privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்டினா டாபியின் காதலும் காவி கும்பலின் வயிற்றெரிச்சலும்

டினா டாபியின் காதலும் காவி கும்பலின் வயிற்றெரிச்சலும்

-

டந்த 2015-ம் ஆண்டின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தேர்வு முடிவுகள் வந்த போதே வட இந்திய பார்ப்பன அறிஞர் பெருமக்களுக்கு இஞ்சியைக் கரைத்துக் குடித்தது போலத் தான் இருந்தது. காரணம் டினா டாபி என்கிற 22 வயதே ஆன இளம் பெண் தேர்வாணையத்தின் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வென்றதோடல்லாமல், முதலாவதாகவும் தேறியிருந்தார்.

tina-dabi-lead
டினா டாபி மற்றும் ஆமிர் உல் ஷபி கான்

டினா டாபி ஒரு பெண் என்பதே அம்பிகளின் தொண்டை அடைத்துக் கொள்ள போதுமான காரணம் தான். அதற்கு மேலும், அவர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் வடநாட்டு அவாளெல்லாம் ஆங்கில செய்தித்தளங்களின் பின்னூட்ட பெட்டிகளில் ஒன்று திரண்டு கண்ணில் ஜலம் வச்சுண்டு அழத் துவங்கினர். இதற்கிடையே டினா டாபியின் குடும்ப பின்னணியையும் அவர் தேர்வில் வெல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நூல்பார்ட்டி கம்பெனியில் குறைந்தபட்ச அறிவுள்ள சிலர் கூகுளின் மூலம் பீறாய்ந்து வரவே ஒப்பாரி ஓலங்கள் உச்சஸ்தாயியை அடைந்தன.

டினா டாபி தில்லியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜஸ்வந்த் டாபி; தாயார் ஹிமானி டாபி. இவர்கள் இருவருமே அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பதோடு அந்தக் காலத்திலேயே மத்திய தேர்வாணையத்தின் நடத்திய இந்திய பொறியாளர் பணிக்கான (Indian Engineering Services – IES) தேர்வை வென்றவர்கள். தற்போது டினா டாபியின் பெற்றோர் இருவருமே மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். டினா டாபியின் தாத்தாவும் மத்திய அரசுப் பதவியில் இருந்திருக்கிறார்.

கடந்தாண்டு தேர்வாணையம் நடத்திய நுழைவுத் தேர்வின் முதல் தாளில் பொதுப் பிரிவுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச மதிப்பெண்ணான 107.34 சதவீதத்தை விட குறைவான மதிப்பெண்களுடன் (96.66%) டினா டாபி தேர்வாகியுள்ளார் என்பதே அம்பிகளின் மூக்கில் ஒழுகிய கண்ணீருக்கான காரணம். என்றாலும் பட்டியல் சாதிகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 94 சதவீதத்திற்கும் அதிகமாக அவர் மதிப்பெண் பெற்றே நுழைவுத் தேர்வில் தேறியுள்ளார். அதன் பின் இரண்டாம் கட்டமாக ஐந்து தாள்களுக்கு நடக்கும் முக்கியத் தேர்வில் கலந்து கொண்டு முதலாவதாகத் தேறியுள்ளார் டினா டாபி.

டினா டாபியின் குடும்பம் வசதியானது என்பதை மட்டும் பிடித்துக் கொண்ட அம்பிகள், பொருளாதார வசதியற்ற தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை டினா தட்டிப் பறித்துக் கொண்டார் என கூப்பாடு போடத் துவங்கினர். ’ஆஹா.. பார்ப்பன குலக்கொழுந்துகளுக்குத் தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய தலித்துகளின் மேல் எத்தனை பாசம்’ என ஊரார் மூக்கின் மேல் விரல் வைப்பதற்குள் இந்த விவாதங்கள் மெல்ல மெல்ல இட ஒதுக்கீட்டுக்கே எதிரானதாக மாறி முழு சாணக்கிய சந்திரமுகியாகி நின்றனர்.

hindu-mahasabha-letter
இந்து மகாசபை அனுப்பிய கடிதம்

நிலவுரிமை, வளங்களின் மேலான சம உரிமை என சொத்துடைமையில் நிலவும் தீண்டாமை நீங்காமல் ஒரு சில அரசு பதவிகளின் மூலம் மட்டுமே சாதியை ஒழித்து விடமுடியாது என்றாலும், இட ஒதுக்கீடு என்பது ஒரு இடைக்கால நிவாரணமாக உள்ளது. அவ்வாறான இடைக்கால நிவாரணம் அமல்படுத்தப்படும் முறை குறித்து அதன் மேல் குறைந்தபட்சமாகவாவது நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சிப்பதில் நியாயம் உள்ளது. ஆனால், பார்ப்பன அம்பிகளின் கவலையே வேறு. காலம் காலமாகத் தம்மிடம் அடிமைச் சேவகம் புரிந்த கூட்டம் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் பொதுவெளிகளில் செயல்படுவதன் மேலிருக்கும் எரிச்சலே இட ஒதுக்கீட்டின் மேலான எரிச்சலாக வெளிப்படுகின்றது.

இட ஒதுக்கீட்டில் வருகிறவர்களிடம் ’திறமை’ இருக்காது, அவர்கள் நேர்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே காஞ்சி ஜெகத்து குரு ஜெயேந்திரனின் புத்திரர்கள் வழக்கமாக முன்வைக்கும் வாதம். ஆனால், டினா டாபியோ தேர்வில் பார்ப்பன குஞ்சுகளையும் தாண்டிச் சென்று விட்டார். அவரது இளம் வயதைக் கணக்கில் கொண்டால், ஓய்வு பெறுவதற்குள் மத்திய அரசின் தலைமைச் செயலாளர் பதவியையே கூட அடையும் வாய்ப்பும் உள்ளது. இதோடு சேர்ந்து கடந்தாண்டின் தேர்வு முடிவுகளில் இரண்டாம் இடத்தை காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் இளைஞரும் மூன்றாமிடத்தைப் சீக்கிய இளைஞர் ஒருவரும் பிடித்துக் கொண்டது வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவதாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு அமைந்து விட்டது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் டினா டாபி தனது முகநூலில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சென்ற வருடம் பார்ப்பன இதயங்களில் விழுந்த கீறலின் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவுவதாக அமைந்து விட்டது. தேர்வாணையத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த ஆமிர் உல் ஷபி கானைத் தான் விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் டினா டாபி தனது முகநூலில் தெரிவித்தார். இது வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி நாளிதழ்களில் பெட்டிச் செய்தியாகவும் வெளியானது.

வெகுண்டெழுந்து விட்டது இணைய வானரப்படை. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை தொடர்பான இணையக் கட்டுரைகளின் பின்னூட்டங்களில் தவறாமல் ஆஜராகி மோடிக்காக ராப்பகலாக முட்டுக் கொடுத்து முகம் வீங்கிப் போன வானரங்களின் கையில் டினா டாபியின் அறிவிப்பு சிக்கியதையடுத்து சதிராடி வருகின்றனர். இதற்கிடையே வானரப்படைகளில் ஒன்றான ஹிந்து மகாசபை, டினா டாபியின் பெற்றோருக்கு ஃபத்வா ஒன்றை விதித்துள்ளது.

ஆமிர் – டினாவின் காதல் லவ் ஜிஹாத் என்பதை ”புலனாய்வு” செய்து கண்டுபிடித்துள்ள ஹிந்து மகாசபை அதற்கு பரிகாரத்தையும் முன்வைத்துள்ளது. அதாவது கர்வாப்சி (Gharwapsi) சடங்கு ஒன்றைச் செய்து ஆமீரின் தலையில் தண்ணீர் தெளித்து அவரை இந்துவாக மாற்றி விட்டால் திருமணத்தில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அப்படி ஒரு சடங்கைச் செய்ய டினாவின் பெற்றோருக்கு உதவி செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், டினாவின் பெற்றோருக்கு அவரின் காதலில் சம்மதம் என்பதோடு, மதமாற்றச் சடங்கின் தேவை குறித்தே அவர்கள் யோசிக்கவில்லை. அடுத்து, வழக்கமாக “லவ் ஜிஹாத்” திரைக்கதையில் இடம் பெறும் “அப்பாவி இந்துப் பெண்ணை, கூலிங் கிளாஸ் போட்டு மயக்கி, திட்டமிட்டு ஏமாற்றி, இத்யாதி இத்யாதி” போன்ற திடுக்கிடும் திருப்பங்களுக்கு டினா டாபியிடம் வழியில்லை – ஏனென்றால், ஐ.ஏ.ஸ் தேர்வில் நாட்டிலேயே முதலாவதாக வருமளவிற்கு விவரமானவர் அவர்.

கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அடுத்தவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்குள்ளும், வாழ்க்கைத் தேர்வுகளுக்குள்ளும் தலையிடுவதால் நம்மூர் டாஸ்மாக் முன்புகூட  காணக்கிடைக்காத மூன்றாந்தர கழிசடைகளாக காவி வானரப்படையை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஆட்சியதிகாரம் என்கிற வீரியம் கூடிய நாட்டுச் சாராயாம் உள்ளே இறங்கியிருப்பதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

அதிகார வர்க்க மேட்டுக்குடி குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளம் பெண்ணையே மிரட்டுமளவுக்கு இவர்களிடம் துணிச்சல் இருக்கிறதென்றால், லவ் ஜிஹாத் என்ற பெயரில் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையை இவர்கள் எப்படியெல்லாம் சீரழித்திருப்பார்கள் என்பதை நினைத்து உங்களுக்கு குலை நடுங்கவில்லையா?

– முகில்

செய்தி ஆதாரம்:
Hindu Mahasabha calls Tina Dabi’s decision to marry Kashmiri youth ‘love jihad’, suggests ‘ghar-wapsi’