privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !

அழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !

-

நியூயார்க்கைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்சன் ரோபாடிக்ஸ் (construction robotics) என்ற நிறுவனம் சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனாரை உருவாக்கியுள்ளது. தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் பாதி வேலை வாய்ப்புகளை குறிப்பாக கட்டுமானத் துறையில் காலி செய்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

எந்திரக் கொத்தனார் (Robot Bricklayer) மனிதனை விட ஆறு மடங்கு விரைவாக செங்கலுடன் சிமிட்டிக் கலவையைச் சேர்த்து சுவரை எழுப்பும் திறனைக் கொண்டது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 500 செங்கற்களை தொழிலாளியால் அடுக்க முடிந்தால் இயந்திர மனிதனால் 3000 செங்கற்களை அலுக்காமல் சலிக்காமல் அடுக்க முடியும். இந்த இயந்திரத்திற்கு செங்கற்களையும் சிமிட்டிக் கலவையையும் உள்ளீடு செய்து கட்டளையிடவும் பராமரிக்கவும் ஒருவர் மட்டுமே போதும்.

சாம் (Semi-Automated Mason – SAM) என்ற தானியங்கி கொத்தனார் இயந்திரம்

இந்நிறுவனத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாஸ்ட்பிரிக் ரோபாடிக்ஸ் (Fastbrick Robotics) என்ற நிறுவனம் ஹட்ரியன் எக்ஸ் என்ற சோதனை முயற்சி எந்திரக் கொத்தனாரை 2016 ஆம் ஆண்டு உருவாக்கியது. வணிக மதிப்பிலான வடிவமாக இது முழுமையடையும் போது எந்திரம் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்கள்) என அந்நிறுவனம் விலை மதிப்பீடு செய்துள்ளது.

மனமகிழ் வீட்டினைக் கட்டுவதற்குத் தேவையான தகவல்களை ஹட்ரியன் எக்ஸிற்கு உள்ளீடு செய்தால் மட்டுமே போதும் வெறும் இரண்டு நாட்களிலேயே உங்கள் விருப்பமுள்ள வீட்டை உருவாக்க முடியும். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 1000 செங்கற்களை அடுக்கக் கூடிய திறன் படைத்தது ஹட்ரியன் எக்ஸ். அதையே நாளொன்றிற்கு 24 ஆயிரம் செங்கற்கள் எனக் கொண்டால் சுமார் 48 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது போன்ற வேலையிழப்புகளைத் தொழில்நுட்ப வேலையின்மை(Technological Unemployment) என்று முதலாளித்துவம் வகைப்படுத்திக் கொண்டு தனது பாவத்தை மறைக்கிறது.

ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்வதில்லை. விபத்துக்கள் நேரிடினும் நட்டஈடுக் கொடுக்க தேவையில்லை. வைப்பு நிதியும், காப்பீடும், ஓய்வூதியமும் இன்னப்பிற இத்தியாதிகள் எதுவும் எந்திர மனிதனுக்குத் தேவையில்லை. ஆனால் இவையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியதாய் இருப்பது முதலாளித்துவத்திற்கு வேப்பங்காயாய் கசக்கிறது.

முதலாளித்துவத்தின் முடிவிலா இலாபவெறிக்கு சிலப் பொருளாதார அறிஞர்கள் கடிவாளம் போட்டு முட்டுக் கொடுத்து பாதுகாக்க நினைக்கிறார்கள். ஒருவேளை தானியங்கி தொழில்நுட்பத்தால் 20 விழுக்காடு அளவிற்கு வேலையிழப்பு ஏற்படுவதாக எடுத்துக்கொண்டால் 20 விழுக்காட்டு வேலை நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் அதாவது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என்று நியூயார்க்கைச் சேர்ந்த ரூஸ்வேல்ட் பல்கலைகழகத்தின் பொருளாதார அறிஞர் மைக் கொன்செல் அறிவுறுத்துகிறார். மேலும் உலகளாவிய அடிப்படை வருமானம் ஒன்றை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.  ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏனெனில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு குறைந்தது எட்டு மணி நேரம் வேலை செய்வதாக கொண்டால் 48 தொழிலாளர்களின் எதிர்காலத்தை ஒரே நாளில் ஹட்ரியன் எக்ஸ் கபளீகரம் செய்துவிடும். எனவே இது வெறும் விழுக்காடு பிரச்சினை அல்ல என்பது வெள்ளிடைமலை.

இன்றே உலகமயத்தால் ஊதிப்பெருக்கப்பட்ட செயற்கையான பொருளாதார அமைப்பில் மாதத்தின் எல்லா நாட்களிலும் கட்டிடத் தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைக்கும் நாட்களில் வரும் ஊதியத்தை வைத்து ஏதோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள். இதனிடையில் தானியங்கி வந்து வேலை நேரத்தை குறைத்தாலும் சரி, வேலையே பறிபோனாலும் சரி அவர்களது குடும்பம் வறுமையில் உழல்வது உறுதி.

ஒரு நாளின் 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் தேனீர் இல்லாமலும் உணவு இடைவேளை இல்லாமலும் தொடர்ச்சியாக வேலை செய்ய எந்திர மனிதன் அலுப்பேதும் கொள்ளப்போவது இல்லை

தானியங்கி இயந்திரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை தான் முதலில் பதம் பாக்கிறது. இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. கூடிய விரைவில் இங்கிலாந்திலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எந்திரங்களின் வளர்ச்சி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு உலகமயமாதலை விட பெரிய ஒரு அச்சுறுத்தல் என்று 2015 ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஆங்குஸ் டீட்டோன் எச்சரிக்கிறார்.

எந்திரங்கள் ஏற்கனவே பாரம்பரிய உற்பத்தித்துறையின் வேலைகளை கபளீகரம் செய்து விட்டது. தானியங்கு எந்திரங்களின் வளர்ச்சியானது குறிப்பாக நடுத்தர வகுப்பு மக்களின் வேலை வாய்ப்புகளை அழிப்பதில் தீவிரமாக ஈடுபடும். எனவே ஆக்கப்பூர்வமான அல்லது மேற்பார்வையிடும் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்கும் என்று எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாகிங்ஸ்.

இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் சலுகைகள் பணக்கார நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் சமூக பொருளாதார மதிப்பென்பதே கிடையாது. எனவே இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்குமான போட்டி என்பது உடலுழைப்பு சார்ந்த துறைகளில் இன்றுவரை அரிதாகவே இருக்கிறது.

இந்தியக் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளிகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 30 இலட்சம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியக் கட்டுமானத்துறையின் சாமுத்திரிகா லட்சணத்திற்கு நாடு முழுதும் நடந்து வரும் எண்ணிலடங்கா விபத்துக்களும் உயிரிழப்புகளும் சாட்சியாக இருகிறது. எனினும் வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் கட்டுமானத் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசாகிவிடும் என்று முதலாளித்துவ ஆய்வுகள் ஆருடம் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு கோடியே 15 இலட்சம் அடுக்குமாடி வீடுகளுக்கான சந்தை மதிப்பு 128 இலட்சம் கோடி சொச்சம் (ஒரு டிரில்லியன் டாலர்) ஆக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் (Oxford Economics) மற்றும் உலகளாவிய கட்டுமானக் கண்ணோட்டங்கள் (Global construction perspectives) என்ற அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் கட்டியங் கூறியிருக்கின்றன.

கட்டுமானப் பணிகளில் இனி மனித எந்திரத்துக்கு பதிலாக எந்திர மனிதன்.

புதியத் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதும் அதற்கேற்றாற்போல வலியது தப்பும் என்ற இயற்கை விதிக்கு ஒப்ப தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் முதலாளித்துவவாதிகள் ஓயாமல் முணுமுணுக்கப்படும் காயத்ரி மந்திரம். கட்டுமானம், தானியங்கி மகிழுந்து(Self-Driving car), இணைய கண்ணாடிகள்(Internet Glasses), ட்ரோன் பட்டுவாடா பணிவிடை(Drone delivery service) என மெருகேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தானியங்கி இயந்திரங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உழைப்பு நேரத்தைப் பாரிய அளவு குறைப்பதற்காகத்தான் என்றும் ஓயாமல் விதந்தோதப்படுகின்றது.

நிலவுடைமை சமூகத்தின் அடிமைத்தளைகளை மாபெரும் பிரெஞ்சு புரட்சியினால் உடைத்தெறிந்து மனிதகுலத்தை விடுதலை செய்ததற்காக மார்தட்டிய முதலாளித்துவம் பின்னர் மனிதர்களை தங்களது உழைப்பை விற்று வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளிவிட்டது. மேலும் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சமூகத் தேவைகளுக்காக என்று அல்லாமல் தம்முடைய சொந்த இலாப நோக்கிற்காக மட்டுமே கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.

தொழிற்சாலைகளில் மனிதன் இயந்திரமாக வேலை செய்ததில் இருந்து இயந்திரங்கள் மனிதனின் உழைப்பை காலி செய்யும் வரை ஒன்றும் மட்டும் உறுதி. தன்னுடைய இலாப நோக்கிற்காக  பலநூறு பேரை வேலையை விட்டு துரத்திவிட்டு அந்த இடத்திற்காக சில பேரை மல்லுக்கட்ட வைக்கும் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியாமல் தீர்வேதுமில்லை.

இறுதியில் அனைத்தும் தானியங்கி முறையில் உற்பத்தி செய்யப்படும் போது இவர்கள் உற்பத்தி செய்தவற்றை வாங்குவதற்கு பல சதித்திட்டங்கள் போடுகிறார்கள். பிறகு அந்த சதித்திட்டங்களும் தோல்வியடைந்த பிறகு வாங்குவோர் இல்லாமல் பொருளாதாரம் சரிகிறது. இதுதான் 2008 அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் நடைபெற்றது.

ஆகவே தானியங்கி முன்னேற்றத்தை வெறுமனே தொழில் நுட்ப புரட்சி, மனிதர்களின் வேலை நேரக்குறைப்பு என்று இனியும் ஏமாற்ற முடியாது. அது உலக மக்களை உயிரோடு கொல்லும் முதலாளித்துவத்தின் இலாப வைரஸ்!

– சுந்தரம்

மேலும் தகவலுக்கு :