கருத்துப்படம் : வேலன்

டார்ஜ்லிங்கில் நடக்கும் படப்பிடிப்புக்கு இடையில் போயஸ் தோட்டத்தில் ஓய்வுக்கு வருகிறார் ரஜினி! பறந்து பறந்து சண்டை போடும் ரிஸ்க்கான காட்சிகளில் கடும் உழைப்புடன் நடித்து விட்டு வரும் இந்த ‘நல்லவர்’ ஓய்வு மாதங்களிலும் தனது சமூகக் கடமைகளை மறப்பதில்லை. மற்றவர்கள் கப்பித்தனமாக வார விடுமுறையில் மட்டும் ஓய்வெடுக்கும் போது இவரோ மாதக்கணக்கில் ஓய்வெடுக்கும் தாராள மனம் கொண்டவர்.

ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் யாசின் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த செய்தி ஈரோடு போலீசு வழியாக ஊடகங்களில் குற்றச்செய்தியைக் கவனிக்கும் செய்தியாளர்களிடம் வந்து சேர்ந்ததும் கிளம்பியது மேட்டுக்குடியின் மனிதாபிமானப் படை!

குஷ்பு, சூர்யா துவங்கி பலரும் யாசினின் தந்தையிடம் பேசி பாராட்டத் துவங்கினார்கள். எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் அகரம் அறக்கட்டளை புகழ் நடிகர் சூர்யா சிறுவனது கல்விச் செலவை ஏற்பதாக முதலில் அறிவித்தார். யாசினின் தந்தையோ அவன் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறான், அங்கேயேதான் படிப்பான், செலவு ஏதுமில்லை என்று கூறினார்.

மற்றவர்கள் முந்தியது கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற படை உடனே யாசின் வீட்டிற்கு படையெடுத்தது. அங்கேயே அவனது குடும்பத்தாரிடம் பேசி ரஜினியை அந்த சிறுவன் பார்க்க விரும்பியதாக ஒரு செய்தியை உருவாக்கினார்கள். பிறகு சிறுவன் யாசின் சென்னை வந்தான். ரஜினியும் அவனுக்கு தங்கச் சங்கிலி போட்டு, கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். இனி அந்தச் சிறுவன் டார்ஜிலிங்கிலோ, ஊட்டியிலோ தங்கிப் படிப்பானென வாட்ஸ் அப் வதந்திகளை படிப்போர் நம்பித்தான் ஆகவேண்டும்.

மட்டுமல்ல, இப்பேற்பட்ட ரசிகனைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதெனவும் ரஜினி வழிந்திருக்கிறார். அப்போது ஈரோடு ரசிகர் மன்ற தளபதிகள் விசமச் சிரிப்புடன் நகைப்பது உறுதி.

இத்தகைய கருணைவயப்பட்ட நிகழ்வில் அன்னார் சில பல அரசியல் கருத்துக்களையும் கூறியுள்ளார். காமராஜர் ஆட்சி பொற்காலம், கல்வியில் சிறந்த தமிழ்நாடு, அமைச்சர் செங்கோட்டையன் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார்……எல்லாம் அன்னார் உதிர்த்தவை. இறுதியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவரும், செத்துப் போன அ.தி.மு.க-வின் பி டீமான மக்கள் நலக்கூட்டணியின் பிதாமகரும், புரோக்கருமான தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் சேரப்போவது அப்போதுதான் ரஜினிக்கு தெரியுமென அப்போது ரஜினியே தெரிவித்திருக்கிறார். காந்தி வழி வந்தவர் அப்படி இணைவது குறித்தும் மகிழ்ந்திருக்கிறார். கபாலி படத்திற்கு பிறகு இப்படி ஏகப்பட்ட மகிழ்ச்சிகள் – மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்காத ரஜினி, ஒரு நாடு, ஒரு தேர்தல் எனும் சேம்டைம் பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தலை ஆதரிக்கிறாராம். ஆக மொத்தம் இந்த வாக்கு மூலங்களின் வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால் அடுத்த தேர்தலில் ரஜினி-அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி என்பது உறுதி.

இறுதியாக சேலம் எட்டுவழிச்சாலையை ஆதரித்து பேசியிருக்கிறார். “பசுமை வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்களால்தான் நாடு முன்னேறும், அதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தனது மனக்கிடக்கையை உரித்துள்ளார்.

விவசாயகளிடமிருந்து பறிக்கப்படும் நிலத்திற்கு ஈடாக அவர்கள் மனம் விரும்பும் பணம் கொடுத்து சாலை போடவேண்டுமென சூ.ஸ்டார் விரும்புகிறாராம். இனிமேல் பறிமுதல் செய்யப்படும் நிலங்களுக்கு சந்தை விலை எனும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு மனம் விரும்பும் விலை எனும் புதிய பிரிவு வருவது உறுதி என்பதை அதே வாட்ஸ்அப் வதந்தி விரும்பிகள் மீம் போட்டு பரப்புவதும் உறுதி.

எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். தூத்துக்குடி சென்று சமூகவிரோதிகளைக் கண்டறிந்தவர், சேலத்தில் சூப்பராக விளம்பரம் செய்வது குறித்து, அந்த சாலையினால் வேலைவாய்ப்பு பெறும் எடப்பாடியின் மாமனார் மற்றும் இன்னபிற வேலையற்றவர்கள் மனம் குளிர்வார்கள்.

இனி கருத்துக் கணிப்பு கேள்வி:

சேலம் பசுமைவழிச் சாலையால் வேலை வாயப்பு பெருகி, நாடு முன்னேறும் என ரஜினி கூறியிருப்பது?

வன்மையாக கண்டிக்கத் தக்கது
நிச்சயம் வரவேற்கத் தக்கது
கருத்து சொல்வதற்கே அருகதையற்றது

டிவிட்டரில் வாக்களிக்க:

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community