டசென்னை ஆர்.கே நகரில் இருக்கும் அண்ணா நகர், எழில் நகர் என பார்க்கும் இடமெல்லாம் பட்டறைத் தொழில் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வீட்டுக்கு பயன்படும் எவர் சில்லவர் சமையல் சாமான்கள், பாத்திரங்கள் உருவாகும் மையம் இது.

ரவி சிறு பட்டறை உரிமையாளர். இவரிடம் இருபதுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு வடிதட்டு, சாப்பாடு தட்டு, அன்னக்கூடை சாம்பார் வாளி, தண்ணீர் ஜக்கு, சொம்பு, குடம், அண்டா என்று கல்யாண சீர்வரிசைக்கு தேவையான எல்லா பொருட்களும் செய்கிறார்கள். இங்கு உள்ள பட்டறைத்தொழில், சிறுஉரிமையாளர்களுக்கு முதலாளிகள் சென்னை சவுகார்பேட்டையில் இருக்கும் மார்வாடிகள். அவர்களிடம் தான் இவர்கள் பொருட்கள் செய்வதற்கு தேவையான சில்வர் தகடுகளையும் ஆர்டர்களையும் பெறுகிறார்கள்.

ஒரு கிலோ தகடு அதனுடையை தரத்துக்கேற்ப 110 லிருந்து 150 ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஒரு கிலோ எடையுள்ள பாத்திரங்களை செய்து கொடுத்தால் செய்கூலி 44 ரூபாய் பெறுகிறார்கள். இந்த நாற்பத்தி நான்கு ரூபாயில் தான் தகடுகளை கண்ணைப் பறிக்கும் எவர்சில்வர் பாத்திரங்களாக மாற்றித் தருகிரார்கள்.

தகடுகளை அதன் பொருட்களுக்கு ஏற்ற வடிவில் அளவெடுத்து வெட்டுவது, கட்டிங் செக்சனின் வேலை. அதன் பிறகு மோல்டிங் முறையில் சொம்பாகவோ, வாளியாகவோ மாற்றுகிறார்கள்.

பிறகு ஆர்க் வெல்டிங் மூலம் மடித்ததை இணைத்து வெட்டுகிறார்கள். அதில் அடிப்பாகம் தலைப்பாகம் என்று நுணுக்கமாக உருவாக்குகிறார்கள். உருவான பாத்திரத்தில் இருக்கும் சிறு சிறு மேடு பள்ளங்களை டிங்கரிங் மூலம் சமன் செய்து வழு வழு பாத்திரமாக மாற்றுகிறார்கள்.

கடைசியில் அதை இரண்டு வேதியியல் முறையில் பாலிஷ் செய்து பளபளப்பாக்குகிறார்கள். அதன்பிறகே நாம் கடையில் பார்க்கும் எவர்சில்வர் பாத்திரங்களாக அவை மாறுகின்றது. இதில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுவாச நோய்கள், தோல் அரிப்புகள், கால் மூட்டு, இடுப்பு வலி என்று நடமாடும் நோயாளிகளாக உயிர் வாழ்கிறார்கள்.

இதில் வேலை செய்யும் பாதிப் பேர் பத்து வயதில் வேலைக்கு வந்தவர்கள். “கூலி வேலை செய்யும் எங்கள் பெற்றோர்களும் வேறு வழியில்லாமல் பொறுக்கியாக மாறாமல் வேலை செய்து பிழைக்கிறானே” என்று விட்டு விட்டார்கள் என்று புன்னகையுடன் சொல்கிறார்கள்.

இந்த வேலையில் பீஸ் ரேட்டும் உண்டு நாள் கூலியும் உண்டு. எப்படி பார்த்தாலும் நாள் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய்க்கு மேல் கிடைக்காது. இதற்கே காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை தலை நிமிராமல் வேலை செய்ய வேண்டும். லீவு எடுத்தால் கூலி கிடையாது. பெரும்பாலும் காற்றே இல்லாத தகர கொட்டகையில் தான் இவர்களுக்கு வேலை!

பாலிசுக்காக உபயோகப்படுத்தும் வேதிப்பொருட்களின் நெடியும் அரிப்பும், வெல்டிங் மோல்டிங் டிங்கரில் கரும்புகையாக மாறும் தகடு தூளும் நிரம்பிய இச்சூழலில் ஐந்து நிமிடம் கூட நம்மால் அங்கு நிற்க முடியவில்லை. ஆனால் அவர்கள் அங்குதான் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். “பத்து வயதில் சிறுவர்களாக வேலைக்கு வரும் நாங்க நாற்பது வயதில் நடைபிணமாகி நடமாடுகிறோம்” என்கிறார்கள்.

“தினமும் டாஸ்மாக் போகாமல், பான்பராக் போடாமல் இந்த வேலையை செய்ய முடியாது. அதற்கே குறைந்தது நூற்று ஐம்பது ரூபாய் வேண்டும்” என்கிறார்கள்.

இம்மாதிரி இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டறைகள் குவிந்துள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஐந்து முதல் இருபது தொழிலாளர்கள் வரை பணிபுரிகிறார்கள். இப்பட்டறையின் சிறு முதலாளிகளும் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கின்றனர் சோகத்துடன்.

-வினவு புகைப்பட செய்தியாளர்கள்.