர் தமிழ் ஜெயபாண்டியன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். அப்போது இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தோழர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய முன்னாள் ராணுவ வீரர் அய்யா ஜெயராமன் ”நான் இந்த நிகழ்சிக்கு வந்த காரணம் இந்த பகுதி இளைஞர்கள் மாவீரன் பகத்சிங் படம் போட்டு அவரது பெயரில் இளைஞர் நற்பணி மன்றம் வைத்துள்ளது பாராட்ட வேண்டியதுதான். பகத்சிங் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார். அதனால் வெள்ளையர்கள் அவரை தூக்குதண்டனை கைதியாக சிறையில் அடைத்தார்கள். அப்போது தான் தூக்கிலிடப்போகிறோம் என்ற பயம் இல்லாமல் புத்தகம் படித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு காவலர் என்ன புத்தகம் படிச்சிகிட்டு இருக்க என்று திமிர்தனமாக கேட்கும்போது ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் என்னை தொந்தரவு செய்யாதிங்க என்று சொன்னார். என்னுடைய பணிகாலத்தில் அவருடைய ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரைபோல நாமும் வரவேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. மேற்குறிப்பிட்டது போல மாவீரன் பகத்சிங் எப்படி இந்த நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் போராடினாறோ அதேபோல இந்த இளைஞர்களும் அவர் வழிநடக்க வேண்டும்” என்று பேசினார்.
அடுத்தபடியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ் ஜெயபாண்டியன் சிறப்புரையாற்றுகையில் “இந்த ஆண்டு தொழிலாளி வர்க்கத்திற்காக உன்னதமான தத்துவத்தை படைத்த பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் பிறந்த 200-ஆம் ஆண்டு, ரசிய புரட்சி நடந்த 100-ஆம் ஆண்டு, நக்சல்பாரி பேரெழுச்சியும் சீனப்புரட்சியும் நடைபெற்ற 50-ஆம் ஆண்டு இப்படி இந்த ஆண்டு சிறப்புமிக்கது. இன்றைய நவம்பர் 7 என்பது தொழிலாளி வர்க்கத்தை சுரண்டி கொழுத்த முதலாளி வர்க்கம், பஞ்சபராரிகள் நாடாள முடியாது என்று கேலியும் கிண்டலும் செய்ததை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கை பற்றி தொழிலாளி வர்க்கம் நாடாள முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய நாள். இந்தியாவில் இன்னும் சுமார் 65 ஆயிரம் கிராமங்கள் மின்வசதியில்லாமல் உள்ளது ஆனால் ரசியாவில் புரட்சி நடந்த மூன்றே மாதங்களில் நாடு முழுவதும் மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று மதங்களும் சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் ரசியாவில் மண்ணுலகத்தில் ஒரு சொர்க்கத்தை படைத்தார்கள் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டியாக விளங்கியது. அங்கே எல்லோரும் சமமாக நடத்தபட்டார்கள் எல்லாம் சமமாக பகிர்ந்தளிக்கபட்டது. மேற்குறிப்பிட்டது போல மண்ணுலகம் சொர்க்கமாக வேண்டும் என்றாலும் நாம் அனைவரும் சமமாக நடத்தபட வேண்டும் என்றாலும் நமது நாட்டிலும் புரட்சி வேண்டும் நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி” என்பதாக வலியுறுத்தி பேசினார்.
இறுதியாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி குடந்தை பகுதி அமைப்பாளர் தோழர் மருத சங்கத்தமிழன் பேசுகையில் ”இந்தியாவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோடிக்கணக்கில் பணம் கட்டவேண்டும் சாதாரண மக்கள் மருத்துவம் படிக்க முடியாது. ஆனால் சீனாவில் ஐந்து விவசாயிங்க சேர்ந்து இவர் மருத்துவம் படிக்க விருப்பப்படுகிறார் என்று சிபாரிசு செய்தால் மருத்துவம் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விவசாயிங்க விவசாய சங்க கூட்டத்திற்கு விமானத்தில் சென்று வந்தார்கள். இந்தியாவில் அப்படி ஒரு விவசாயி போக முடியாது. ஆனால் வெளிநாடுகளுக்கு அடிமை வேலை செய்வதற்கு மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மூன்றாண்டுகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது. நமக்கு சுகாதாரம் என்பது அவசியம் முன்னாடி அய்யா குறிப்பிட்டது போல நம்ம ஊரில் சுகாதார வசதி என்பது இல்லாமல் உள்ளது. நமது அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்றால் மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் தீர்வு” என்று பேசினார்.
புரட்சிகர மணவர்-இளைஞர்முன்னணி தோழர் வேலாயுதம் நன்றியுரையுடன் கூட்டம் முடந்து.
தகவல்
புரட்சிகர மணவர்-இளைஞர்முன்னணி
கும்பகோணம்
***
காங்கேயம் சிவன்மலையில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா
நவம்பர் 7 நூற்றாண்டு விழாவையொட்டி காங்கேயம் சிவன்மலையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தோழர் வசந்தன் தலைமையில் நடந்த இவ்விழாவில் நவம்பர் 7 நூற்றாண்டு விழாவினை மக்களுடன் கொண்டாடினர். ரஷ்ய புரட்சியின் மகத்துவம் குறித்தும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்பது குறித்தும் விளக்கி பேசப்பட்டது.
முழக்கங்கள் :
வர்க்கப் போரின் எழுச்சி நாயகன் பேராசான் லெனின் வாழ்க !
மனித குலத்தின் ஆகப்பெரும் கனவை நனவாக்கிய
ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு வாழ்க !
உழைக்கும் மக்கள் உயிர்குடிக்கும் முதலாளித்துவம் ஒழிக !
உழைக்கும் மக்களின் விடிவெள்ளி கம்யூனிசம் வாழ்க !
– எனும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
காங்கேயம்
***
நவம்பர் – 07- 2016 மகத்தான ரஷ்யப்புரட்சியின் நூற்றாண்டு விழா – கோத்தகிரி
மார்க்சிய ஆசான் தோழர் கார்ல் மார்க்சின் 200-வது பிறந்த நாள், சீன கலாச்சார புரட்சி மற்றும் நக்சல்பாரி பேரெழுச்சியின் 50-வது ஆண்டு விழாக்களை முன்னிட்டும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை பறை சாற்றிய ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் விதமாகவும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு) பு.ஜ.தொ.மு சார்பாக 07.11.2016 திங்கள் அன்று கிளைகளில் கொடியேற்றம் மற்றும் இனிப்பு வழங்குதல் நடைப்பெற்றது. அதில் அரவேணு வானகப்பிரிவு கிளையில் தோழர் விஜயன் கொடியேற்றி உரையாற்றினார். தோழர் தாஸ் இனிப்புகளை வழங்கி நன்றியுரையற்றினார்.
கோத்தகிரி ஜீப் நிலையத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தோழர் பாலன் கொடியேற்றினார். தோழர் ராஜா உரையாற்றினார். தோழர் புவனேஷ் இனிப்புகள் வழங்கி நன்றியுரையாற்றினார். அவற்றை தொடர்ந்து நடைபெற்ற அரங்கு கூட்டத்தில் தோழர்களின் குழந்தைகள் குடும்பத்தினர்கள் கலந்துக்கொண்டனர். தோழர் விஜயன்(மாவட்ட பொருளாளர்) தலைமை தாங்கினார். தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். தோழர் பாலன் சிறப்புரையாற்றினார்.
கலை நிழச்சிகளில் தோழர் வர்னியா (வயது 8) திருக்குறள் ஒப்புவித்து பாராட்டுதல்களை பெற்றார். தோழர் கார்த்திகா(கல்லூரி மாணவி) தொழிலாளி வர்க்கத்தின் துயரங்கள் அவற்றை களைய எவ்வாறு போராட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உரையாற்றினார். இது அனைவரையும் கவர்ந்தது, ஆர்வமூட்டியது. தொடந்து தோழர் ரவிந்திரன் தோழர் சக்தி ஆகியோர் புரட்சி கர பாடல்கள் பாடி உற்சாக மூட்டினார்கள்.
இறுதியில் உழைக்கும் மக்களின் புரத உணவான மாட்டுக்கறியில் சமைக்கப்பட்ட மாட்டு கறி பிரியாணி உணவின் முக்கியத்துவத்தை அறிவித்து பார்ப்பனியத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் உணர்வாக, நடவடிக்கையாக கருதி உண்ணவேண்டும் என்று விளக்கி பரிமாறப்பட்டது. இறுதியில் நன்றி கூறி விழா நிறைவடைந்தது. இவ்வாறான தொழிலாளி வர்க்க வெற்றி நாளை தோழர்கள் குடும்பமாக பங்கேற்றது தோழர்களிடையேயும் கலந்துக் கொண்ட அனைவரிடமும் ஒரு புத்துணர்வையும் ஒரு ஜக்கியத்தையும் உருவாக்கியது.
தகவல்:
தோழர் பாலன்,செயலாளர்
நீ.அ. தொ. சங்கம்- கோத்தகிரி
