privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் சவுபாக்கியா - மக்களுக்கு ’சாவு தான் பாக்கியா ?’

மோடியின் சவுபாக்கியா – மக்களுக்கு ’சாவு தான் பாக்கியா ?’

-

ந்தியா முழுதும் மின்சார வசதியற்ற மக்களுக்கு 24/7 மின்சாரம் வழங்கும் 16,320 கோடி ரூபாய் மதிப்பிலான சவுபாக்கியா திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 -ம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

“கிராமத்திலோ நகரத்திலோ அல்லது தொலைதூர இடங்களில் இருந்தாலும், ஒவ்வொரு வீட்டையும் இந்த அரசாங்கம் இணைக்கும். இந்த இணைப்பிற்காக ஏழைகள் யாரும் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஏழைகள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அரசாங்கம் நேரடியாக சென்று இணைப்பை வழங்கும். ஒரு ரூபாய் செலவழிக்காமல் கிடைக்கும் மின்சார இணைப்பு இது. இதற்கு 16,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். ஏழைகள் யாரும் இந்த சுமையை ஏற்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று மோடி தன்னுடைய உரையில் கூறியிருந்தார்.

புதிய திட்டங்கள் – மோடி ஊதித்தள்ளும் சோப்பு முட்டை

வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பவர்கள் கூட வெறும் 500 ரூபாயை 10 தவணை முறைகளில் கட்டினால் போதும் மின் இணைப்பு வீடு தேடி வரும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கும் தன் பங்கிற்கு உரை ஆற்றியிருந்தார்.

உரையில் சிங் குறிப்பிட்ட மற்றொரு முக்கியமான விடயம் முன்பணம் செலுத்தும் ப்ரீபெய்டு அளவியைப் (மீட்டர்) பொருத்த போகிறார்கள் என்பது தான்.  ப்ரீபெய்ட் அளவிகளைக் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம், மின்சார விநியோகத்தை, செல்போன் சேவை போல தனியார் கைகளில் ஒப்படைப்பது தான். ஆனால் இந்த பழைய சரக்கிற்கு காங்கிரசு இட்ட நாமகரணம் “ராஜீவ் காந்தி கிராமேன் வித்யுதிகாரன் யோஜனா”.

மேலும், “நாடு விடுதலை பெற்ற 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட 4 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருக்கும் கெடுவாய்ப்பினை” நாட்டு மக்களுக்கு மோடி நினைவூட்டினார்.

பழைய வரலாற்றை இந்திய நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவதும் போகாத ஊருக்கு வழி சொல்லுவதும் மோடிக்கு மட்டுமே உரிய சிறப்பன்று. ஏற்கனவே முந்தைய அரசுகளால் மின்சாரமயமாக்கப்பட்டவை என்று கூறப்படும் கிராமங்களில் உண்மையிலேயே மின்சார இணைப்பு முற்றிலும் அளிக்கப்படவில்லை. இந்திய சட்டத்தால் மின்சாரமயமான கிராமம் என்ற நாமகரணம் சூட்டப்படுவதற்கு வெறும் 10 விழுக்காடு கிராமம் ஒளியேற்றப்பட்டாலே போதும். இந்த கணக்குப்படி 99.37 விழுக்காடு இந்திய கிராமங்கள் ஏற்கனவே பட்டொளி வீசிக்கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஆறு மாநிலங்களில் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water) நடத்திய ஆய்வில் 50 விழுக்காட்டிற்கு அதிகமான கிராமங்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 12 மணி நேர மின்சாரம் கூட கிடைப்பதில்லை என்று தெரிய வந்தது.

மோடி தற்போது ஒளியேற்றுவதாக கூறியுள்ள 18,452 கிராமங்களில் பெரும்பாலானவை எளிதில் அணுக முடியாத தொலைதூரத்தில் உள்ளன என்பதால்  இந்த திட்டமும் மோடியால் ஊதித்தள்ளப்பட்ட சோப்பு முட்டைகளில் ஒன்று தான் என்பதற்கு இதற்கு முன்னால் அறிவிக்கப்பட்ட கண்கவர் திட்டங்களின் நிலைமையே சாட்சி.

தனிநபர் வருமானத்தை அதிகரிக்க திட்டம் :

’இன்டியா ஸ்பென்ட்’ இணையதளம் 2014 -ம் ஆண்டு எடுத்த புள்ளிவிவரங்களின் படி; நகர்ப்புறங்களில் 47 ரூபாயும் கிராமப்புறங்களில் 32 ரூபாயும் நாளொன்றிற்கு சம்பாதிக்கும் 37 கோடி ‘பணக்காரர்கள்’ இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களின் தனிநபர் வருமானத்தை 1.06 இலட்சத்திலிருந்து (2015 – 16 -ம் ஆண்டு) 2031 – 32-ம் ஆண்டில் 3.14 இலட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசின் சிந்தனை குழாமான நிதி ஆயோக் ஒரு பயங்கரமான திட்டத்தை(?) வகுத்திருந்தது.

வீடு கட்டும் திட்டம் :

இந்திய மக்கள் அனைவருக்கும் 2022 -ம் ஆண்டிற்குள் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன் வீடுகளைக் கட்டும் நோக்கில் ஜூன் மாதம் 2015 -ம் ஆண்டில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்டது.

2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.88 இலட்சம் நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கு அங்கீகரிக்கப்பட்டதில் ஒரு இலட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. முன்னதாக 2012 – 2017 ஆண்டுகளில் வீடுகளின் பற்றாக்குறை 1.8 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

மின்சார வண்டிகளுக்கான திட்டம் :

கரியமில மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர 2030 -ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று இந்திய அரசு கூறியிருந்தது.

“மாற்று எரிபொருளுக்கு மாறாவிடின் வாகனங்களை உடைக்கப் போவதாக” ஒரு படி மேலேச் சென்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கத்காரி கூறியிருந்தார். முரணாக 2016 – 2017 நிதியாண்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் 30 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 2015 – 16 நிதியாண்டை விட எண்ணிக்கையில் 3 இலட்சம் அதிகம்.

சூரிய எரிசக்தி திட்டம் :

சூரிய எரிசக்திக்கு மாறுவதற்கான திட்டத்தை 2015 -ம் ஆண்டு மோடி அரசு அறிவித்திருந்தது. அந்த ஆண்டின் 4 ஜிகாவாட் கொள்ளளவிலிருந்து 2022 -ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் வரை உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று சூளுரைத்திருந்தது. ஆயினும் 2021 ஆண்டுவாக்கில் வெறும் 44  ஜிகாவாட் கொள்ளளவிற்கே உற்பத்தி செய்யமுடியும் என்று வல்லுனர்கள் கூறுகிறாகள்.

இணையப் பரிவர்த்தனை :

கருப்புப்பணம் கள்ளப்பணம் என்று கூக்குரலிட்டு ஏழை எளிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் இணையப் பரிவர்த்தனையின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கப்பட்ட பண வழங்கீட்டு இடைமுகம் (Unified Payments Interface) என்ற திட்டத்தின் கீழ் 2,500 கோடியாக உயர்த்த மோடி அரசு திட்டமிட்டது. ஆயினும் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாட்டின் காரணமாக இது ஒரு பெரிய தோல்வியில் தான் முடியும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

சவுபாக்கியாவைப் போன்று ஏற்கனவே மோடி அறிவித்த பல்வேறு ’அதிரடி’ திட்டங்கள், ஒன்று மக்களின் தாலியை அறுத்தன, அல்லது சத்தமில்லாமல் ஆவணங்களில் தூங்கின. தற்போது அனைவருக்கும் மின்சாரம் என மோடி அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க மின்சாரத்தைத் தனியார் கைகளில் கொடுக்கவே கொண்டு வரப்படுகிறது.  மோடியின் ‘சவுபாக்கியா’வைக் கொஞ்சம் இழுத்துச் சொல்லிப் பாருங்கள்; மோடி நம்மைப் பார்த்து ஏளனமாகக் கேட்கும் கேள்வி புரியும் . ”சாவு பாக்கியா ?”

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

மோடி அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி