தூசியாகவும் வறண்டும், ஈவிரக்கமில்லாமலும் தோற்றமளிக்கும் ஜோர்டானின் பாலைவனம் தான் உயிர் தப்பி ஓடி வந்த சுமார் 80,000 சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறது.

நான்கு தலைமுறையினரின் கதைகளுடன் குழந்தைகள் அங்கே வளர்கிறார்கள். இழப்பதற்கு ஏதுமில்லை ஆனால் அடைவதற்கோ உலகத்தையே கொண்டுள்ள அந்த இளம் தலைமுறையினர் அக்கூண்டு வாழ்க்கைக்குள் அடைபட்டுக்கிடக்கின்றனர். அவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

ஏகாதிபத்தியங்களின் போர்ச்சக்கரத்தில் இழந்த பழைய வாழ்க்கையை மீண்டும் அடைவதற்கான அவர்களின் போராட்டம் தொடங்கிவிட்டது. இதோ அவற்றில் சில காட்சிகள்.

ஜோர்டானின் நான்காவது பெரிய நகரமாகி வரும் சாடாரி(Zaatari ) அதிகபடியாக 1,50,000 சிரிய அகதிகளுக்கு இடம் கொடுத்துள்ளது. தற்போது 79,000 அகதிகள் அங்கே உள்ளனர். 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அந்த முகாம் சிரியாவின் எல்லையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சாடாரி முகாமில் உள்ள முதன்மையான வீதிக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ்பெற்ற வீதியான சாம்பஸ்-எலிஸேஸின் (Champs-Elysees) பெயர் புனைப்பெயராக வைக்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருட்கள், சிறிய ஃபிளாபல்(falafel) உணவகங்கள் மற்றும் திருமண ஆடையகங்கள் ஆகியவற்றால் நிரம்பிய இச்சாலை மீண்டெழும் சிரிய அகதிகள் மற்றும் முகாமின் தொழில் முனைவோர்களுக்கான அடையாளமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 3,000 கடைகளை சாடாரியின் இந்த முறைசாரா சந்தை கொண்டுள்ளது.

அலியும் (இடப்புறம்) யூசுபும் உடன் பிறந்தவர்கள். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடமிருந்து முடித்திருத்தும் தொழிலைக் கற்றுக்கொண்ட 20 வயதான அலி பின்னர் சொந்தமாக கடையைத் தொடங்கினார்.

அலி, தன்னுடைய முடித்திருத்தும் கடையில் வேலை செய்யும் காட்சி. ஒருநாள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி தன்னுடைய குடும்பத்துடன் சேரவும் அங்கே ஒரு முடி திருத்தும் கடையை தொடங்கவும் அலி நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

நிஸ்ரீனும் (இடப்புறம்) நாஜட்டும் சிறந்த நண்பர்கள். சாடாரி முகாமில் சந்தித்த இருவருக்குமே 16 வயதாகிறது.

தன்னுடைய கொள்ளுத் தாத்தாவுடன் வீட்டிற்கு வெளியே சிரித்து மகிழ்கிறார் நாஜட். அவர்கள் சிரியாவின் தராவிலிருந்து 2012-ம் ஆண்டில் சாடாரி முகாமிற்கு தஞ்சம் அடையும் போது அவருக்கு வயது 11. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது, ஒரு மருந்தாளுனராக வேண்டும் என்பது அவரது கனவு. அதன் மூலம் சிரியாவை மீட்டுருவாக்க தன்னுடைய அத்தனை உழைப்பையும் நல்க முடியும் என்று நம்புகிறார்.

16 வயதான தபாரக் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இம்முகாமிற்கு வந்து சேர்ந்தார். “இங்கு நாங்கள் வருவதற்கு முன் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்ததில்லை. இங்கு நாங்கள் கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். – ஆனால் சிரியாவில், பால்கனி மற்றும் நான்கு அறைகள் கொண்ட எங்களது பழைய பெரிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இங்கே…. நாங்கள் பழகிவிட்டோம். தற்போது இரண்டு அறைகள் கொண்ட ஒரு கூண்டு வீட்டில் வாழ்கிறோம்” என்கிறார்.

தபாரக் தன்னுடைய குடும்பத்துடன் மதிய உணவை பரிமாறிக் கொள்ளும் காட்சி. “ஜோர்டானுக்கு செல்லப்போகிறோம் என்று எனது பெற்றோர் கூறியவுடன் வேறொரு கட்டிடத்திற்கு தான் செல்கிறோம் என்று நினைத்தேன். ஆனால் இங்கே வந்தப்பிறகு தான் எங்களது வீடு பல பேர் வசிக்கும் பெரிய கூடாரம் என்று தெரிந்தது” என்று கூறுகிறார்.

சிரிய இளந்தலைமுறையினர் அம்முகாமிலேயே வளர்ந்து வருகிறார்கள். அங்கே 57 விழுக்காட்டினர் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும் 20 விழுக்காட்டினர் 5 வயதிற்குட்பட்டவர்கள்.

சிரிய இளைஞனான முகம்மதுவின் கூடாரம் இது. சாடாரியில் வசிக்கும் பெரும்பான்மையினரது வீடுகளுக்கு வெளியே தோட்டங்களும் உலோக தகடுகளாலான வரவேற்பறையும் இருக்கின்றன.

16 வயதாகும் யூசுப் கால்பந்து விளையாட்டை நேசிக்கிறார் மேலும் விளையாட்டுத்துறையில் பத்திரிக்கையாளராக விரும்புகிறார்.

அபு தலால், தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சாடாரியில் வசிக்கிறார். அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையேயான சுவர் வரைக்கும் தன்னுடைய கூண்டு வீட்டை பெரிதாக்கியுள்ளார். [சில] ஆண்டுகளாக காய்கறி தோட்டத்தை உருவாக்கி அங்கே புறாக்கள், வாத்துக்கள் மற்றும் ஒரு அழகிய நீரூற்றையும் பராமரிக்கிறார்.

நன்றி : அல்ஜசீரா

2 மறுமொழிகள்

  1. அகதிகளின் வாழ்நிலை பற்றியும் அவர்களின் கனவுகள் பற்றியுமான சித்தரிப்பு அபாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க