privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நவீன ரோந்து படகுகள் சேர்ப்பு – இரு மீனவ படகுகள் மூழ்கடிப்பு

நவீன ரோந்து படகுகள் சேர்ப்பு – இரு மீனவ படகுகள் மூழ்கடிப்பு

-

நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சார்லி 431, சார்லி 432 ஆகிய இரண்டு படகுகள்

ண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள எல்என்டி நிறுவனத்தில் கட்டப்பட்ட இரு நவீன ரோந்து படகுகள் இந்தியக் கடலோரக் காவற்படையின் கிழக்கு மண்டலத்தில் சேர்க்கப்பட்டன. சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் 06.07.2017 அன்று சார்லி 431, சார்லி 432 ஆகிய அந்த படகுகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டனவாம்.

மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இப்படகுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன என்று கடற்படையும், பாதுகாப்புத் துறையும் பெருமை பேசுகின்றன. அந்தப் படகுகள் 27.32 மீட்டர் நீளம் கொண்டதோடு, மணிக்கு 83.34 கி.மீ வேகத்தில் செல்லுமாம்.

இதுவரை இருந்த படகுகள் தொடர்ச்சியாக 12 மணி நேரம் மட்டுமே ரோந்து செல்லும் போது சார்லி படகுகள் 14 மணிநேரம் பயணிக்குமாம். இதில் தலா ஒரு மாலுமியும், 11 அலுவலர்களும் இருப்பார்களாம். 15 ஆண்டுகளுக்கு ரோந்துப் பணியில் இருக்கும் இப்படகுகள் சென்னை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு பணியாற்றுமாம். இவையெல்லாம் கிழக்கு கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா செய்தியாளர்களிடம் பெருமை பொங்க தெரிவித்த வார்த்தைகள்.

இந்த பெருமையின் யோக்கியதை என்ன?

சற்று தள்ளி புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்வோம். நேற்று சார்லி படகுகள் சேர்க்கப்பட்ட அதே நாளில் ஜெகதாபட்டினத்தில் இருந்து 165 படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 175 விசைப்படகுகளிலும் சுமார் 500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கே வந்து மீனவர்களை விரட்டினர். மேலும் அவர்களது கப்பலால் மீனவர் படகுகள் மீது மோதினர். அதில் ராசு என்பவரது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. அப்படகில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மற்ற படகுகளில் வந்த மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். மேலும் மூன்று படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டன.

அடுத்து சோயிப், சங்கர் ஆகியோரது விசைபடகுகளை சுற்றி வளைத்து எட்டு மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் கைப்பற்றியது இலங்கை கடற்படை. பிறகு அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

தற்போது இலங்கையில் தமிழக மீனவர்கள் 59 பேரும், 155 படகுகளும் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி மீன்பிடிக்கச் சென்று கைதான ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது காவல் வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி அம்மா வழியில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாராம். இதற்கு முன் ஜெயலலிதா, கருணாநிதி எழுதிய கடிதங்களே ஒரு லாரி இருக்கும். தற்போது அதில் மேலும் ஒரு சோளப் பொறியாக இக்கடிதமும் இடம் பெறுவதைத் தாண்டி இதற்கு வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள், கொலைகள், கடத்தல்கள் பல முறை நடந்தும் மோடி அரசு வாய் மூடி நிற்கிறது. இதில் சார்லி படகுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்து சேர்த்து என்ன பயன்?

14 மணி நேரம் கடற்படை படகுகளில் அதிகார வர்க்கம் உல்லாசப் பயணம் போவதைத் தாண்டி நம் மீனவர்களுக்கு என்ன பயன்? எதாவது ஒரு கடலோரக் காவல் படை படகு இலங்கை கடப்படையினரை விரட்டி தமிழக மீனவர்களை காப்பாற்றியிருக்கிறதா? மீனவர்களது படகுகள் மட்டும் இந்தியாவில் கட்டாமல் அமெரிக்காவிலிருந்தா இறக்குமதியாகின?

நாட்டு மக்களை காப்பாற்றாமல் நாட்டில் தயாரிக்கப்படும் ‘சுதேசி’ படகுகளால் என்ன பயன்?