privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇனி தங்கம், வெள்ளி போல தினசரி பெட்ரோல் விலை நிலவரம் !

இனி தங்கம், வெள்ளி போல தினசரி பெட்ரோல் விலை நிலவரம் !

-

திர்வரும் 2017 மே ஒன்றாம் தேதியில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கேற்ப தினசரி மாற்றியமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது மத்திய அரசு. இதற்காக முதல்கட்டமாக ஜம்ஷெட்பூர், பாண்டிச்சேரி, சண்டிகர், விசாகப்பட்டினம் மற்றும் உதய்பூர் ஆகிய ஐந்து நகரங்களை தெரிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 53,000 சில்லறை விநியோக நிலையங்களைக் கொண்டுள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், இத்திட்டத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் முன்மொழிந்து அந்த அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்நடவடிக்கையின் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மை ஏற்படவுள்ளதாக ஆருடங்களை எழுதி வருகின்றன. அதாவது, தற்போது அரசின் பொறுப்பில் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இருப்பதால், சர்வதேச சந்தையில் எண்ணை விலை குறையும் காலங்களில் உடனடியாக விலைக்குறைப்பு அறிவிப்பு வெளியாவதில்லை என்பதால் அதன் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிட்டுவதில்லை எனவும், இனிமேல் தங்க வெள்ளி விலை நிலவரங்களைப் போல் அன்றன்றைக்கான சர்வதேச விலை அன்றன்றைக்கே உள்ளூர் சில்லறை மையங்களில் அமல்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிட்டவுள்ளதாகவும் இப்பத்திரிகைகள் வியாக்கியானங்களை எழுதி வருகின்றன.

ஆனால், ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலை சர்வதேச எண்ணைச் சந்தையில் நிலவும் விலைகளைப் பிரதிபலிப்பதில்லை என்பதே உண்மை. இதை கீழே உள்ள மூன்று படங்களே விளக்குகின்றன.

படம் 1: கடந்த ஐந்தாண்டுகளின் சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரம். படம் 2: சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக பெட்ரோல் விலை நிலவரம் படம் 3: சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக டீசல் விலை நிலவரம்.

அதாவது சர்வதேச கச்சா எண்ணை விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் (குறிப்பாக மோடி பதவியேற்ற பின்) பாரிய அளவுக்கு சரிந்துள்ளது. எனினும், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளைக் குறைக்கவில்லை. ஒருவேளை தற்போது முதலாளித்துவ பத்திரிகைகள் சொல்வது போல் “அரசு தாமதமாக விலைக்குறைப்பு அறிவிப்பை” வெளியிட்டிருந்தாலும் கூட வாடிக்கையாளர்கள் ஓரிரு மாத தாமதத்திற்குப் பின் சர்வதேச சந்தையில் நிலவும் விலைச்சரிவின் பலன்களை அனுபவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த அதிசயமும் நடக்கவில்லை.

ஏனெனில், பெட்ரோலிய பொருட்களின் உண்மையான விற்பனை விலையின் மீது மத்திய அரசு ஏராளமான வரிகளை ஏற்றியிருக்கிறது. தற்போது விற்பனையாகும் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்குமென்றும், மற்றபடி நாம் கொடுக்கும் 75 ரூபாயில் எஞ்சிய அனைத்துமே விதவிதமான வரிகள் தானென்றும் என்பது பாமரர்களும் அறிந்த உண்மைதான்.

தற்போது மத்திய அரசு அமல்படுத்தவுள்ள “தினசரி சந்தை விலை நிர்ணயம் செய்யும்” திட்டத்தில் வரிகளைக் குறைக்கும் நோக்கமோ, எண்ணமோ இல்லை. ஆக, இந்நடவடிக்கை எந்தவிதத்திலும் மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வந்து விடப்போவதில்லை என்பதுடன், இந்த சமயத்தில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுப்பதில் மோடி அரசுக்கு வேறு சில நோக்கங்கள் இருக்கின்றன.

இத்திட்டத்தால் பயண்னடையப் போவது தரகுமுதலாளிகள் தான்

முதலாவதாக, பெட்ரோலிய பொருட்களின் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 3 அல்லது 5 ரூபாய்களென உயர்த்துவதால் மக்களிடையே எழும் அதிருப்தியை கட்டுக்குள் வைத்து விடலாம். சில பைசாக்களாக பெட்ரோலின் விலை உயர்த்தப்படுவது மெல்லக் கொல்லும் விசமாக, மக்களின் கவனத்தை அறியாமலேயே பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபடலாம்.

இதோடு சேர்த்து, சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற கட்சிகளின் குறைந்த பட்ச ‘அரசியல்’ செயல்பாடுகளிலும் இந்த திட்டம் மண்ணள்ளிப் போட்டுள்ளது. வழக்கமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் போதெல்லாம் மேற்படி மேற்படி கட்சிகள் தாங்கள் ஊர் ஊருக்கு வைத்திருக்கும் பத்துப் பதினைந்து ‘செட் பிராபர்டிகளை’ கொண்டு மொட்டைபோடும் போராட்டம், கழுதை ஊர்வலப் போராட்டம், நாமம் போடும் போராட்டம், ரோட்டில் உருளும் போராட்டம் என சாலையோரங்களில் வித்தை காட்டி அரசியல் நடத்துவது வாடிக்கை. மோடி அரசின் இந்த திட்டத்தின் விளைவாக இந்தக் காமடி கோமகன்களின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

இரண்டாவதாக, இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பழைய விலையில் கச்சா எண்ணையைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை திடீரென சரிந்தால் ஏற்படும் நட்டத்தையும், திடீரென விலை உயரும் சமயங்களிலும் உள்ளூர் சந்தையின் விலை நிலவரங்கள் ஒரே நிலையாக இருப்பதையும் அரசு உறுதி செய்து வந்தது. பாரதூரமான விலை உயர்வு மக்களின் அதிருப்தியை சந்திக்கும் என்பதால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை மானியங்களின் மூலம் அரசு ஈடுகட்டி வந்தது. எனினும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் பெட்ரோல், டீசல் வரிகளோடு ஒப்பிடும் போது இந்த மானியங்களின் அளவு மிகவும் குறைவே.

இதன் காரணமாகவே ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட தனியார் தரகு முதலாளிகளால் சில்லறை பெட்ரோலிய வர்த்தகத்தில் சோபிக்க முடியாத நிலை இருந்து வந்தது. தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அரசின் பாதுகாப்பிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டு சந்தையின் ஓநாயான தரகுமுதலாளிகளுடன் மோதும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே தனது சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பொதுத்துறை நிறுவனங்களுடன் போட்டியிட முடியாதபடிக்கு அந்நிறுவனங்களை அரசு பாதுகாத்து வருவதாகவும், இதன் விளைவாக தான் நட்டத்தை சந்திப்பதாகவும் அம்பானி புலம்பி வந்தார். இதன் காரணமாகவே சில ஆண்டுகளுக்கு முன் அம்பானியால் படாடோபமான முறையில் நாடெங்கும் திறக்கப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோலிய சில்லறை விநியோக மையங்கள் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் மூடுவிழா கண்டன.

மோடி அரசு தற்போது அமல்படுத்தவுள்ள இத்திட்டத்தால் வாழ்வு பெறப்போவது தரகு முதலாளிகள் தான் என்பதே உண்மை. இனி அன்றாடம் விலை உயர்வோ கடும் உயர்வோ இருந்தால் மக்கள் அந்த சுமையை உடனே தாங்கியாக வேண்டும் என்று மாற்றுவதற்கு இந்த தினசரி பேரம் உதவும். மற்றபடி பழைய ரேட்டில் லாரி வாடகை கட்டணம் வாங்கிய லாரி உரிமையாளர்கள் பத்து பதினைந்து நாட்களில் தமது பயணத்தின் போது போடும் டீசலுக்கு புதுப்புது விலை இருந்தாலும் இனி ஒன்றும் சொல்ல முடியாது.  மொத்தத்தில் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு, வாடகை கார் ஆட்டோ கட்டணம் உயர்வு, ரயில் கட்டணம் உயர்வு என அனைத்தும் அன்றாடம் மாறிக் கொண்டே அதாவது கூடிக் கொண்டே இருக்கும்.

அப்படிப் பார்த்தால் இனி நமது ஒரு நாள் வருமானத்தில் எவ்வளவு ரூபாயை மேற்கண்ட துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற முடிவு இனி நம்மிடம் இல்லை.