மசாலா: ‘காலா’ படத்தின் தோல்வி அப் படத்தில் நாயகியாக நடித்த ஹூமா குரேஷிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்பதால், ரஜினியின் காதலியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி படம் என்பதால் தென்னிந்தியாவில் வாய்ப்புகள் வரும் என்று நினைத்தார். ஆனால் காலாவின் தோல்வியால் வாய்ப்புகள் வரவில்லையாம்.

மருந்து: காலாவில் ஹுமா குரேஷியின் பாத்திரம் பெண்களின் முன்னோடி பாத்திரம் என்று சில அப்பாவிகள் சொன்ன தத்துவ விளக்கத்தின் கவித்துவ முடிவு இதுதான்! என்ன இருந்தாலும் ரஜினியும், காலாவும் ‘ஆம்பளைதான்’ என்பதற்கு இதை விட என்ன வேண்டும்?

~~~~~~~~~

மசாலா: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்து விட்டு ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கினார். கூடவே 165-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது மனைவியான லதா ரஜினி, மகாராஷ்டிரா சென்றபோது, மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி சார்மிளாவை சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை லதா ரஜினியுடன் பேசியதாக ராஜ் தாக்கரே டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மருந்து: காலாவின் உண்மையான முகம் காவி என்பதை இதற்கு மேலும் ஒத்துக் கொள்ளாதவர்கள் யாருப்பா?

~~~~~~~~~

மசாலா: கடந்த ஜூலை 4ஆம் தேதி பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம், என்னை சோதித்த மருத்துவர் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே.

மருந்து: சோனாலியின் உருக்கத்தை தலைப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள்தான் இதே மண்ணில் பிரசவம் துவங்கி மார்பக – கர்பப்பை புற்றுநோய் வரை அன்றாடம் மரிக்கும் ஏழைப் பெண்களை துணுக்குச் செய்தியாக கூட போடுவதில்லை! சிவப்பா இருக்குறவனுக்கு வந்தாதன் அது நோயா?

~~~~~~~~~

மசாலா: ரஜினிகாந்தின் ’காலா’ படம் கடுமையான நட்டத்தைச் சந்தித்திருப்பதால், அந்த நஷ்டத்தை நடிகர் தனுஷ் திருப்பிக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளார். இப்படத்தை ’டிஸ்ட்ரிபியூஷன்’ கொடுத்திருப்பதால் அவர் கண்டிப்பாக நட்டத்தைத் திருப்பிக் கொடுத்துதான் ஆக வேண்டும். ’காலா’ நட்டத்தை – சுமார் 40 கோடி ரூபாய் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கொடுப்பதாகவும் அதற்காக தனுஷ் அவருக்கு மூன்று படங்களில் நடித்துக்கொடுக்க சம்மதித்துள்ளார்’என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருந்து:  தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று இழிவுபடுத்திய ரஜினியின் “காலா” படத்தை புறக்கணித்து, மெகா தோல்வியடைச் செய்த தமிழக மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

~~~~~~~~~

மசாலா: கமல்ஹாசன் தனது “வணக்கம் ட்விட்டர்” பகுதியில் ஒரு ரசிகர் “உங்களின் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால், நீங்கள் வரவேற்பீகளா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார். வெளிப்படையாக தனக்கு அழைப்புக் கொடுத்த கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மருந்து: கைப்பிள்ள கமலே அரசியல்ல பலரை தூக்கி கடாசியத பாக்கும் போது தம்பி அணில் என்ன செய்யப் போவுதோன்னு தமிழ்நாடே திகில்ல இருக்காம்ல! நான்சென்ஸ்!

~~~~~~~~~

மசாலா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.

மருந்து: என்.டி.ராமாராவை அரசியலில் குளோஸ் செய்த மருமகன் சந்திரபாபு நாயுடு வேடத்தில் யார் நடிப்பார்? சந்திரபாபுவின் மகனா?

~~~~~~~~~

மசாலா:  ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த மஞ்சுமா மோகன் பெரிய அளவுக்கு பேசப்பட்டாலும் அப்படம், அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் அவரிடம் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்ட போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் ஒரு அயர்ன் லேடி. தைரியசாலி. படத்தில் நடிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை அப்படியே அனுபவிக்கலாம் இல்லையா?” என்று கூறியிருக்கிறார் மஞ்சுமா.

மருந்து: அயர்ன் லேடி அப்பல்லோவில் அல்வா சாப்பிட்டு கந்தல் கோலமான கதை அம்மணிக்குத் தெரியாதா? இல்லை உயிரோடு இருந்தால் உயிர்த்தோழியோடு பரப்பன அக்ரஹாரத்தின் மோட்டு வளைப் பல்லியைப் பார்த்தவாறே கொட்டாவி விட வேண்டும் என்ற விசயமும் தெரியாதா?

~~~~~~~~~

மசாலா: சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சுகாதாரத்துறையின் நோட்டீஸிற்கு சர்கார் படக்குழு பணிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

மருந்து: சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுகாதாரத் துறை இதே மாதிரி சரக்கு குடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? மீறித் தெரிவித்தாலும் எடப்பாடி ஆட்சி உடனே உச்சநீதிமன்றம் சென்று அது சரக்கு இல்லை தாக சாந்தி என்று பெயர் மாற்றம் செய்து விடுமே!

~~~~~~~~~

மசாலா: நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமித்துள்ளார். இந்த சுப்ரமணியம் சிவாதான், தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.

மருந்து: லைக்காவின் மேலாண்மை நிர்வாகி ராஜு மகாலிங்கம், ரஜினி கட்சியின் மேனேஜராகும் போது, மருமகன் தனுசுக்கு மார்கெட் போன ஒரு திரைப்பட இயக்குநர்தான் கிடைத்தாரா? ஐ.நா சபையிலேயே பரதம் ஆடிய பரம்பரையின் ஸ்டெட்டஸ் என்ன ஆனது?

~~~~~~~~~

மசாலா: பிரேமம் படத்தில் நடித்து பின்னர் தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் வாய்ப்பில்லை என்றபோதும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த இயக்குனரிடமும் சொன்னதில்லை. அதோடு, எனக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். கதைக்கு அவசியப்பட்டால் ஆபாசமாக இல்லாமல் கிளாமராக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து” என்று அனுபமா கூறியுள்ளார்.

மருந்து: கிளாமர் மற்றும் ஆபாசத்தை பிரிக்கும் எல்லைக்கோடு மங்கலாக இருக்கும் தைரியத்தில் மார்கெட் போன நடிகைகள் பலரும் இப்படி தெளிவாக கதைக்கிறார்கள்!

~~~~~~~~~

மசாலா: 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான மூர்த்தி அன்று முதல் வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே அழைக்கப்பட்டார்.50 ஆண்டுக்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக முதுமை காரணமாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை மனைவி மணிமாலாவுடன் எளிமையாக கொண்டாடினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

மருந்து: சினிமா வரலாற்றில் இவர் வெறும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா? டபுள் மீனிங் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா?

~~~~~~~~~

மசாலா: ‘கோச்சடையான்’ பட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தைத் தரவில்லை. இதனால், உச்சநீதி மன்றம் அவருக்கு கெடு விதித்து, ஜூலை  10-ம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று எச்சரித்தது.

மருந்து: வாங்கிய கடனை அடைக்க முடியாதவனெல்லாம், அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டும் அடைக்காதவனெல்லாம், சட்டத்தை மதிச்சு நடக்கணும்னு புத்திமதி சொல்றானுகளே! கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

~~~~~~~~~