privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்

ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்

-

உத்திரபிரதேச மாநிலத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றப்பட்டு அதனால் உண்டான மனக்காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலமாகும்.

தித்யநாத்தின் அரசாங்கத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. ஏனென்றால் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் இருப்பதைப் போல் போர்குணமிக்க தலைமையின் கீழ் இயங்கும் தீவிரமான விவசாய அமைப்புகள் எங்கள் மாநிலத்தில் இல்லை. இருக்கும் அமைப்புகளும் நம்பிக்கையற்றதாகவும், உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால், இந்த உத்திரபிரதேச மாநிலத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றப்பட்டு அதனால் உண்டான மனக்காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகும்” என்கிறார் ஃபதே சிங் பட்டி (Fateh Sigh Bhatti). விவசாய கடன் தள்ளுபடி என்கிற மாநில அரசின் அறிவிப்பை நம்பி ஏமாந்து போன லட்சக்கணக்கான விவசாயிகளில் ஃபதே சிங் பட்டியும் ஒருவர்.

சமீபத்தில் முடிந்த உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்தில் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிற உறுதியை ஆதித்யநாத் மட்டுமின்றி திருவாளர் மோடியும் வழங்கியிருந்தார். பெருவாரியான ஏழை விவசாயிகள் ‘பிரதமரின் வாக்குறுதிகள்’ என்பதால் அவற்றை நம்பினர். தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே ஆதித்யநாத் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென பெரும் ஆரவாரங்களுக்கிடையே அறிவித்தார். அது அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தில்லியில் போராடி வந்த சமயம்.

அந்த சமயத்தில் தமிழக செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் “விவசாய நிபுணர்களாகவும்” “பொருளாதார ஆய்வாளர்களாகவும்” அவதாரமெடுத்த பா.ஜ.க அம்பிகளும் பெருமாள் மணி போன்ற நட்டநடு நிலையாளர்களும், “தமிழ்நாடு அரசு உத்திரபிரதேச பாரதிய ஜனதா அரசு காட்டும் வழியில் ஏன் போக மறுக்கின்றது?” எனக் கேட்டு சண்டமாருதம் செய்ததெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும்.

கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிற உறுதியை ஆதித்யநாத் மட்டுமின்றி திருவாளர் மோடியும் வழங்கியிருந்தார்.

ஆதித்யநாத்தின் அறிவிப்பு வெளியான உடனேயே “மாநில அரசாங்கங்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து விவசாய கடன் தள்ளுபடியை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றும், “விவசாய கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதாவது” என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இந்நிலையில் உத்திரப்பிரதேசம் போன்ற ஏழை மாநிலத்தால் தனது ஓட்டைக் கஜானாவைக் கொண்டு விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடிந்தது எப்படி? உண்மையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டனவா?

“இது மாபெரும் நம்பிக்கை துரோகம்” என்கின்றனர் விவசாயிகள். உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிலுவையில் இருக்கும் விவசாய கடனில் மொத்த வாராக் கடனின் அளவான 5,630 கோடி உட்பட கடன் தள்ளுபடிக்கென முதலில் திட்டமிடப்பட்ட நிதியின் அளவு 36,359 கோடி. இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மொத்த விவசாய கடனின் அளவு 1.30 லட்சம் கோடி. கடன் தள்ளுபடிக்கென அரசு திட்டமிட்டுள்ள 36 ஆயிரம் கோடி என்பதே மொத்த கடனில் நாலில் ஒரு பங்கை தான் ஈடுகட்டுகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் மொத்த 2.15 கோடி சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள் சுமார் 15 லட்சம் பேர் உள்ளனர் – மொத்தம் 2.3 கோடி விவசாயிகள். ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு சுமார் 43 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பலனடைய முடியும். மீதமுள்ள 57 விழுக்காடு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியால் எந்தப் பலனும் இல்லை.

சரி, இந்தக் கணக்கின் படியே பார்த்தாலும் 43 விழுக்காடு விவசாயிகள் ஆதித்யநாத்தின் கருணையினால் முழுமையாக பலனடைவதாக எடுத்துக் கொள்ளலாமா? இல்லை. அங்கும் ஒரு ஏமாற்றுத் தந்திரம் உள்ளது.

உத்திரப்பிரதேசத்தைப் பொருத்தவரை பயிர் கடன் வாங்குவதற்கு இரண்டு முறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். முதலில் மூன்று விழுக்காடு வட்டியில் பெறப்படும் ஒன்பது மாதங்களுக்கான குறுங்கடன். இரண்டாவதாக, ஒன்பது விழுக்காடு வட்டியில் பெறப்படும் நீண்டகாலக் கடன். பொதுவாக அதிக வட்டி கட்டுவதைத் தவிர்க்க, விவசாயிகள் குறுங்கடனையே தெரிவு செய்கின்றனர். 90 விழுக்காடு விவசாயிகள் பொதுவாக மே அல்லது ஜூன் மாதம் (கரீப் பருவத்துக்கு முன்) கடன் வாங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் துவக்கத்தில் (ரபீ பருவத்தின்) அறுவடை முடிந்தவுடன் திரும்பச் செலுத்துகின்றனர்.

விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்கள் ஜூலை மாதத்தில் துவங்கும் கரீப் பருவத்துக்கு முன் வாங்கும் கடனை பிப்ரவரி மாதத்திய ரபீ பருவத்தின் அறுவடையில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு அடைத்து விடுகின்றனர். இவ்வாறு வாங்கிய கடனை அடைத்தால் தான் மீண்டும் கடன் பெற முடியும் என்பதால், பயிர்கள் பொய்த்துப் போகும் வருடங்களில் வெளியே கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது வங்கிக் கடனை அடைத்து விடுகின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி திட்டத்தின் படி, ஒரு லட்சத்துக்கும் குறைவான கடன்களே தள்ளுபடி செய்யப்படும். மேலும், 2015-16 நிதியாண்டில் பெறப்பட்ட கடன்கள் தாம் தள்ளுபடி செய்யப்படவுள்ளன. குறிப்பாக 2016 மார்ச் 31 வரை செலுத்தப்படாத கடன்களே தள்ளுபடி செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்டகாலமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலனடைய முடியாது என்பதோடு பெரும்பாலான விவசாயிகள் ரபீ பருவத்தின் அறுவடையைக் கொண்டு அரசு குறிப்பிட்டுள்ள நிதியாண்டில் வாங்கிய கடனை ஏற்கனவே திருப்பிச் செலுத்தியிருப்பார்கள்.

அதாவது, வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார். இறுதியில், பயன்படுத்தப்படாத நிதியாக ஒதுக்கப்பட்ட சொற்ப நிதியையும் மாநில அரசு திரும்ப எடுத்துக் கொள்ளும்.

பசியில் இருக்கும் ஏழையின் கண்களுக்கு சாப்பாட்டை காட்டிக் காட்டி கொக்களித்து சாப்பிடும் திமிர் பிடித்த பணக்காரனின் மனநிலை இது. இந்துத்துவ பாசிஸ்டுகளின் ஆன்மாவில் உறைந்திருக்கும் வக்கிரத்திற்கும் மக்களை புழுபூச்சிகளாக பார்க்கும் ஆணவத்துக்கும் உத்திரபிரதேச பாரதிய ஜனதா அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி மேலும் ஒரு உதாரணம்.

செய்தி ஆதாரம்: