ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை !

பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் மோயுக் சாட்டர்ஜி, “எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி” வார இதழில் “இந்து மேலாதிக்க உணர்வின் சாமானிய வாழ்க்கை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையினை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம்.

ரு இந்து மதவெறியன் என்பவன் யார்? பால் மாடு வாங்கிச் சென்ற ஒரு முஸ்லீம் முதியவரைக் கொல்லும் இரக்கமற்றவர்கள், முஸ்லீம் பெண்களையும் தலித் பெண்களையும் வல்லுறவுக் கொலை செய்பவர்கள், காதலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள்.

மோயுக் சாட்டர்ஜி
மோயுக் சாட்டர்ஜி

இவர்கள் யார், கலவரங்கள் நடக்காத நாட்களில் இவர்களது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் கட்டுரையாசிரியர் விளக்குகிறார். அகமதாபாத் நகரில் பஜ்ரங்தள் என்ற இந்துவெறிக் குண்டர்படையைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் தொடர்ச்சியாகப் பழகி, அவர்களைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தருகிறார் இக்கட்டுரையாசிரியர்.

ஒரு நகர்ப்புறக் குடிசைப் பகுதியில் சண்டியர்த்தனம் செய்யும் வேலையற்ற இளைஞர் கும்பல், ஒரு ரவுடிக் கும்பல், ஓட்டுக்கட்சிகளின் கீழ்நிலைப் பிழைப்புவாதிகள், போலீசின் ஆள்காட்டிகள், புரோக்கர்கள், சாதிச் சங்கப் பொறுக்கிகள் போன்ற பலரும் எப்படி இந்துவெறி அமைப்புகளின் காலாட்படைகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் புரியவைக்கிறார்.

பா.ஜ.க. வின் ஆட்சி என்பது கீழ்மட்டம் வரை வேரோடுகின்ற பாசிசக் குண்டர்படையின் ஆட்சி. அது சிறுபான்மை மக்கள், தலித் மக்களை மட்டுமல்ல, எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் ஏறி மிதிக்கக் கூடியது என்பதை அனுபவபூர்வமாக விளக்குகிறார் கட்டுரையாசிரியர்.

*****

2010- ஆண்டு பிப்ரவரி மாதத்தின் குளிர்ச்சியானதொரு மாலைப் பொழுதில் வெகுதூரம் காலார நடந்து கொண்டிருந்தோம். இடையே ஒரு மசூதியின் முன்னால் நின்றோம்.

“இப்ப இதைக் கொஞ்சம் பாருங்க. 2002- இல் நானும் பசங்களும் சேர்ந்து இதைக் கொளுத்தினத நீங்க பார்த்திருக்கணும்” என்றான் குனால். இவன் ஒரு பஜ்ரங் தள் உறுப்பினர்.

வெளிறிய பச்சை நிறத்தில் சுற்றிலும் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பெரிய மசூதியை நான் ஏறிட்டுப் பார்த்தேன். எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அழிவின் அடையாளம் எதுவும் தெரியவில்லை.

gujarat 2002 riots“நாங்க அந்த மசூதியோட பூட்டை உடைச்சுக்கிட்டு இருந்தோமா. அப்போ பாத்து போலீசு இன்ஸ்பெக்டரோட ஜீப்பு ஒன்னு அந்த பக்கமா வந்துச்சு. அதைப் பாத்ததும் நாங்க எல்லாரும் ஓட்டம் பிடிச்சிட்டோம். ஆனால், அவரோ மசூதிக்குப் பக்கத்தாப்புல வண்டியை நிப்பாட்டிட்டு, ‘வாங்கடா, ஆரம்பிச்ச வேலைய முடிங்கடா’ என்று எங்களைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.” நினைவுகூர்ந்தான் குனால்.

அவ்வப்போது வருகின்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த செய்திகள், ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல்கள் ஆகியவற்றின் போது குனால் போன்ற நபர்கள் நம் பார்வைக்கு வந்து பின் மறைந்து விடுகிறார்கள். நாமும் இவர்களையெல்லாம் முக்கியத்துவமற்ற விளிம்புநிலை உதிரிகளாகக் கருதி கடந்து செல்கிறோம்.

ஆனால், கொலை, கொள்ளை, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடும் இந்த நபர்கள், அத்தகைய நடவடிக்கைகள் முடிந்த பின் மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள்? கலவரங்கள் ஓய்ந்த பின், கும்பல் வன்முறைக்குப் பின், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குப் பின் நாம் சவுகரியமாக எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம்.

மிகையான வன்முறைகள் நிகழும் கணப் பொழுதுகளில்தான் இந்த உதிரிகள் நம் கண்ணில் தென்படுகிறார்கள். ஆனால், இந்த உதிரி என்று நாம் கருதுவது வெறும் உதிரி அல்ல. அதற்குள் இந்து மேலாதிக்கம் என்கிற உலகக் கண்ணோட்டமும் இருக்கிறது.

அது சாமானிய மக்களது அச்சத்தின் எதிரொலிப்பாகவும், இளைஞர்களின் ஆம்பிளைத் திமிருக்கு தீனிபோடுவதாகவும், அரசு அதிகாரத்தைக் கையாள்வதற்கான கருவியாகவும், அண்டை அயலார் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான சுலபமான வழியாகவும் இருக்கிறது.

கட்டை குட்டையான தேகம், உருளை போன்ற மார்பு, முண்டா புரளும் கைகள், சின்னஞ்சிறு காதுகள், தொங்கும் தலைமுடி இதுதான் குனாலின் தோற்றம்.

பெரும்பாலும் மாலை வேளைகளில் அவன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தனது பசங்களுடன் உட்கார்ந்திருப்பான். பசங்க எல்லோரும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள். ராஜ் இரவு ஷிஃப்டில் செக்யூரிட்டி வேலை செய்கிறான்; அஜய் கோர்ட்டுக்கு வெளியே சாமி படங்கள் விற்கிறான்; சஞ்சய் தள்ளு வண்டியில் தின்பண்டங்கள் விற்கிறான். அந்தக் கூட்டத்தில் ஜெய் தான் அதிகம் படித்தவன். அவன் அக்கவுண்டன்சி மாணவன், – வயது 22.

una gujarat attackஅந்தத் தெருவில் யாரும் குனாலின் வீட்டைச் சட்டென்று அடையாளம் காண முடியும். சிவப்பு நிறத்தில் திரிசூலமும், ஜெய் ஸ்ரீராம் என்ற எழுத்தும் இருக்கிற ஒரே வீடு அதுதான். அப்புறம், அழுக்குப்படிந்த ஒரு கட்டில், அதில் தான் அவரது பெற்றோர் நாள் பூராவும் உட்கார்ந்திருப்பார்கள்;

சூரிய வெளிச்சமே இல்லாத இருளடைந்த அவனது ஒற்றை அறைக் குடிசையின் உடைந்த ஜன்னல்கள்; மற்றபடி அண்டை வீட்டுக்காரர்களின் கந்தல் துணிகளும் தொங்குகின்றன. அவன் வீட்டைச் சுற்றிக் குடியிருக்கும் தலித்துகள் மிகவும் கீழ்த்தரமானவர்களாம். அவன் ராஜஸ்தானிலிருந்து வந்திருக்கும் ராஜபுத் சாதிக்காரனாம்.

“அவங்களெல்லாம் கீழ்ச்சாதி. அவங்க வீட்டுக் கல்யாணங்காட்சிக்கு எங்களைக் கூப்பிட்டா நாங்க போகமாட்டோம். அவங்களோட உட்கார்ந்து சாப்பிடுறதா? அவங்க வீட்டில் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்” என்கிறான் குனால்.

முஸ்லீம் இளைஞர்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பாற்றுவது, பசுக்களைக் காப்பாற்றுகிறோம் என்று முஸ்லீம் குடியிருப்புகளில் சோதனை போடுவது, சினிமாக்களைக் கண்டித்து திரை அரங்குகளைச் சூறையாடுவது போன்ற காரியங்களுக்காகத் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் குனாலையும் அவன் கூட்டத்தை சேர்ந்த பசங்களையும் 2010-ஆம் ஆண்டு முதற்கொண்டே நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

மசூதிகளைக் கொளுத்துபவர்கள் பெருந்தலைகள் அல்ல. இது போன்ற சில்லுண்டிகள்தான். இந்தச் சில்லுண்டிகளுக்கு போலீசு தொல்லையில்லாமல் பார்த்துக்கொள்வதுதான் பெருந்தலைகளின் வேலை.

மாலை நேரம். ஓர் இந்துத் தம்பதியர் குனாலை வந்து பார்க்கிறார்கள். தங்களுக்கு எதிராகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் (அவர்களும் இந்துக்கள்தான்) போலீசில் புகார் கொடுத்திருப்பதாக குனாலிடம் சொல்கிறார்கள். ஏதோ மாடிப்படி தொடர்பான சச்சரவு.

குனால் அவர்களுடன் போலீசு நிலையத்திற்குப் போகிறான். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எதிராக ஒரு புகாரைப் பதிவு செய்ய உதவுகிறான். “கவலைப்படாதீங்க, மேற்கொண்டு தொந்தரவு கொடுத்தா, அவங்கள வெளியே இழுத்துப்போட்டு கவனிச்சுடுவோம்” என்று சொல்லி அனுப்புகிறான்.

bombay hindu goons attackஇந்துத்துவ அமைப்புகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, அதனைத் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மையே. ஆனால், குனால் போன்ற இளைஞர்களைப் பொருத்தவரை இந்த இந்துத்துவ அமைப்புகள் வேறு பல விதங்களில் அவர்களுக்குப் பயனுள்ளவையாக உள்ளன.

ஒரு நிச்சயமான வேலை அல்லது சமூக, பொருளாதார நிலைமையில் ஏதோ ஒரு முன்னேற்றம் என்று எந்த ஒரு வெளிச்சத்தையும் காணமுடியாத வாழ்க்கை இவர்களுடையது. இத்தகைய பரிதாபகரமான அன்றாட வாழ்க்கைச் சூழலில் கிடந்து உழலும் ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களது நிச்சயமற்ற அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மிகப் பெரியதும், பிரம்மாண்டமானதுமான ஒன்றின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்று உணர்வதற்கான வாய்ப்பை இந்த அமைப்புகள் வழங்குகின்றன.

அது அதிகாரம் மிக்க அரசு அலுவலர்கள், காவல் துறை போன்ற அரசு அமைப்புகளில் இவர்களுக்குச் செல்வாக்கைத் தேடித் தருகிறது; பலமும் அதிகாரமும் கொண்ட ஆம்பிளையாக உணர வைக்கிறது. ஏதோ ஒன்றை அழித்து நாசமாக்கவும், இன்னொன்றைக் காப்பாற்றவும் வாய்ப்பளிக்கிறது.

“என்ன வேலை செய்கிறாய்?” என்று ஒரு நாள் நான் குனாலிடம் கேட்டேன். அவன் பேச்சை மாற்ற முயற்சித்தான். பிறகு, “துணி வியாபாரம் செய்கிறேன். மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறேன்” என்றான். ஒருநாள் குனால் இல்லாதபோது அவனுடைய சகோதரன் சொன்னது முற்றிலும் வேறாக இருந்தது.

குனால் பெண்களுக்கான பின்னலாடைகளைத் தலைச்சுமையாக எடுத்துச் சென்று வீடுவீடாக விற்பனை செய்கிறானாம். ஒருநாள் என் செல்போன் எண்ணை குனால் கேட்டான். அதைத் தனது கைபேசியில் சேமித்துக் கொள்ளும் அளவுக்குக் கூடக் கல்வியறிவு அவனுக்கு இல்லை. முறையான கல்வியோ, தொழிற்திறமையோ இல்லாத நிலையில், அலுவலக வேலை அல்லது தொழிற்சாலை வேலை எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.

muzaffarpur attackஅகமதாபாத்தின் மிகப் பெரிய முறைசாரா உதிரித் தொழிலாளிகள் கூட்டத்தில் ஒருவனாக உழல்கிறான் குனால். அவரது தந்தை ஓமெக்ஸ் மில்லில் வேலை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து குஜராத்துக்குக் குடிபெயர்ந்தவர். ஆனால், அந்த மில்லும் நெடுங்காலத்துக்கு முன்பே இழுத்து மூடப்பட்டுவிட்டது.

உயர்தர ஆடைகள், அதிநவீன கைபேசிகள், கை நிறைய சம்பளம் என அகமதாபாத் வாசிகள் அனுபவித்துக் கொண்டிருக்க, குனாலும் அவனது பசங்களும் மோசமான இந்துக்களிடமிருந்தும், துரோகிகளான முஸ்லீம்களிடமிருந்தும் இந்துத்துவத்தைக் காத்து நிற்கும் பெருமித உணர்வில் மிதக்கிறார்கள்.

“நாங்க வி.எச்.பி. ஆளுங்க, வெறியனுங்கன்னு தெரியாத ஒரு முஸ்லீம் கூட இந்த ஏரியாவுலயே கிடையாது.”

வெறியன் என்று அழைக்கப்படுவது குஜராத்தில் அவமானம் கிடையாது. அது ஒரு கெத்து.

தங்கள் வழியில் குறுக்கிடுபவர்களை மிரட்டிப் பணிய வைத்து இப்படி ஒரு பெயரை அவர்கள் சம்பாதித்திருக்கிறார்கள். தன் வீட்டை ஒட்டிக் கோயில் கட்டுவதை எதிர்த்து போலீசைக் கூப்பிடுவேன் என்று சொல்பவன் ஒரு இந்துவாக இருந்தாலும் சரி, உடனே குனால் தன் பசங்களுடன் அங்கே போய் எதிர்ப்பு தெரிவிப்பவனை அடித்து நொறுக்குவான்.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு சட்டவிரோதக் கோயிலை நகராட்சிக்காரர்கள் இடித்தால், குனால் தன் பசங்களுடன் அங்கே போய் எதிர்ப்பு தெரிவிப்பான். “போலீசு வரும். மறுபடி கோயிலை கட்டிக்கொள். செய்வதை ராத்திரி நேரத்தில் செய்” என்று ஆலோசனை சொல்லும். இவர்கள் இன்னும் பெரிய கோயிலாகக் கட்டுவார்கள்.

சுற்றுவட்டாரத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் சொந்த வீடு வாங்கி குடியேறினால், குனாலுக்கு அது ரொம்பவும் அபாயகரமானதாகத் தெரியும். அவர்கள் வீட்டு பால்கனியில் குப்பையைப் போடுமாறு அண்டை வீட்டுக்காரர்களை குனால் தூண்டி விடுவான்.

இப்படித்தான் அவங்க வெளியில காயப்போட்டிருந்த சில துணிகளை பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி கொளுத்திவிட்டாள். அதுக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு காட்டினார்கள். “நான் உடனே போலீசைக் கூப்பிட்டேன். ஒரு கலவரம் வராம இருக்கணும்னா சீக்கிரமா வாங்கன்னு மிரட்டி விட்டேன்” என்கிறான் குனால்.

குனாலையும் அவனது பசங்களையும் பொருத்தவரை, போலீசை தங்கள் சவுகரியத்துக்கு வளைத்துக் கொள்ள முடியும், தங்களுடைய இந்து மேலாதிக்கத் திட்டத்துக்கு ஏற்ப அவர்களை மறுவார்ப்பு செய்து கொள்ளமுடியும் என்பதே அவர்கள் கருத்து. போலீசை பேசிக் கரைப்பார்கள், சக இந்துவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள் அல்லது அரசியல் தொடர்புகள் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.

ஜெய் அமைதியான, மூக்குக் கண்ணாடி அணிந்த 22 வயது இளைஞன். அவனைப் பார்த்தால், நள்ளிரவில் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு கேமெராவுடன் திருட்டுத்தனமாக ஒரு இறைச்சிக்கூடத்தில் நுழைந்திருப்பான் என்று கற்பனைகூட செய்ய முடியாது. அந்தப் பையன்கள் அவனது வீரப்பிரதாபங்களை எனக்கு எடுத்துச் சொல்லியபோது, பீடா குதப்பி உப்பிய வாயிலிருந்து சிகப்புச் சாறு வழியச் சிரிக்கிறான் ஜெய்.

பக்ரீத்துக்கு முன்னால் இந்தப் பையன்கள் ஒரு கும்பலாகத் திரண்டு பசுக்கன்றுகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அக்கம்பக்கத்து முஸ்லீம் வீடுகளில் பலாத்காரமாக நுழைகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் மட்டும் தனியாகச் செய்வதில்லை.

“இப்படி ரெய்டு பண்ணும்போது நாங்க போலீசு கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டபடி இருப்போம்.”

“ஆனால், இதெல்லாம் ஆபத்தான நடவடிக்கைகள் இல்லையா?”

“ஆமா. ஆனா, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்குதே. போலீசு எங்களுக்கு முழு சப்போர்ட். நாங்க பஜ்ரங் தள் ஆளுங்க, அதான் இப்படி வேலை செய்யிறோம்னு அவங்களுக்குத் தெரியும்” என்கிறான் குனால்.

gujarat 2002 riotsகுனாலின் மனவெளி அச்சமும் சாகசங்களும் கலந்த ஒரு வித்தியாசமான கலவை. இஸ்லாமியப் பெண்கள் உங்களைக் காதலிக்கும்படிச் செய்து, பின் அவர்களை இந்துவாக மாற்றுங்கள் என்று அந்தப் பெண்களை வளைத்துப்போட தன் பசங்களுக்கு வழி சொல்கிறான் குனால். அதெல்லாம் எப்படி முடியும் என்று நான் கேட்டவுடன், அவன் தங்கள் திட்டத்தை விவரிக்கிறான். மட்டமான ஒரு இந்திப்பட சீன் மாதிரி அது விரிகிறது.

“நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் பெண்ணை பார்க்கிறே. அப்படியே ஒரு லுக்கு வுடணும், அதுல அவ சொக்கிப்போய் லவ் பண்ண ஆரம்பிச்சுடணும். அப்புறம் அவள இந்துவா மாத்திடணும். என்ன புரியுதா?” என்று விளக்குகிறான் குனால்.

குனாலையும் அவனுடைய பசங்களையும் இந்து தேசியவாதம் அல்லது இன்றைய இந்திய அரசியலின் விதிவிலக்குகள் என்று நாம் எண்ணினால் அது தவறு. இந்து மேலாதிக்கம் என்பதைச் சமூகத்தின் மைய நீரோட்டப் போக்காக மாற்றுவதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் வலதுசாரி இந்து அமைப்புகளின் வளர்ந்து வரும் வலைப்பின்னலின் அங்கம்தான் இந்த இளைஞர்கள்.

2016- ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் நான் குனாலுடன் அவரது வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது குனாலைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரைக் குனாலுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்கு குனாலுடைய உதவி தேவைப்பட்டது. இவரது வீட்டுக்கும் பக்கத்து மசூதிக்கும் இடையே இருவருக்கும் பொதுவான சுவர் இருந்திருக்கிறது. மசூதி நிர்வாகிகள் இவரது சம்மதம் இல்லாமல் அந்த சுவரின் உயரத்தை அதிகரித்திருக்கிறார்கள், அதன் போக்கில் இவரது வீட்டுத் தகரக் கூரையின் ஒரு பகுதியையும் வெட்டியிருக்கிறார்கள்.

என் வீட்டு சுவர், மண் சுவர். இப்புடி பண்ணினா, நான் உள்ளே இருக்கும்போது சுவர் இடிஞ்சு விழுந்துச்சுன்னா என்ன ஆகும்?” என்று பொங்கினார் அந்த மனிதர்.

“இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் உடனே தலையிடனும். ஏன்னா, இங்கே முஸ்லீம்களால ஒரு ஏழை இந்து கொடுமைப்படுத்தப்படுகிறார்” என்று சொன்னான் குனால்.

அந்த மனிதர் ஆமோதிக்கும் வகையில் அமைதியாகத் தலையசைத்தார். “நான் அவங்க கிட்ட பேசறேன். அவங்க சரிப்பட்டு வரலைன்னா போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடுவோம்” என்று குனால் சொன்னதைக் கேட்டபடி தனது வீட்டை நோக்கி நடந்தார் அந்த மனிதர்.

அவருடைய வீடு, 2002 குனால் கொளுத்திய அதே மசூதியை ஒட்டிய வீடு.

-புதிய ஜனநாயகம், மே 2018