privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

-

மதுரை காவிரி தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான இளம் தோழர்களின் அனுபவம்!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சேர வேண்டிய 14 டிஎம்சி தண்ணீரை குறைத்து கடந்த 16.2.2018 வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.  மறுநாள் 17.2.2018 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக “டெல்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்படாதே” என்ற முழக்கத்தோடு மதுரையின் ஜல்லிக்கட்டு புகழ் தமுக்கத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 4 இளம் தோழர்கள் உட்பட 24 தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் இளம் தோழர்கள் தவிர மற்றவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

கைதான 4 இளம் தோழர்களும் பு.ஜ.தொ.மு., ம.க.இ.க. அமைப்புத் தோழர்களின் குழந்தைகள் தான், அதனாலேயே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  அவர்களது போராட்ட அனுபவம் இது.

உலகமயத்தின் உக்கிரமான தாக்குதலில் தெருக்களில் ஓடியாடும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. சுட்டி டி.வி.யும் ‍.சோட்டா பீமும் அவர்களை இரண்டடி பெட்டிக்குள் கைது செய்துவிட்டது. கொஞ்சம் வசதி வாய்ப்புள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளையோ Android மொபைல் போனின் வீடியோ கேம்ஸ்களின் பிடியில் தாரை வார்த்துவிட்டது இந்த சமூகம்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் களம் கண்ட குழந்தைகளையும், டாஸ்மாக் கடைகளை ஏறி உடைத்த சிறுவர்களையும், நெடுவாசலில் போர்களம் புகும் சிறார்களையும் காண்கின்றோம்.

இனி குழந்தைகளின் அனுபவத்திற்கு செல்வோம்.

“எங்க 4 பேருக்கும் அன்னக்கி லீவு, அதனால் முத நாளே அப்பா காவிரி வழக்குல தமிழ் நாட்ட ஏமாத்திட்டாங்க. அதனால நாளைக்கி காலையில போரட்டம் இருக்கு. நீங்களும் வாங்க, காலையில் 8 மணிக்கு எல்லாம் கெளம்பனும். சீக்கிரம் போயி தூங்குங்கன்னு சொன்னாங்க. ஸ்கூல் இருந்தா அப்பா கூட்டிட்டு போமாட்டாங்க. சில நேரம் மட்டும் லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அதே மாறி காலைல 8 மணிக்கெல்லாம் அங்க போய்ட்டோம். அப்ப அங்க ஒரு போலீஸ்காரரு அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தாரு. என்கிட்ட பேரு, படிப்பு, எல்லாம் அவரு விசாரிச்சாரு” என்று சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும் கயல்.

” அப்பறம் போராட்டம் ஆரம்பிச்சப்ப தோழர்களோட‌ சிக்னலில் இருந்து BSNL ஆபிஸ் வரை முழக்கம் போட்டுகிட்டே ஊர்வலமா போனோம். நாங்க முதல் வரிசையில் சென்றோம்.  ஏன்னா போராட்டத்துல எங்களுக்கு எப்பவுமே முதல் வரிசையில் இருக்கத்தான் பிடிக்கும்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும்  இரணியன்.

“முதல்ல சில போலீசுதான் இருந்தாங்க, அவங்க கூட நாங்க ஊர்வலமா வற்றப்ப பக்கத்துலதான் நடந்து வந்தாங்க. ஆனா ஒன்னும் சொல்லலை. அப்பறம் ஆபிஸ் வாசல்ல டி.வி காரங்களுக்கு பேட்டி கொடுத்தப்ப, ஒரு போலீஸ் வந்து, “உடனே எல்லாம் வேன்ல ஏறுங்க உங்கள எல்லாம் கைது பண்றோம்”  என்றாரு. உடனே இப்பத்தான வந்துருக்கோம் கொஞ்சம் இருங்கன்னு தோழர்கள் சொன்னப்ப உங்கள இவ்வளவு நேரம் விட்டதே அதிகம் உடனே வேன்ல ஏறுங்கன்னு சொல்லிக்கிட்டே எல்லாரயும் புடிச்சு தள்ளி ஏத்துனாங்க. அப்புறம் வேன்ல போகும் போது அப்பா சொல்லித்தான் தெரிஞ்சது அவரு பேரு மணிவண்ணன்னு.  அவரு இன்ஸ்பெக்டராமே” என்று போலீசின் அடக்குமுறையை பயமில்லாமல் விளக்குகின்றனர் 5-ம் வகுப்பு படிக்கும் மருதுவும் 9 -ஆம் வகுப்பு படிக்கும் சூர்யாவும்.

ஒரு வழக்கறிஞராகி மக்களுக்காக சேவை செய்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.

மேலும் “இவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா, நம்ம ஊருக்கு வர வேண்டிய தண்ணிய தடுத்து நிறுத்தி இருக்காங்க, அப்பறம் விவசாயம் பன்றதுக்கு எங்க இருந்து தண்ணி கிடைக்கும். எப்படி சாப்புட்றது.  இவங்களும் இந்த ஊரு தான.  நம்ம ஊரு பிரச்சினைக்கு நாம போரட‌லைன்னா வேற யாரு போராடுவான்னு நினைச்சோம்.  சரி, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படிதான, நல்லது பன்றவங்கள கைது பன்றது அப்படின்னு நினைச்சு விட்டுட்டோம். உடனே எங்கள(சிறுவர்களை)  மட்டும் வெளிய போங்கன்னு சொல்லிட்டு தோழர்கள மட்டும் கைது பண்ண பார்த்தாங்க ஆனாநாங்களும் கைதாவோம்னு சொல்லிட்டோம்.

ஒவ்வொருத் தரையும் குண்டு கட்டா தூக்கி வேன்ல ஏத்துனாங்க, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படித்தான் பன்னுவாங்கன்னு எங்களுக்கு தெரியும். ஏன்னா ரொம்ப நேரம் நாங்க போராட்டம் பண்ணா மக்கள்கிட்ட இந்த விசயம் பரவும், அத தடுக்குறதுக்கு தான் இவங்க இப்படி எல்லாரயும் உடனேயே கைது பண்ணி வேன்ல ஏத்தி மண்டபத்துல அடச்சு வச்சுருவாங்க, இதுதான் இந்த போலீசோட வேலையே. ஆனா எங்கள கைது பன்றப்பவும், ஊர்வலமா வந்தப்பவும் சுத்தி இருந்தவர்களை (மக்களை) பார்த்து கைகாட்டி வரச்சொல்லி முழக்கம் போட்டோம், ஆனால் எல்லாரும் போட்டோ எடுத்தாங்களே தவிர யாருமே வரல, எல்லாம் வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க”.

மேலும் இரணியன் கூறும் போது “சின்ன பசங்கள எல்லாம் வெளிய போங்கன்னு கைய புடிச்சு இழுத்து இழுத்து விட்டாங்க, ஒரு போலீசு கை பிடிச்சு இழுக்கிறேன்னு என் கைய பிசஞ்சு விட்டான், நல்ல தடிமாடு மாதிரி இருக்காங்க. இப்பவே போன போராட்டத்துல முத வரிசையில் கொடியோடு நின்னு முழக்கம் போட்டுட்டு இருந்தப்ப என் பிரண்ட்ஸ் பார்த்துட்டு கட்சிகொடினு பட்ட பேர் வச்சுதான் கூப்புறாங்க, இதுல இது வேற தெரிஞ்சுட்டா ரொம்பவே பன்னுவாங்க” என்று தமது செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காமை பற்றி வருத்தத்தோடு சொல்கிறார்.

“அப்புறம் வேன்ல போய்ட்டு இருந்தப்ப அடிக்கடி சடன் பிரேக் போட்டாரு டிரைவரு. நான் கூட முன்னாடி போய் முட்டிக்கிட்டேன், அப்ப தோழர்கள் ஏன் இப்படி வண்டிய ஓட்றீங்க, எங்கள மேல கோவமான்னு கேட்டாங்க, ஆனா அந்த டிரைவரு ஏதும் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்ருந்தாரு”  என்கிறார் சூர்யா.

“அங்கருந்து மண்டபத்துல போனதுக்கு போனப்புறம் எல்லாரோட பேரு, வேல அட்ரஸ், படிப்பு, ஸ்கூல் பேரு எல்லாம் கேட்டாங்க. நாங்க கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டோம், ஏன்னா எங்கள போராட விடாம, மரியாதை இல்லாம நடத்துனதுக்காக தோழர்கள் பேரு, அடையாளம் எல்லாம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதனால நாங்களும் தரமாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்ப எங்கள பார்த்து, “நல்லா படிச்சு பெரிய ஆளா வர வேண்டாமா, ஏன் இப்படி போராட்டம்னு வந்து கஷ்டப்பட்றீங்கன்னு”  கேட்டாரு ஒரு போலீசு, உடனே நாங்க “எம்ஜிஆர் படிச்சாரா?, அவரை இப்படி கேப்பீங்களா?” அப்படீன்னு கேட்டோம், உடனே அவரு “ஏய் அவரு முதலமைச்சர்ப்பா” என்றவுடன் “அவரு படிச்சுதான் முதலமைச்சர் ஆனாரா”ன்னு திருப்பி கேட்டவுடன் “உங்க கூட பேச முடியாதுப்பா நீங்க கிளம்புங்க” அப்படின்னு சொல்லிட்டு அவரு கிளம்பிட்டாரு. அதுக்கப்புறம் எல்லா தோழர்களும் ஒவ்வொருத்தரா காவிரி ஆத்து பிரச்சினைய பத்தி பேசினாங்க. அதைப்பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டோம்”.

மேலும் கயல் மற்றும் மருது சொல்லும்போது, “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து “எங்க மண்ணு, எங்க ஊரு” பாட்ட பாடுனோம், அப்ப தோழர்கள் எல்லாம் சந்தோசமா பார்த்து கைதட்டுனாங்க” என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

ஆரம்ப பள்ளி ஆசிரியராகி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது கயலின் கனவு.

“வெளிய இருந்த‌ தோழர்கள் ஸ்நாக்ஸ் சாக்லெட் எல்லாம் வாங்கி தந்தாங்க. காலையில் பேரு, அட்ரஸ் கேட்டப்ப சொன்ன மாதிரியே எங்கள போராட விடாம கைது செஞ்சதுக்காக போலீஸ் வாங்கி தந்த சாப்பாட சாப்ட மாடோம்னு சொல்லிட்டாங்க தோழர்கள்.  அதுக்கப்புறம் போலீஸ் சாமாதானம் பேசினதுக்கப்புறம் சாப்டறப்ப 3மணி இருக்கும்.” என்கிறார் மருது.

“அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நேரம் மண்டபத்துலயே ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம், நடுவுல நாங்க எல்லாரும் தோழர்களாகவும், பிரகாஷ் தோழர் போலீசாவும் வேஷம் போட்டு விளாடுனோம், நாங்க எல்லாரும் சேர்ந்து போலீச(பிரகாஷ் தோழரை) தரையில போட்டு புரட்டி எடுத்துட்டோம்.”

சாயங்காலம் திடீர்னு எங்கள எல்லாரையும் ரிமாண்ட் செய்யுறோம், அதனால் மெடிகல் டெஸ்ட்க்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பனும்னு போலீஸ் வந்து சொன்னாங்க. அடுத்த நாள் ஞாயித்துகிழமன்றதால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்ல லீவுதானன்னு இருந்தோம். அங்க இருந்து GH வந்ததுக்கு அப்புறம் எங்கள(சிறுவர்களை)  எல்லாம் ரிலீஸ் செய்யுறோம்னு தோழர்கள் மட்டும் செக்கப் செய்யச் சொன்னாங்க. ஆனா நாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன்னா எங்கள மாதிரி சின்னப்பசங்க எல்லாம் போராடுராங்களேன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டு போராட வரணும்னுதான் கைதானாலும் பரவா இல்லைன்னு நாங்க போராட வர்றோம். அதனால நாங்க ரிலீஸ் ஆக மாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்பறம் தான் எங்கள செக்கப் செய்ய கூட்டிட்டே போனாங்க. அப்ப வெளிய இருந்த தோழர்கள் வாங்கி கொடுத்த சாக்லெட்ட அங்க இருந்த போலீசுக்கு எல்லாம் நாங்க ஜெயிலுக்கு போறோம் சாக்லெட் எடுத்துக்கொங்கன்னு கொடுத்தோம்.

ஆனா அவங்க உங்கள தான் ரிலீஸ் பண்ணிட்டோம்ல என்றாங்க, சரி, நாங்க ரிலீஸாகப் போறோம் அதுக்காக எடுத்துகொங்க என்றோம் நிறய பேர் எடுத்துட்டாங்க. ஆஸ்பத்திரி வராண்டாவுல நாங்க ஜாலியா விளாடிட்டு இருந்தோம், ஆனா தோழர்கள்தான் ரொம்ப பாவம். ஒன்னுக்கு போறதுக்குகூட போலீசோடதான் போனாங்க. அங்கருந்தப்ப வெளிய இருந்த தோழர்கள் எங்களுக்கு (சிறுவர்களுக்கு) மட்டும் சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. அதுக்கப்பறமும் எங்கள விடல.  போலிஸ்டேசனுக்கு கையெழுத்து போட‌ வந்தப்பகூட பசங்கள கூட்டிட்டு போயிறச்சொன்னாங்க, அத ஜட்ஜ் சொல்லட்டும்னு சொல்லிட்டு வேன்ல இருந்து இறங்க மாட்டோம்னு சொல்லிட்டோம்”

மேலும் கயல் சொல்லும் போது “அங்க ஆஸ்பத்திரியில கூட என்ன ஒரு போலிஸ் கூப்டு விசாரிச்சாரு அப்ப நம்ம இரணியந்தான் வந்து என்ன கேளுங்க நான் சொல்ரேன்னு வந்து அந்த போலிஸ்கிட்ட பேசுனான்” என்கிறார்.

“என்ன பேசினான்?” என கேட்ட போது, “அதே தான், நல்லா படி, பெரிய ஆளா வரணும், போராட்டம் எல்லாம் வேணாம்ன்னு சொன்னாரு, இவன் உடனே, ” மக்களுக்காக வாழணும் சார்” ன்னு சொன்னான்”

“இவிங்கள பெத்தாங்களா செஞ்சாய்ங்களா?” என அந்த  போலீசுகாரர் புலம்பியதாக அருகில் இருந்த தோழர்கள் கூறினர்.

“அப்புறம் ஜட்ஜ் வீட்டுக்கு வந்தப்ப கூட எங்கள வெளியவே இருக்க சொன்னாங்க. ஆனா நாங்க ஜட்ஜ் முன்னாடி ஆஜராகியே தீர்வோம்னு தோழர்கள்.. கூடவே இருந்தோம். ஆனா ஜட்ஜ்தான் எங்கள பாத்த உடனயே “குழந்தைகள எல்லாம் ரிலீஸ் பண்ணிருங்கன்னு” ஒரே போடா போட்டாரு. ஜெயில பாக்குறது ஜஸ்ட்ல மிஸ் ஆகிருச்சு” என்று ஒருவித ஏக்கத்தோடு கூறுகின்றனர்.

சரி உங்களுடைய அப்பாக்கள் எல்லாம் கைதாகி ஜெயிலுக்கு போவதை பற்றி உறவினர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்களுக்கு யாருக்கும் இது தெரியாது, இரண்டு நாள்தான் ஜெயில்ல இருந்ததால சொந்தகாரங்க யாருக்கும் தெரியல, ஆனா வீட்ல அம்மா பயந்துகிட்டே இருந்தாங்க போலீஸ் யாரும் நம்ம வீட்டுக்கு தேடி வந்துருவாங்களோன்னு,” என்கிறார் மருது.

இரணியன், “எங்கப்பாம்மா போராட்டத்துக்கு வரல.  நான் மட்டும் தோழர்களோட வந்தேன்.  நான் அரஸ்ட் ஆனது தெரிஞ்சதும் பாட்டி தான் ரொம்ப திட்டினாங்க. ” அப்பன மாதிரியே கெட்டு குட்டிச் சுவரா போகாத” ன்னு சொன்னாங்க.  நான் “நல்ல விசயத்துக்கு தானே போனேன். என்ன தப்புன்னு” கேட்டேன்.  “அப்படீன்னா இனிமே எங்கூட பேசவே செய்யாதன்னாங்க”. நான் ” சரின்னு” சொல்லிட்டேன்.  அப்பறம் ஒரு அஞ்சாறு நாள் பாட்டி எங்கூட பேசவே இல்ல.  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.” என்றார்.

“இப்படி 20 பேர் மட்டும் போராடினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று கேட்ப‌தற்கு “தீராதுதான். நாங்களும் எங்க பிரண்ட்ஸ்கிட்ட பேசுவோம், ஆனா அவங்க விளாட்டுலயே இருப்பாங்க. எங்கள கிண்டல் பண்ணுவாங்க,  சிலபேர் ஆசைதான் ஆனா அம்மா விடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றதும் சரிதான எங்க அப்பா அம்மா போக சொல்றாங்க, ஆனா அவங்க அப்பா அம்மா அப்படி இல்லையே என்ன பன்றது. ஆனா நாங்க விடமாட்டோம்.  பசங்ககிட்ட விடாம பேசுவோம், அடுத்த தடவ நிறய பிரண்ட்ஸ கூட்டிட்டு வருவோம்.”

” இப்படி போராட்டம்,  போலீஸ்,  கைது,  கேஸ் என்று போய்க்கொண்டிருந்தா ஆசிரியர்,  மருத்துவர்,  வழக்கறிஞரா,  உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்கள், ஆசைகள் எல்லாம் என்னவாவது?” என்று கேட்டால்  “மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த ஆசை எல்லாம், அது முடியலைன்னா இப்படி போராடி சேவை செய்ய வேண்டியதுதான்” என்றனர்.

-வினவு செய்தியாளர்கள்.