privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்வாழ்க்கைபூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

பூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

-

பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை. கிழக்கு மும்பையிலுள்ள இந்திரா நகர் குடிசைப் பகுதி. அங்கிருக்கும் மூன்று ரூபாய் கட்டணக் கழிப்பறையின் முன் ஹரிஷ் டிகேதார்(40), கணேஷ் சோனி(40) மற்றும் முகமது இசாஃபில் அன்சாரி(30) ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர். காலை எட்டு மணிக்குச் சற்று முன்பாக திடீரென இவர்கள் நின்றிருந்த தரைத்தளம் உடைந்து நொறுங்குகிறது. மூவரும் 15 அடி ஆழ கழிவுத் தொட்டியினுள் விழுந்து மூழ்கி இறந்தனர் – பின் இறந்தவர்கள் வெறும் புள்ளிவிவரங்களாயினர்.

மும்பை பொதுக் கழிவறை

நொறுங்கிச் சரிந்த கழிப்பறையின் தரைத்தளத்தினுள் சிக்கி மலத்தொட்டியினுள் மூழ்கிய மூவரைத் தவிர சிராஜ்ஜுதின் துராட்(25) மற்றும் ரமாகாந்த் கனோஜியா(35) ஆகியோரும் அந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவரும் உடைந்த தரையின் முனையைப் பிடித்து தொங்கியதால்  காப்பாற்றப்பட்டனர். ஐந்து பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். இருபது நிமிடங்கள் கழித்தே தீயணைப்புத் துறை வந்து சேர்ந்தது. குழியில் விழுந்தவர்களை வெளியே இழுத்துப் போட்ட போது அவர்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு உடல் முழுக்க மலம் அப்பியிருந்தது.

”எங்கள் கால்களுக்குக் கீழே தரை நழுவிச் சென்ற போது நாங்கள் நின்று கொண்டிருந்தோம்” அச்சுறுத்தும் பழைய நினைவுகளால் நடுங்கியவாறே சொல்கிறார் துராட். ”அவர்கள் மூவரும் நேரடியாக குழியில் விழுந்து விட்டனர். எனது தோள் வரை மலச்சேற்றுக்குள் புதைந்து போனேன். அந்தச் சேறு என்னை கீழே இழுத்துச் சென்றது.. ஆனால், எப்படியோ நான் பக்கவாட்டில் இருந்த பலகையைப் பிடித்துக் கொண்டேன். யார் யாரோ என்னை மேலே பிடித்து இழுத்துப் போட்டார்கள்; அப்புறம் நான் மயங்கி விட்டேன்”

மும்பையின் சேரிகளில் மலஜலம் கழிப்பது போன்ற எளிய காரியங்களைச் செய்யவே ஒருவர் கடும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டும். கிழக்கு மும்பையின் சேரிகளான பைன்கன்வாடி, சிவாஜி நகர், கோவந்தி, சீட்டா கேம்ப், ரஃபீக் நகர், வாஷி நாகா, மந்தாலா மற்றும் மன்குர்ட் போன்ற மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இந்த அபாயங்கள் பன்மடங்கு அதிகம். இந்தப் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளன.

மும்பை மாநகரின் 24 நிர்வாக வார்டுகளில் மும்பை கிழக்கும் ஒன்று. இங்கே பகுதிகளை விட ஏழ்மை அதிகம் என்பதோடு பொது வசதிகளும் குறைவு. இந்த வார்டில் உள்ள சேரிகள் தாம் மும்பையிலேயே மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. மும்பை மாநகராட்சியில் உள்ள மொத்த இடங்களான 227-ல், மும்பை கிழக்கு வார்டில் மட்டும் சுமார் 15 இடங்கள் உள்ளன. மாநகராட்சி இருக்கைகளை வைத்துப் பார்த்தால் மற்ற வார்டுகளை விட மும்பை கிழக்கு தான் அளவில் பெரியது. எனினும், கழிப்பறை விபத்துகளை எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

பிப்ரவரி 4-ம் தேதி நடந்த மரணங்கள் எதேச்சையானவைகளோ, எதிர்பாராதவைகளோ, விபத்தோ அல்ல. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதே விதமான விபத்துகளில் ஏழு பேர் மரணித்துள்ளனர்.

“இது போன்ற பொதுக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு குறைந்தபட்சமாகவாவது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மரணங்களைத் தவிர்க்க முடியாது” என்கிறார் பிப்ரவரி 4-ம் தேதியன்று நடந்த விபத்தில் உயிர் பிழைத்த, இருவரைக் காப்பாற்ற உதவிய ரஸாக் ஷேக். அவரே மேலும் கூறும் போது, “ஒவ்வொரு முறையும் விபத்து நடந்து முடிந்த பின் நிவாரணத் தொகைக்கான செக்குகளுடன் எம்.பி எம்.எல்.ஏக்கள் வருவார்கள்; இந்த முறையும் சமாஜ்வாடி கட்சியின் அபு அஸீம் அஸ்மி வந்தார். இந்த நிவாரணங்களால் என்ன பயன்? மும்பையில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால், இந்தளவுக்குமா மலிவாகி விட்டது?” என்கிறார்.

பூட்டப்பட்டக் கழிவறை

சம்பவம் நடந்த அன்று இந்திரா நகரில் அமைந்திருந்த அந்த குறிப்பிட்ட பொதுக்கழிவறையில் நிறைய கூட்டம் இருந்துள்ளது. அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு பொதுக்கழிவறை சேதமடைந்து பூட்டப்பட்டதே இங்கே கூட்டம் அதிகளவில் கூடியதற்குக் காரணம். ஒவ்வொரு பொதுக்கழிவறைத் தொகுதியையும் சுமார் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.

“சில நேரம் கழிவறையைப் பயன்படுத்த நாங்கள் அரை நாள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்கிறார் ஐம்பது வயதான ஸுமைதா பானு.

மும்பை சேரிகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிவறைகளில் 78 சதவீதம் தண்ணீர் கிடையாது; 58 சதவீத கழிவறைகளில் மின்சார இணைப்பு இல்லை.. மேலும் பல கழிவறைகளுக்கு கதவுகளோ, பெண்கள் நாப்கின்களைப் போடுவதற்கான ஏற்பாடுகளோ இல்லை. பெரும்பாலான பெண்கள் கூலி வேலைகளுக்கோ, வீட்டு வேலைகளுக்கோ செல்லும் இடங்களில் உள்ள கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர். அதிலும் பல மேட்டுக்குடி குடும்பங்கள் தங்களிடம் வீட்டு வேலைக்கு வருகிறவர்கள் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் தான் வேலைக்கே சேர்க்கிறார்கள்.

அரசியல் தொடர்புடையவர்களே கழிவறைக் காண்டிராக்டுகளை எடுக்கின்றனர். ஒருவர் ஒரு முறை கழிவறையைப் பயன்படுத்த 2 அல்லது 3 ரூபாய்களைக் கட்டணமாக கொடுக்க வேண்டும். ஒரு கழிவறைத் தொகுதியை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு சில பல லட்சங்களை காண்டிராக்டர் சம்பாதித்து விடுகிறார். எனினும், குறைந்தபட்ச வசதிகளைக் கூட செய்வதில்லை.

”மும்பை முழுவதும் உள்ள பொதுக் கழிவறைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 392 கோடி ரூபாய் வசூலாகின்றன. அதாவது நாளொன்றுக்கு மும்பையைச் சேர்ந்த ஏழைகள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மலம் கழிப்பதற்காக மட்டுமே செலவிடுகின்றனர்” என்கிறது அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்கிற தனியார் சிந்தனைக் குழாம் வெளியிட்ட ஆய்வறிக்கை.

மேற்படி ஆய்வறிக்கையை எழுதிய தாவல் தேசாய் என்பவர் இதை மாபெரும் கிரிமினல் குற்றம் என்கிறார். ஆய்வுக்காக சந்தித்த மக்களில் 83 சதவீதம் பேர் தங்களால் சொந்தமாக கழிவறைகளை அமைத்துக் கொள்ள முடியுமென்றும், மாநகராட்சி நிர்வாகம் சில்லறையான காரணங்களைச் சொல்லி அனுமதி மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள் என தெரிவித்துள்ளார் தேசாய்.

சேரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்களில் அமைந்திருப்பதாக நுட்பமான சட்டவாத விளக்கங்கள் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இதே சேரிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பையும் வழங்கியுள்ளனர் – வீட்டு வரியும் வசூலிக்கப்படுகின்றது. மும்பையின் சேரிகளுக்கு அரசு தரப்பில் பின்பற்றப்படுவதாக சொல்லப்படும் இதே சட்டவாத அளவுகோள்கள் நாடெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருக்கும் சாமியார் மடங்களுக்கோ, கல்வித் தொழிற்சாலைகளுக்கோ பொருந்துவதில்லை என்பதோடு, அரசே முன்வந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அடாவடியாக பிடுங்கி பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு தாரை வார்த்து வருகின்றது.

இது ஒருபுறமிருக்க, மக்களே சொந்தமுறையில் கழிவறைகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பதன் பின் வேறு காரணங்களும் உள்ளன. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் பொதுக் கழிவறைகளைக் நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்குமான காண்டிராக்டுகள் வளம் கொழிக்கும் தொழிலாக இருக்கின்றது. இந்தக் காண்டிராக்டுகளை எடுக்கும் பகுதியைச் சேர்ந்த அரசியல் ரவுடிகள் யாருக்கும் பதில் சொல்லவோ, கணக்குக் காட்டவோ கடமைப்பட்டவர்கள் அல்ல.

மூன்று ஏழைகளைப் பலிகொண்ட இந்திரா நகர் பொதுக்கழிவறை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சம்பவம் நடந்த பின் அதைக் கட்டிய காண்டிராக்டர் ராஜ்தேவ் ராம்நரேஷ் பாரதி கைது செய்யப்பட்டு பின் உடனடியாக விடுவிக்கப்பட்டும் விட்டார்.

சேரிகளின் நிலை இவ்வாறிருக்க, இதே கிழக்கு மும்பையைச் சேர்ந்த செம்பூர், ட்ரோம்பே போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் போதிய அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதே மும்பையின் சிறுபான்மை மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதிகளோ வழுக்கும் சாலைகளோடும், படாடோபமான கட்டிடங்களோடும் நரகலின் மத்தியில் சொருகப்பட்ட ரோஜாவைப் போல் பளீரிடுகின்றது.

எல்லாம் போகட்டும், மோடி பீற்றிக் கொண்ட தூய்மை இந்தியா திட்டம் என்னவாயிற்று?

“இங்கே கழிவறை மற்றும் குடிநீரின் நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், ஸ்வச் பாரத் எல்லாம் நகைப்புக்குரிய திட்டம் தான்” என்கிறார் அமிதா பிதே.

உண்மையில் அத்திட்டம் நகைப்புக்குரியதல்ல, அத்திட்டத்தின் மூலம் மோடி தலைமையிலான ஆளும் கும்பல் தான் மக்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றது.

மேலும் படிக்க,

– முகில்

In Mumbai’s poorest slums, water and sanitation carry a steep price tag – sometimes deat