privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅந்த 16,000 கோடி ரூபாய் அனைத்தும் கருப்புப் பணமல்ல !

அந்த 16,000 கோடி ரூபாய் அனைத்தும் கருப்புப் பணமல்ல !

-

காட்மாண்டுவில் இருக்கும் நேபாள் மத்திய வங்கி.

றும்பைக் கொல்ல வீட்டைக் கொளுத்திய கதையாகி விட்டது பணமதிப்பழிப்பு நடவடிக்கை. செல்லாததாக அறிவிக்கப்பட்ட 15.44 லட்சம் கோடி ரூபாயில் 15.28 லட்சம் கோடி திரும்ப வங்கிகளுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை. திரும்ப வராத 16 ஆயிரம் கோடி அதாவது வெறும் 1 சதவீதம் தான் கண்டுபிடிக்கப்பட்ட ”கருப்புப் பணம்”. மேதகு பிரதமர் மோடியின் கையாலாகத்தனத்தை நாடெங்கும் மக்கள் காறி உமிழ்ந்து வருகின்றனர்.

சரி, ரிசர்வ் வங்கியே திரும்ப வராத தொகையாக குறிப்பிட்டுள்ள 16 ஆயிரம் கோடியை அப்படியே கருப்புப் பணமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியுமா?

இல்லை. சுமார் 3500 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய்த் தாள்கள் நேபாள் மத்திய வங்கியிடம் உள்ளது. இந்த தொகையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து அதற்கு பதிலாக புதிய தாள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்நாட்டின் வங்கி பேச்சுவார்த்தை நடந்தி வருகின்றது. கடந்த பத்து மாதங்களாக இந்தப் பேச்சுவார்த்தையை இழுத்தடித்து வருகிறது இந்திய அரசு. மேலும், சுமார் 100 கோடி மதிப்பிலான பழைய ரூபாய்த் தாள்கள் பூடானில் உள்ளது. நேபாளைப் போலவே பூடான் மத்திய வங்கியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மத்திய அரசு, மதிப்பிழந்த தாள்களை மாற்றித் தருவதாக உத்திரவாதமளித்துள்ளது.

இவை தவிற, வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இந்திய வம்சாவளியினரிடம் மேலும் சில நூறு கோடி செல்லாத தாள்கள் குவிந்துள்ளன. மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்து விட்டு பதிலுக்காக இவர்கள் காத்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் செல்லாத தாள்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தை கடந்த ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த வகையில் செலுத்தப்பட்ட தொகை இன்னமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும், இந்தியாவுக்கு வியாபாரம், மருத்துவம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக வந்து செல்லும் அயல்நாட்டவரிடமும் செல்லாத காசுகள் குறைந்தபட்ச அளவிலாவது இருக்கும். மட்டுமின்றி இந்திய மக்களிடையே கூட அரசு குறித்த கால அவகாசத்துக்குள் செல்லாத தாள்களை வேறு நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே கூட மாற்ற முடியாதவர்களும் இருப்பார்கள். இந்த வகைகளில் எல்லாம் வங்கிகளுக்குத் திரும்ப முடியாத பணத்தாள்களின் மதிப்பை கண்டுபிடிப்பது சிரமம் என்றாலும் அது சில கோடிகளாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், மோடி கண்டுபிடித்த “கருப்புப் பணத்தின்” மதிப்பு உத்தேசமாக 12 ஆயிரம் கோடிக்குள் மட்டுமே இருக்கும் – அதாவது 0.8 சதவீதத்துக்கும் குறைவு. ஆக மொத்தம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வியாக முடிந்துள்ளது. இந்நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் சேர்த்துப் பார்த்தால் இந்திய வரலாற்றில் நடந்த ஊழல்கள் அனைத்தும் ஏற்படுத்திய இழப்பின் கூட்டுத் தொகையாக இருக்க கூடும்.

மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. செயல்படாத, திறமையற்ற அமைச்சர்களை மோடி களையெடுக்கப் போவதாக அவரது சொம்பு ஊடகங்கள் புல்லரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் திறமையற்ற அமைச்சரைக் களையெடுக்க வேண்டுமென்றால் முதலில் மோடியைத் தான் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டியிருக்கும். மோடி திறமையற்றவர் என்பதோடு, பணமதிப்பழிப்பு என்கிற ஒரே ஒரு ஊழலின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை அவர் சீரழித்திருப்பதில் இருந்து நாடு மீண்டெழ இன்னும் எத்தனை பத்தாண்டுகள் தேவை என்பது புரியாமல் பொருளாதார வல்லுநர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

”பாஸ், எனக்கென்னவோ மோடி இந்தியாவின் பிரதமரானதில் சீனா இல்லாட்டி பாகிஸ்தானோட சதி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு” என்று நண்பர் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார். நான்காண்டுகளுக்கு முன் அவர் ஒரு மோடி பக்தர் என்பது தான் இதில் சிறப்பு.

மேலும் படிக்க:

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி