privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்தமிழில் புழக்கத்துக்கு வந்த "ஜீ" யின் கதை !

தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !

-

“ஜீ” யின் கதை

ந்தப்பதிவு தற்போது பரவலான விளிப்புச்சொல்லான “ஜீ” பற்றிய புள்ளிவிபரமும் துள்ளிய விவரணைகளும் கொண்டதில்லைதான், ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால் தர்க்கரீதியான இந்த உண்மைகளை நிராகரிக்க முடியாது.

அது 90 -களின் தொடக்கம் பள்ளி முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தபோது நான் பள்ளிப்பையுடன் பஜாரில் முக்கிய சந்திப்பிலுள்ள எங்கள் சற்றே பெரிய பெட்டி(புத்தக)க்கடை கடைக்கு வந்து சிலமணிநேரம் வேலை செய்து வீடு செல்வது கட்டாயம். அதிலும் விடுமுறையில் பகலிரவு வியாபாரம்தான், பதின் தொடக்கத்திலேயே பள்ளி, வேலை என்ற இருவாழ்வி முறை.

வியாபார இடைவெளியிலெல்லாம் கண்ணில்படுவது, வாசிப்பதும் பத்திரிக்கைகள்/தினசரி/ வால்போஸ்டர் தான் இன்னும் சொல்லப்போனால் அது சினிமா /பொதுக்கூட்ட / அரசியல் போஸ்டர்கள் மத்தியில் உண்டு உறங்கும் வாழ்வு. ஒவ்வொரு நாளும் அன்றிரவு அப்பகுதியில் சுவரொட்டப்படவேண்டிய போஸ்டர்களை எங்கள் கடையில் கொடுத்து வைப்பார்கள்.

அரசியல் போஸ்டர் லே-அவுட் வண்ணங்கள் அடிப்படையில் எளிதாக மூன்று பெரும் பிரிவில் வந்துவிடும்.

கருப்பு சிவப்பு மிகுவது திமுக-அதிமுக, மூவர்ணம் மிகுவது காங்கிரஸ், சிவப்பு கம்யூனிஸ்ட் இம்மூன்று பெரும்பிரிவுகள்தான் தமிழகத்தின் அன்றைய அரசியல் அன்றாடங்கள், அன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசியல் பரப்புரைகள் மக்களைச்சேர பத்திரிக்கை, சுவரொட்டி, பொதுக்கூட்டங்கள்தான் வழி. தொலைக்காட்சி தெருவுக்கு ஒன்றாக அப்போதுதான் வர துவங்கியிருந்தது இணையம் என்ற சொல்லே புழக்கத்தில் வரவில்லை.

அதிலும் அப்போஸ்டர்களில் பெயர்களில் முன் பின் விளிப்பு வார்த்தைகளாக திரு – உயர்திரு அவர்கள் இருக்கும் கம்யூனிஸ்ட் போஸ்டர்களில் “தோழர் ” அடைமொழி தவிர்த்து பார்க்க முடியாது.

அந்த சமயத்தில்தான் இந்திய அரசியலின் முக்கிய எதிர்மறை நிகழ்வாக பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தேறியது, அதன்பின்தான் நான்காவதாக காவி நிற போஸ்டர்கள் நகரில் (நாடெங்கும் அதன் பின்தான் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை) பரவலாக தென்பட ஆரம்பித்தது.

அப்போஸ்ட்டர்களின் பிரதான வார்த்தை அத்வானிஜீ. பிஜேபி ” ஜீ” என்ற அடைமொழி பிரதானப்படுத்துவதை காட்டிலும் அதேகாலகட்டத்தில் தமிழகமெங்கும் கிளை பரப்பிக்கொண்டிருந்த பிஜேபி யின் துணை அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்த “ஜீ” யை தனது போஸ்டர்களில் பிரதானப்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் இந்து முன்னணி போஸ்டர்களின் மைய வார்த்தையே “இராமகோபாலன்ஜீ “தான்.

மத அடிப்படைவாத இயக்கங்கள் உறுப்பினர் சேர்க்கையும் ஆங்காங்கே இயக்க கூட்டங்களும் பெருகத்தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட நிற துண்டை அணிந்து கொள்வது, திலகமிட்டுக்கொள்வது, “ஜீ” சேர்த்து சக உறுப்பினரை விளிப்பது என தனி அடையாளப்படுத்துதல் அங்கிருந்துதான் தமிழகத்திற்க்குள் பரவத்துவங்கியது

இந்த “ஜீ” மனதில் ஆழப்பதியும் ஒரு சம்பவம் எனக்கு நடந்தேறியது, அது 95 ஆல்லது 96 -ஆகா இருக்கலாம் உத்தமபாளையத்தில் மர்மமான முறையில் இந்துமுன்னணி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்ட பகுதிகளில் பரபரப்பு பதற்றம் நிலவியது.

ஒரு கொலையின் நோக்கம் சொந்த கொடுக்கல் – வாங்கல், தொழில் போட்டியா…? என உண்மை வெளிவரும்முன்னே சில அமைப்புகள் வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து ஆதாயம் அடைய துடித்த துவக்கக்காலம் அது. அன்றைய தினமே அதனை கண்டித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மோசமாக திட்டி போஸ்டர்களை நகரெங்கும் இந்து முன்னணி – பிஜேபி ஒட்டிக்கொண்டிருந்தது.

இங்கு அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைகள்தான் அந்த போஸ்டர்களின் பிரதான வாசகங்கள் ( பாளையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்த ******** தீவிரவாத நாய்களை கைது செய் – இவன் – இந்து முன்னணி , தலைவர் இராமகோபாலன்ஜீ “) அன்று இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்தபின் நான் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.

போஸ்டர் கும்பல் மூடிய கடைகளில் கதவுக்கு ஒன்றாக ஒட்டிக்கொண்டுவந்து எங்கள் கடை வந்ததும் “பாய் இன்னும் கடை அடைக்கலயா…? சரி 4 சர்பத் போடு”, என்று சொல்லிவிட்டு போஸ்டர்களில் பசை தடவ தொடங்கினர் (சர்பத்துக்கு பணம் தந்திருக்க மாட்டார்கள் என்பது நான் இங்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை ) அவர்கள் ஏற்கனவே பஜாரில் வெவ்வேறு கடை ஊழியர்களாக எனக்கு அறிமுகமானவர்கள்தான், ஆனால் இன்று அவர்கள் சிரிப்பில் ஒரு நக்கல் இருந்தது, வியாபார மும்மரத்தில் நானும் சர்பது கொடுத்துவிட்டு மீதி வேலைகளை முடித்து கடை சாத்த வெளிஇறங்கி ஒருகணம் அதிர்ந்தேன்.

மற்ற இடங்களில் கதவுக்கு ஒன்றாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் எங்கள் கடையில் மட்டும் ஸ்டால்களிலும் சுற்று சுவர்களிலும் முழுவது ஒட்டி மூடியிருந்தார்கள் அதுவும் அநாகரிக வார்த்தைகள் கொண்ட போஸ்டர், அந்த பஜாரில் எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியுமளவுக்கு.

அனுமதி பெறாமல் ஸ்டாலில் ஒட்டியது தவறு என்பதை கூட விட்டுவிடலாம், ஆனால் இது காழ்ப்புணர்வுடன் கூடிய அநியாயமாகப்பட்டது, விடிந்தால் ஊரே “பாய் கடைய எப்படி போஸ்டர்ல கவர் பண்ணிருக்காங்க பாத்தியா..?” என்று எள்ளி நகைக்க துவங்கிவிடுவார்கள். தேவையே இல்லாமல் கடை பெயர், குளிபானவிளம்பர ஸ்டாலில் ஒட்டியிருந்த போஸ்டரை கிழிக்க தொடங்கினேன், சிறிது நேரத்தில் திரும்பி வந்த போஸ்டர் கும்பல் கூச்சலுடன் வந்து என்னை சுற்றி வளைத்து நெஞ்சு சட்டையை பிடித்து ஸ்டாலோடு இறுத்தி நிறுத்தி “ஏன்டா துலுக்கா …… ” எனத் துவங்கி வன்மத்துடன் திட்டி தீர்த்ததை இங்கு எழுதிட முடியாது.

” பிரச்னை முடியுறவற எங்க போஸ்ட்டர தொட்ட பஜார்ல கடை வச்சுக்குறமாட்டா… பாய் விடியிறதுக்குள்ள கடைய காலி பண்ணிடுவாம் … ” என்று மிரட்டி நகர்ந்தனர், அப்போது அந்த பகுதியில் பணியிலிருந்த பாரா போலீஸும் இந்த நிகழ்வை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அதே போலீஸ்தான் சிலமாதங்களுக்கு முன் சில கம்யூனிச அமைப்புகளின் அரசை நேரடியாக எதிர்த்த வாசகங்கள் கொண்ட (விவசாயிகள் விடுதலை முன்னணி – புதிய ஜனநாயகம் ) போஸ்டர்களை நான் கடையில் வைத்து இரவில் சுவரொட்டுபவர்களுக்கு வழங்குவதை பார்த்து, ” பாய் இனிமே இவங்களோட சவகாசம் வச்சா உன்னையும் ஒரு கவனிக்க வேண்டியிருக்கும் ….” என மிரட்டினார்கள்.

ஆனால் அவர்களே அன்று சமூக வெறுப்புணர்வு போஸ்டர் கும்பலின் அராஜகத்தை வேடிக்கை பார்த்தபடியிருந்தனர். அன்றிரவு அவமானமும் கோபமும் இயலாமையும் எனனை பீடித்திருக்க, அந்த நாற்சந்தியில் நான் கிழித்தெறிந்த போஸ்டர்களில் “ஜீ” மட்டும் காவி நிறத்தில் பளிச்சென்று என் கடையின் சுவற்றில் பிடிவாதமாய் ஒட்டியிருப்பதை வெகுநேரம் பார்த்தபடி நின்றிருந்தேன்.

ஆனால் தமிழ் பொதுச்சமூகம் “ஜீ” யை பரவலாக பயன்படுத்துவதில் மேலேசொன்ன எந்த அரசியல் – அடிப்படைவாத கலாச்சாரப்பிரச்சார நோக்கமும் இல்லைதான். போஸ்டர்களைக் கடந்து செவிவழி பழகி இன்று ஒரு பொதுச்சொல்லாக மாற்றப்பட்டு விட்டது, பேச்சு வழக்கில் மரியாதை பிரச்சனை இல்லாமல் ஒருவரை விளிக்க இந்த ஒற்றை வார்த்தை எளிதாக இருப்பதும் ஒரு காரணம். “அண்ணா”, “தோழா”, “நண்பா” -வில் இருக்கும் இணக்கம் நிச்சயம் இந்த “ஜீ” யில் இருக்காது.

இதனை பற்றி சமீபத்தில் WHATSAPP குழுவில் ஒரு நண்பனிடம் உரையாடும்போது “இது காந்தி”ஜி” நேரு”ஜி” காலத்திலேயே இருந்துச்சே” என்றார், இருந்தது, ஆனால் அது திராவிட மொழி கலாச்சாரத்தில் கலப்பதற்கான எந்த செயல் முனைப்பும் இல்லை, வலுக்கட்டாயமாக தமிழர்கள் பெயருடன் தொங்கிக்கொண்டிருக்கவில்லை வடநாட்டு தலைவர்கள் பெயருடன் நின்றுகொண்டது, இங்கு வந்து தொழில் செய்யும் வடநாட்டவருடனான பேச்சு தொர்புக்கு மட்டும் நமக்கு உதவியது ” வா முத்துச்சாமிஜீ இன்னைக்கு களையெடுக்க போவோம்” ” மாயாக்கஜீ இன்னைக்கு நல்லமநாயக்கர்ஜீ தோட்டத்துல அறுவடை இருக்காம் ஜீ ” என்ற சொல்லாடல் நம் தந்தை தலைமுறையில் இல்லையே. ஆனால் இன்று பொதுவெளியில் புதிதாக ஒருவரிடம் அறிமுகமோ பேச்சுதொடங்களோ எந்த தடங்களுமின்றி “ஜீ”யில் தொடங்கப்படுகிறது.

இன்னொரு நபர் “ஹாய்” “சார் ” “மேடம் ” “குட் மார்னிங்” னு இங்கிலிஷ் கலந்து பேசுறத நிப்பாட்டிட்டு வாங்க அப்புறம் “ஜீ ” மாதிரி வடமொழி கலப்ப பத்தி பேசலாம்” என்றார். இதுவும் சரி எனினும் பல பத்தாண்டுகளாக ஆங்கிலம் நம் பாடத்திட்டத்தில் ஒருபகுதியாகிவிட்டிருக்கிறது. இன்று சொல்லவே தேவையில்லை தமிழை முடிந்தவரை தவிர்த்து ஆங்கிலம் மட்டுமே படிப்பு மொழியாக இந்நிலமெங்கும் பரவியிருக்கிறது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில கலப்பு மக்களிடம் எதார்த்த புழக்கமாகியிருக்கிறது, ஆனால் வடமொழி இன்றுவரை இந்நிலத்தின் பொதுக்கல்வியில் இணையவில்லை அவ்வகையிலும் “ஜீ ” க்கான சப்பைக்கட்டு புறந்தள்ளக்கூடியதுதான்.

இன்று அனைத்து அரசியல் – பொருளாதார – வரலாற்று செய்திகளும் இணையம்சார் சமூகத்தளங்களில் அரைகுறையாக,போலியாக போட்டோஷாப் நுனிப்புல்லாக பரப்பப்படுகிறது. இன்றைய இணையதலைமுறைக்கு சமூகஅரசியல் முகநூல் whatsapp வயதிலிருந்தான் தொடங்குகிறது. சமூக வலைதள வழியாக மட்டும் நாட்டு நடப்புகளை சமீபமாக பார்க்க துவங்கிய நண்பர் ஒருவர் சொன்னார் ” இப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் பிஜேபிய காரணம் சொல்றது வழக்கமாகிடுச்சு,” ஜீ” க்கும் பிஜேபிதான் காரணமா? ” என்றார்.

அவர்களை 20 ஆண்டுகளுக்கு பின்னால் அழைத்து சென்று உணர்த்தமுடியாதெனினும், இன்றும்கூட நகர சுவருகளில் அதற்கான சாட்சிகள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன ஒரேயொரு உதாரணம் கீழே.