privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல - உளவியல் போர் !

கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் !

-

“இப்படி நடந்திருக்க கூடாது. நடந்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறுகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை நாங்கள் முன்பே கூட எடுத்திருக்க வேண்டும் தான்… ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது தான் மிகப் பெரிய தவறெனக் கருதுகிறேன். இந்நிறுவனத்தை எனது இளம் வயதில் துவங்கினேன். தொழில்நுட்ப ரீதியிலும், தொழில் ரீதியில் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன்.. சில தவறான நபர்களை நம்பியிருக்கிறேன். எனது தவறுகளில் இருந்து இப்போது நான் சில பாடங்களைப் படித்திருக்கிறேன். இனிமேல் அவை நடக்காது என என்னால் உத்திரவாதமாகச் சொல்ல முடியும்”

– மார்க் ஸூக்கர்பெர்க், பேஸ்புக் நிறுவனர்.

மார்ச் 21 -ம் தேதி சி.என்.என் தொலைக்காட்சிக்கு மார்க் ஸூக்கர்பெர்க் அளித்த நேர்காணல்.

*****

ருவர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பாதிரியாக வேலை செய்கிறார் என வைத்துக் கொள்வோம். சிறுவயதிலேயே பாதிரியாக நேர்ந்து விடப்பட்டு அதற்கான படிப்பெல்லாம் முடித்தவர் அவர். ஆனால், அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்; கிறிஸ்தவ மதம் குறித்து மிக ஆழமான வெறுப்பும் அவருக்கு உண்டு. அப்படிப்பட்டவரின் நண்பரைப் பார்த்தால் அவர் என்ன பேசுவார்?

மார்க் ஸூக்கர்பெர்க், பேஸ்புக் நிறுவனர்.

“மச்சி, இந்த பயலுவ ஒவ்வோர் ஞாயித்துக் கிழமையும் தங்களோட பாவங்களை அறிக்கையிடறாங்களே… ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“அடுத்த ஆறு நாளுக்கு எந்த கூச்சமும் இல்லாமெ பாவம் செய்யத் தான். ஒவ்வொரு அறிக்கையிடற நாளும், அடுத்த ஆறு நாட்கள் பாவம் செய்யிறதுக்கான எனர்ஜிய குடுக்குதுன்னு நினைக்கிறேன்”

நண்பரோ எந்த பதிலும் சொல்லாமல் பாதிரியாரையே பார்த்துக் கொண்டிருக்க..

“ஒருத்தன் எத்தனை முறை மனந்திரும்பலாம்னு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாழ்க்கை பூரா வாரா வாரம் மனந்திரும்பிகிட்டே இருக்கலாம்… நல்ல ஏற்பாடு தானே?” – என்று சிரிக்கிறார் அந்த பாதிரியார் நபர்.

நாம் மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் வருவோம். முதல் பத்தியில் மார்க் வெளியிட்டிருக்கும் பாவமன்னிப்பின் யோக்கியதையும் இது தான். கடந்த சில நாட்களாக பேஸ்புக் நிறுவனம் குறித்து ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வேறு வழியின்றித் தான் மார்க் ஸூக்கர்பெர்க் வாயைத் திறந்துள்ளார். எனினும், எந்தப் பாவமும் செய்யாத தூய முதலாளித்துவம் என்கிற பிராணி இந்தப் பிரபஞ்சத்திலே இல்லையென்பதால் இந்தப் பாவமன்னிப்பின் ஆயுள் அது கேட்கப்பட்ட போது தெறித்து விழுந்த எச்சில் காய்வதற்கு முன்பே தீர்ந்து போயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலாளித்துவத்தின் மீதான அவநம்பிக்கையில் இருந்து இதைச் சொல்லவில்லை. தற்போது பேஸ்புக் நிறுவனம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள “அதிர்ச்சிகரமான” தகவல்கள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் இருந்தே சொல்கிறோம்.

*****

ங்கிலாந்தைச் சேர்ந்த நீகெல் ஓக்ஸ் (Nigel Oakes) என்பவரால் 1993 -ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் ஸ்ட்ரேட்டஜிக் கம்யூனிகேசன்ஸ் லேபாரட்டரிஸ் (Strategic Communication Laboratories Group) சுருக்கமாக எஸ்.சி.எல் (SCL). விளம்பரங்கள் செய்வது, குறிப்பிட்ட பொருளுக்கான சந்தை வாய்ப்புகளை மதிப்பீடு செய்து வழங்குவது உள்ளிட்ட சேவைகளைச் செய்து வந்த இந்நிறுவனம் தனது சிறப்பம்சமாக தன்னுடைய இணையதளத்திலேயே குறிப்பிடுவது “உளவியல் போர்” (Psycological Warfare) மற்றும் “நிர்பந்திக்கும் செயல்பாடுகள்” “influence operations”. 1999 மற்றும் 2000 -மாவது ஆண்டுகளில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் இண்டிபெண்டண்ட் பத்திரிகைகளில் வெளியான சில கட்டுரைகளில் எஸ்.சி.எல் நிறுவனம் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய தேர்தல்களில் ஆளும் தரப்புக்கு சார்பான கருத்துருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரிய வருகிறது.

“குறிப்பிட்ட ஒரு பொருளுக்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறிவது” என்பதைத் தனது தொழில் நடவடிக்கையாக மேற்படி நிறுவனம் சொல்லிக் கொண்டாலும், நடைமுறையில் “ஒரு பொருளுக்கான” இல்லாத சந்தையை உருவாக்குவதாகவே இருந்துள்ளது. உதாரணமாக இந்தியச் சந்தையில் ஆலிவ் எண்ணைகளை விற்க வேண்டுமென ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று முடிவு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேற்படி ஐரோப்பிய கார்ப்பரேட் தனது ஆலிவ் எண்ணைக்கான சந்தையை இந்தியாவில் உருவாக்கும் வேலையை எஸ்.சி.எல் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கும்.

எஸ்.சி.எல் போன்ற சந்தை உளவியலைக் கண்டறியும் (இதன் நடைமுறை பொருள் – உருவாக்குவது) நிறுவனம் இந்திய ஊடகங்களில் “கடலை எண்ணையால் அதிகரிக்கும் கொழுப்பு” அல்லது “மாரடைப்பை உண்டாக்கும் தேங்காய் எண்ணை” போன்ற அறிவியல் கட்டுரைகளை வரவழைக்கும். ஒரு கட்டத்தில் “இதயத்தின் நலனுக்கு உகந்தது ஆலிவ் எண்ணை தான்” என்றும், “ஆலிவ் எண்ணையால் இத்தாலியர்களின் ஆயுள் அதிகரித்திருப்பது” குறித்தும் கட்டுரைகள் வெளியாகத் துவங்கும். இப்போது இந்திய நுகர்வோரிடையே ஆலிவ் எண்ணைக்கான ஒரு சந்தை உருவாக்கப்பட்டு விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நிறுவனம் தனது ஆலிவ் எண்ணை பிராண்டைக் களமிரக்கும்.

இங்கு “பொருள்” என்பதன் இடத்தில் எதை வேண்டுமானாலும் – அல்லது யாரை வேண்டுமானாலும் வைக்க முடியும். இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நரேந்திர மோடி என்றோ, தமிழக சிஸ்டத்தை ரிப்பேர் செய்ய ரஜினியால் தான் முடியும் என்றோ டைம்ஸ் நவ் அல்லது ரிபப்ளிக் சேனலிலோ, ஆனந்த விகடனிலோ, குமுதம் ரிப்போர்ட்டரிலோ அல்லது இவை போன்ற பத்திரிகைகளிலோ “செய்திகள்” மற்றும் “ஆய்வுக் கட்டுரைகளை” வரவழைத்து மேற்படி ஆசாமிகளுக்கான சந்தையை உருவாக்க முடியும். இந்தத் தொழிலில் தான் எஸ்.சி.எல் நிறுவனம் ஈடுபட்டு வந்தது; இதைத் தான் “உளவியல் போர்” என்றும், “நிர்பந்திக்கும் செயல்பாடு” என்றும் அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் சர்வதேச அளவில் “இசுலாமிய தீவிரவாதத்திற்கு” ஒரு நல்ல சந்தை உருவாகி வந்த நேரத்தில் அங்கும் தனது செயல்பாடுகளை விரிவாக்கிக் கொண்டது எஸ்.சி.எல் நிறுவனம். மத்திய கிழக்கிலும் பிற இசுலாமிய நாடுகளிலும் கருத்துருவாக்கம் செய்வதன் மூலம் “தீவிரவாத தடுப்பு” நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசு காண்டிராக்டுகளையும் பெற்றுள்ளது.

இதற்கிடையே 2013 -ம் ஆண்டு வாக்கில் மனிதர்கள் எடுக்கும் தீர்மானங்களைக் கண்டறியும் உளவியல் முறையை இந்நிறுவனம் கடைபிடிக்கத் துவங்கியது. மக்களை நேரடியாகச் சந்தித்து சில கருத்துக்கணிப்புக் கேள்விகளின் மூலம் அவர்களின் வெளிப்படைத்தன்மை, எச்சரிகைத்தனம், வெளிப்படுத்தும் முறை, ஒப்புக்கொள்ளும் தன்மை, நியுரோடிசிஸம் (Openness, conscientiousness, extroversion, agreeableness and neuroticism – OCEAN) போன்றவற்றை கண்டறிந்து அதன்மூலம் அவர்களை மதிப்பீடு செய்யும் முறை இது.

அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியின் புரவலர்களான ஸ்டீவ் பேனோன் மற்றும் ராபர்ட் மெர்சர் ஆகியோரின் நிதி உதவியோடு 2013 -ம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா எனும் துணை நிறுவனத்தை எஸ்.சி.எல் ஆரம்பிக்கிறது. எஸ்.சி.எல் ஈடுபட்டு வந்த அதே தொழில்நடவடிக்கைகளை நவீன முறைகளின் படியும், மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு முறைகளின் படியும் (Big Data Analytics) முன்னெடுக்கிறது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா.

முகநூல் தளத்திற்கான செயலி ஒன்றை வடிவமைத்த கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, அதன் மூலம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரித்துள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மின்தரவுகளின் அடிப்படையில் அவர்கள் எம்மாதிரியான அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இவ்விவரங்களின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களைக் கவர எம்மாதிரியான முழக்கங்களை வைக்கலாம், அவர்களது அரசியல் கண்ணோட்டத்தை ட்ரம்புக்கான வாக்குகளாக எப்படி மாற்றலாம் என்பதை மிக நுணுக்கமாக வகுத்துள்ளனர்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் தலைமைச் செயல் அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ்

ஒருபுறம் தொழில்நுட்ப ரீதியில் முகநூலில் இருந்து தமது செயலிகளின் மூலம் மின்தரவுகளைச் சேகரித்து அதைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வாக்காளர்களை வகைபிரிக்கும் (Profiling) வேலையை செய்த கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, இன்னொருபுறம் வேறு வகையான தந்திரங்களையும் வைத்துள்ளது. அமெரிக்கத் தேர்தல்களில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வாக்காளர்களை உளவியல் ரீதியில் வகைபிரிக்கும் போக்கு எழுந்துள்ளது என்றும், இதில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா ஈடுபட்டுள்ளது என்றும் டிசம்பர் 2015 வாக்கிலேயே கார்டியன் பத்திரிகை எழுதத் துவங்கியது. டொனால்ட் ட்ரம்பின் எதிர்பாராத வெற்றியைத் தொடர்ந்து மேற்கத்திய ஊடகங்கள் அந்த வெற்றியின் இரகசியத்தை அம்பலப்படுத்த பல்வேறு விசாரணைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த வகையில் சேனல் 4 செய்தியாளர்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தைக் குறித்து இரகசியப் புலனாய்வு ஒன்றை மேற்கொண்டு வந்தனர்.

தனது நாட்டின் தேர்தல் முடிவைத் தீர்மானிக்க விரும்பும் இலங்கையைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் எனும் போலி முகாந்திரத்தில் சேனல் 4 -ன் செய்தியாளர் ஒருவர் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தினுள் ஊடுருவுகிறார். அந்நிறுவனத்தின் பல்வேறு உயரதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய சேனல் 4 -ன் செய்தியாளர்கள், அந்த உரையாடல்களை இரகசிய கேமராக்களில் பதிவு செய்தும் உள்ளனர். குறிப்பிட்ட ஒரு உரையாடலின் போது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் தலைமைச் செயல் அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ், தொழில்நுட்பம் தவிர்த்து தனது நிறுவனத்திடம் உள்ள மற்ற “நிழல் தந்திரங்களைக்” குறித்து பெருமையோடு விளக்கியுள்ளார்.

தமது வாடிக்கையாளரின் அரசியல் எதிரியின் நம்பகத்தன்மையை உடைக்க தனது நிறுவனத்திற்கு பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றிய அனுபவம் உண்டு என வீடியோ ஒன்றில் பீற்றிக் கொள்ளும் நிக்ஸ், அதற்கு உதாரணமாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவரோடு நெருங்கிப் பழகி அவரது அரசிடம் இருந்து ஏதாவது காரியம் சாதிக்க லஞ்சம் கொடுத்து அதை இரகசியமாக வீடியோ எடுத்து அம்பலப்படுத்த முடியும் என்கிறார். அல்லது, உக்ரேனிய அழகிகளை வரவழைத்து சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரோடு அவர்கள் இருப்பதை வீடியோ எடுத்து அதை வெளியிட முடியும் என்கிறார். மேலும், இந்த உதாரணங்களெல்லாம் தனது நிறுவனத்தால் என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்திருக்கிறோம் என்பதற்கான சில மாதிரிகள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

*****

முகநூலில் இருந்து மின்தரவுகளை கேம்பிரிட்ஜ் களவாடியது என்றே பல்வேறு ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், உண்மை என்னவென்றால் “சட்டப்பூர்வ” வழிமுறைகளின் படியே மின்தரவுகளை பெற்றுள்ளனர். அப்படிப் பெறப்பட்ட மின்தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதோ, பகுப்பாய்வின் முடிவுகளை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டதையோ கூட தெட்டத் தெளிவாக “சட்டவிரோதம்” என்று சொல்லி விடமுடியாது. எனில், இந்த மொத்த விவகாரத்தில் முதலாளித்துவ கண்ணோட்டத்தின் படியே எதைத் தவறு என்கிறார்கள்? உண்மையிலேயே இந்த விவகாரத்தில் எதைக் குற்றம் என்று நாம் சொல்கிறோம்? அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு என்ன? தொழில்நுட்ப ரீதியில் என்ன நடந்தது?

பார்ப்போம்.

(தொடரும்)