பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 149−வது பிறந்த நாள் தமிழகமெங்கும் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது. அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தும், இன்றைய அரசியல் சூழலில் நம்முன் உள்ள கடமைகளை நிறைவேற்ற உறுதியேற்றும் லெனின் பிறந்த நாளை, ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடைபிடித்தன. தாங்கள் செயல்படும் பகுதிகளில் தோழர் லெனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தும், பறை இசைத்தும், கொடியேற்றியும், தெருமுனைக் கூட்டங்களை நடத்தியும், பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மக்கள் பங்கேற்புடன் கொண்டாடினர்.

பாட்டாளி வர்க்க வழிகாட்டி ஆசான் லெனின்! அவர் சுரண்டல் , தனிச் சொத்துடைமைக்கு முடிவு கட்டியவர்;  விவசாயிகள் – தொழிலாளர் கூட்டை கட்டியமத்தவர்; உலகில் பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கியவர்; தேசிய இன விவகாரத்தில் தங்களை தாங்களே ஆளத் தீர்மானித்துக்கொள்ளும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன் வைத்தவர்; ஏழைப் பங்காளன். கூட்டுப்பண்ணை விவசாயத்தை ஏற்படுத்தி ரசியாவில் வறுமையை ஒழித்துக் காட்டியவர்.

நமது நாட்டிலோ, நாடாளுமன்ற அரசியல், பொருளாதாரக் கொள்கை மூலம் நம்மை காப்பாற்ற முடியவில்லை என்பது 70 ஆண்டுகளில் நிரூபணம் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் மக்கள் மீதான சுரண்டலும், அடக்கு முறைகளும் பல்வேறு வடிவங்களில் ஏவப்படுகின்றன. விவசாயம் அழிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில், நியுட்ரினோ,  அணு உலை, சாகர் மாலா என அழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக நாடு மாற்றப்படுகிறது.

நாம் போராடினால்தான் வாழமுடியும்; மக்கள் நலனையும் இயற்கையை பாதுகாக்க முடியும் என்ற இன்றைய சூழலில் நமக்கு தேவை மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய  சோசலிச கொள்கை. அதற்கு ஒரே வழி ஆசான் லெனின் காட்டிய புரட்சிப்பாதை !

அவர் காட்டிய வழியில், ‘’நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக் காடாக்கும் தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை முறியடிப்போம்! மக்களை சாதி – மதம் – இனரீதியாக மோதவிட்டு ரத்தம் குடிக்கும் பார்ப்பன – இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!’’ – என்று சூளுரைத்தனர்.

சென்னை

மதுராந்தகம்

கோவில்பட்டி

விருத்தாசலம்

ஓசூர்

 தகவல்:
ம.க.இ.க., பு.மா.இ.மு.,
பு.ஜ.தொ.மு., வி.வி.மு.,
பெ.வி.மு.