மெக்சிகோவின் அதிகார வர்க்கத்தையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் கடுமையாக எதிர்த்து வந்த பத்திரிகையாளரான ஜுவான் கார்லோஸ் ஹூர்ட்டா (Juan Carlos Huerta) அரசியல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சக பத்திரிகையாளர் ஒருவரின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வியாகர்மொசாவிலிருக்கும் தனது வீட்டிலிருந்து செல்லும் போதுதான் இந்தப் படுகொலை நடந்தள்ளது.

இது வெறுமனே கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலையல்ல என்றும் பத்திரிகையாளர் என்ற முறையில் ஹூர்ட்டாவின் செயல்பாட்டிற்காகவே நடந்துள்ள படுகொலை என்றும் டபாஸ்கோ மாநில ஆளுநர் ஆர்துரா நூன்யெஸ் (Arturo Núñez) கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் ஹூர்ட்டா

ஹூர்ட்டா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். மேலும் டபாஸ்கோவில்(Tabasco) ஒரு வானொலி நிலையத்தின் இயக்குனராகவும் செயலாற்றி வந்தார். சினலோவாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான சேவியர் வால்டேஸ் (Javier Valdez) படுகொலை செய்யப்பட்டதன் முதலாமாண்டு நினைவுநாள் கூட்டத்தில்தான் ஹூர்ட்டா பங்கேற்கச் சென்றிருக்கிறார்.

சினலோவா மாநிலத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் முறைகேடுகளை சேவியர் வால்டேஸ் தொடங்கிய ரையோடோஸ் (Ríodoce) என்ற வார இதழ் பயமின்றி அம்பலப்படுத்தியது.

பிரபலமான போதைப்பொருள் கும்பலின் தலைவனான ஜோகீன் எல் சாப்போ கஸ்மன் (Joaquín “El Chapo” Guzman) 2014-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது கார்டெலைக் கைப்பற்றுவதற்கான சண்டைகளுக்கு மத்தியில், ரியோடோஸ் நிறுவனம் கடும் தாக்குதலுக்குள்ளானது. தொடர்ந்து 2017, மே 15-ஆம் நாள் பட்டப்பகலில் சேவியர் வால்டேஸ், காரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு 12 முறை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சேவியர் வால்டேஸின் புகைப்படத்தோடு போராட்டம் நடத்தும் பத்திரிகையாளர்கள்

வால்டேசைப் படுகொலை செய்த கும்பலை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மெக்சிகோவின் பத்திரிகையாளர் படுகொலை வரலாற்றில் அரிதினும் அரிதான நிகழ்வு. ஏனெனில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பத்திரிகையாளர் படுகொலைகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.

பத்திரிகையாளராக பணிபுரிவதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. அமெரிக்கா, இரசிய வல்லாதிக்கங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களால் சின்னாப்பின்னபட்டுக் கொண்டிருக்கும் சிரியாவில் தான் உலகிலேயே அதிக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர்.

வால்டேஸின் படுகொலைக்குப் பிறகு இதுவரை ஹூர்ட்டா உள்ளிட்ட 10 பத்திரிகையாளர்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருகின்றனர் என்று பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (Committee to Protect Journalists) கூறியுள்ளது. மேலும் குற்றங்களை வெளிக்கொண்டு வந்ததால்தான் அதில் இரண்டு கொலைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும் மேலும் குற்றவாளிகளை தண்டிக்காமல் விடுவது மேலும் குற்றங்கள் அதிகரிப்பதற்கு நல்வாய்ப்பாக அமைவதாக அது கூறியுள்ளது.

பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது, பாலியல் வல்லுறவு செய்வது, கடத்துவது, படுகொலை செய்வது என்று அவர்களை இயங்கவிடாமல் நாடெங்கும் துரத்தியடித்து கொண்டிருக்கின்றன போதைப்பொருள் கும்பல்கள்.

எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு வெளியிட்ட உலக ஊடக சுதந்திர (World Press Freedom index) அட்டவணையின் படி மெக்சிகோ இரசியாவிற்கு அடுத்து 147-ஆவது இடத்தில் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் சிரியாவிற்கு சமமாக 12 பத்திரிகையாளர்கள் அங்குப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக மெக்சிகோ ராணுவமயப்பட்ட போரைத் தொடங்கிய பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு மெக்சிகோ கல்லறையாகிவிட்டது.

போதைப் பொருள் கடத்தல் மாஃபியா தலைவன் ஜோகீன் எல் சாப்போ கஸ்மன்

பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது, பாலியல் வல்லுறவு செய்வது, கடத்துவது, படுகொலை செய்வது என்று அவர்களை இயங்கவிடாமல் நாடெங்கும் துரத்தியடித்து கொண்டிருக்கின்றன போதைப்பொருள் கும்பல்கள். அக்குற்ற கும்பல்களை தண்டிக்காமல் அவர்களிடம் பொருளாதார பலன்களை அடைந்து அடிபணிந்து கிடக்கிறது மெக்சிகோவை ஆளும் அதிகார வர்க்க கும்பல்.

தங்களைப் பாதுகாத்து கொள்வதற்காகவே அவர்கள் குற்றங்களை அம்பலப்படுத்துவதில்லை என்று டபாஸ்கோவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு பத்திரிகையாளர்கள் கூறினர். குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்க உள்ளூர் அரசாங்கங்கள் மூலம் அழுத்தம் தரப்படுவதாக மோதல் பகுதிகளில் பணியாற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறினர்.

மாநிலத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை அம்பலப்படுத்தாமல் இருக்க அரசு அழுத்தம் கொடுப்பது தெரிந்ததுதான் என்றாலும் டபாஸ்கோவில் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கத்திற்கு மாறானது என்று ’ஆள் கடத்தல் எதிர்ப்பு தன்னார்வ நிறுவனம்’ ஒன்றின் தலைவரான ஜெரார்டோ பிரியகோ கூறினார்.

“அரசு செய்ய விரும்பும் மோசமான குற்றங்களை சட்டவிரோதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்” என்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்புக்குழுவின் முன்னாள் தலைவரான பிரீகோ கூறினார். குற்ற கும்பல்களால் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடக்கும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைகளில் அரசியல்வாதிகளின் பங்கு நேரடியாக இல்லாமல் இருப்பது அரசுக்கு மேலும் வசதியாக இருப்பதாக அவர் கூறினார்.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க
They went to execute him’: fourth Mexican journalist killed so far in 2018

1 மறுமொழி

Leave a Reply to மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் ! | Tamil Journalism பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க