வெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் !

அமெரிக்க உணவகம் ஒன்றில் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கருப்பினப் பெண் ஒருவரை கொடூரமாக கைது செய்திருக்கிறது, அமெரிக்க போலீசு.

பூவுலகின் சொர்க்கமான அமெரிக்காவில் நீங்கள் ஒரு வெள்ளையராக இருக்கும் பட்சத்தில் சொர்க்கம் என்பதில் சிறிது உண்மையிருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு கறுப்பினத்தவராக இருந்தால்…

விசாரணை என்ற பெயரில் காவல்துறை உங்களை சட்டவிரோதமாகக் கைது செய்வார்கள். அவமரியாதையுடன் நடந்து கொள்வார்கள். தேவைப்பட்டால் கொல்லவும் செய்வார்கள்.

25 வயதான சிக்கசியா கிளமென்ஸ் என்ற கறுப்பினப் பெண்ணுக்கு இத்தகைய ஒரு கொடுமை நிகழ்ந்துள்ளது. சரி அவர் செய்த தவறு தான் என்ன? 24.04.2018 அன்று அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், சாராலேண்ட் என்ற இடத்தில் உள்ள, வேஃபிள் ஹவுஸ் என்ற ஒரு பிரபலமான உணவகத்தில் காசாளரிடம் பணம் செலுத்தும் போது, காசாளர் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்காக 50 செண்டுகள் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். பதிலுக்கு கிளமென்ஸும் நேற்று இதே உணவகத்தில் சாப்பிட்ட போது இதற்கென்று தனியாகப் பணம் வாங்கவில்லை என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். காசாளர் அதைப் பொருட்படுத்தாமல் பணம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று வாதிட்டதால், கிளமென்ஸ் காசாளரின் மேலாளரிடம் முறையிட வேண்டும் என்று அவருடைய அலைபேசி எண்ணை அந்தக் காசாளரிடம் கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்.

மேலாடை கழன்ற நிலையிலும் மூர்க்கத்தனமாகக் கைது செய்யும் போலிசு

இவ்வளவு தான் அவர் செய்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசு என்ன எதுவென்று கூட விசாரிக்காமல் கிளமென்ஸை கைது செய்ய முற்பட்டுள்ளனர். எதற்காகக் கைது செய்யப்படப்போகிறோம் என்பதை அறியாத கிளமென்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட, வெறிப்பிடித்த நாய் போல இரண்டு வெள்ளையின போலிசு அவரைக் கீழை பிடித்துத் தள்ளிவிட அவருடைய மேலாடை கழன்ற நிலையிலும், மார்பகங்கள் தெரிகின்றதே என்று கிஞ்சிற்றும் கவலையின்றி அவருடைய இரண்டு கைகளையும் முடுக்கி உடைத்து விடுவோம் என்று மிரட்டியிருக்கிறது அந்த வெள்ளையினவெறி போலீசு.

இந்தக் காட்சியை அப்படியே படம் பிடித்த கிளமென்ஸின் பெண் நண்பர் கேனிட்டா ஆடம்ஸ் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரவே, வீடியோ வைரலாகி போலீசின் அராஜகத்திற்கெதிராக கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்தன.

ஒரு கடையில் வாக்குவாதம் செய்ததற்காக ஒரு கருப்பினப் பெண் பாலியல் ரீதியாகவும், கொடூரமாகவும் கைது செய்யப்படுவார். இதுதான் ட்ரம்பின் தலைமையில செயல்படும் அமெரிக்க ஜனநாயகத்தின் இலட்சணம்.

தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறி கிளமென்ஸூக்கு $1000 டாலர் பணத்தை அபராதம் விதித்து பிணையில் விடுவித்திருக்கின்றனர்.

இந்த வீடியோ யூடியுபில் வைரலாகியிருக்கிறது. ஆனால் இந்த வீடியோவின் மூலப்பதிவை முகநூலில் தான் முதலில் பகிர்ந்திருக்கிறார் கேனிட்டா ஆடம்ஸ். ஆனால் முகநூல் நிர்வாகம் தன்னுடைய அனுமதியின்றி அதை அழித்து விட்டதாகத் தெரிவிக்கிறார் கேனிட்டா ஆடம்ஸ்.

போலீசும், வேஃபிள் ஹவுஸூ-ம் சேர்ந்து கிளமென்ஸ் குடிபோதையில் இரகளையில் ஈடுபட்டார் என்ற ஒரு புரளியைக் கிளப்பி வருகின்றன.ஒரு கடையில் வாக்குவாதம் செய்ததற்காக ஒரு கருப்பினப் பெண் பாலியல் ரீதியாகவும், கொடூரமாகவும் கைது செய்யப்படுவார். இதுதான் ட்ரம்பின் தலைமையில செயல்படும் அமெரிக்க ஜனநாயகத்தின் இலட்சணம். இந்த இலட்சணத்தை இலட்சியமாகக் கொண்டு அமெரிக்காவை துதிப்போரை எப்படித் திருத்துவது?

– வினவு செய்திப்பிரிவு.

மேலும் படிக்க…
Black woman left topless as Alabama police throw her to floor in Waffle House arrest

1 மறுமொழி

  1. இந்தியாவில் தலித்துகளும் முசுலீம்களும் நடத்தப்படும் விதம், உலகம் முழுவதும் இருக்கிறது போலும்… ”ஜனநாயக நாடு” என பீற்றும் அமெரிக்காவின் முகத்திலும் வழிகிறது திண்ணியத்தின் மலம் !

Leave a Reply to jegan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க