privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபிள்ளைக்கறி கேட்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள் !

பிள்ளைக்கறி கேட்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள் !

-

டந்த அக்டோபர் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த சாய் பிரஜ்வாலா எனும் 18 வயது மாணவி திடீரென காணாமல் போகிறார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு ஹைதரபாத்தைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் நீட் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வந்தவர் பிரஜ்வாலா. பெற்றோரின் புகாரை அடுத்து போலீசார் சென்று விசாரித்த போது, பிரஜ்வாலா சில தினங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் அவள் படிப்பில் கவனம் இழந்து விட்டாளெனவும் தெரிவித்துள்ளனர் அந்த தனியார் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே பிரஜ்வாலா தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட போலீசாருக்கு அவர் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், “அவர்கள் மாணவர்களைக் கொல்கிறார்கள்… தயவு செய்து மற்ற மாணவர்களையாவது காப்பாற்றுங்கள். இங்கே ஹாஸ்டலில் நாங்கள் நிறைய சிரமப்படுகிறோம். தயவு செய்து அந்த பயிற்சிப் பள்ளியை மூடிவிடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. பின்னர் சுமார் பத்து நாட்கள் நடந்த புலனாய்வைத் தொடர்ந்து அதே நகரில் உள்ள இன்னொரு விடுதியில் தன்னை அனாதை எனச் சொல்லி பிரஜ்வாலா சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்த சம்யுக்தாவின் குடும்பத்தினர்

பிரஜ்வாலாவுக்கு இருந்த அதிர்ஷ்டம் சம்யுக்தாவுக்கு இல்லை. ஹைதராபாத்தின் மாதேபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் நீட் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வந்த சம்யுக்தா, பன்னிரண்டாம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவி. மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் இருந்த சம்யுக்தாவின் இறந்த உடலை கடந்த அக்டோபர் 12 -ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் போலீசார் கண்டெடுத்தனர். அந்த அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் தன்னால் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என சம்யுக்தா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓரிரு மாதங்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதே போல் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. திடீரென அதிகரித்த தற்கொலைகளால் மக்களிடையே எழுந்த அதிருப்தியைச் சமாளிக்க தனியார் பயிற்சி நிலையங்களின் முதலாளிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

கடந்த வருடங்களின் புள்ளிவிவரங்களின் படி ஆந்திர மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கான நுழைவுத் தேர்வுகளில் அதிகளவு தேறியுள்ளனர். ஆந்திராவின் ஹைதராபாத்தில் மாத்திரம் இது போன்ற பயிற்சி நிலையங்கள் புற்றீசல் போல அமைந்திருக்கும். நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி நிலையங்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான பயிற்சி நிலையங்கள் தவிர ஹைதராபாத்தின் அமீர்பேட் பகுதியில் ஏராளமான தனியார் ஐ.ஐ.டி பயிற்சி நிலையங்களும் உண்டு.

மத்திய தேர்வுகளில் வென்று ஐ.ஐ.டியில் நுழைந்து பின்னர் அமெரிக்காவுக்குச் செல்வது அல்லது ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்று அரசு உயர்பதவிகளில் அமரும் பெண்களுக்கும், பையன்களுக்கும் ஆந்திரர்களின் திருமணச் சந்தையில் அதிக மதிப்பு உண்டு. இதன் காரணமாகவே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் தங்களது குழந்தைகளின் தலையில் கட்டி அவர்களைப் பந்தையக் குதிரைகளாகத் தயாரிப்பார்கள். வழமையான தேர்வுகளின் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது நீட் தேர்வு.

தனிப்பட்ட முறையில் அறிமுகமான ஒரு மாணவனின் கதை இது. அவனது பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; பெருநகரம் ஒன்றில் உள்ள தனியார் பள்ளியில் இருவருமே ஆசிரியர்கள். பிராமணர்கள். இவன் அவர்களின் ஒரே மகன். அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தான். கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 93 சதவீத மதிப்பெண்கள் பெற்றான். தங்கள் மகனை மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்பது அந்தப் பெற்றோரின் ஆசை. ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியான சைத்தன்யா தான் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைச் ’சிறப்பாக’ தயாரிப்பதாக பலரும் சொல்லக் கேட்டு தங்கள் மகனை அந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்த்துள்ளனர்.

அது உறைவிடப் பள்ளி. சுமார் ஒருமாத காலம் கழித்து பள்ளி நிர்வாகத்தில் இருந்து அழைத்து உங்கள் மகனுக்கு உடல் நிலை சரியில்லை, அழைத்துச் சென்று ஒரு மாதம் வைத்துக் கொண்டு பிறகு மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என தகவல் சொல்லப்பட்டது. அலறியடித்துக் கொண்டு இவர்கள் அங்கே சென்று தங்கள் மகனை அழைத்து வந்தனர். வந்தவன் நான்கைந்து நாட்களுக்கு திக்பிரமை பிடித்தவனைப் போல் இருந்தான்; பின் சகஜமானான்.

அவனிடம் பேசிப் பார்த்ததில் நீட் தேர்வுகளுக்காக அந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல மாணவர்களை நடத்தியுள்ளது தெரியவந்தது. சாப்பிடுவதற்கும் கூட குறைவான நேரம். சாப்பிடுவதற்கு இவன் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்வான். ஒருமுறை வார்டன் இவனை எல்லோரின் முன்பாகவும் “அரவாடு” என அழைத்து “நீ தின்பதற்குத் தான் லாயக்கு.. உனக்கெல்லாம் ஏன் மருத்துவராக வேண்டும் என்ற பேராசை” என ஏசியுள்ளார். மற்ற மாணவ மாணவிகளின் முன் அவமானப்படுத்தப்பட்டதில் மனம் உடைந்து போயிருக்கிறான். சில லட்சங்கள் கட்டி சேர்த்து விட்டதால் பதினோராம் வகுப்பையாவது முழுதாக முடித்து விட்டால் அடுத்த ஆண்டு மீண்டும் பழைய பள்ளியிலேயே சேர்த்து விடலாம் என அவனது பெற்றோர் இப்போது முடிவு செய்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து விட்டு சுமார் ஓராண்டு வேறு படிப்பில் சேராமல் நீட் தேர்வுக்காகவே செலவு செய்து அதில் வென்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியை பெற்றோரே பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி விடுகின்றனர். தனியார் பள்ளிகளும், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் வருடந்தோறும் அதிக மாணவர்களைத் தேர்வு பெற வைப்பதால் கிடைக்கும் வணிக அந்தஸ்த்துக்காக மாணவர்களைச் சித்திரவதை செய்கின்றனர். அரசைப் பொருத்தவரை கடன் தொல்லை தாளாமல் பூச்சி மருந்தைக் குடித்து மரிக்கும் விவசாயிகளின் மரணத்தைப் போலவே தூக்கில் தொங்கும் மாணவர்களின் மரணங்களையும் துச்சமாக கருதுகின்றது.

ஒரு சாதாரண ஏச்சுப் பேச்சுக்களையும், அவமரியாதையையும், அழுத்தத்தையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவராக ஆசைப்படலாமா? என வரிந்து கட்டிக் கொண்டு வருகிறவர்கள் முதலில் கல்வி என்பதன் அடிப்படையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். நீட் போன்ற தேர்வுகள் வசதியற்ற அனிதாக்களுக்கு மட்டும் தான் பிரச்சினை, நமக்கெல்லாம் ஒன்றுமில்லை என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கூட இது மிகப் பெரிய மன அழுத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதைத் தான் ஆந்திராவில் இறந்து போன ஐம்பது உயிர்கள் நமக்குச் சொல்கின்றன.

மேலும் :