மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 1,23,000 தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ ஆவணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதில் ஐந்து அடிப்படையான ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர்.

  • 1. புகைபிடிக்காமல் இருப்பது,
  • 2. உடல் நிறை குறியீட்டை (BMI) 18.5-க்கும் 25க்கும் இடையில் வைத்துக் கொள்வது,
  • 3. குறைந்தது 30 நிமிடத்திற்காவது மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது,
  • 4. குறைவான மது உட்கொள்வது,
  • 5. இறைச்சி, பூரண கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது

– ஆகிய ஐந்தும்தான் அவர்கள் குறிப்பிடும் ஆரோக்கியமான பழக்கங்கள்.

இந்த ஆய்வின் அடிப்படையில் வாழ்நாள் நீட்சியில் ஆரோக்கியமான பழக்கங்களின் வியத்தகு பங்களிப்பை அறிக்கையாக தந்துள்ளனர் . ஆரோக்கியமான பழக்கங்கள் எதையும் கடைபிடிக்காத ஆண்களைவிட  ஆரோக்கியமான இந்த பழக்கங்களை கடைபிடிக்கும் ஆண்கள் சராசரியாக 12 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சராசரியாக 14 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர்.

”இந்த 5 ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைபிடிப்பவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களுள் ஒருவரும், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பயிலகத்தின் நோய்த் தொற்றியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியருமான மியர் ஸ்டாம்ப்ஃபர்.

இங்கிலாந்தில் அதிகபட்ச சராசரி வயது ஆண்களுக்கு 79.4-ஆகவும், பெண்களுக்கு 83-ஆகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்தை விட சுகாதாரத்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்காவில் அது முறையே 76.9-ஆகவும், 81.6 வயதாகவும் இருப்பதன் காரணத்தை அறியவே இத்தகைய ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.

புகை – மது ஆரோக்கியத்தின் எதிரிகள்

இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் அனைத்தையும் கடைபிடிக்கக் கூடிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஜனத்தொகையில் வெறும் 8% மட்டுமே. இந்த ஆய்வு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் மேற்குலகம் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாம்ப்ஃபர்.

இப்பழக்கங்களை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில், கடைபிடித்து வாழும் ஆண், பெண் இருபாலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் மரணம் 82% வரை குறைவதாகவும், புற்றுநோயால் ஏற்படும் மரணம் 65% வரை குறைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

”ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு நல்லதுதான் என்பது தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றுவதில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. புகைக்கும் பழக்கத்தை கைவிட இயலாமை, சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதபடிக்கான மோசமான நகர்ப்புற கட்டமைப்பு போன்றவைகளே இப்பழக்கங்களை பின்பற்ற முடியாமல் போவதற்கு அடிப்படையான காரணமாக அமைகின்றன” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.

மேலும், “இதில் மக்கள் தாமாக முன்வந்து தனிப்பட்டரீதியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் மக்கள் இப்பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒரு சமூகமாக நாம் ஆவண செய்து தர வேண்டும். மக்கள் பழைய வழிகளிலேயே சுழன்று கொண்டு இனி வேறு வழியேதும் கிடையாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே குறிப்பிடத்தக்க பயனை அடைகிறார்கள்”  என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.

இந்த ஆய்வு வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்றாலும் இந்தியாவிற்கு பொருத்திப் பார்க்கலாம். நமது ஆயுள் சராசரி என்பது 68 வருடங்கள் ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சத்துணவு குறைபாடு அனைத்தும் இங்கே அதிகம்.
இந்த ஆய்வில் கூறப்பட்ட 5 ஆரோக்கியமான பழக்கங்கள் போக, உணவு, குடிநீர்,  சுகாதாரம், கல்வியறிவு முதலான அனைத்து அடிப்படைகளும் இங்கே மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. மேலதிகமாக நகர்ப்புற வாழ்வின் துன்பங்கள்… இருப்பிடம் இல்லாமை, அதிக பணிநேரம், உடல்வலியை ஏற்படுத்தும் உடலுழைப்பு, பின் தங்கிய சமூக நிலைமை, சாதி – மத சடங்குகளால் பெண்கள் ஒதுக்கப்படுதல், என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் அந்த ஐந்தையும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
டாஸ்மாக் மதுவை எடுத்துக் கொண்டால் அதுதான் நமது ஆண்களை சர்வரோக நிவாரணியாக ‘அமைதிப்’ படுத்துகிறது. அதனாலேயே விரைவில் மரணம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. புகை, பான்பராக் போன்றவற்றுக்கும் வேலை சூழல் முக்கியமான காரணம். உணவைப் பொறுத்த வரை அத்தியாவசிய வாழ்க்கைக்கான கலோரிகளே கிடைக்காத சூழலில் சமச்சீர் உணவெல்லாம் நம் கைகளுக்கு எட்டாமல் இருக்கிறது.
நடுத்தர வர்க்கமோ மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வழியும் தீர்வும் வைத்திருந்தாலும் இடையில் நின்று தத்தளிக்கிறது. அதுவும் உணவு கட்டுப்பாடு முறைகள், மாற்று மருத்துவம் என்று ஏமாறும் வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது.
இருப்பினும் மேற்கண்ட ஐந்து பழக்கங்களை பி்ன்பற்றும் முயற்சியினை நாம் முடிந்த மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை இப்போதே இது குறித்த விழிப்புணர்வோடு வளர்த்தாக வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பில் நாம் ஆரோக்கியத்திற்காக போராடுவது என்பது, அரசியல் ரீதியாக போராடுவதற்கு அவசியம் என்பதாலும் இந்த முயற்சிகளை  செய்ய வேண்டும். நீங்கள் தயாரா?

– வினவு செய்திப் பிரிவு