privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?

-

முன்னாள் நிதியமைச்சார் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ-யினால் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் கார்த்தியின் ஆடிட்டரின் கைதை தொடர்ந்து இவரும் கைது ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று (28-02-2018) இக்கைது நடந்திருக்கிறது.

வழக்கின் பின்னணி என்ன?

தற்போது கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் நிறுவனம் தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. இந்நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி கோரி மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் எப்.ஐ.பி.பியிடம் (Foreign investment promotion board) விண்ணப்பிக்கிறது. அதை பரிலீசலித்து ரூ. 4.62 கோடி வரை அந்நிய முதலீடு பெற ஒப்புதல் அளிக்கிறது எப்.ஐ.பி.பி. ஆனால் அதை மீறி சுமார் ரூ. 305 கோடி வரை அந்நிய முதலீடு பெறுகிறது ஐ.என்.எக்ஸ் நிறுவனம். அதாவது சந்தை மதிப்பைவிட 86.2 மடங்கு அதிகமான விலைக்கு ஒவ்வொரு பங்கையும் ரூ. 862.31-க்கு மொரீசியசை தலைமையிடமாக கொண்ட நிறுவனங்கள் வாங்குகின்றன.

இதை ஜனவரி 2008-ல் நிதி நுண்ணறிவு பிரிவு (financial intelligence unit) கண்டறிந்து பின்னர் வருமான வரிப்பிரிவு தனது விசாரணையைத் துவக்குகிறது. பின்னர் அமலாக்க துறை விசாரித்து அந்நிய நேரடி முதலீடு நிர்வாக சட்டத்தை மீறியதாக 2010-ல் வழக்கு பதிவு செய்கிறது.

கைது செய்து இழுத்துச் செல்லப்படும் கார்த்தி சிதம்பரம்

2008-ல் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பித்ததும் அப்போதய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகுகிறார்கள் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளான இந்திராணி, பீட்டர் முகர்ஜி தம்பதியினர். இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார். அந்நிய முதலீட்டுக்கு புதியதாக ஒரு விண்ணப்பத்தை அனுப்பி அதை நிதியமைச்சகத்தின் மூலம் அனுமதி பெற வைத்து தாங்கள் முன்னர் பெற்ற அந்நிய முதலீட்டுக்கு சட்டபூர்வ அனுமதி பெற்று தந்திருக்கிறார். இதற்கு கைமாறாக பெருமளவிலான் பணம் கார்த்தி சிதம்பரத்திற்கு கைமாற்றியிருக்கிறது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம்.

கார்த்தியின் ஆடிட்டர் மற்றும் கார்த்தியின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் கார்த்தி மற்றும் சில அந்நிய நிறுவனங்களுக்கு $700,000 அமெரிக்க டாலர் பணத்தை கீரீஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டில் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டிபிடிக்கப்பட்டிருக்கிறது என பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத் தன்மை குறித்து இதுவரை போதுமான ஆதாரம் வெளிவரவில்லை. ஏனெனில் தற்போதைய குற்றச்சாட்டின் மதிப்பே ரூ பத்து இலட்ச ரூபாய் மட்டுமே.

இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செட்டிநாட்டு சிதம்பரத்தின் புதல்வன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மறுத்திருக்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம் ஒரு கார்ப்பரேட் புரோக்கராக செயல்பட்டுவருவது பொதுவில் அறியப்பட்ட ஒன்று. சமீபத்தில் வெளியான முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசாவின் 2G saga unfold புத்தகத்தில் ஏர்டெல் நிறுவனம் தங்களுக்கு சாதகமாக டீலை முடித்துக்கொள்ள தன்னை பலமுறை தொடர்புகொண்டாதகவும் அதற்கு தான் மறுத்துவிட்ட நிலையில் கார்த்தி சிதமபரம் தனக்கும் ஏர்டெல்லின் பாரதி மிட்டலுக்கும் சந்திக்க ஏற்பாடு செய்து தந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏற்கனவே ஏர்செல்-மாக்சிஸ் வழக்கு, மற்றும் வாசன் மருத்துவமனையின் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்படத்தக்கது. இருப்பினும் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தொகையின் மதிப்பு பத்து இலட்சம் ரூபாய் மட்டுமே.

நீரவ் மோடி, கோத்தாரி போன்ற முதலைகள் ஆயிரக்கணக்கான கோடிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இது போக அமித்ஷாவின் சீமந்த புத்திரனது திடீர் வளர்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பியதையே கூடாது என்று தடைபோட்டிருக்கிறார்கள்.

காங்கிரசுக் கட்சியும், பாஜகவுன் உலகமயத்தை ஆதரிப்பதில் ஒரே கொள்கை உடையவைதான். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை விட இந்த தாராளமயக் கொள்கையை கடைபிடிப்பேன் என்றுதான் மோடி ஆட்சியை பிடித்தார். அதன்படியே நாட்டுமக்களை வாட்டி வதைக்கும் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பெட்ரோல் – டீசல் அன்றாட விலையேற்றம், கார்ப்பரேட் நிறுவனங்களக்கு சலுகைகள் என முதலாளிகளின் உள்ளம் கவர் வேலையையும் செய்கிறார்.

கூடவே எதிர்க்கட்சியான காங்கிரசின் செல்வாக்கு வளர்வதை நிறுத்தும் வேலையையும் செய்து வருகிறார். மோடி அரசின் கொள்கைகள் ஏற்படுத்திய அழிவிலிருந்து மக்களின் கோபத்தை திசை திருப்ப இத்தகை கைது, வழக்குகளை மோடி அரசு செய்து வருகிறது. 2ஜி வழக்கே அப்படிப் போடப்பட்டதுதான் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்தியாவில் உலகமயம் அமலாக்கப்பட்ட போது சட்டப்படியே ஊழல்கள் நிறுவனமயமாக்கப் பட்டிருக்கின்றன. அதனால்தான் பல வழக்குகள் சொல்லிக் கொள்ளும்படி எதையும் நிறுவவில்லை. இந்திய தரகு முதலாளிகளின் சண்டை காரணாமகவும் இத்தகைய ஊழல் வழக்குகள் சில பேசப்படுகின்றன. அதை தன்னுடைய பார்ப்பனிய பாசிச திட்டத்திற்கு பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

கார்த்தி சிதம்பரத்தின் கைதை வைத்து அப்படி பிரச்சாரம் செய்ய பாஜக நினைக்கிறது. கார்த்தி சிதம்பரம் போன்று இரு கட்சிகளிலும் ‘பணியாற்றுபவர்கள்” பலர் இருக்கின்றார்கள். ஒரு வேளை காங்கிரசு அடுத்த முறை ஆட்சி அமைத்தால் அப்படி சில வழக்குகளை நாம் சந்திக்கலாம்.

எனினும் இந்த வழக்குகள் எவையும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளையோ இல்லை சட்ட மீறல்களையோ கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டவை அல்ல. அப்படி மீறி கைவைத்தால் முதலுக்கே மோசம் என்ற நிலைமைதான்.

எனினும் இந்த சூழலில் பாஜக-வின் வழக்கு நாடகங்கள் அனைத்தும் மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதே முக்கியமானது.  உண்மையில் இவர்களுக்கு ஊழலை ஒழிக்கும் நோக்கம் இல்லை என்பது மட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் என்பது மல்லையா, நீரவ் மோடி, கோத்தாரி வழக்குகளில் இருந்து தெரிய வரும் உண்மை!

மேலும் படிக்க: