privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஅகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

-

இங்கிலாந்தை உருவாக்கிய அகதிகளைக் கொண்டாட வேண்டிய நேரமிது!

காதிபத்தியங்களின் போர்ச்சக்கரங்களில் மிதிபட்டு நசுங்கிய மத்திய கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்க மக்கள் பலர் உலகம் முழுதும் அகதிகளாக விசிறியடிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் இங்கிலாந்தும் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இளம் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அந்நாடுகள் அவர்களை மறைமுகவாவேனும் வரவேற்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன. ஏனெனில் இவர்கள்தான் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சொகுசாக வாழ்வதற்கு குறைந்த கூலியில் கிடைக்கும் அடிமைகள். ஆயினும் அவர்களது உழைப்பினைத் துய்த்துக்கொண்டே அவர்களை நாட்டை விட்டே துரத்தச் சொல்கிறார்கள் இனவெறியர்கள். இந்த இனவெறியர்களையும் மேற்குலக அரசுகள் தூண்டி விடவும் செய்கின்றன. இதன் மூலம் அகதிகளை சுரண்டுவதோடு எப்போதும் அவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கவும் முடியும்.

பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து அகதிகள் மீதான எதிர்ப்புணர்வும் இனவெறியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது

பிரெக்ஸிட் வாக்கெடுப்பைத் (Brexit Referendum) தொடர்ந்து அகதிகள் மீதான எதிர்ப்புணர்வும் இனவெறியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் பண்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு அகதிகள் ஆற்றிய பங்களிப்பினைப் பறைசாற்றவும் அகதிகளுடைய இழப்பினை இங்கிலாந்து மக்களுக்கு உணர்த்தவும் “நாங்களில்லாமல் ஒரு நாள்’ என்ற பெயரில் நாடுதழுவிய ஒரு இயக்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட அகதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதற்குச் சில நாட்கள் முன்னதாக (16/02/2017) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எல்லைச் சுவர் (Border Wall) திட்டத்திற்கு எதிராக அகதிகள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரையின் ஆசிரியரான மைரியா கொன்சலஸ் ரோட்ரிக்ஸ் (Mireya González Rodríguez) லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையில் (University of Leicester Archaeological Services) ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். இவர் லீசெஸ்டர் நகரில் “நாங்களில்லாமல் ஒரு நாள்” இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளின் அமைப்பாளர் ஆவார்.


நான் ஒரு அகதி. ஒரு கலைத்துறை வரலாற்று மாணவியாக எராஸ்மஸ்(Erasmus – மாணவர் அறிவுப் பரிமாற்றத் திட்டம்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன்முறையாக இங்கிலாந்து வந்தேன். பன்முக கலாச்சாரங்களை கொண்ட லீசெஸ்டர் போன்ற ஒரு நகரத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். நான் வட ஸ்பெயினைச் சேர்ந்த போன்போரேடா நகரத்திற்கு திரும்பினாலும் மீண்டும் என்னுடைய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தேன். இங்கிலாந்து கல்வித்துறையின் ஒருங்கிணைந்த வெளிப்படையான அணுகுமுறையின் காரணமாக மேற்படிப்பையும் முனைவர் பட்டப்படிப்பையும் படித்தேன். இங்கிலாந்தின் சமூக கலாச்சாரப் பன்முகத்தன்மையை எப்பொழுதும் நான் பாராட்டியிருக்கின்றேன். “இங்கிலாந்து சமூகம் பாகுபாட்டிற்கு ஒருபோதும் இடங்கொடுக்காது, எந்த வடிவிலான தீவிரவாதத்தையும் பொறுத்துக் கொள்ளாது, பன்முக கலாச்சாரத்தை மதித்து அரவணைக்கும் மற்றும் அகதிகளின் பங்களிப்புகளை மதித்து மரியாதை செலுத்தும்” – ‘பிரிட்டன் வாழ்க்கைப் பற்றிய தேர்வு” (Life in the United Kingdom test) என்ற இணைய வழித் தேர்வின்(குடியுரிமைக்கான) பொழுது எங்களுக்கு கூறப்பட்டது.

இருந்த போதிலும் அண்மைக்காலங்களில் சில மாதங்களாக இங்கிலாந்து மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்யும் வகையில் என்னைப் போன்ற அகதிகளைத் தூற்றவும் புறக்கணிக்கும்படியுமான கட்டுக்கதைகள் அதிகரித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேறியிருக்கும் மக்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கும்படியாக அது இருக்கிறது. ஒரு  சில ஊடகங்களால் பரப்பப்படும் இந்தக் கட்டுக்கதைகளால் பகைமையுணர்வு உருவாகிறது. போக்குவரத்திலிருந்து பொது சேவைகள் வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் நாங்கள் தான் காரணம் என்று வெளிப்படையாக குற்றச்சாட்டப்படுகிறோம். அகதிகளுக்கெதிரான தாக்குதல்கள் மற்றும் வெறுப்புக் குற்றங்களும் இத்துடன் சேர்ந்தே வருகின்றன.

அகதிகள் மற்றும் முசுலீம்கள் மீது பாக்கிஸ் என உமிழப்படும் கொடுஞ்சொற்கள்

இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த அகதிகள்(EU) மற்றும் சேராத அகதிகள்(Non-EU) என்று பிரிக்காமல் இருப்பது தேவையானது என்று நம்புகிறேன். நான் ஸ்பெயினின் குடிமகள் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத எனது நண்பர்கள் மற்றும் சகப்பணியாளர்கள் போலல்லாமல் ஐரோப்பாவெங்கும் இடம் மாறவும், வேலை செய்யவும் மற்றும் தங்கியிருக்கவுமான உரிமைகளை பெற்றிருக்கிறேன். இந்த உரிமைகள் மாறக்கூடும். ஆனால் ஒரு அகதியாக என்னுடைய தகுதி மாறாது. நான் எப்போதும் ஒரு அகதியாகவே இருக்கிறேன். எப்போதும் ஒரு அகதியாகத் தான் உணர்கிறேன். இது நான் தெருவில் செல்லும் பொழுது “பாக்கி, உன்னுடைய நாட்டிற்கு போ” (Paki go home – இனவெறியர்கள் முசுலீம்களை நோக்கி உமிழும் அமில வார்த்தைகள்) என்று காரில் செல்லும் சிலர் கூச்சலிட்டதால் இருக்கலாம். அல்லது தொலைப்பேசியில் என்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் “நாங்கள் ஓட்டு போட்டது உன்னுடைய நாட்டிற்கு உன்னை துரத்துவதற்கு தான்” (We voted for you to go home) என்று என்னைப் பார்த்து சிலர் கூறியதாலும் இருக்கலாம்.

ஆனால் இங்கிலாந்து தான் எனது தாயகம். இங்கிலாந்து குடிமக்களின் ஒத்த நடத்தைகளை கூட நான் வரித்துக் கொண்டுள்ளேன். நான் திரும்பவும் ஸ்பெயினுக்கு சென்ற பொழுது ஒரு உண்மையான இங்கிலாந்து குடிமகளை போல பேருந்திற்காக வரிசையில் காத்திருந்தேன். பேருந்து பயணத்திற்காகவும் வானிலையைப் பற்றி புதிய நபர்களிடம் பேச்சு கொடுத்து வந்ததற்காகவும் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி கூறுகிறேன்.

இங்கிலாந்து நாட்டிற்காக அகதிகளாற்றிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கு தேசிய அளவிலான ஒரு புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட “ஒருநாள் நாங்கள் இல்லாமல்” இயக்கத்தில் நான் பங்கேற்க இதுதான் காரணம். இந்த இயக்கம் அனைத்துவிதமான அகதிகளையும் பற்றியது என்பதை ஆணித்தரமாக கூறி வருகிறேன். தங்களது சுயநல அரசியலுக்காக இந்த இயக்கத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் பிரெக்ஸிட்டுடன் (BREXIT) இதைத் தொடர்புபடுத்த முயற்சிப்பவர்களுக்கும் இந்த விளக்கத்தைக் கூறி நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். இந்த இயக்கம் அந்த மாதிரியான அரசியலைப் பற்றியதல்ல. எங்கு பிறந்திருப்பினும் எவ்வளவு காலங்கள் இங்கே தங்கியிருப்பினும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு அகதிகளின் பங்களிப்புகளைக் கொண்டாடும் மக்களைப் பற்றியது இது. இதற்குமேல் என்னால் அழுத்தமாகக் கூற முடியவில்லை.

லீசெஸ்டர் நகரத்தில் இன்று தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த பன்முக கலாச்சார பின்னணிக் கொண்ட கலைஞர்கள் மற்றும் பேச்சாளர்களால் டவுன் ஹால் சதுக்கத்தில் (Town Hall Square ) கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கள் கதைகளையும், பட்டறிவுகளையும், உணவுகளையும் மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான நாளிது.

இங்கிலாந்திற்கு அகதிகளால் ஏற்படும் பொருளாதார நலன்களை “நாங்களில்லாமல் ஒருநாள்” இயக்கம் பேசப்போவதில்லை (ஆனாலும் இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் பொது மக்களுக்கான சேவைகளுக்கான நிதிகளிலும் இளம் தொழிலாளர் பட்டாளமான அகதிகள் பங்களிக்கிறோம் என்பது பொதுவான உண்மை). பதிலாக அகதிகளின் பங்களிப்பினை அடிக்கடி மறந்துபோகும் அல்லது  எங்கள் பங்களிப்புகளை ஆதாரமின்றி மறுக்கும் (Taken for Granted) இங்கிலாந்தின் குடிமக்களுக்கு எங்களது சமூக மற்றும் கலாச்சார பங்கை நினைவூட்டவே நாங்கள் விரும்புகிறோம்.

பேட்டர்ட் ஃபிஷ் என்ற மீன் உணவை யூத அகதிகளும், சிப்ஸ்-ஐ போர்ச்சுகள் அகதிகளும் தான் அறிமுகப்படுத்தினர். இவ்வாறு இங்கிலந்தின் புகழ்பெற்ற உணவு வகைகளில் கூட அகதிகளின் பங்களிப்பு நிறைந்துள்ளது.

உள்ளூர் சந்தைகள், உணவகங்கள், துணிக்கடைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வகைகள் மற்றும் சந்தங்கள் முதல் கறி வகைகள், வெள்ளிக்கிழமை மீன் மற்றும் சிப்ஸ்(Friday fish and chips) வரை இங்கிலாந்து மக்களுடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அகதிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம். இத்தாலியைச் சேர்ந்த மேலாளர் கிளாடியோ ரேனியாரி உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் சென்ற பிரிமியர் லீக்கை என்னுடையச் சொந்த ஊரான லீசெஸ்டரின் கால்பந்து அணி வெற்றியைக் கொண்டாடிருக்க முடியாது. பொதுவாக இந்த குடியேற்றம் பன்முக கலாச்சாரங்களையும் புதிய சிந்தனைகளையும் இங்கிலாந்து சமூகம் சந்திக்கும்படி செய்திருக்கிறது. இந்த அறிவு பரிமாற்றத்தின் காரணமாக அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் இங்கிலாந்தில் சாத்தியமானது.

உங்களுடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அசிரியர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தலைமைச் சமையல்காரர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அலங்கார வடிவமைப்பாளர்களாக அகதிகள் இருக்கிறார்கள் என்பதை இன்று இங்கிலாந்து குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம். பேருந்துக்காக நாள்தோறும் காத்திருக்கும் பொழுதும் தேநீர் விடுதிகளில் வரிசையில் நிற்கும் பொழுதும் நீங்கள் சந்தித்துப் பேசி மகிழும் மனிதர்களில் பெரும்பாலானோர் அகதிகளே.

நமது (அகதிகளுடைய) பொதுவான அம்சங்களைப் பறைசாற்றுவதையும் அதைக் கொண்டாடுவதையும் “நாங்களில்லாமல் ஒரு நாள்” இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது. உண்மையில் நம்மைப் பிரிப்பவற்றை விட நம்மைச் சேர்க்கும் பொதுவான அம்சங்கள் தான் மிகவும் உயர்வானது. தனித்திருப்பதை விட சேர்ந்திருப்பது தான் சிறந்தது என்பதைக் கூறுவதற்கு நாம் பயப்படக்கூடாது.

தமிழாக்கம்: சுந்தரம்

நன்றி: தி கார்டியன்  Migrants have helped make Britain. It’s time to celebrate us