privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா பெண்ணரசியா ? இம்சை அரசியா ?

ஜெயா பெண்ணரசியா ? இம்சை அரசியா ?

-

‘‘பெரியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக நான் அவரைக் காண்கிறேன்.’’ (திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பத்திரிகையாளர் வாஸந்தியிடம் கூறியதாக. தமிழ் இந்து, டிச.7,2016, பக்.11)

‘‘பெண்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள் மற்றும் தனிமையோடு ஜெயலலிதாவையும் அவரது வாழ்க்கையையும் ஆறுதலாகவும், விடுதலையாகவும் அடையாளம் காண்கிறார்கள்.’’ (ஷங்கர் ராமசுப்ரமணியன், தமிழ் இந்து, டிச.7, 2016, பக்.11)

ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)
ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)

உண்மையை, நியாயத்தைக் கொண்டு ஒரு விசயத்தை நிரூபிக்க முடியாத போது, நம்பிக்கை என்ற அம்சத்தை முன்னிறுத்தி, அதனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றுவது மதவாதிகளின் குயுக்தி. அதுபோல, ஜெயாவின் அரசியல் வாழ்வை, நடவடிக்கைகளைப் பெண் என்ற பாதுகாப்பான அம்சத்தை முன்னிறுத்தி ஆராதிக்கும் போக்கு தமிழகத்தின் பொதுவெளியில் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்படுகிறது.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார். ஆனால், ஜெயலலிதாவோ தன்மான உணர்ச்சியையும் அறிவு உணர்ச்சியையும் தமிழகத்திலிருந்தே துடைத்தெறிந்துவிட வேண்டும் என்பதை மூர்க்கமான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டவர். தன் காலில் விழுபவனை, தன்னிடம் கையேந்தி நிற்பவனை ரசித்து மகிழ்ந்த வக்கிர புத்தி கொண்ட அவர், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடங்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டு வரை சுமத்திச் சிறையில் தள்ளிய சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்.

இப்படிபட்ட பெண்மணியை, பகுத்தறிவு பேசும் கி.வீரமணி பெரியார் கண்ட புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார் என்றால், பாமர தமிழ்ப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கியது வரையிலான, ஜெயாவின் கவரச்சித் திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரைத் தமிழகப் பெண்களின் வழிகாட்டியாகத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

ஜெயா அறிவித்த பெண்களுக்கான நலத் திட்ட உதவிகளால் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எந்தளவிற்கு விடிவு ஏற்பட்டிருக்கிறது ? ஒரு பறவைப் பார்த்தாலேகூட, அவரது ஆட்சியைப் பெண்களுக்குச் சாதகமான, பரிவான ஆட்சி என்று கூற முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிவித்த ஜெயா அரசுதான், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து பெண்களின் தாலியை அறுத்தெறிந்தது. கடலூர் மாவட்டத்தில், 450 குடும்பங்களே உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தில் 105 பெண்களைக் கைம்பெண்களாக்கியிருக்கிறது, அம்மாவின் டாஸ்மாக் கடை. முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராடியபொழுது, முன்னணியில் நின்ற கல்லூரி மாணவிகளை, இளம் பெண்களைப் பாலியல் வக்கிரத்தோடு தமிழக போலீசு அடித்து மிதித்ததைக் கண்டு தமிழகமே விக்கித்து நின்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த ஜெயா, தனது தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுவது போல 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், இந்த 500 கடைகளும் போதிய அளவிற்குப் போணியாகாமல் காத்து வாங்கிய கடைகள் என்பதும், போணியாகும் கடைகளில் விற்பனை இலக்கு முன்பைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகி, ஜெயாவின் அறிவிப்பு மக்களை, குறிப்பாகப் பெண்களை ஏய்க்கும் நாடகம் என்பது நாறிப் போனது.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)
பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)

ஜெயாவின் காலில் அவரது கட்சியைச் சேர்ந்த ஆண்கள் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து எழுந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, சினிமாத்துறையிலும், அரசியலிலும் ஜெயாவை ஆண் உலகம் அவமானப்படுத்தியதற்கான பரிகாரமாக இது இருக்கட்டும் என எழுதுகிறார், வாஸந்தி. ஜெயாவின் காலடியில் ஆண்கள் மட்டுமா விழுந்து எழுந்தார்கள். வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அவரது கட்சியைச் சேர்ந்த பெண்கள்கூடக் காலில் விழுந்து எழுந்தார்கள்.

கட்சிக்காரர்களின் அடிமைத்தனம் நிறைந்த விசுவாசத்தை எம்.ஜி.ஆர். என்ற ஆணிடமிருந்து வரித்துக் கொண்ட ஜெயா, அதனை அருவருக்கத்தக்க உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். ஆண்களைக் காலில் விழச் செய்த ஜெயாவின் சாதனை, பெண் விடுதலையின் குறிபொருள் அல்ல. மாறாக, பிழைப்புவாத, அடிமைத்தனத்தனத்தின் குறியீடு.

ஒருபுறம் ஆண்களைக் காலில் விழவைத்த செல்வி ஜெயலலிதாதான் இன்னொருபுறத்தில், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்துத் தமிழகப் பெண்களைத் திடுக்கிட வைத்தார்.

இது மட்டுமா, சுப்பிரமணிய சுவாமி, முதல்வர் ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்க ஆளுநரிடம் அனுமதி பெற்றதையடுத்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரை அசிங்கப்படுத்துவதற்கு அ.தி.மு.க. மகளிர் அணியை இறக்கிவிட்டார், ஜெயா. அன்று அந்தக் கும்பல் ஆடிய ஆபாச, வக்கிர ஆட்டம் ஜெயா பொறுக்கி அரசியலில் புரட்சித் தலைவி என்பதை நிரூபித்தது.

ஜெயா, மூன்று முறை தேர்தல்களில் வென்று, ஆட்சி அமைத்திருக்கிறார். அவரது ஆட்சி நெடுகிலும் சாதாரண உழைக்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளைத் தொகுத்துப் பார்த்தால், அவரது ஆட்சி பெண்களுக்கு அனுசரனையான ஆட்சி அல்ல, பேயாட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியில் (1991−96) தமிழக போலீசு நிலையங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடங்களாகத் திகழ்ந்தன. சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, வாச்சாத்தி கிராமப் பெண்கள் என அந்தக் கொடூரத்திற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக போலீசு நடத்திய இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தபோது, ‘‘அரசிடமிருந்து பணம் பெறுவதற்காகவே, போலீசின் மீது அபாண்டமாகப் பழி போடுகிறார்கள்’’ எனப் பாதிக்கப்பட்ட பெண்களை வேசிகளைப் போலச் சித்தரித்து அவமானப்படுத்தினார், பெண் முதல்வர் ஜெயா.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயா தண்டிக்கப்பட்டவுடன், அ.தி.மு.க. கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். மூன்று இளம் மாணவிகளைக் கொன்ற தனது கட்சிக்காரர்களுக்கு எதிராகப் பெண்ணாகிய ஜெயா நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. மாறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தக் கொலை வழக்கை ஊத்தி மூடிவிட முயன்று தோற்றுப் போனார். மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது கட்சிக்காரர்களுக்காக உச்சநீதி மன்றத்தின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டி, அத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கச் செய்தார்.

கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)
கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)

அவரது இரண்டாவது தவணை ஆட்சியில் (2001−06) சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் மீது தமிழகப் போலீசு நடத்திய பாலியல் வன்கொடுமைகளையும், சித்திரவதைகளையும் சோளகர் தொட்டி என்ற நாவல் பதிவு செய்திருக்கிறது. இந்த மனித உரிமை மீறல்களை விசாரித்த சதாசிவம் கமிசன் போலீசின் அட்டூழியங்களைச் சாட்சியங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஜெயாவோ குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பணப் பரிசுகளையும், வீட்டு மனைகளையும், பதவி உயர்வுகளையும் வாரி வழங்கி கௌரவித்தார்.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, பெண் போலீசு அதிகாரியான விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். கவுண்டர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனின் கொலை வழக்கை நேர்மையாக விசாரித்த ஒரே காரணத்திற்காக, அவர் உயர் அதிகாரிகளால் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நேர்மையான பெண் அதிகாரியின் அநியாயச் சாவிற்கு பெண்ணான ஜெயா அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. தனது மகளின் சாவில் மறைந்துள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக, விஷ்ணுபிரியாவின் தந்தை சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்குத் தொடுத்தபோது, விஷ்ணுபிரியாவைத் தற்கொலைக்குத் தள்ளிய போலீசு உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் சி.பி.ஐ. விசாரணையை மறுத்து வாதிட்டது, ஜெயா அரசு.

இந்த அநீதிகள் உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ நடந்திருந்தால், உங்களால் ஜெயாவைப் பெண்களின் ஆதர்சனத் தலைவராக வியந்தோத முடியுமா? பார்ப்பன சாதித் திமிரும், பணமும், அரசியல் அதிகாரமும் இணைந்து உருவாக்கிய அகந்தையும், மேட்டுக்குடி பொறுக்கித்தனமும் கலந்த கலவைதான் ஜெயா. அருவருக்கத்தக்கதும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதுமான இந்த தீயகுணங்களைக் கொண்ட ஆளுமையான ஜெயாவைப் பெண் என்பதாலேயே அவரின் தனிப்பட்ட இன்ப, துன்பங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதையும், அவரின் கிரிமினல் குற்றங்களை மறைத்துவிட முயலுவதையும் அனுமதிக்க முடியாது.

– திப்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017