privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்

பிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்

-

ண்ணன் எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும் என்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது எழவுக் கட்சி.

ண்ணன் எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும் என்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது எழவுக் கட்சி.   அண்ணனாவது சித்தியாவது இருக்குற நாலு வருசத்துக்கு தொண்ண கெடச்சா போதும்  என்று நடுநிசி பேய்களாய்  அலைகிறது களவு கட்சி.  சசிகலா குடும்பத்திடம்  இருந்து ஆன்ம விடுதலை பெற, அடித்தக் கொள்ளையின் ஆன்மா நிலைபெற அம்மாசமாதி குறிசொல்லி தியானத்தில்.  நேற்று வரை இருட்டில் பர்சை பறி கொடுத்தவன் போல் உயரமா  இருந்தான்,  மிரட்டுனான், பாக்கவே பயங்கரமா இருந்தான் என்று குத்துமதிப்பாகவே பேசிக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத் நடுராத்திரியில் ஞானோதயம் வந்து எழுந்ததுபோல்  இது திராவிடத்தை அழிக்கும் ஆரிய சதி!  இது பெரியாரின் பூமி, அண்ணாவின் நந்தவனம், எம்.ஜி.ஆரின் தோட்டம், அம்மாவின் ஆஸ்பிட்டல் கோட்டை, தினகரனின் திண்ணை எனுமளவுக்கு கண்ணை மூடிக்கொண்டு இங்கு  பா.ஜ.க. கனவு பலிக்காது, இது கலாச்சார யுத்தம்,  டி.டி.வி. தலைமையில் யுத்தம் தொடரும் என இன்னும் கோர்த்துவிட்டு பீதியை கிளப்புகிறார்.

உங்க டவுசரை காப்பாத்தவே உங்களால் முடியல, இதுல திராவிட மானத்தைக் காப்பாற்ற கிழிக்கப் போறிங்களாக்கும்  என்று சைடில் கேட்கும் குரலை தவிர்க்க முடியவில்லை.  இந்தச் சுயமரியாதை சுய நினைவு எத்தன நொடி உயிர்வாழும் என்பது தினகரனுக்கே வெளிச்சம் !   கழுத்தைப் பிடித்து நெறிக்கும் நேரத்தில்கூட யாரோ சதி செய்கிறார்கள்,  அ.தி.மு.க. வை அழிக்க சதி  யாரோ…  யாரோ.. என்று மங்கலாக பேசிய தினகரனை நம்பி, நீட்டிய நாக்கை வேறு திசைக்கு  வாடகைக்கு விட இன்னோவாவுக்கு இராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இன்னொரு உதாரணம் கிடைக்காமலா போகும் !

அதாவது இவர்கள் கட்சிக்கு  ஆபத்து என்றால், சொத்துக்கு ஆபத்து என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.   கட்சி என்பது வெறும் கள்ளச்சாவிதான், சொத்துக்கு ஆபத்து என்றால் அதையும் கைமாற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள்தான் இந்த அம்மா ஆவிகள்.   காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் திட்டம் திணிப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, வறட்சி நிவாரணம் புறக்கணிப்பு,  விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் கோரிக்கைகளை முன்வந்து பேச மறுக்கும் கொழுப்பு,  என தமிழகமே அழிக்கப்படுவதைப் பற்றி இம்மியும் கவலைப்படாத,  இதற்காக  ஒரு  பேச்சுக்கும் கூடாத  இந்த அ.தி.மு.க.  என்ற கொள்ளைக்கூடாரம் பல அணிகளாய் இன்னும் நீடிப்பதுதான் வரலாற்றின் துயரம்.  சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?

ஒன்றாக இணைய நிபந்தனை விதிக்கும் பன்னீருக்கு,  மக்களின் ஒரு கோரிக்கை நிறைவேற நிபந்தனை விதித்து அரசியல் செய்ய தகுதி உண்டா?  அன்றாடம் விவசாயிகளை சாகடிக்கும் ஆட்சியை நடத்திய திடீர் யோக்கியரின்  ஒரே தாரக மந்திரம் அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை !   இந்த டெட்பாடி அணிக்கும் எடப்பாடி அணிக்கும் கொள்ளையடித்ததை  பங்கு போடுவதைத் தவிர வேறு என்ன கொள்கை முரண்பாடு ! மக்களது பிரச்சனைக்காக வாதாட, போராட தகுதியற்ற இவர்கள்  நம்மை ஆள நினைப்பது தான் சகிக்கமுடியாத கொடூரம்.   ஒரு குடும்பத்தை மட்டுமல்ல,  களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு  கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?

சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?

ஒரு குடம் தண்ணீருக்காக சாலையில் வந்து நாம் போராடினால் சட்டம் – ஒழுங்கு மீறக்கூடாது என்று போலீசை வைத்து அடிக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பவர்களா ?  உயர்நீதி மன்றமே மதுக்கடைகளை மூடச்சொன்னாலும், மக்கள் குடியிருப்பில் வந்து திறக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பதுண்டா ?  காவிரியில் தண்ணீர் திறந்துவிடச்சொல்லி உச்சநீதி மன்றமே உத்திரவிட்டாலும் மறுக்கும் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கிறதா ?  இல்லை உத்திரவிட்ட உச்சநீதி  மன்றம் தான் சட்டத்தை மதித்து ஆவண செய்கிறதா ?  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டால்,  அதைச் சொல்ல நீதிமன்றத்துக்கு  உரிமை இல்லை என்கிறது மோடி அரசு !  அரசே சட்டத்தை மதிக்காத போது தாமிரவருணியில் மட்டும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நாம் கோக்குக்கு  கொடுக்கவேண்டுமா நமது ஆற்றை.  அனைத்து பள்ளி, கல்லூரி, விடுதிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி இருக்கவேண்டும் என்கிறது சட்டம்,  நீதி மன்ற உத்திரவு.  அரசு சட்டத்தை மதிக்கிறதா ?  தொழிலாளிக்கு வரையறுக்கப்பட்ட  ஊதியத்தை வழங்கும் சட்டத்தை எந்த முதலாளியாவது மதிக்கிறானா ?  ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும்,  முதலாளிகளும் மதிக்காத சட்டத்தை நாம் மட்டும் மதிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் ?

போராட்டம் தான் நமக்கு அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறது, அந்த அதிகாரம்தான் இன்று சட்டப்படியான உரிமைகளைக் கூட பெற்றுத் தந்திருக்கிறது.  மக்கள் திரண்டு  போராட அதிகாரத்தை கையில் எடுத்துதான் டாஸ்மாக்கை மூடி இருக்கிறார்களே ஒழிய, சட்டமும் சரக்கடித்துதான் கிடக்கிறது.  மக்கள் ஒன்று திரண்டு  போராடி அதிகாரத்தை பயன்படுத்தினால்தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது.  மின்சாரம் கிடைக்கிறது.  மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் போராட்டங்கள் தான் உதவி இருக்கிறதே ஒழிய இவர்களது ஆட்சி எது ஒன்றையும் செய்ததில்லை.  மாறாக போராடும் மக்களை ஒடுக்கவும், உதைக்கவும் நமக்கு  ஒரு அரசு தேவையா ?   இவர்கள் மட்டுமல்ல இந்தக் கட்சிகளும், அரசும், அரசுக் கட்டமைப்பும் நம்மை ஆளும் அருகதையற்று போய்விட்டன என்பதுதான் இந்தத் தருணம் உணர்த்தும் உண்மை.

தமிழகம் போராட்ட அரசியலின் புதுக் குறியீடாக எழுந்து நிற்கிறது.  மக்கள் தங்களது அதிகாரத்தின் சுவையை உணர ஆரம்பிக்கும் அரசியல் திசையில் அடியெடுத்து நிற்கிறார்கள்.  இந்தக் கட்டமைப்புக்கு உள்ளேயே எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது திண்ணமான அனுபவமாகி வருகிறது.  ஏன் ஆளும் வர்க்கமே, அரசு உறுப்புகளே தானே வகுத்துக் கொண்ட கட்டமைப்புக்குள்ளாக மட்டுமா இயங்குகின்றன?  எந்தப் பாராளுமன்றம்,  மக்கள் மன்றத்தில் விவாதித்து மோடி  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்?  எந்த அரசமைப்பிற்குள் நின்று கொண்டு பசுவை பாதுகாக்க மனிதர்களைக் கொள்கிறது இந்துத்துவக் கும்பல்?  பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தையே நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்த்துக்கொள்ளச் சொல்வது  எதைக் காட்டுகிறது?  இல்லை, வெளியே வந்த ‘பணக் கன்டெய்னர்’ எந்தக் கட்டமைப்பிற்கு உள்ளே போய் நிற்கிறது !  ஆள்பவர்களே இந்தக் கட்டமைப்புக்குள்  எதையும் தீர்க்க முடியாது என தகர்த்து வெளியே போய் தமது நலன்களை அடையும் போது,  மக்களுக்கு இந்தக் கட்டமைப்பை கட்டி அழ வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை.  மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இனி ஜனநாயகமே சாத்தியம் என்ற அரசியலின் பக்கம் கவனம் கொள்ள வேண்டும் அவசியத்தை உணர்த்துவதுதான் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும்.

அரசியல்கட்சிகள், அரசு, ஆளும் வர்க்கம் அதிகாரவர்க்கம் இந்தக் கூட்டுக்களவாணிகளை முன்னறிந்து நமக்கான அரசியல் அதிகாரத்தை மக்களிடம் திரட்டுவதுதான் மக்கள் அரசியல்.  இவர்கள் சமாதிக்கு ஓடுவதும்,  நடு ராத்திரியில் அலைவதும், அவ்வப்போது ‍ரெய்டுக்கு போஸ் கொடுப்பதும்தான் தமிழகத்து பரபரப்பு அரசியல் என்றும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்றும் படம் காட்டுகின்றன ஊடகங்கள்.    மக்கள் அதிகாரம்தான் அனைத்துக்கும் என்ற முழு உண்மையையும் தமிழகம்  கண்ணில் காட்டும் வரை பிரேக்கிங் நியூசும்,  பின்னணி இசையும் இருக்கத்தான் செய்யும்!

– துரை. சண்முகம்

  1. உண்மையான பிரேக்கிங் நியுஸ் இதுதாங்க! திமுக தொடுத்த வழக்கில் மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசுக்கு தடையில்லை ஆனால் மறு உத்தரவு வரும்வரை இந்தச் சாலைகளில் புதிதாக மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை உயர் நிதி மன்ற அமர்வு, “மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசுக்குத் தடையில்லை. ஆனால் மாற்றப்பட்ட உள்ளாட்சி சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம் என அரசு உத்தரவாதம் தர வேண்டும்” என்றது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து முடிவை அறிவிக்கிறோம் என்றார்.
    உத்தரவாதம் தரப்படாத நிலையில், மறு உத்தரவு வரும்வரை தமிழகம் முழுவதும் புதிதாக மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கு விசாரணை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க