வினவு பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் அனைத்திலுமாக சேர்த்து சுமார் 2,00,000 பேர் வினவு தளத்தை பின் தொடர்கிறார்கள். கடந்த சில மாதங்களாக புதிய வடிவமைப்பில் இயங்கி வருகிறது வினவு.

2008 ஜூலை 17 – 2018 ஜூலை 17
பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவு

இந்த ஆண்டு கடும் அடக்குமுறையை சந்தித்து வருகிறது தமிழகம். ஸ்டெர்லைட் ஒடுக்குமுறைக்கு பிறகு தமிழகமெங்கும் கைதுகள் தொடர்கின்றன. போராட்டங்களை நேரலையாக பதிவு செய்வது, கூட்டங்களை நேரடி ஒளிபரப்பில் காட்டுவது ஆகியவை இந்த ஆண்டில் புதிய சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள். செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்வோம்.

இந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை தொகுத்துப் பார்க்கும்போது, இணையத்தில் ஒரு மக்கள் ஊடகம் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்கக் கூடாது என்பதை வினவு எங்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருப்பது தெரிகிறது.

எத்தகைய எதிர்க் கருத்தாக இருந்தாலும் விவாதத்தை ஒட்டி வரும் பட்சத்தில் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. ஆரம்பத்தில் அது குறித்து நிறைய தயக்கம் இருந்தது. எதிர்க் கருத்துக்கள் கொண்டிருப்போரை பேசவிடுவதன் மூலமே அவற்றை அறிந்து கொள்வதற்கும் மாற்றுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறோம். அதன்   விளைவாகவே இன்று வரை வலதுசாரி நபர்கள் கூட வினவு தளத்தை பின் தொடர்கிறார்கள். திட்ட வேண்டும் என்று வருபவர்களில் சிலராவது தொடர் வாசிப்பில் சரியாகத் திட்ட வேண்டும் என்று முயற்சித்து பிறகு திட்டுவது கடினம் என்றாவது யோசிக்கிறார்கள்.

இந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை தொகுத்துப் பார்க்கும்போது, இணையத்தில் ஒரு மக்கள் ஊடகம் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்கக் கூடாது என்பதை வினவு எங்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருப்பது தெரிகிறது.

பல ஊடகங்களும், தனிநபர்களும் இன்று வரை அத்தகைய மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதில்லை. இந்த ஆண்டு முதல் வினவு தளத்தில் நீங்கள் இடும் மறுமொழிகளுக்கான மட்டறுத்தல் இல்லை. தானாகவே வெளியாகி விடும். இருப்பினும் ஆரம்ப வருடங்களில் இருந்த பிரபலமான வினவு வாசகர் விவாதம் இன்று குறைந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் ஓரளவு காரணம் என்றாலும், காத்திரமாக விவாதிக்கும் பண்பினை மீட்டுக் கொண்டு வருவதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தரவுகள், புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் அனைத்தும் சரிபார்த்து எழுதுவதோடு, வாட்ஸ்அப் வதந்திகளை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்பதையும் கடைபிடிக்கிறோம். இன்று வாட்ஸ்அப் வதந்திகள் அதன் விளைவுகள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்களில் விவாதம் நடக்கிறது. வினவு தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே இது குறித்து முடிவெடுத்து அமல்படுத்துகிறோம். அத்தகைய வாட்ஸ்அப் ட்ரண்டிங்கில் வரும் செய்திகள் பலவற்றை சில தோழர்கள் பரிந்துரைத்த போது அவற்றை தவிர்த்திருக்கிறோம். பலமுறை அவை பொய்ச் செய்திகளென நிருபிக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பாம் – இதை சன் நியூஸ் முதல் ஆளாக காட்டுகிறதாம்! என்ன ஒரு சாதனை!

வெளியிடப்பட்ட பதிவுகளை ஒருபோதும் திரும்பப் பெறக் கூடாது, அப்படி திரும்பப் பெறுவதாக இருந்தால் அதை வாசகரிடம் அறிவித்து விட்டே செய்ய வேண்டும் என்பதையும் அமல்படுத்தி வருகிறோம். நடிகை கனகா ‘மரணமென்ற’ வதந்தியை தினமணி போன்ற தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல, பிபிசி போன்ற மேற்குல ஊடகங்களே வெளியிட்டு விட்டு பிறகு சப்தமில்லாமல் தூக்கிவிட்டன. இத்தவறுகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?

 

செய்திகளை முந்தித் தருவதுதான் இன்றைய 24 X 7 ஊடகங்களின் தொழில் மந்திரம். அதனாலேயே அனேக செய்தி சேனல்களில் ஒரே மாதிரியான செய்திகள் – காட்சிகள், யார் முதலில் காட்டுகிறார்கள் என்ற போட்டியில் நைந்து போய் விட்டன. இப்படி வதந்தியை வெளியிடுபவர்கள்தான் இன்று வாட்ஸ்அப் வதந்தி குறித்து மக்களுக்கு புத்திமதி சொல்கிறார்கள்!

சென்னை பெருவெள்ளம் 2015-ஆம் ஆண்டில் வந்த போது தாம்பரம் முடிச்சூர் ஏரி உடைந்தது என தந்தி டி.வி ஃபர்ஸ்ட் விசுவல் காட்சி டைட்டில் போட்டு காட்டியது. மக்களை துயரத்திற்குள்ளாக்கும் இயற்கைப் பேரிடரில் இப்படி ஒரு தற்பெருமை! இன்று கிருஷ்ணராஜ்சாகர் அணையில் நீர் திறந்துவிடப்படும் காட்சியை சத்யம் டி.வி அதே போன்று வெளியிடுகிறது. எரிச்சலூட்டும் இந்த முதல் பெருமை எதற்கு?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் வெளியான அந்த மஞ்சள் சட்டை போலீசு ஃபோனில் பேசியதாக ஒரு செய்தியை இதே சத்யம் டி.வி மிகுந்த விளம்பரத்துடன் வெளியிட்டது. மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பெருமையுடன் அந்த ஆடியோவை வெளியிடுகிறார்கள்.

ஒரு நிகழ்வு இப்படி நடந்தது என்பது ஒரு முதல்கட்ட பதிவு மட்டுமே. அடுத்தடுத்த நகர்வுகளில் அந்த நிகழ்வு ஏன் எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு பொறுப்பான ஊடகப் பணி.

அதில் அந்த மஞ்சள் சட்டை தானொரு அப்பாவி, சக போலீசார் தன்னை சிக்கவைத்து விட்டனர், உண்மையில் தான் யாரையும் சுடவில்லை, ஆயுதங்கள் வேண்டுமென்று கேட்டார்கள், கொண்டு சென்றேன், வேனில் படுத்திருந்து குறிபார்த்தாலும் அதற்கு முன்பே துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்து விட்டது, தனது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உணர்ச்சியற்ற குரலில் பேசுகிறார்.

முதல் பார்வையிலேயே இது போலீசின் செட்டப் முயற்சி என்று தெரிகிறது. போலீசின் தாக்குதல் குறித்து ஒரு போலீசு இப்படி ‘வெளிப்படையாகப்’ பேசி விட முடியுமா என்ன? சுட்டுக் கொலை செய்ததினால் வந்த கெட்ட பெயரை தணிப்பதற்காக அதே வாட்ஸ்அப் வதந்தியை போலிசார் கையிலெடுக்கிறார்கள். விவாதங்களில் வரும் ஓய்வு பெற்ற போலீசு அதிகாரிகள் இந்த செய்தியை மேற்கொள் காண்பித்து ”காவல்துறை யோக்கியமானது” என்கிறார்கள். இன்று போராட்டம் தொடர்பான முதல்பார்வை ஊடக செய்திகள் அனைத்தும் போலீசால் தயாரிக்கப்படுகின்றன. அதையே கேள்வி கேட்காமல் அனைவரும் வெளியிடுகின்றனர். போலீசு ஆட்சியை எதிர்ப்பதற்கு முன் நிபந்தனை இந்த போலீசு செய்தியை வெளியிடும் ஊடகங்களை அம்பலப்படுத்துவது!

ஒரு நிகழ்வு இப்படி நடந்தது என்பது ஒரு முதல்கட்ட பதிவு மட்டுமே. அடுத்தடுத்த நகர்வுகளில் அந்த நிகழ்வு ஏன் எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு பொறுப்பான ஊடகப் பணி. இதை ஓரளவுக்கு ஓரிரு அச்சு ஊடகங்கள் முன்பு செய்து வந்தன. இன்றோ அதற்கான கதவுகள் மூடப்பட்டு வருகின்றன. தரமான ஆங்கில இணையதளங்கள் சில மட்டுமே அவற்றை இன்றும் இந்தியச் சூழலில் செய்து வருகின்றன.

ஸ்னோடன் குறித்த செய்தியை தமிழில் வினவு தளம்தான் முதலில் வெளியிட்டது என ஒரு தோழர் கூறியது நினைவுக்கு வருகிறது. அப்போது ஸ்னோடனின் முக்கியத்துவம், விளைவுகள் குறித்த பரபரப்பு தோன்றியிருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஒரு வல்லரசு நாட்டின் உளவுவேலையை அதே நாட்டின் நபர் தனது உயிரைப் பணயம் வைத்து வெளியிடும் போது இந்த உலகம் எத்தகைய கண்காணிப்பில் அச்சுறுத்தப்படுகிறது என்பதே முக்கியமானது.

அதே போன்று செயற்கை நுண்ணறிவு குறித்து தனி நூலே கொண்டு வந்தோம். இதுவும் கூட தமிழில் முதலாவது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் முதலாவது என்ற இந்த  வியாதியும் அது ஏற்படுத்தும் வணிக பரபரப்பும் கூட அதே செயற்கை நுண்ணறிவு டேட்டாக்களின் திசைதிருப்பும் உத்தியில் தோற்றுவிக்கப்படுபவைதான் எனும் போது முதலாவது என்ற இந்த கர்வத்தால் என்ன பயன்?

இத்தகைய உலகச் செய்திகளை – அதிகமில்லையென்றாலும் – அவ்வப்போது வெளியிடுகிறோம். சில தோழர்கள், இந்த உலக செய்திகளுக்கு பதில் தமிழ்நாட்டு செய்திகளை அதிகம் வெளியிடலாமே என்கிறார்கள். உண்மையில் உலக செய்திகளை இதர தமிழ் ஊடகங்களில் மட்டுமல்ல வினவு தளத்திலும் பலர் படிப்பதில்லை என்பது உண்மையே. அதனால்தான் ஸ்னோடன் கூட ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.

உள்ளூர் செய்திகளைத்தான் அந்தந்த மக்கள் படிப்பார்கள் என்பதை சுருக்கினால் அது நெல்லை, மதுரை, கோவை செய்திகளைத்தான் அந்தந்த மக்கள் படிப்பார்கள் என்று சுருங்கி விடும். அதனால்தான் அச்சு நாளிதழ்கள் உள்ளூர் பதிப்பை துவக்கி வட்டார செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அதில் அதிகமும் குற்றச் செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. இன்று குழந்தைகள் கடத்தல் குறித்த வாட்ஸ்அப் வதந்திகள் தினசரி ஓரிருவரைக் கொன்று வருகின்றன.

ஆனால் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதும், தமக்குத் தெரிந்த உலகிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து தெரியாத உலகைப் பார்க்கும் போதுதான் தன்னிலை குறித்த விழிப்புணர்வே வரும். ஆகவே பிரேசிலைக் குலுக்கிய வேலை நிறுத்தப் போராட்டம், அமெரிக்க வால்மார்ட் ஊழியர்களின் போராட்டம், ஆப்பிரிக்காவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் பெண் போராளி போன்றவை முக்கியமான செய்திகளில்லையா? இந்த செய்திகளுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு மக்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதும், தமக்குத் தெரிந்த உலகிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து தெரியாத உலகைப் பார்க்கும் போதுதான் தன்னிலை குறித்த விழிப்புணர்வே வரும்.

டக சுதந்திரம் குறித்து சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய புதிய தலைமுறையின் கார்த்திகைச் செல்வன், “நீட் அனிதா மரணமடைந்த போது கூட உடனடியாக அதை வெளியிடாமல் அரைமணிநேரம் பல ’சோர்ஸ்’களில் உறுதிபடுத்தி விட்டே வெளியிட்டோம்” என்றார். பொதுவில் பார்க்குமிடத்து இது பொறுமையாகவும், விரிவாகவும் செய்திகளை உறுதிபடுத்தும் ஊடக தர்மத்தின் அடையாளம் என்று தோன்றலாம். ஆனால் இம்மதிப்பீடு எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.

அதே கார்த்திகைச் செல்வன், நெறியாளராக இருக்கும்போது பாடகர் கோவன் கைது குறித்த விவாதம் ஒன்றில் பா.ஜ.கவின் நபர் ஒருவர், ’ராஜீவ்காந்தியை கொல்லுவோம்’ என கோவன் பாடியதாக கூறினார். ”இதற்கு என்ன ஆதாரம்?, கோவன் எப்போது பாடினார்?” என்று நெறியாளர் கேட்கவில்லை. தமிழ் ஊடகங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் குறித்து போலீசு தரும் செய்திகளையும், மக்கள் அதிகாரம்தான் கலவரத்தை தூண்டிவிட்டது என அரசு தரும் அறிக்கைகளையும் அப்படியே வெளியிடுகின்றன. இச்செய்திகள் உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்வதில்லை.

நீட் அனிதாவின் மரணம் என்பது பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் அதில் கார்த்திகைச் செல்வன் கவனமாக இருக்கிறார். ஆனால் கோவன் சொல்லாத கருத்து ஒன்றையோ, மக்கள் அதிகாரம் குறித்து வரும் அபாண்டமான கருத்துக்களையோ இவர்கள் சரிபார்ப்பதில்லை.

நீட் அனிதாவின் மரணம் என்பது பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் கார்த்திகைச் செல்வன் கவனமாக இருக்கிறார். ஆனால் கோவன் சொல்லாத கருத்து ஒன்றையோ, மக்கள் அதிகாரம் குறித்து வரும் அபாண்டமான கருத்துக்களையோ இவர்கள் சரி பார்ப்பதில்லை.

திரேஸ்புரத்தில் சில மீனவர்கள், மடத்தூரில் சிலர் மக்கள் அதிகாரம்தான் தங்களைத் தூண்டிவிட்டது, மூளைச்சலவை செய்தது என்று கூறியதை ஆர்ப்பாட்டமாக பல ஊடகங்கள் பொன்னாரின் தொனியில் வெளியிட்டன. பிறகு அதே மடத்தூரில் பல மக்கள் யாரும் எங்களை மூளைச்சலவை செய்யவில்லை என்று மனு கொடுத்த போது ஒரு ஊடகமும் அதை செய்தியாகக் கூட வெளியிடவில்லை.

முசுலீம்கள் குறித்து வரும் அவதூறு செய்திகளும், தலித் மக்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளும் கூட இத்தகைய பாரபட்சங்களோடுதான் வெளியாகின்றன. கேட்டால் சாதி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செய்திகளை நாங்கள் வெளியிடுவதில்லை என்று அனைத்து ஊடகங்களும் ஒரு நல்லெண்ண அறிவிப்போடு தப்பித்துக் கொள்ளும்.

11-ம் ஆண்டில் உங்கள் வினவு
ரதயாத்திரை பாடலுக்கு ராமபக்தர்களை விட மோடி பக்தர்களின் வசவுகள் தான் அதிகம்

வினவு தளத்தைப் பொறுத்தவரை சாதிவெறி, மதவெறி எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிடும் போது அந்தந்த சாதிவெறி, மதவெறி  அமைப்புகள் மற்றும் சமூக பிரிவுகளின் தொல்லைகளுக்கு பலமுறை ஆளாகியிருக்கிறோம்.

அனேகமாக ஆண்டுக்கு இருமுறையாவது இந்த பிரச்சினை வருகிறது. சமீபத்தில் ரத யாத்திரை குறித்த பாடலை வெளியிட்டதற்காக தமிழகம் முழுவதும் எமது தொலைபேசியில் சங்கபரிவாரத்தினர் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பேசுபவர்களில் கணிசமானோர் கெட்டவார்த்தைகளை சரளமாக பேசியவாறு அடுத்தடுத்து அழைப்பார்கள். பொறுப்பாக பேசுவோருக்கு பதில் அளிப்போம், திட்டுவோருக்கு சில வாய்ப்புகள் அளித்து விட்டு துண்டிப்போம். இதே திட்டுமழை என்பது தவ்ஹீத் ஜமாஅத், சில ஆதிக்க சாதிவெறியர்களிடமிருந்தும் முன்னர் சந்தித்திருக்கிறோம்.

ஆகவே சாதி-மதம் குறித்து ஒரு கட்டுரையோ வீடியோவோ பாடலோ வெளியிடும் போது இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் கணக்கில் கொள்கிறோம். நாம் சொல்கின்ற கருத்து அதனளவில் சரியாக இருக்கிறதா என்பதை எப்போதும் விழிப்பாக கவனிக்கிறோம். ஆரம்பத்தில் இப்படியான கட்டுரைகள் வெளியாகும்போது அந்த “விழிப்புணர்வு” எங்களிடத்தில் பெரிய அளவில் இல்லை. இன்று அது தேவை என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆரம்பத்தில் இப்படியான கட்டுரைகள் வெளியாகும்போது அந்த “விழிப்புணர்வு” எங்களிடத்தில் பெரிய அளவில் இல்லை. இன்று அது தேவை என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் தொலைபேசியில் திட்டும் பலருடன் பேசும்போதுதான் தமிழ் சமூகத்தில் முற்போக்கு கருத்துகள் பெரிதும் பலவீனமாகவே இருப்பதும், அவ்வாறு திட்டுபவர்களில் கணிசமானவர்கள் பரிதாபத்துக்குரிய மூடர்களாக இருப்பதும் தெரியவருகிறது. நாம் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதே யதார்த்தம். ஆகவே திட்டுபவர்கள் குறித்து குறைபடத் தேவையில்லை. இதுவும் வினவு கற்றுக் கொடுத்த அனுபவம்தான்.

தொடக்க காலம் தொட்டு பாலியல் பிரச்சினைகள் குறித்த காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். போர்னோ குறித்த கட்டுரைத் தொடர் மற்ற ஊடகங்கள் தயங்குகின்ற விசயங்களை பகிரங்கமாக முன்வைத்தது. இன்று அன்றாடம் சிறுமிகள் பலர் பாலியல் வன்முறைகளில் பலியாகும் போது பொதுவில் பலரும் அதிர்ச்சியடைவதைத் தாண்டி என்ன செய்ய வேண்டும், ஏன் இப்படி நடப்பது அதிகரித்திருக்கிறது என்று சிந்திக்கும்போது வினவு கட்டுரைகள் உதவி செய்யுக்கூடும். சினிமா, பாலியல் தொடர்பாக ஊடகங்கள் மலிவாக நடந்து கொள்ளும் போக்கிற்கு எதிராக இத்துறைகள் சார்ந்து காத்திரமான விழிப்புணர்வு வரவேண்டும் என்பதை எமது அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

இன்றைய தொலைக்காட்சி நெறியாளர்கள் பலரும் விவரங்கள், தரவுகள் விசயத்தில் கவனம் காட்டுவது, தனிநபர் தாக்குதல்களைத் தவிர்ப்பது, அரசியல்ரீதியாக ஜாக்கிரதையாக இருப்பது, விமர்சனத்திற்குரியவர்கள் இல்லாதபோது பேசக்கூடாது என்பன போன்ற அம்சங்களைத் தாண்டி கண்ணோட்டம் என்ற கோணத்தில் மிகவும் பலவீனமாகவே இருக்கிறார்கள். பலவீனம் என்பதை விட இதற்கு மேல் எல்லை மீறக்கூடாது என்ற பாதுகாப்புணர்வாகவும் அதை சொல்லலாம்.

கண்ணோட்டம் என்பது ஏதோ முனைவர் பட்ட படிப்பு சார்ந்த திறமை போன்ற ஒன்றல்ல. அது நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள், அப்படி பேசுவதற்காக எதை இழக்கிறீர்கள், எதை பெறுகிறீர்கள் என்பதோடு தொடர்புடையது.

கண்ணோட்டம் என்பது ஏதோ முனைவர் பட்ட படிப்பு சார்ந்த திறமை போன்ற ஒன்றல்ல. அது நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள், அப்படி பேசுவதற்காக எதை இழக்கிறீர்கள், எதை பெறுகிறீர்கள் என்பதோடு தொடர்புடையது.

ஒரு சிறுவணிகர் ஐம்பது பைசாவை வரி கொடுக்காமல் ஏமாற்றுவதும், ஒரு முதலாளி 10,000 கோடி வரி ஏய்ப்பு செய்வதும் ஒன்றுதான் என பானுகோம்ஸ் வாதிடும் போது ஊடக நெறியாளர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். ரஜினி ஆதரவாளரான பிரவீண்காந்த், தூத்துக்குடி சென்ற ரஜினி சமூகவிரோதிகள் என்று யாரையும் கூறவில்லை என்று அடித்துக் கூறும் போது அந்தப் பொய்யை பொய் என்று சொல்லத் தயங்கும் நெறியாளர்கள் அதற்காக கடுகளவும் வெட்கப்படுவதில்லை.

குமரி மீனவ கிராமத்தில் புதிய தலைமுறை சார்பாக ஒக்கிபுயல் விவாதம் நடக்கிறது. கடலில் தத்தளிக்கும் மக்களை மீட்க கடற்படையோ, கடலோரக் காவற்படையோ வரவில்லை என்பதை மீனவர்கள் பலரும் அனுபவங்களாக கூறுகிறார்கள், அரசைக் கண்டிக்கிறார்கள். நெறியாளர் செந்திலோ, “மக்கள் கூறுவதிலிருந்து மீட்பு பணிகள் இன்னும் வேகமெடுத்திருக்க வேண்டும்” என்கிறார். தான் சறுக்கித்தான் பேசுகிறோம் என்பது அவர் அறியாத ஒன்றல்ல. உடல்ரீதியில் சறுக்கி விழுவதால் ஏற்படும் எலும்பு முறிவுகூட ஒன்று சேர்ந்து விடும். கருத்துரீதியான முறிவுகள் – அவை பல நேரம் எடிட்டோரியல் நிர்ப்பந்தங்கள் என்றாலும் – தொடரும் போது நாம் நம்மை அறியாமலேயே வேறு ஒன்றாக – அறமிழந்த தக்கை மனிதர்களாக மாறிவிடுவோம்!

கார்ப்பரேட் ஊடகங்களில் தொடர்ந்து பணிபுரியும் போது இத்தகைய அழுத்தங்கள் – சமரசங்கள் – திசைதிருப்பல்கள் – பயங்கள் நம்மை தேர்ந்த தொழில்முறை நிலைய வித்வான்களாக மாற்றிவிடும்.

கார்ப்பரேட் ஊடகங்களில் தொடர்ந்து பணிபுரியும் போது இத்தகைய அழுத்தங்கள் – சமரசங்கள் – திசைதிருப்பல்கள் – பயங்கள் நம்மை தேர்ந்த தொழில்முறை நிலைய வித்வான்களாக மாற்றிவிடும்
ரஜினி தன் ரசிககர்களை சந்திப்பதைக் கூட நேரலையாகப் போட்டு ‘கடமையாற்றும்’ ஊடகங்கள்

ஜினி தும்மினாலும், துவண்டாலும் ஊடகங்களில் ஓரிரு நாட்களோ, வாரங்களோ விவாதங்கள் அனல் பறக்கும். இந்த செயற்கையான அனலை அதே விவாதங்களுக்கு வரும் ஒரு சமூக ஆர்வலர் சுட்டிக் காட்டும்போது என்ன நடக்கிறது? ஊடகங்கள்தான் ரஜினியை தூக்கிப் பிடிக்கின்றன என்று அவர்  வலியுறுத்துகிறார். உடனே நியூஸ் 18 குணசேகரன், என்னதான் இருந்தாலும் ரஜினிதான் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார், அவர் தெரிவிக்கும் ஒன்றை விவாதிப்பது ஊடகங்களின் கடமை என்று நியாயப்படுத்துவார். அதாவது இங்கே அவர் தனது ஊடகத்தின் நலனை ஒரு நடுநிலையான கருத்து போல முன் வைக்கிறார்.

நியூஸ் 18 குணசேகரன், என்னதான் இருந்தாலும் ரஜினிதான் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார், அவர் தெரிவிக்கும் ஒன்றை விவாதிப்பது ஊடகங்களின் கடமை என்று நியாயப்படுத்துவார்.

’வெள்ளுடை வேந்தர்’ ஏ.வி.எம். சரவணன் 80-களில் தயாரித்த “முரட்டுக்காளை”யில் துவங்கி ’உத்தமர்’ சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைக்கா மொபைல் உபயத்தில் வெளியான “காலா” வரை ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜ் என்பது கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரத்தில் ஊதப்படுவது. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் இத்தனை பெரிய பட்ஜெட்டில் விளம்பரச் செலவு? இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமலேயே படம் ஓடவேண்டுமே? ரஜினி படங்களுக்காக வரும் விளம்பர வருமானம் அனைத்து ஊடகங்களுக்கும் முக்கியம். அதிகாரப்பூர்வமாக வெளியிடும் விளம்பரங்களோடு அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரஜினி குறித்த செய்திகளும் வெளியிடுவதுதான் அந்த விளம்பர வருமானத்தின் எழுத்தப்படாத ஒப்பந்தம். இறுதியில் ரஜினியே செய்தியாக, விளம்பரமாக, வருமானமாக, மக்களுக்கு நொறுக்குத் தீனி ரசனையாக முன்வைக்கப்படுகிறார். இதில் எங்கே இருக்கிறது அவரது சுயம்பு சூப்பர் ஸ்டார் செல்வாக்கு?

குத்து விளக்கு பூஜை நடக்க இருக்கிறது, சுமங்கலிகள் அனைவரும் வாருங்கள், ஒரு குங்கும டப்பா இலவசம் என்று ஆர்.எஸ்.எஸ் அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் பெண்கள் வருவார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் தாலி தேவையா என்று ஒரு முற்போக்கு அமைப்பு நடத்தும் கருத்தரங்கிற்கு நிச்சயம் ஆயிரக்கணக்கில் பெண்கள் வர மாட்டார்கள். ஆனாலும் எண்ணிக்கை அடிப்படையில், நியூஸ் வேல்யூ எனும் ஊடக விதியின்படி முன்னதுதான் செய்தியாக காட்டப்படும் மதிப்புடையது, பின்னது காட்ட முடியாத ஒன்று என்று நம்மிடம் நியாயம் பேசுகிறார்கள்!

ர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமங்களின் திட்டப்படி தமிழகத்தில் இன்று பலர் விவாதங்களில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். இறுதியில் 2002 குஜராத்தில் மோடி செய்த குற்றங்கள் என்ற உலகறிந்த உண்மையைக் கூட ஒரு விவாதத்தில் ஒரு நெறியாளர் கூட பேச முடியாத நிலைமை இருக்கிறது. ஜெயாவின் சொத்து திருட்டு வழக்கில் குமாரசாமி தீர்ப்பு வந்த அன்று தந்தி டி.வி பாண்டே நடத்திய விவாதத்தில் காலஞ்சென்ற ஞாநி வந்திருந்தார். அவர் ஜெயாவை விமரிசித்த போது குறுக்கிட்ட பாண்டே, தான் முழுத்தீர்ப்பையும் படித்து விட்டதாகவும், அதில் குமாரசாமி மிகத்தெளிவாக இந்த சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமான கணக்கில் சேர்க்க கூடாது என்று தரவுகளுடன் கூறியிருப்பதாக வலியுறுத்தினார்.

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் பக்தர்களுக்கு இடமளிக்கும் ஊடக அறம்

அதாவது தீர்ப்பு வந்த அன்றே பாண்டே அதை கரைத்துக் குடித்து கணக்கு சரிபார்த்து விட்டார். பிறகு நீதிமன்றம் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படித்தான் பாண்டே போன்றவர்கள் ஜெயா போன்ற கிரிமனல்களை மட்டுமல்ல, நீதித்துறையின் ஊழல்களையும் வக்காலத்து வாங்குகிறார்கள். நியூஸ் 7 நெல்சன் சேவியரோ மிகச்சாதரணமாக யாராவது நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையோ, நீதிபதிகளையோ விமரிசித்தால், இது உங்களது சொந்தக் கருத்து, நீங்களே பொறுப்பு, நீதித்துறையை விமரிசிக்க கூடாது என்று அவசர அவசரமாக டிஸ்கி போடுகிறார். அதிகார வர்க்கம், நீதித்துறை மற்றும் போலீசு, அரசு போன்றவை இப்படியாக பொது விமரிசினங்களுக்கு அப்பாற்பட்டது என ஊடகங்கள் எப்போதும் விழிப்போடு இருக்கின்றன.

நியூஸ் 7 நெல்சன் சேவியரோ மிகச்சாதரணமாக யாராவது நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையோ, நீதிபதிகளையோ விமரிசித்தால், இது உங்களது சொந்தக் கருத்து, நீங்களே பொறுப்பு, நீதித்துறையை விமரிசிக்க கூடாது என்று அவசர அவசரமாக டிஸ்கி போடுகிறார்.

ஆகவே வினவு தளத்தில் மேற்படி துறைகளைப் பற்றிய கட்டுரைகள் கடுமையான விமரிசனங்கள் எழுதும் போது இது குறித்து பிரச்சினைகள் வந்தால் சந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டே வெளியிடுகிறோம்.

வானதி சீனிவாசன் – கேடி ராகவன் – லைக்கா மொபைல் ஊழல் குறித்து மறுக்க முடியாத ஆதரங்களோடு வினவு தளத்தில் தொடர்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் இணையத்திலேயே இருக்கின்றன. பெரும் நிறுவன பலம் இருந்தும் ஊடகங்கள் எவையும் இத்தகைய ஆழமான புலனாய்வில் இறங்குவதில்லை. ஊடகங்கள் குறித்த எந்த விமரிசனமும் வாசகரிடம் பெருவரவேற்பு பெறுவதைப் பார்க்கும்போது மக்கள் முட்டாள்களில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.

இன்றைக்கு பாண்டேவின் பா.ஜ.க ஆதரவு விவாதமோ இல்லை எச் ராஜாவின் நேர்காணலோ யூடியூபில் வெளியாகும் போது மக்களே மறுமொழிகளில் காத்திரமாக வாதிட்டு அம்பலப்படுத்துகிறார்கள். தற்போது ஊடகங்கள் மீதான விமரிசனங்கள் என்பது சமூக வலைத்தளங்களின் முதன்மையான பணியாகவே மாறிவிட்டது.

ரம்பத்தில் சினிமா விமர்சனம் (சமூகவியல் பார்வையில்), ஊடக விமர்சனம், இலக்கியவாதிகள் மீதான விமர்சனம் போன்றவை வினவு தளத்தில் எழுதப்படும்போது  தனியாக நாம் மட்டும் எழுதுவதாக உணர்ந்தோம். மெரினா போராட்டத்தைத் தொடர்ந்து பலர் இன்று சமூக வலைத்தளங்களில் நாங்கள் எழுதுவதற்கு மேல் எழுதுகிறார்கள். இது குறித்து உண்மையிலேயே மகிழ்கிறோம்.

மெரினா போராட்டத்தைத் தொடர்ந்து பலர் இன்று சமூக வலைத்தளங்களில் நாங்கள் எழுதுவதற்கு மேல் எழுதுகிறார்கள். இது குறித்து உண்மையிலேயே மகிழ்கிறோம்.

11-ம் ஆண்டில் உங்கள் வினவுஅதனால்தான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து காத்திரமாக எழுதப்படும் செய்திகளை தொகுத்து அவ்வப்போது வெளியிடுகிறோம். அத்தகைய நண்பர்களை உற்சாகப்படுத்த விரும்புகிறோம். கார்ப்பரேட் ஊடகங்களோ சமூக வலைத்தளங்களில் வரும் மீம்கள், காமடிகள், போன்றவற்றை மட்டும் அவியலாக, துணுக்குச் செய்திகளாக வெளியிடுகின்றன. அல்லது பாதுகாப்பான முறையில் தங்களுக்கு பிரச்சினையில்லாத எழுத்துக்களை தெரிவு செய்து வெளியிடுகிறார்கள்.

ஆகவே இன்று எல்லாப் பிரச்சினைகளையும் நாங்களே எழுத வேண்டும் என்ற நிலையும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. மக்களே அப்படி எழுதுவார்கள் என்ற நம்பிக்கையளிக்கும் சூழல் உருவாகி வருவதைக் காண்கிறோம். அதே நேரம் அப்படி எழுதும் நண்பர்கள் வினவு தளத்தோடு நெருங்குவதற்கு முன்னரே கார்ப்பரேட் ஊடகங்கள் தூக்கிச் சென்று விடுகின்றன. அங்கே சென்று ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர்களும் நிலைய வித்வான்களாக ஆகிவிடும் துயரமும் நடந்து வருகிறது. எனினும் அங்கே பத்து பேர் சென்றால் இந்தப்பக்கம் வருவதற்கு இரண்டு பேராவது இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையான சூழலும் இருக்கிறது.

ல்லா ஊடகங்களிலும் எங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக பல உள்வட்ட ‘செய்திகள்’ எங்கள் காதுகளை நோக்கி வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனினும் அத்தகைய செய்திகளுக்கு நாங்களே காது தணிக்கை போட்டிருக்கிறோம். வெளிப்படையான விமரிசனம், உரையாடல் என்பதைத் தாண்டி இத்தகைய இரகசிய செய்திகளை வைத்து ஒரு போதும் எழுதக் கூடாது என்பதையும் இந்த ஆண்டுகளில் கறாராக கடைபிடித்து வருகிறோம். குறிப்பாக நண்பர்களாக இருப்போரின் படைப்புகள் – நிகழ்ச்சிகளைக் கூட தேவை ஏற்படின் விமரிசித்தும் இருக்கிறோம். அதுவே வினவு தளத்தின் மீது பல பத்திரிகையாளர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிப்படையான விமரிசனம், உரையாடல் என்பதைத் தாண்டி இத்தகைய இரகசிய செய்திகளை வைத்து ஒரு போதும் எழுதக் கூடாது என்பதையும் இந்த ஆண்டுகளில் கறாராக கடைபிடித்து வருகிறோம்.

இன்றைய அதிவேக இணையத்தின் காலத்தில் வினவு ஒரு குடிசை வீட்டில் இருந்து மண்பானை செய்யும் கிராமத்து தொழிலாளியைப் போன்றே இருக்கிறது.

ஆனால் நம்மால் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இணைத்து போர் தொடுக்க முடியும். குடிசை வீட்டில் இருப்பதாலேயே இழப்பதற்கு ஏதுமற்றவர்களின் தைரியமும், போராட்ட குணமும் நமது மாபெரும் சொத்துக்களாக இருக்கின்றன.

தொழில்முறை ஊடகமாக மாறுவதற்கு முதல் பிரச்சினை நிதி. சொல்லிக் கொள்ளுமளவு எமக்கு நிதி வருவதில்லை. என்றாலும் அதையே சொல்லிச் சொல்லி வற்புறுத்துவதுமில்லை. நாங்கள் எழுதக் கோரிய நண்பர்களும் உரிய ஆர்வம் காட்டவில்லை. இந்த இரண்டிலும் நீங்கள் பங்களிக்க முடியும். வினவு தளத்தின் பயணம் இன்னும் வீரியமாக தொடர்வதற்கு உதவவும் இயலும்.

அனைவருக்கும் நன்றி

தோழமையுடன்
வினவு