privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

-

ஓவியம்: முகிலன் (2014-ம் ஆண்டு)

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள்.

குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முழு தீர்ப்பையும் படிக்கும்போது மேலும் விவரங்கள் தெரியவரும்.

அன்று குன்ஹாவுக்கு எதிராக அதிமுக காலிகள் நடத்திய வெறியாட்டங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தக் காலிகள் எல்லாம் இப்போது பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். அல்லது வந்து விடுவார்கள். அல்லது இன்னொரு கும்பல் சசி சார்பில் உருவாகும்.

பரப்பன அக்ரகாரா சிறையில் இருந்தபோது, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா என்ற குற்றவாளியின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டுதான் பன்னீர் ஆட்சி செய்தார். எல்லா அரசு அதிகாரிகளின் தலைமீதும் அந்த குற்றவாளியின் படம்.

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்து சிறை சென்றிருந்தால், மீண்டும் படத்தை வைத்து ஆட்சி நடத்தியிருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை.  ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருக்கும் அதிமுகவினர் அந்தப் படத்தை எடுத்து கொளுத்தவா போகிறார்கள்?

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது போல கொண்டாடுகிறது பாரதிய ஜனதா கும்பல். பாரதிய ஜனதாவும் சோ, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் இதுநாள் வரை குன்ஹா தீர்ப்பைப் பற்றி சொல்லி வந்தது என்ன? இந்த பார்ப்பன வெறி பிடித்த கிரிமினல்கள்தான் இன்று சசிகலாவை மட்டும் வில்லியாக்கி, ஜெயாவை தேவதையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆரம்பத்தில் ஊழலின் கறை படியாமல்தான் இருந்தாராம். இவர்களுடைய சகவாசத்தின் காரணமாகத்தான் அவர் ஊழலுக்கு பலியாகிவிட்டாராம். இப்போது யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைத்திருக்கிறதாம். இது நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராசனின் தொலைபேசி பேட்டி.

நாம் எதிர்த்துப் போராடவேண்டிய மிக முக்கியமான பித்தலாட்டம் இதுதான்.

இந்த தீர்ப்பு நமக்கு தெரியாத புதிய உண்மை எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. உண்மையிலேயே இதில் பெருமை ஏதேனும் உண்டென்றால், அது குன்ஹாவை மட்டுமே சாரும். ஜெயலலிதாவின் கிரிமினல்தனங்களையும் அவரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட மாபெரும் சட்ட வல்லுநர்களின் தகிடுதத்தங்களையும் மீறி, சட்டத்தின் எந்த சந்திலிருந்தும் தப்பிக்க முடியாத வண்ணம் மடக்கி, ஒரு தீர்ப்பை வழங்கினாரே, அது மாபெரும் சாதனைதான்.

அதாவது இந்த சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டு ஜெயலலிதா சசிகலா என்ற கிரிமினல் இரட்டையர்களை தண்டித்தது என்பது, கல்லில் நார் உரித்ததற்கு சமமானது. அதை குன்ஹா செய்தார்.

இந்த தீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றோ, இனி ஊழல் பேர்வழிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்றோ யாரும் கருதிவிட வேண்டாம். அப்படி ஒரு வெங்காயமும் நடக்காது.

66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு. கடந்த 5 ஆண்டுகளிலேயே அந்த தொகையைப் போன்று ஆயிரம் மடங்குக்கும் மேல் சொத்து குவித்து விட்டது ஜெ சசி கும்பல்.

பன்னீர், நத்தம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. அதற்குப் பிறகு என்ன? அன்புநாதன் மீது என்ன நடவடிக்கை? சேகர் ரெட்டி, ராம் மோகன ராவ் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் நேரத்தில் மூன்று கன்டெயினர் பிடித்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இது வெறும் சசிகலா விவகாரமல்ல, ஜெயா விவகாரம் மட்டுமல்ல. அ.தி.மு.க என்பதை ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல். அது தேன் எடுத்தவன் புறங்கை நக்குவது என்பதைப் போல ஊழல் செய்யும் கும்பல் அல்ல. கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்கள் தீட்டுகின்ற, கொள்ளையடிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்ட கிரிமினல் கும்பல். இந்த கும்பலை ஒரு கட்சி என்று அங்கீகரிப்பதும், அதற்கு வேறு தலைவர் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நல்லாட்சி நடத்துவார்கள் என்று கூறுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இப்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனம்தான் நடக்கிறது. பன்னீர், எடப்பாடி, செங்கோட்டையன், தம்பிதுரை என்ற எந்த கிரிமினல் தலைமை தாங்கப் போகிறார்கள் என்பதா நமது கவலை? இந்தக் கிரிமினல் கும்பல் தலையெடுக்கவே கூடாது. அதிமுக என்ற கிரிமினல் கும்பலுக்கு மக்கள் தருகின்ற ஒரு தண்டனை எல்லா கட்சிகளின் கிரிமினல்களுக்கும் பாடமாக இருப்பது மட்டுமல்ல, கிரிமினல்களை மக்கள் நேரடியாக தண்டிப்பது என்பதற்கும் ஒரு முன்னோடியாக அமைய வேண்டும்.

மன்னார்குடி மாஃபியாவை வழக்கு போட்டு தண்டிப்பதென்றால் ஒரு காலத்திலும் முடியாது. சரியாக சொல்வதென்றால், சட்டபூர்வமான முறைகளின் மூலம் ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முயல்வது என்பது முட்டாள்தனமானது  என்பதற்கு ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு நிரூபணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த வழக்கில் கடந்த காலத்தில் நடந்திருக்கும் விசயங்களை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பீர்களேயானால், இந்த உண்மை புரியும்.

இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் முதல் தத்து, குமாரசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் வரை உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பலர் பயந்து ஓடியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டதே ஒரு நாடகம். இது முன்னரே வந்திருந்தால் ஜெயா உள்ளே போக வேண்டியிருந்திருக்கும்.

இந்த மொத்த வழக்கிலும், குன்ஹா அளித்த தீர்ப்பு என்பது ஒரு விதிவிலக்கு. பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்? அவையெல்லாம் யார் மீது வழக்கு போட்டு எப்போது பறிப்பது?

வழக்கு போட்டு நீதிபெறும் வழி முறையை, ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மோடி சட்டத்தை திருத்தினால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும், மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். பிறகு பன்னீர் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் திருத்த முடியாது, நீங்கள் மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வாங்கித்தருகிறோம் என்றார் மோடி. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிடக் கூடாது என்பதால், தீர்ப்பு சொல்லாதே என்றார்கள். உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்புறம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு விலங்கு நல வாரியம் உள்ளிட்டோர் இடைக்கால தடை வாங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.

இத்தனையும் எப்படி நடந்தது. ஏன் நடந்தது? மெரினா போராட்டம் தொடங்கும் வரையில் எதுவுமே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், போராட்டத்தின் தீவிரத்தை கண்டார்கள். “நீ சட்டம் போடுவியோ, தீர்ப்பு எழுதுவியோ அது உன் வேலை. ஜல்லிக் கட்டு நடக்கும் என்று உறுதியாகும் வரை நாங்கள் விடுவதில்லை” என்று மக்கள் நின்றார்கள். சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை. தடையை மீறி நடத்தினார்கள்.

இனிமேல் இதனை அங்கீகரிக்காவிட்டால், சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் புரிந்து விட்டது.

அதனால்தான் ஏதாவது ஒரு வழியில் இதனை சட்டரீதியாக தீர்த்து வைக்கவில்லை என்றால், மக்கள் படிப்படியாக அரசாங்கத்தின் அதிகாரத்தையே எல்லா விவகாரங்களிலும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்துக்கு வந்தது.

அதன் விளைவுதான் மாநில அரசின் சட்டம்.

அதாவது மக்களின் விருப்பத்துக்கு அரசும் நீதிமன்றமும் பணிந்தன.

அதே வழிமுறையை ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் நாம் கையாள முடியும். கையாள வேண்டும்.

அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும்.

இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம்.