privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு

ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு

-

‘‘மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர் மறைவின் காரணமாக காலா திரைப்படத்தின் டீசர் நாளை மார்ச் 2 (நாளை) வெளியிடப்படும். டீஸருக்காக ஆர்வமாக காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன்”

– இது காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் டிவிட்டரில் கூறிய அறிவிப்பு!

காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ரஜினி நடிக்கும் “காலா” படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்குகிறார். “காலா” திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சியில் ஜெயேந்திரர் இறந்து போக இன்று வெளியாக இருந்த டீசர் ஒரு நாள் தள்ளி நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதற்கு மன்னிப்பும் கேட்கிறார் தனுஷ்.

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரது கிச்சன் கேபினட் முழுவதும் துக்ளக் சோ, குருமூர்த்தி, லதா ரஜினி காந்த், ஒய்.ஜி.மகேந்திரன்,  பாஜக, மோடி, என பார்ப்பனிய மாந்தர்கள் நிறைந்திருக்கின்றனர். அவரது அரசியல் பிரவேசம் பாஜகவின் பி, சி, டி பிளான் என்றால் அவரது சொல்லும் செயலும், படமும், அதன் வெளியிடலும் கூட பார்ப்பனியத்தின் ஆசிர்வாதத்தோடு கூடவே நடைபெறும்.

காஞ்சியில் ஜெயேந்திரன் இறந்து போனதால், சங்கர மட பள்ளிகளுக்கு விடுமுறை, சங்கர மட கோவில்களின் சடங்குகள் ரத்து, சங்கர மட தெருவில் கடைகள் விடுமுறை போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் கம்பெனியின் தயவில் நடப்பவை. இதைத்தாண்டி காலா படம், ரஜினி ரசிகர்கள் எல்லாம் சங்கர மடத்தின் எல்லையில் எப்படி வரும்? இவ்வளவிற்கும் ஜெயேந்திரனது மரணத்திற்காக காஞ்சிபுரத்தில் சுமார் 2000 பேர் திரண்டிருந்தால் அதிகம். அதில் பார்ப்பனரல்லாதோரின் சதவீதம் பத்தைத் தாண்டாது. எனினும் லோககுருவின் மரணத்திற்கு லோகமே சோகம் கொண்டிருப்பதைப் போன்று ரஜினி எண்ணுகிறார் போலும்.

ஆன்மிக ஜெகத்குருவும் சினிமா ஜெகத்குருவும்

ரஜினியின் பாபா படத்தின் ஆன்மீகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அடி பலமாக இருக்கும் போது ஜெயேந்திரன் மரணமெல்லாம் எப்படி ஐயா கணக்கில் வருகிறது? எந்த ரஜினி ரசிகர் ஜெயேந்திரனை “மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர்” என்று விளிக்கிறார்?

ரஜினி படத்தின் டீசர் வெளியாகும் போது ரஜினி குடும்பமும், ரஜினியின் பார்ப்பனிய சுற்று வட்டமும் பரிதவித்திருக்கிறது என்றால் அந்த உண்மையை வெளிப்படையாக கூற வேண்டியதுதானே?

கொல்லப்பட்ட மரியாதைக்குரிய சங்கர்ராமனோ, இல்லை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான எழுத்தாளர் மரியாதைக்குரிய அனுராதா ரமணனோ இவர்களெல்லாம் மரியாதைக்குரியவர்கள் இல்லையா? ஜெயேந்திரனது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என்று மோடியோ எஸ்.வி.சேகரோ கூறுவது போல நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.

காலா படத்தில் அம்பேத்கர் குறியீடு, தலித் மக்களின் வாழ்க்கை, போராட்டம், அரசியல் எல்லாம் இருப்பதாக ஏற்கனவேயும், இனியும் பேசும் சில ஃபேஸ்புக் புரட்சிப் போராளிகள் இனிமேலும் திருந்துவார்களா?

சென்ற மாதத்தில் மட்டும் எத்தனை கொலைகள், கொடூரங்கள் நடந்திருக்கின்றன? கேரளாவில் செஃல்பி வெறியர்களால் ஒரு பழங்குடி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். விழுப்புரத்தில் ஒரு தலித் குடும்பம் சூறையாடப்பட்டிருக்கிறது. இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது என்றால் அந்த உள்ளத்தை வியந்தோதும் அற்பத்தனத்தை எப்படிக் கண்டிப்பது?

ரஜினியின் மகள் ஐ.நா சபையில் கோமாளி ஆட்டம் ஆடும் வாய்ப்பு பெறுவதையோ, ரஜினியின் கட்சி பாஜகவின் ஆசிர்வாதத்தோடு ரிலீஸ் செய்யும் காலத்தையோ, காலா படத்தின் டீசர் ஜெயேந்திரனது சாவிற்காக ஒத்தி வைக்கப்படுவதையோ,  காலா படமே ஏப்ரலில் வெளியாவதையோ வேறு வேறு விசயங்கள் என்று எண்ணமுடியுமா?

இன்றைய கருத்துக் கணிப்பு கேள்வி:

ஜெயேந்திரன் மறைவை ஒட்டி காலா திரைப்பட டீசர் ஒத்திவைக்கப்பட்டது எதைக் காட்டுகிறது?
(மூன்று பதில்களைத்  தெரிவு செய்யலாம்)

  • ரஜினியின் பார்ப்பனிய பாசம்
  • சங்கராச்சாரியார் மறைவை மதிக்கும் நாகரீகம்
  • ரசிகர்களை இந்துத்துவா பக்கம் திருப்பும் முயற்சி
  • ரஞ்சித் பேசும் தலித் அரசியல் பாஜக-விற்கு பயன்படும் அவலம்
  • இந்துக்களின் அபிமானத்தை கவரும் நடவடிக்கை
  • இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை