privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஇந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை !

இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை !

கோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன?

-

வெற்றிவேல்.
மண்வெட்டியோடு தந்தையுடன் செல்லும் சிறுவன் பெயர் வெற்றிவேல். சேலம் மாவட்டத்தில் 6-ஆவது படித்துக் கொண்டிருக்கிறான். கட்டிட வேலை செய்யும் தந்தையைப் பார்க்க கோடை விடுமுறையில் தனது அம்மாவோடு சென்னை வந்துள்ளான்.

விடுமுறை என்றால் ஊட்டி, கொடைக்கானல், பீச், பார்க் என்று ஊடகம் கட்டியமைக்கும் சுற்றுலா மேனியா மத்தியில் ஒரு தொழிலாளியின் மகனுக்கு, தனது தந்தையோடு இருப்பதே பொழுதுபோக்கு, வேலைகளுக்கு உதவுவதே மகிழ்ச்சி!

அர்ஜூன்.
பெயிண்ட் டப்பாவோடு வருகிறான் அந்தச் சிறுவன். பெயிண்ட் சிதறிய ஆடை, அழுக்குப் படிந்த முகம். காலை 7 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டான் அர்ஜூன். குன்றத்துரில் உள்ள சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆவது படித்துக்கொண்டிருக்கிறான்.

“எங்கூட படிக்கிற பசங்களெல்லாம் கிரிக்கெட் விளையாட கௌம்பிட்டாங்க. எனக்குக்கூட கிரிக்கெட் புடிக்கும், கபடி வெளையாடுவேன். பக்கத்துல இருக்குற முந்திரி தோப்புக்கு போயி மரம் ஏறி குதிச்சு வெளையாடுவோம்.  ஆனா, இப்ப எனக்கு வெளையாட புடிக்கல, வேலைக்கு வந்துட்டேன்.

அப்பா மாதா காலேஜ்ல டிரைவரா இருக்காரு. அம்மா வீட்டுலதான் இருக்காங்க. ஸ்கூல் லீவுல ஏதாவது வேலை செய்யலாமுன்னு பெயின்டிங் வேலைக்கு வந்திருக்கேன். இங்கே வேன், லாரிகள சுத்தம்பன்னி பெயின்ட் அடிக்கிற வேல. ஸ்கூல் தெறக்குற வரைக்கும் வந்து போவேன்.

வேலைக்கு சேந்த கொஞ்ச நாளா இத எடு, அத எடு, டீ வாங்கி வான்னு எடுபுடி வேலையா கொடுப்பாங்க. பக்கத்துல கெடக்குற பெயின்ட் டப்பாவைக்கூட எங்கேயோ நிக்கிற என்ன கூப்பிட்டு எடுக்கச் சொல்வாங்க. ஆனா, இப்ப டயருக்கு பெயின்ட் அடிக்க கத்துக்கிட்டேன். ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளமுன்னு சொல்லியிருக்காங்க. இதுவரைக்கும் சம்பளம் ஏதும் வாங்கல. சேத்துக் கொடுத்தாங்கன்னா மொத்தமா எங்க அம்மாகிட்ட கொடுப்பேன்.’’

சிரித்துக்கொண்டே கூறிய அர்ஜூனின் முகத்தில், ஒரு வேலையைக் கற்றுக்கொண்ட பெருமை பளிச்சிட்டது. படிப்பு கொடுக்காத தன்னம்பிக்கையை அந்த உழைப்பு கொடுத்திருக்கிறது.

விஷால்.
குன்றத்தூர் சேக்கிழார் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவன் விஷால். கோடை விடுமுறையில் குன்றத்துர் அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடையில் வேலை செய்கிறான்.

கடை திறந்ததும் சுத்தம் செய்வது, வெங்காயம் நறுக்குவது, ஜூஸ் கலக்கி வைப்பது, பார்சல் ஆர்டரை எடுத்துச் செல்வது… இப்படி கடையின் மொத்த வேலையையுமே லாவகமாகவும் வேகமாகவும் செய்து முடிப்பதால், வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கடையின் செல்லப் பிள்ளையாகிவிட்டான்.

ஏன் வேலைக்கு சேந்த? – என்று கேட்டதுமே,

“இப்ப கெவர்ன்மென்ட் ஸ்கூல்ல பதினொன்னாவதயும் பப்ளிக் எக்சாம் ஆக்கிட்டாங்க. டியூசன் சேந்தாத்தானே நல்லா மார்க் வாங்க முடியும். பீஸ் கட்ட காசு வேணுமே. கம்பெனில அப்பா செக்யூரிட்டியா இருக்காரு. டியூசனுக்கெல்லாம் காசு கேக்க முடியாது, அதான் வேலைக்கு வந்துட்டேன். இப்ப மட்டுமில்ல, பத்தாவதே வேலைக்கு சேந்துதான் பாஸ் பன்னினேன்.” என்றான்.

படிக்க முடியில்லை என்று இவர்கள் மீது பரிதாபப்படுவதா? இல்லை இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழவும், போராடவும் கற்றுக் கொள்கிறார்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.