privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! - சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்

-

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017  அன்று மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரளாக பொதுமக்களும்,  தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு தலைமையேற்ற தோழர் வெற்றிவேல் செழியன் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்…

“எடப்பாடி அரசாங்கம் என்பது மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் கல்லா கட்டுவதையே தொழிலாக கொண்ட அரசாக உள்ளது. அதன் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் கேலிகூத்தாக உள்ளது மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர், வாசலில் சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் இன்னொரு அமைச்சர். இப்படிப்பட்ட அடிப்படை அறிவற்ற பேச்சுக்கள் மக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது.

இந்த அரசின் அராஜகங்கள், அக்கிரமங்கள் ஒன்றா இரண்டா? ஒட்டு மொத்த அரசின் செயல்பாடுகளுமே அக்கிரமமாக தான் உள்ளது. தலைமை செயலகம் என்பது மக்களுக்காக திட்டங்களை போட்டு செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை அப்படி மக்களுக்காக நடக்கிறதா என்றால் இல்லை. ஒரு அதிகாரியாவது மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று பேசுகிறார்களா? என்றால் இல்லை. மக்கள் நல திட்டங்களை போடுகிறோம் என்ற பெயரில் கமிசன் பிரித்து கொண்டு தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ளுவது தான் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் பங்கு போவதில்லை, எதிர் கட்சியில் உள்ளவர்களுக்கும் சேர்த்து தான் பங்கு போகிறது. இவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

சமூகத்தில் நீர் நிலைகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீர் நிலைகளை அழிக்கும் வேலையை செய்கிறது. போலீசுத் துறை சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை மாறாக சீர்குலைக்கிறது. நமக்கு எதிராக மாறியுள்ள அரசை வீழ்த்தி மக்கள் தான் அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர் ஜெயபிரகாஷ் – சென்னை பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.- அவரது உரையில்….

“கே.கே நகர் பகுதியில் கடந்த மழையின் போது ஏற்பட்ட ஒரு பள்ளம் ஆறு மாத காலமாக மூடப்படாமல் இருக்கிறது, அதை மூட கூட வக்கில்லாமல் தான் இவர்கள் இருக்கிறார்கள். தான் வாழும் பகுதியில் தண்ணீர் பிரச்சனைக்காகவும், அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் போராடும் போது அதை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் மதிப்பதில்லை.

மீஞ்சூர் பகுதியில் மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைத்து விவசாயம் அழிக்கப்படுகிறது. இதை தெரிந்தே தடுக்காமல் இருக்கும் நிர்வாகிகள் என ஒட்டு மொத்த அரசு நிர்வாகமே செயலழிந்து, எந்த பிரச்சனையும் தடுக்க வக்கில்லாமல் மக்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. இதற்கு மாற்று நமது பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரத்தை நாமே கையில் எடுப்பதுதான்.  இந்த பகுதியில் ஒரு பிரச்சனையென்றால் நாம் எல்லோரும் சேர்ந்து தானே கேள்வி கேட்போம் அது தான் மக்கள் அதிகாரம்”

அதன் பின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தோழர் இராஜூ – மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம் – அவரது உரையில்…

அரசியல் அராஜங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை என்ற இந்த பொதுக்கூட்டத்தை இன்று சென்னையில் தொடங்கியுள்ளோம். இன்று தர்மபுரி, விழுப்புரம் என மொத்தம் மூன்று இடங்களில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது. மேலும் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

இன்று எதை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவது; போராட்டம் நடத்துவது? கந்துவட்டியை எதிர்த்து நடத்துவதா? டெங்கு பிரச்சனையை கண்டித்து நடத்துவதா? பொறையாரில் 8 தொழிலாளர்கள் இறந்தார்களே அதற்கு போராட்டம் நடத்துவதா? இல்லை புறம்போக்கு நிலத்தை யார் வேண்டுமென்றாலும் ஆக்கிரமிக்கலாம் என்பது போல செயல்படும் ஓபிஎஸ், இ.பி.எஸ் யை எதிர்த்து போராட்டம் நடத்துவதா? தினகரனை எதிர்த்து நடத்துவதா? எதை பேசுவது என்றே தெரியாமல் பேசும் எதிர் கட்சிகளை விமர்சித்து கூட்டம் நடத்துவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்,  வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என இவர்களின் கோரிக்கைகளிக்காக போராடுவதா? ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை முறை போராடுவது? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமான அரசியல் அராஜகங்களுக்கும், அக்கிரமங்களும் முடிவுக்கட்டும் போராட்டங்கள் தேவை. அப்போது தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல ஒவ்வொரு பிரச்சனைக்கும் லட்சக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியுமா? டெங்கு கொசு கடித்து மக்கள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஒரு நாளைக்கு 10 பேர் இறக்கிறார்கள். மக்கள் இறப்பது என்பது வெறும் புள்ளி விவரங்களாக ஆகிவிட்டது. இதற்கு என்ன சொல்கிறார்கள் அரசு முதலில் மர்ம காய்ச்சல் என்றது. அப்புறம் நிலவேம்பு கசாயம் குடி என்கிறது. ஆம்னி பஸ்ஸில் கொசு வருகிறது என்கிறார் ஒரு அமைச்சர்.  எவ்வளவு திமிராக பேசுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் டெங்குவிற்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்க முடியாமல் இருக்கிறதா? மற்ற நோய்களுக்கெல்லாம் ஒழுங்காக மருத்துவம் பார்க்கிறார்களா?

விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் இருவரும் நான்கு நாள் ஊரில் உள்ள எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை பார்க்க வேண்டும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கூடம், கழிப்பிடங்கள், பிரதேச பரிசோதனை கூடம், மற்றும் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் கொட்டியிருக்கின்ற கழிவுகள், என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அதன் பிறகு பேச வேண்டும்.

டெங்கு ஒரு பிரச்சனையில்லை என்று ஒட்டு மொத்த அரசும் சொல்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை என எங்குமே சரியான மருத்துவ வசதியில்லை. கொசு கடித்தால் செத்துவிடுமோ என்று மக்கள் நினைப்பது இந்த அரசு நம்மை காப்பாற்றாது என்று அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் தான் வருகிறது.

மக்கள் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் போது தமிழக அரசு வெறும் 40 பேர் தான் இறந்துள்ளார்கள் என்று சொல்கிறது. மத்திய அரசு ஆய்வு குழு 18 பேர் இறந்ததாக சொல்கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். சிறு வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கி கொண்டிருக்கும் போது அவர்களிடம் அபராதம் போடுவது அயோக்கியத்தனம் இல்லையா?

அரசு அதிகாரிகளே போலீஸ் நிலையத்திற்கு செல்லுங்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு போய் பாருங்கள். டெங்கு கொசுவை உருவாக்கும் நிலையிருந்தால் அவர்களுக்கு அபராதம் போடுங்கள். நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். அந்த வளாகம் நீதிபதி கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அங்கு பிரச்சனையிருந்தால் 50,000 அபராதம் போடுங்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? மருத்துவம் கிடைக்காமல் மக்கள் சாகிறார்கள் என்றால் மருத்துவம் தரமுடியவில்லை என்றால் இந்த அரசு தோற்றுவிட்டது என்று தானே அர்த்தம். தோற்றுவிட்டால் மன்னிப்பு கேட்டவேண்டும். பணிந்து போகவேண்டும். நாம் என்ன தவறு செய்தோம், நம் குழந்தைகளை, உறவினர்களை இழப்பதற்கு, தவறு செய்தது இராதாகிருஷ்ணனும், விஜயபாஸ்கரும், அதிமுக-வும், அதிகாரிகளும் தான் காரணம். நாம் ஏன் சாக வேண்டும்?

நெல்லையில் இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்து இறந்தார், இதற்கு யார் காரணம், பல முறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்காத கலெக்டரும், எஸ்.பி-யுமே காரணம், இதை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். கலெக்டர் நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியாதா? இல்லை கந்துவட்டி விட்ட முத்துலட்சுமியை எஸ்.பி கண்டித்து இருந்தால் தடுத்திருக்க முடியாதா?. அந்த குழந்தைகள் ஏன் சாக வேண்டும். நமக்கு பிறகு யாரும் நம் பிள்ளைகளை காப்பாற்ற மாட்டார்கள். நமக்கு பிறகு நமது குழந்தை பிச்சையெடுக்கும் என்று நினைத்து தானே குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

கலெக்டர் ஹெல்ப் லைன் தொடங்க போகிறோம் என்று முடித்து கொண்டார். பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து முடித்து கொண்டார்கள். சில கட்சிகள் கடுமையான தண்டனை வேண்டும். மூன்று வருடம் என்று தான் இப்போது தண்டனை இருக்கிறது 30 வருடம் தண்டனை என்று கடுமையான சட்டம் கொண்டு வந்தால் இப்படி நடக்காது என்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசி முடித்து கொண்டார்கள்.

கந்துவட்டிக்காக நான்கு பேர் செத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது. எங்கே போனால் தீர்த்து கொள்ள முடியும் கலெக்டரிடமோ, நீதிமன்றத்திற்கோ போனால் தீர்த்து கொள்ள முடியுமா? இது தனிநபர் பிரச்சனை இல்லை. இது சமூக பொருளாதார பிரச்சனை. ஒருத்தர்  10 வட்டிக்கு கடன் வாங்கிறார் என்றால் அவசர தேவைக்கு தான் வாங்குவார். கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, தொழிலுக்கோ தான் கடன் வாங்குகிறார். அந்த நேரத்தில் அவர்களுக்கு கந்து வட்டி விடுபவன் தான் மகாராசனாக தெரிகிறான். கந்துவட்டிக்காரன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான், சினிமா, வியாபாரம் என அவன் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான்.

கந்துவட்டிக்காரன் தான் சமூக பொருளாதாரத்தை இயக்குகிறான். அரசு என்ன செய்கிறது. கணக்கில் வராத பணம் கருப்பு பணம் என்று தான் சட்டம் சொல்லுகிறது. கந்துவட்டி என்பது கருப்பு பணம் தானே? கந்துவட்டி என்ன உழைக்கும் தொழிலா? இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இதை எப்படி மாற்றுவது? இதற்கு என்ன தீர்வு?  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரத் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்வோம். கடனாக  பணம் கொடு என்று கேட்போம்.

எந்த முதலாளியாவது நிரந்தர வைப்பு தொகை லட்சக்கணக்கில் அரசு வங்கியில் போட்டு வைத்துள்ளானா? டாடா, பிர்லா, அம்பானி, மிட்டலின் சொத்தா? அரசு வங்கிகளில் இருப்பது யாருடைய பணம் நம்முடைய பணம், பெரும்பான்மை மக்களின் சேமிப்பு பணம். அரசே கொடுக்கும் புள்ளிவிபரம் என்ன? பாராளுமன்ற தணிக்கை குழுவின் அறிக்கை என்ன? பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் 70% பன்னாட்டு கம்பெனிகள், தரகு முதலாளிகளின் கடன் தான். விவசாயிகள் கடன் வெறும் 1% தான். பெண்ணின் கையை பிடித்து இழுத்தால் உடனே அடிப்பது போல, கந்துவட்டியை உடனே ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு பலர் விண்ணப்பித்துள்ளார்கள். அந்த வேலைக்கு 8 வதிலிருந்து 10 வது வரை படித்தால் போதும். ஆனால் அதற்கு பி.இ, எம்.ஏ,, பி.எட் படித்தவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார்கள். இந்த அரசு உயிரோடு இருக்கிறதா? இல்லையா?. பி.இ படித்தால் வேலைக்கிடைக்காது என்றால் எதற்கு இன்ஜினியரிங் கல்லூரி இழுத்து மூட வேண்டுயது தானே?.

பல அரசு துறைகள் இருந்தும் ஒன்றும் செயல்படவில்லை, பொதுப்பணித்துறை கட்டும் பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. வெறும் செய்தியாக கடந்து போகிறோம். 2000 வருடத்திற்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பென்னி குவிக் கட்டிய முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. இவர்கள் கட்டிய பல தடுப்பு பாலங்கள் இடிந்து விழுக்கின்றன. இதற்கு யாரை தண்டிப்பது, யாரிடம் கேள்வி கேட்பது? ஆனால் இவர்களிடம் தான் நாம் மனு கொடுக்கிறோம். எவன் தாலியை அறுத்தானோ? அவனிடமே மனு கொடுக்கிறோம். அவன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் நாம் தீக்குளிக்கிறோம், விஷம் குடிக்கிறோம், போராடுகிறோம். எவன் விவசாயத்தை அழித்தானோ அவனிடமே விவசாயத்தை காப்பாற்று என்று மன்றாடுகிறோம். இவர்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.

இசக்கிமுத்து செத்த பிறகு எல்லா கலெக்டர் அலுவலகத்திலும் தீயணைப்பு கருவிகள் பொருத்துகிறது அரசு.  பிரச்சனைக்கு என்ன காரணம் எப்படி தீர்ப்பது என்று யோசிப்பதில்லை. யாரும் கலெக்டர் அலுவலகத்தில் வந்து தீக்குளித்துவிடக்கூடாது என்று தான் சிந்திக்கிறார்கள். டெங்கு பிரச்சனையென்றால் எப்படி சரி செய்வது என்று யோசிக்காமல், காய்ச்சல் வந்ததையே மறைப்பது, மிரட்டுவது. எப்படி தீர்ப்பது என்று சிந்தக்கவில்லை எதற்காக இந்த அரசு மக்களை ஆள வேண்டும். குடும்ப தலைவர் என்பவன் மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், அதை விடுத்து மனைவியை விபச்சாரத்திற்கு விடுவது, பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து பிழைப்பது என்றால், அவன் குடும்ப தலைவனா? அது போல் இந்த அரசும் செயல்படுகின்றது.

கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இசக்கிமுத்து செத்தால் தான் கந்துவட்டியை பற்றி பேசனும், ஏழை அனிதா செத்தால் தான் கல்வி உரிமையை பற்றி பேசனும், விவசாயி செத்தால் தான் விவசாயத்தை பற்றி பேசனும் என்றால் எதற்கு இந்த அரசு. மொத்த பிரச்சனைக்கும் காரணமே இந்த அரசு தான். இந்த அதிகாரிகள் தான் காரணம்.

தீர்வு தான் என்ன?

எந்த சட்டத்தை படித்துவிட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள்? எந்த சட்டத்தையும் படிக்காமல் தான் மக்கள் தங்கள் வேலைகளை தாங்களே பார்த்து கொள்கிறார்கள். ஒரு பொது ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு தான் வாழ்கிறார்கள்.

மெரினாவில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடினார்கள். ஒரு திருட்டு இல்லை, நகை பறிப்பு இல்லை, பெண்களுக்கு தொந்தரவு இல்லை. ஏழு நாட்கள் இரவு தூங்கி காலையில் எழுந்து போராடினோம். யார் உணவு கொடுத்தார்கள், யார் போர்வை கொடுத்தார்கள் யாருக்கும் தெரியாது. போக்குவரத்தை அவர்களே ஒழுங்கு செய்து கொண்டார்கள். மக்களிடம் ஒழுங்கு அர்ப்பணிப்பு இருக்கிறது. மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை இவர்களெல்லாம் இல்லாததா பிரச்சனை? இருப்பது தான் பிரச்சனை? அவர்கள் இருப்பதால் தான் பிரச்சனை. இந்த அரசு கட்டமைப்பில் ஆளை மாற்றி பிரயோஜனம் இல்லை.

இதில் தீர்வு இல்லை என்று முடிவு செய்வோம். டாஸ்மாக் கடையை மூடனுமா? மக்கள் அதிகாரத்தை கூப்பிடுங்கள். வருகிறோம். சேர்ந்து மூடுவோம். அப்படி தமிழ்நாட்டில் பல கடைகளை மூடியுள்ளோம். அய்யா சசிபெருமாளை போல போராடி தீர்வு இல்லை. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போல போராடுவோம். கடைகளை அடித்து உடைப்போம். கடை வைப்பது ஒரு குற்றம் அதை அரசு செய்யும் போது, மக்கள் எதிர்த்து தானே போராடியாக வேண்டும். மக்கள் அதிகாரத்தில் இணையுங்கள். மக்கள் அதிகாரத்தை அழையுங்கள். உண்மையான சுதந்திர போராட்டத்தை தொடங்குவோம். இதே மாதிரி பல பொதுக்கூட்டங்கள் நடத்துவோம் அதில் நீங்கள் வந்து பேசுங்கள் பிரச்சனைகளை குறித்து பேசுவோம். தீர்வை நோக்கி நகர்வோம்.”

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சி சமகால அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடப்பட்டது. இப்பொதுக் கூட்டத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் திரளான பொதுமக்கள், வணிகர்கள் என பலதரப்பினரும் கவனித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொலைபேசி : 91768 01656.

  1. தோழர், பொதுக்கூட்டம் நடப்பதை Facebook Live or Youtube Live, போட்டால், வர இயலாத தோழர்கள் பார்க்க வசதியாகக இருக்கும்… Online la போடுவதன் மூலம் அதிக மக்கள் பார்க்க வாய்ப்பிருக்கிறது…

Leave a Reply to vinoth பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க