privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇறைச்சியில் மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்க தனிக் கருவி !

இறைச்சியில் மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்க தனிக் கருவி !

-

காராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தடயவியல் ஆய்வுக்கூடம் (forensic Lab) ஒன்று மாட்டிறைச்சி சோதனைக் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி கருவியினுள் இறைச்சி மாதிரிகளை உள்ளீடு செய்தால், இறைச்சியில் உள்ள புரதத்தை ஆய்வு செய்து ஒரு மணி நேரத்திற்குள் அந்த இறைச்சி மாட்டினுடையதா இல்லையா என்கிற முடிவைத் தெரிந்து கொள்ள முடியுமாம்.

“சோதனையின் முடிவு மாட்டிறைச்சி என்று வந்தால், கைப்பற்றப்பட்ட இறைச்சியை மேற்கொண்டு மரபணு சோதனைகளுக்கு அனுப்புவோம்” என்கிறார் பிரீமியர் தடயவியல் அறிவியல் ஆய்வுக்கூடத்தின் இணை இயக்குநர் கே.வொய். குல்கர்னி.

இக்கருவியின் மதிப்பு சுமார் எட்டாயிரம் ரூபாய். ஏற்கனவே மும்பை காவல் துறையிடம் இதே போன்று 45 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பூனா, நாக்பூர், நாசிக் மற்றும் அவுரங்காபாத் நகர காவல் துறையினருக்கும் இதே போன்ற கருவிகளைத் தயாரித்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது. ஒரு கருவியைக் கொண்டு சுமார் 100 சோதனைகள் வரை செய்ய முடியும் என்றும், அதன் பின் மீண்டும் புதிதாக வாங்க வேண்டும் என்றும் இதனை உருவாக்கியுள்ள ஆய்வுக்கூடத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட இறைச்சியை ஒரு மணி நேரத்துக்குள் சோதனை செய்து முடிவுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், இக்கருவியினால் போலீசாருக்கு நேரமும் செலவும் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை தான். நேரமும், செலவும் மிச்சமாகலாம் – ஆனால், உயிர்?

பசுபங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அக்லக்கில் இருந்து ஜூனைத் கான், பெஹ்லு கான் வரை நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மாட்டுக்கறியை வைத்திருந்தார்கள் என்பதாலா கொல்லப்பட்டார்களா? ஊனாவிலும் அடித்துத் துவைக்கப்பட்ட தலித்துகளும், ஹரியாணாவில் தோலை உரித்துத் துன்புருத்தப்பட்ட தலித்துகளும் கையோடு மாட்டிறைச்சியை வைத்திருந்தார்கள் என்பதாலா தாக்கப்பட்டனர்?

இன்னும் சொல்லப் போனால் பசுபயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் கையிலும் மாட்டிறைச்சி சோதனைக் கருவியைக் கொடுத்து அனுப்பினாலும் கூட அவர்களின் கொலைவெறிக்கும் வன்முறை வெறிக்கும் தடை போட முடியாது.

ஏனெனில், கொல்வதற்கும் வன்முறையில் ஈடுபடுவதற்கும் வன்புணர்ச்சி சம்பவங்களில் இறங்குவதற்கும் இந்துத்துவ கும்பலுக்குத் தேவை ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு மட்டுமே. மற்றபடி தங்கள் எதிரில் இருப்பது முசுலீமாகவோ, தலித்தாகவோ, அனாதரவான பெண்ணாகவோ இருப்பது ஒன்றே இந்துத்துவ பயங்கரவாத கும்பலுக்குப் போதுமான காரணங்களை வழங்கி விடுகின்றது.

இன்னொரு பக்கம், மாட்டிறைச்சி என்பதே ஏதோ கஞ்சா, ஹெராயின், ஆர்.டி.எக்ஸ் போன்ற அபாயகரமான வஸ்துவைப் போல் பொதுபுத்தியில் நிலவும் கருத்தை உறுதிப்படுத்துகின்றது அரசின் இந்த நடவடிக்கை. கள்ளக் கடத்தல் செய்யும் மாபியா கும்பலைக் கையாள்வதைப் போல் மாட்டிறைச்சி உண்ணும் மக்களைக் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்தக் கருவியும் சோதனைகளும் பயன்படுத்தப்படும்.

வேலையின்மை, கல்வியின்மை, தொழிலின்மை, விவசாயிகள் தற்கொலை என்று நாடே பொருதாளாரப் பிரச்சினைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதே மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் தான் விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகின்றனர். இதோ, இன்றும் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் அத்தியாவசியமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முதுகு காட்டும் மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா அரசு, மாட்டுக்கறியைச் சோதனை செய்ய ஒரு கருவியை உருவாக்கி காவல்துறையினருக்கு வழங்க நேரத்தையும் பணத்தையும் செலவு செய்தற்குப் பெயர் தான் இந்துத்துவம்.

மேலும் :