privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்மீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ்

மீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ்

-

லங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கொலை குறித்து எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், தமிழ் இந்து நாளிதழில் இன்று (மார்ச் 9, 2017) “ஓட்டுக்கு மட்டும்தான் நாங்கள் இந்தியர்களா?” என்றொரு சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

அதில், “பிரதமரே! ஒரு உயிர் போயிருக்கிறது, அதைப் பாதுகாக்கத்தான் முடியவில்லை. கொன்றவர்கள் யார்? எங்களுக்குச் சொல்லுங்கள். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும்தான் நாங்கள் கண்ணுக்குத் தெரிவோம்; மற்ற நேரங்களில் நாங்கள் பொருட்டில்லை என்றால், எங்களுக்கும் நாங்கள் யாரென்று உணர்த்தும் காலம் வரும்!” என்று கோபத்துடன் சீறுகிறார் குரூஸ். நியாயமான கோபம்தானே என்று நீங்கள் பாராட்டுவதற்கு முன் சற்று பொறுங்கள்!

இன்றைக்கு மோடியின்  பெயரைக் கூட சொல்லாமல் பிரதமரே என்று விளித்தும் இலங்கை கடற்படைதான் கொன்றது என்று மீனவர்கள் ஆணித்தரமாக சொல்லும் போது கொன்றவர் யார் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சுவதையும் செய்யும் குரூஸ் அவர்கள் 2014 பாராளுமன்ற தேர்தலில் இதே மோடிக்காக தமிழகத்தில் களமிறங்கியவர்.

இலங்கை நெஞ்சில் சுடுகிறது இந்தியா முதுகில் குத்துகிறது – ஓவியம்: முகிலன்

அப்போது அவர் மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்த போது, மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற(!) தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரித்தாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி  ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார் குரூஸ்.

குரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அன்றும் இன்றும் அடித்து விடுகிறார்கள். தற்போது அந்த ‘வளர்ச்சி’ தோற்றுவித்திருக்கும் மரணங்களை நாம் பணமதிப்பிழப்பு கொலைகள் முதல், வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை வரை பலவற்றில் பார்த்து விட்டோம்.

குரூஸ் அன்று மோடியை ஆதரித்த போது தமிகத்தில் தினமலர், தினமணி, விகடன், குமுதம், தந்தி, புதிய தலைமுறை என்று அனைத்து ஊடகங்களுமே மோடியின் குஜராத் செட்டப் காட்சி வளர்ச்சிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். ஆகவே இது குரூஸ் மட்டுமே செய்த ஒன்றல்ல.

இருப்பினும் அன்றைய நிலவரப்படியே, குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86 ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள், முதலாளிகள்.

குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார் மோடி.  2012-ல் மட்டும்  அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது போக குஜராத்தில் மோடி அரசு நடத்திய முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் ரத்த வீச்சு இன்றும் அடித்துக் கொண்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தின் தாத்ரி கொலையோ, குஜராத்தின் ஊனா அடியோ, ரோகித் வெமுலா தற்கொலையோ நூற்றுக் கணக்கான சான்றுகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.

பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே?

பாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். மற்றபடி இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டு அதையும் இந்திய அரசு கண்டிக்க கூட துப்பில்லாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் தமிழக மக்களின் ஒட்டு மொத்தமான கோபம் மத்திய அரசை கேள்வி கேட்கும் நிலையில் மீனவ மக்களின் பிரதிநிதி போல வேடம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

இல்லை என்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா? மீனவர் பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே? நீங்கள் படித்த மற்றும் வடித்த இலக்கியம் சொல்லிக் கொடுத்த மனிதநேயம் என்பது இதுதான் என்றால் அந்த இலக்கியம் எங்களுக்கு வேண்டாம்.

தி இந்து கட்டுரையில் அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்: “ராமேஸ்வரம் சொந்தபந்தங்கள் அத்தனையிடமும் பேசிவிட்டேன். “மீன் பிடிக்கப் போறோம்ங்குறது தவிர, வேற எந்த நோக்கமும் இல்லாத அப்பாவிப் புள்ளைக. இலங்கைக் கடற்படையோட இரண்டு படகுகள் சுத்திச் சுத்தி வந்து சுட்டிருக்கு. இறந்த பையன் தங்கச்சிமடம் தவசி பேரன் கெமிலஸ் மகன் பிரிஜ்ஜோ. அணியத்தில் நின்னு இலங்கை நேவிப் படகுகளைப் பார்த்தவன் பதறி, எல்லோரையும் கிடைத்த இடத்தில் பதுங்கச் சொல்லியிருக்கான். குண்டுச் சத்தம் ஓய்ஞ்சதும் மத்தவங்க மேலே வந்து பார்த்தால், கழுத்தில் குண்டு பாய்ஞ்சு ரத்த வெள்ளத்துல அவனே கெடந்துருக்கான். பதறி கரைக்குச் செய்தி சொல்லியிருக்காங்க. சேதி கடலோரக் காவல் படைக்கும் போயிருக்கு. அங்க வழக்கம்போல அலட்சியம். இளம்பிள்ளையைக் கொன்னது நாங்களில்லன்னு இலங்கைக் கப்பப் படை சொன்னா அப்பம் வேற யாரு?”

இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது ஜோ டி குரூஸ் அவர்கள் சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா?

சரி ஐயா அதே சொந்தங்களிடம் நீங்கள் மோடியை ஆதரித்து வெட்கம் கெட்ட முறையில் எழுதிய வரலாற்றையும் சேர்த்து காட்ட தைரியம் உண்டா? இல்லை இதே சொந்தபந்தங்கள் சொன்ன விசயத்தை பாஜக குள்ளநரித் தலைவர்களிடம் சொல்ல முடியுமா? ஒரு குஜராத்தியை பாகிஸ்தான் சுட்டிருந்தால் கடலோரக் காவல் படை இப்படித்தான் செயல்படுமா என்று  தற்போது கேட்கும் ஜோ டி குரூஸ் இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா? எந்தக் காலத்தில் அய்யா கடலோரக் காவற்படை நமது மீனவர்களை காப்பாற்றியது? இல்லை மோடியின் பதவியேற்புக்கு கொலைகார ராஜபக்சேவை அழைத்து நடத்த விருந்தின் போது கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலக்குரல் கூட உங்களுக்கு கேட்காததன் காரணம் என்ன? அப்போது நீங்கள் விரும்பிக் கேட்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகாத்மதா ஸ்தோத்திரம் அல்லவா?

மீனவ மக்களையும் உள்ளிட்ட முழு தமிழகமுமே இந்தக் கொலைக்கு நீதி கேட்டு மத்திய பாஜக அரசு மீது கொலை வெறிக் கோபத்தில் இருக்கும் போது அதை தணிய வைப்பது தி இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்களின் கடமையாகிறது. உடனே சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தைச் சேர்ந்த மீனவருமான ஜோ டி குரூஸை அழைத்து எழுதி வெளியிட்டு விட்டார் சமஸ்.

ஜோ டி குரூஸ் மனதில் இடம் பெற்ற பாஜக மற்றும் மோடியின் இன்னொரு முகமான சுப்ரமணிய சுவாமி என்ன சொல்லியிருக்கிறார்? மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இதுதான் பாஜகவின் உண்மையான முகம். இந்த முகம் தோற்றுவிக்கும் தமிழக சேதாரத்தை குறைப்பதற்கு ஜோ டி குரூஸ் போன்றவர்கள் களமிறக்கி விடப்படுகின்றனர்.

ஆனால் அதே இராமேஸ்வரம் மீனவர்கள் எங்களை இந்தியாவிலிருந்து பிரித்து விடுங்கள், நாங்கள் இந்தியர்களில்லை என்று சீறுகிறார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தல் போது மோடி அளித்த பொய் வாக்குறுதிகள் குறித்து அவர்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அந்த கேள்விகளுக்கு பதிலே அளிக்க முடியாத போது ஜோ டி குரூஸ் போன்றவர்கள் கேள்வி கேட்பவர் பக்கம் நின்று பதில்கள் தர வேண்டியவர்களின் கோர முகத்தை மறைக்க பார்க்கிறார்கள்.

இறுதியில் ஜோ டி குரூஸ் அவர்களிடம் நாம் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது?

உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று உண்டா?