privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க5,000 கோடி : சட்டையைப் பிடித்து சலுகை கேட்கும் நிஸான் !

5,000 கோடி : சட்டையைப் பிடித்து சலுகை கேட்கும் நிஸான் !

-

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், சுமார் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை நிலுவை மற்றும் நட்டஈடு கேட்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சமரச தீர்வு மையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்க 2008 -ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. 6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆண்டுக்கு 4,80,000 வாகனங்கள் தயாரிக்கும் திறனுள்ள தொழிற்சாலையை ஒரகடத்தில் அமைப்பது என ஒப்பந்தம்.

இப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளபடி வரிச்சலுகைகளை வழங்குவதில் தமிழக அரசு இழுத்தடித்து வருவதாகச் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறது. நிஸான் சொல்வதன் படி, அரசு வழங்க வேண்டிய வரிச் சலுகை மீதி 2,900 கோடி ரூபாய். இதை உரிய நேரத்தில் தராமல் இழுத்தடிப்பதற்காக நஷ்ட ஈடாக 2,100 கோடி ரூபாய் கேட்கிறது நிஸான். மொத்தம் 5000 கோடி. Comprehensive Economic Partnership Agreement with Japan – ஒப்பந்தபடி உரிய நேரத்தில் வரிச் சலுகைத் தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அப்படி தராமல் இழுத்தடிப்பது தங்களின் தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது என்றும் சொல்கிறது நிஸான்.

ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே 2011 -ல்தான் என்றும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2008 -லேயே ஒரகடம் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்று சொல்லும் தமிழக அரசு, நிஸான் வழக்குக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

“2012 ஏப்ரல் 1 -ம் தேதி முதல் 2014 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் நிஸான் நிறுவனம் தனது பிசினஸ் மாடலை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. இதன்படி, நிஸானின் தயாரிப்புப் பிரிவான RNAIPL நிறுவனமும், அதன் விற்பனைப் பிரிவுகளான ரெனால்ட் இந்தியா மற்றும் நிஸான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனங்களும் ஒரே பரிவர்த்தனைக்கு அரசின் இருவேறு துறைகளில் இருந்து வரிச்சலுகைப் பெறத் தொடங்கின. இதைத் தொடர்ந்து RNAIPL நிறுவனம் மட்டுமே வரிச் சலுகையை பெற முடியும் என  தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து நிஸான் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது இப்போதும் நிலுவையில் உள்ளது.” என்கிறது தமிழக அரசு.

மேலும், 2017 ஆகஸ்ட் 31 -ம் தேதி வணிகவரித்துறை நிஸான் நிறுவனத்துக்கு வழங்கிய வரிசெலுத்தியதற்கான சான்றிதழில், 2,616 கோடி ரூபாய் வரிச் சலுகையாக திருப்பித் தரப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதாவது நிஸான் கூறுவது போல எந்த வரிச் சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாமல் இல்லை. வரிச் சலுகையின் ஒரு பகுதியை அவர்கள் ஏற்கெனவே பெற்றுள்ளனர். “சில அதிகாரிகள் குறிப்பிடுவதன்படி, இதுவரை நிஸான் நிறுவனம் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதற்கு சுமார் 1,600 கோடி ரூபாய் வரிச் சலுகையாக பெற்றுள்ளது” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. ஆனால் நிஸான் நிறுவனமோ, இன்னும் 2,900 கோடி ரூபாய் உறுதி அளிக்கப்பட்ட வரிச் சலுகை வழங்கப்படவில்லை என்கிறது.

இதற்குப் பதில் சொல்லியிருக்கும் தமிழக அரசின் தரப்பு, “நிஸான் நிறுவனம் இங்கே 21 ஆண்டுகள் இயங்குவதாக ஒப்பந்தம். அந்த ஒட்டுமொத்த காலத்துக்குமான வரிச் சலுகையையும் இப்போதே எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியம் இல்லை. ஏனெனில், வரிச் சலுகையின் பெரும்பான்மையை அவர்கள் பெற்றுவிட்டால் பிறகு இங்கே தொழில் செய்யவே மாட்டார்கள். திட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்” என்கிறது.

‘விட்டா ஓடிப் போய்விடுவான்’ என்று மாநில அரசு சொல்வதில் உண்மை இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா நிறுவனம் 6,000 கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துவிட்டு, ஆலையை இழுத்து மூடி, 20 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்திய கதையை ஏற்கெனவே தமிழகம் கண்டுள்ளது. என்ரான் தொடங்கி ஏராளமான வழக்குகளில் வரிச் சலுகையை பெறுவதற்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதும் அந்த “Tax holidays” “வரிச்சலுகை காலம்” முடிந்ததும் ஓடிவிடுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய நிறுவனங்களிடம் இப்படி ஒரு மாபெரும் சலுகைகளும், மானியங்களும் போட்டு அரவணைப்பதே நமது அரசுகள்தான்.

பல்லாயிரம் கோடியை முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, உற்பத்தி செய்து, மக்களிடம் விற்று, அதில் லாபத்தை எடுக்கும் வழக்கமான முறையில் இருந்து இந்த பெரு நிறுவனங்கள் வேறுபடுகின்றன. இது சுற்றுவழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். ‘எதுக்கு இந்த மக்கள் கிட்டப்போயி பொருளை வித்துகிட்டு… பேசாம அரசாங்கத்துக்கிட்டயே ஆட்டயப் போடலாம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் வரிச் சலுகைகள்.

பருத்த மூலதனத்தை பையில் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு நாடாக சென்று முதலீடு செய்கின்றன. இவர்களின் 100 ரூபாய் முதலீட்டுக்கு 150 ரூபாய் வரிச்சலுகை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த Bilateral Investment Treaty, Investor-State Dispute Settlement என வகைதொகையில்லாமல் ஒப்பந்தங்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மன்மோகன் சிங் உலகம் சுற்றியதும், இப்போது மோடி ஊர் சுற்றுவதும் சும்மா குளிர் பிரதேச காட்சிகளை கண்டுகளிப்பதற்காக அல்ல… ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. அவர்கள், வந்து தொழில் தொடங்கி வரிச் சலுகைகளை எல்லாம் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுக்கொண்டு அடுத்த இடம் நோக்கி நகர்கிறார்கள்.

ஆனால் நிஸான் செய்தியை வெளியிட்டுள்ள எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள், ‘சர்வதேச நிறுவனங்கள் மத்தியில் இப்படி கெட்டபெயர் சம்பாதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல’ என புத்திமதி சொல்கின்றன. “தர நிர்ணய நிறுவனமான Moody சமீபத்தில்தான் இந்தியாவுக்கான ரேட்டிங்கை உயர்த்தியது. எளிதில் தொழில் தொடங்கக்கூடிய நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 130 -வது இடத்தில் இருந்த இந்தியாவை 100 -வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது உலக வங்கி. இந்த நிலைமையில் இப்படி செய்தால், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல… அது இந்தியா மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கும்” என்று சொல்லும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ், சர்வதேச சமரச தீர்வு மையத்தில் இந்தியாவுக்கு எதிராக 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தனியொரு நாட்டுக்கு எதிராக நிலுவையில் உள்ள அதிகபட்ச வழக்குகள் இவை என்றும் சொல்கிறது.

Deutsche Telekom of Germany, Vodafone International Holdings BV, Sistema of Russia, Children’s Investment Fund and TCI Cyprus Holdings, White Industries of Australia உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளன. இவை அனைத்துமே ‘உத்தரவாதம் அளித்த வரிச்சலுகையை தர மறுக்கிறார்கள்’ என்ற அடிப்படையிலானவை.

தங்களுக்கு அரசு வழங்குவதாக சொன்ன ‘சலுகை’யை சட்டையைப் பிடித்து கேட்கும் இவர்கள், தொழிலாளர்களுக்கான எந்த உரிமையையாவது வழங்கியது உண்டா? குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உயர்வு, சங்கம் அமைக்கும் உரிமை எதுவும் இல்லை. Assembly line-ல் இன்னும் ஓர் உதிரிபாகமாக தொழிலாளியின் உடலை மாற்றி நாள் முழுவதும் கசக்கிப் பிழிகிறார்கள்.

50 ஆயிரம் வட்டிக்கு வாங்கினால் கூட முதல் மாத வட்டியை எடுத்துக்கொண்டுதான் முதல் தொகையையே தருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்களோ ஒட்டுமொத்த திட்டத்துக்குமான வரிச் சலுகைகளை முன்கூட்டியே கேட்கின்றன. அதை தரவில்லை என்று வழக்குப் போடுகிறார்கள். நாட்டின் இயற்கை வளத்தை ஒட்ட உறிஞ்சி, சூழலை நஞ்சாக்கி, தொழிலாளர்களின் உடல் உழைப்பை சொற்பக் கூலிக்கு சுரண்டி… கல்லா நிறைந்ததும் ஓட்டம் எடுக்கும் இந்த திருட்டுக் கும்பல் வரவில்லை என்றால் இங்கு தொழிலே நடக்காதாம்; எல்லாம் முடக்குவாதம் வந்து படுத்துவிடுமாம். பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த எச்சரிக்கையின் விளைவு என்னவாக இருக்கப்போகிறது? என்னவாக இருக்க சாத்தியம் இருக்கிறது? நிஸானுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதையும், ‘சென்னையில் மட்டுமே வழக்கு நடத்த முடியும்’ என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வைத்து டெக்னிக்கல் கிரவுண்டில் வழக்கை அணுகுகிறது மாநில அரசு. ஆனால் மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மேலிருந்து ஓர் உத்தரவு வந்தால் ஒரு நொடியில் இதில் இருந்து பின் வாங்கும். ‘மாநில நலன், தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன்’ என நான்கு வார்த்தைகளை ஆங்காங்கே பிய்த்துப்போட்டு ஓர் அறிக்கை விட்டு அவர்கள் கேட்கும் வரிச் சலுகையை பைசா பாக்கியில்லாமல் செட்டில் செய்வார்கள். ‘கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்’ எம்.ஜி.ஆரின் வாரிசுகள் அல்லவா?

ஆனால் இவர்கள் கொடுப்பது யார் வீட்டுப் பணம்? அது நம் பணம். நாம் உழைத்து ஈட்டிய செல்வம். அதை வரியின் பெயரால் நம்மிடம் இருந்து பெற்று, வரிச் சலுகையின் பெயரால் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் படையல் வைப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

– கீரன்