பணமதிப்பழிப்பு : 5 நாட்களில் ரூ. 745 கோடி கலெக்சன்

கருத்துப்படம்: வேலன்

பா.ஜ.க ஆதரவு கும்பல்களுக்கு தகவல் கொடுத்த பிறகுதான் மோடி அரசு, இந்திய மக்கள் மீது பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை ஏவியது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில், பணமதிப்பழிப்பு தாக்குதலுக்குப் பிறகு முதல் ஐந்து நாட்களிலேயே அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 745.59 கோடிகள் செலுத்தப்பட்டு இருப்பதை மும்பையை சேர்ந்த மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலப்படுத்தியுள்ளார்.

இராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியிலும் அதே போல 693.19 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மடை மாற்றப்பட்டன என்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வங்கியில் தலைவராக இருக்கும் ஜெயேஷ்பாய் விட்டல்பாய் ரேடடியா தற்போதைய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருப்பவர். மோடி 2001­-ல் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக இராஜ்கோட்டிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து இதன் அரசியல் முக்கியத்துவத்தை அறியலாம்.

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை நாட்டு மக்கள் மீது மோடி ஏவிய ஐந்து நாட்களுக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகள் மூலம் பணம் மாற்றப்படலாம் என்ற காரணம் கூறப்பட்டு அதற்கு மோடி அரசு தடை விதித்ததன் உள்நோக்கத்தை இதோடு சேர்த்து புரிந்து கொண்டால் இந்த மோசடி நாடகம் நன்கு விளங்கும்.

ஏழு பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் மட்டுமே 7.57 இலட்சம் கோடி பணமதிப்பழிக்கப்பட்ட தாள்கள் செலுத்தப்பட்டன. 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் 6,047 கோடியும், 370  மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகளில் 22,271 கோடியும், 39 அஞ்சல் அலுவலகங்களில் 4,408 கோடியும் செலுத்தப்பட்டன என்று அந்த தகவல் கூறுகிறது.

“வெறும் ஏழே பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமே கிட்டத்தட்ட பாதி பழைய தாள்கள் செலுத்தப்பட்டன என்பது மிகவும் கவலைக்குரியது” என்கிறார் மனோரஞ்சன். மேலும், “ஏனைய 14 பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம-நகர வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனில் இது மிகவும் தீவிரமான கேள்வியை எழுப்புகிறது” எனக் கூறியுள்ளார்.

அகமதாபாத் மற்றும் இராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்களில் செலுத்தப்பட்ட பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, குஜராத் தலைமை வங்கியில் செலுத்தப்பட்ட தொகையான 1.1 கோடியை  விட பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட கூட்டுறவு மைய வங்கிகளின் 17 இலட்சம் கணக்குகளில் வெறும் 1.6 இலட்சம் கணக்குகளில் மட்டுமே பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் அந்த 1.6  இலட்சம் கணக்குகளில் 98.66 விழுக்காடு கணக்குகளில் 2.5 இலட்சத்திற்கு குறைவாகவே பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக பார்த்தோமானால் மொத்தக் கணக்குகளில், வெறும் 0.09 விழுக்காடு கணக்குகளில் மட்டுமே 2.5 இலட்சத்திற்கும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் அட்டவணை வணிக வங்கிகளில் ஏழு வங்கிகளின் 29,000 கிளைகளில் இருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டன. இந்திய ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏனைய 14 வங்கிகள் தகவல்கள் அளிக்க மறுத்து விட்டன. இது ஒருபுறமிருக்க இந்த தகவல்களை  வெளியிட்ட ’டைம்ஸ் நவ்’, ’நியூஸ்18’, ’ஃபர்ஸ்ட் போஸ்ட்’ மற்றும் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ’ இணையதளங்கள், ஜூன் 21-ம் தேதி அந்த செய்திகளை எந்த ஒரு காரணமும் சொல்லாமல் நீக்கி விட்டன. இவற்றில் நியூஸ்18 மற்றும் ஃபர்ஸ்ட்போஸ்ட் இரண்டும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானவை. ’டைம்ஸ் நவ்’ பற்றி சொல்லவே தேவையில்லை. அது மோடி, அமித்ஷாவுக்கு சொம்பு தூக்கும் ஊடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

வாய்கிழிய தேசபக்தி குறித்துப் பேசிக்கொண்டு வானளாவ ஊழல்கள் புரிந்து, அதனை அம்பலப்படுத்தும் ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதன் மூலமே வாழ்ந்து வருகிறது சங்கபரிவார காவிக்கும்பல். அதற்கு இச்சம்பவம் ஒரு காத்திரமான உதாரணம்.

-வினவு செய்திப் பிரிவு 

மேலும் படிக்க: