privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !

குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !

-

மிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்கள் மீது குண்டாஸ் எனப்படும் ஆள்தூக்கி சட்டத்தை போட்டு ஒடுக்குகிறது தமிழக அரசு. கதிராமங்கலம் மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசுக் கல்லூரி முன்பு துண்டு பிரசுரம் விநியோகித்த சேலம் மாணவி வளர்மதியை குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது தமிழக அரசு.

இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் தடுப்புக் காவல் சட்டத்தினை பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு.

குண்டர் தடுப்பு சட்டத்தை முதன் முதலில் 1982-ல் பாசிச எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்தது. தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் என சில பிரிவுகளில் துவங்கி, கடந்த 34 ஆண்டுகளில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் என பல பிரிவுகளையும் சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் தொழில் முறைக் கிரிமினல்களை விடுத்து அரசியல் ரீதியாக போராடுபவர்களைத்தான் இதில் கைது செய்து ஒடுக்குகிறார்கள்.

குண்டர் சட்டம் என்பது தடுப்புக் காவல் சட்டம் என்ற வகையில் வருகிறது. ஒருவர் குற்றம் செய்வதற்கு முன்பே, அவர் குற்றம் செய்வதை தடுக்கும் விதமாக அவரை சிறையில் அடைத்து வைப்பதுதான் இந்த குண்டர் சட்டத்தின் நோக்கம். இதைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதாவது திருட்டு, கொள்ளை, கொலை அதிகம் நடக்கும் போது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பழைய கிரிமினல்களை கைது செய்வார்கள். சந்தேக கேஸுக்குகாக வருவோர் போவோரைக் கைது செய்வது போன்றது இது. பிறகு ஊரறிந்த குற்றச் செயல்களில் தொடர்புடையோரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து மக்களுக்கு ரிசல்ட் காட்டுவார்கள்.

அடிக்கடி குற்றம் செய்பவர்கள் என்ற வரையறைக்குள் வருவதற்கு ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது 2-3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் போதும். தடையை மீறி நோட்டிஸ் கொடுத்தார், இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியிருந்தால் கூட, அந்நபர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட தகுதி உடையவர் ஆகி விடுவார்.

2012 -ம் ஆண்டு சென்னை மதுரவாயலில் காவல்துறையின் அராஜகங்களை தொடர்ச்சியாய் அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களை திரட்டி போராடியதால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இரண்டு முன்னணி தோழர்கள் திவாகர், குமரேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள். அதேபோல சென்னை சந்தோஷ் நகர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த அசோக் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் போராடி காவல்துறையின் முயற்சியை முறியடித்தது. மக்களுக்காக போராடும் புரட்சிகர அமைப்பில் செயல்படும் தோழர்களை இழிவுப்படுத்தும்விதமாக கத்தியைக் காட்டி வழிப்பறித்தார்கள், பொதுமக்களை மிரட்டினார்கள் என பொய் வழக்கு போட்டார்கள்.

2014 -ல் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகியான தோழர் சிவாவை தொழிலாளர் நலத்துறை ஆணைய அதிகாரியை மிரட்டியதாய் பொய் வழக்கு ஒன்றை தொடுத்தார்கள். குண்டர் சட்டத்தில் போடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியதை கூட மதிக்காமல், குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் போராடியதன் விளைவாக, தமிழக அரசின் உள்துறை செயலாளர் தோழர் சிவாவின் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றார். 58 நாட்களில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் விடுதலையானது தமிழக வரலாற்றில் முதல் முறை.

மாணவி வளர்மதி

சமீபத்தில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். தற்பொழுது மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.
“போலீசு நினைத்தால் இனி யார் மீது வேண்டுமென்றாலும், பொய்வழக்கு ஒன்றைப் போட்டு, குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்கலாம்” என்ற பாசிச நிலை தான் உள்ளது. இந்த நிலையை கச்சிதமாக நிறைவேற்றியவர் மறந்த முன்னாள் முதல்வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் A-1 குற்றவாளியுமான ஜெயலலிதா தான்.

“2011 -ல் குண்டர் சட்டத்தில் 1,926 பேரை கைது செய்தார். ஆனால் 1,926 பேரில் 146 பேர் மட்டுமே ஓராண்டு சிறையில் இருந்து வெளியில் வந்தார்கள். 1,291 பேர் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவாலும், 489 பேர் அறிவுரைக் குழும ஆணைகளாலும் விடுதலையானார்கள். இதன் பொருள் எஞ்சிய 146 பேரும் குற்றவாளிகள் அல்லது குண்டர்கள் என்பதல்ல. அவர்கள் ஏழைகள் அவர்களால் ஒரு வழக்கறிஞரை வைத்து தங்களின் விடுதலைக்காக வாதடவோ போராடவோ முடியவில்லை. 2012 ல் 2140 பேர் கைது செய்யப்பட்டனர். 2013 -14 ல் சராசரியாக 2500 பேர் வரை கைது செய்யப்படலாம் என்று அரசுக்கு போலீசு பரிந்துரைத்து வழக்கு தயாரிப்பு செலவை நபர் ஒன்றுக்கு மூவாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாயாக உயர்த்திக்கொண்டது.” ஜெயாவும் தாரளமாக நிதி ஒதுக்கினார்.

சராசரியாக ஆண்டுக்கு 2,200 பேர் என்ற அளவில் கேள்விக்கிடமற்ற முறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையிலே இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அக்னிஹோத்ரி உத்தரவிட்டார். அதனடிப்படையில் இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு தனி டிவிஷன் பெஞ்ச் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் 14-6-2014 அன்று இத்தகைய வழக்குகளை விசாரித்தனர். நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கி, மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இத்தகைய நிலையில் குண்டர் சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டு வந்தார்கள். கேள்விக்கிடமற்ற வகையில், விவாதங்களுக்கு இடமில்லாத வகையில் வெளியிடப்படும் விதி எண் 110-ன் கீழ் 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து அமாலாக்கினார் ஜெயலலிதா.

அந்த மசோதாவில் முக்கியமானது குண்டர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம்.
இந்த திருத்தத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சட்டம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம். என்ற அந்த நிபந்தனையை நீக்கி காட்டாட்சி நடத்தினார் ஜெயா.

இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 95% -தினர் நீதிமன்றத்தால் பொருத்தமில்லாத வழக்கு என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் போராடுபவர்கள் மீது இந்த சட்டம் பாய்கிறது. இது தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பேசும் போது மக்களை போராடத் தூண்டுபவர்களை இப்படித்தான் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வோம் என்று பகிரங்கமாக மிரட்டுகிறார்.

மிசா, தடா போன்ற ஆள்தூக்கி கருப்பு சட்டங்களை மிகக் கடுமையாக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கவின் விருப்பம். தற்போது அந்த விருப்பத்தை பா.ஜக -வின் அடிமையான எடப்பட்டி அரசு நிறைவேற்றி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூண்டுவதற்காக தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்கள், மாணவர், இளைஞர் போராடினர். எனில் இவர்கள் அனைவரையும் போராத் தூண்டுபவர்கள் என்று கைது செய்வார்களா? அத்தகைய எழுச்சி ஒன்றுதான் இந்த பாசிச ஆட்சிக்கு பதிலடியாக இருக்கும்.

– வினவு கட்டுரைகள், மற்றும் டி அருள் எழிலனின் குண்டர் சட்டத்தின் பிடியில் தமிழகம்: உணருமா இயக்கங்கள்?  கட்டுரையில் இருந்து தொகுக்கப்பட்ட செய்தித் தொகுப்பு.

_____________

இந்தப் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி