privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !

காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !

-

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் முதுகில் மீண்டும் குத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் இன்று (பிப்ரவரி 16, 2018) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்குமாறு ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் உத்தரவிட்ட 192 டி.எம்.சி அளவு நீரை 177.25 டி.எம்.சி-யாக குறைத்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது உச்சநீதிமன்றம் .

கடந்த 2007-ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீரை, 10 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களும் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

தமிழகம் தமக்கு 264 டிஎம்சி நீர் வழங்கவேண்டும் எனக் கோரி மேல்முறையீடு செய்தது. கர்நாடகம் தமிழகத்திற்கான பங்கீட்டு அளவை 132 டி.எம்.சி.-யாக குறைக்கவேண்டும் என மேல் முறையீடு செய்தது. கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் மேல் முறையீட்டில் தங்களுக்கு கூடுதல் நீரை வழங்க வேண்டும் என கோரியிருந்தன.

இந்த வழக்கு 11 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதியன்று, மறு உத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு நொடிக்கு 2000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அந்த உத்தரவை கர்னாடக அரசு அமல்படுத்தவில்லை. அதன் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உச்சநீதிமன்றம் காவிரி வழக்கின் தீர்ப்பை மறுதேதியின்றி ஒத்திவைத்தது

இந்நிலையில் பிப்ரவரி 16, 2018 அன்று இவ்வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் கான்வில்கர், அமித்வராய் ஆகியோர் கொண்ட அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில் ஏற்கனவே தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிலிருந்து 14.75 டிஎம்சி அளவிற்கு நீரைக் குறைக்க உத்தரவிட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது.

தங்களை நடுநிலைவாதிகளாக காட்டிக் கொள்ள தமது தீர்ப்பில் “காவிரியை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை” என்று கூறியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

அந்த அடிப்படையில் பார்த்தால்கூட காவிரியில் உரிமை கொண்டாடி தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கான நீர் அளவைத்தான் குறைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திற்கான நீரைக் குறைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்து மதவெறியர்கள் இசுலாமியர்களைக் குறிவைத்து நடத்திய கலவரங்களில் எவ்வாறு ”வன்முறையில் எந்த மதம் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது” எனக் கூறி கலவரத்தைத் தூண்டி நடத்திய இந்துமதவெறியர்களை நயவஞ்சகமாக தப்புவித்ததோ போல, இப்போதும் பிரச்சினையைப் பொதுவாக்கி, தமிழகத்திற்கான நீரை அபகரிக்கும் கர்நாடகத்தை குற்றத்திலிருந்து தப்புவித்து, நீரையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது நீதிமன்றம்.

மேலும், தமது தீர்ப்பில் தமிழகத்தில் 20 டி.எம்.சி நிலத்தடி நீர் உள்ளதால் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆற்று நீர் பங்கீட்டில் நிலத்தடி நீரைப் பற்றிப் பேசியதே அயோக்கியத்தனம். அதிலும் அந்த நிலத்தடி நீர் எப்படி பயன்பாட்டில் உள்ளது, அது யார் வசம் உள்ளது என்பது குறித்த எந்த ஆய்வும் இன்றி தீர்ப்பு எழுதியிருப்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரானது, இதே உச்சநீதிமன்றங்களின் துணையோடு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கோக் பெப்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்களால் ஒட்டச் சுரண்டப்பட்டிருக்கிறது.

ஈருடல் ஓருயிராய் – தமிழகத்தின் எதிரிகள்

தமிழகத்துக்கு வஞ்சகம் செய்துள்ள இத்தீர்ப்பை வழங்கியதோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு தம்மை யோக்கியனாகக் காட்டிக்கொள்ள மற்றுமொரு நாடகத்தையும் அரங்கேற்றுகிறது. ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறிய நீதிமன்ற உத்தரவை ”அமல்படுத்த முடியாது” எனக் கூறிய மோடி அரசை மயிரளவிற்குக் கூட கண்டிக்காத உச்சநீதிமன்றம், தற்போதைய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தைப் பற்றி குறிப்பிட்டிருப்பது முழுக்க முழுக்க ஒரு ஏமாற்று வேலையே.

தமது தீர்ப்பில் தமிழகத்திலிருந்து பிடுங்கப்பட்ட 14.75 டி.எம்.சி. நீரை கர்நாடகத்திற்குக் கூடுதலாக வழங்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு 284.75 டி.எம்.சி. நீர் கிடைக்கும். வரவிருக்கும் கர்நாடகத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க மதவெறிக்கலவரம் உள்ளிட்டு பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதையும், சுப்பிரமணியசாமி சிறிது நாட்களுக்கு முன்னர், தமிழகத்துக்கு காவிரி நீர் கொடுக்கப்படக் கூடாது எனக் கூறியதையும் இந்தத் தீர்ப்போடு இணைத்துப் பார்க்கவேண்டியது உள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்குகையில் இதற்கு இனி மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சேர்த்துக் கூறியிருக்கிறார், தீபக் மிஸ்ரா. ஆம்,உண்மைதான். தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க உச்சிகுடுமி மன்றங்களில் மேல்முறையீடு செய்து பலனில்லை என்பதைத் தான் அவர் தனது பாணியில் கூறியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் !