07-08-2018
லைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.
 
தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.
 
“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.
 
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.
 
கருணாநிதி மரணம்தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.
 
பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
 
*****
 
நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.
 
அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.
 
அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.
 
இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.
 
*****
 
ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.
எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.
 
டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.
 
1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.
 
எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.
 
கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
 
*****
 
கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.
காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.
கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.
கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
– மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

32 மறுமொழிகள்

  1. திராவிடத்தின் கடைசி கதிரும் மறைந்து. கலைஞருக்கு அஞ்சலிகள்.

  2. திராவிடத்தின் கடைசி கதிரும் மறைந்தது. கலைஞருக்கு அஞ்சலிகள்.

  3. இவரை போன்றதொரு முற்போக்குவாதி முதல்வராவது இனி சாத்தியமா என்ற ஐயம் தோன்றுகிறது

  4. 1. உதிரிப்பாட்டாளிகளை ஆதரித்தார் கருணாநிதி என நெக்குருகி எழுதுகிறார். லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் ப்ரூமெர் துவங்கி ஜெர்மானியில் விவசாயிகள் பிரச்சினை என்ற தேர்வு நூலின் இறுதி நூல் கட்டுரை வரை இந்த வர்க்கத்தை அழிவுசக்தி என்று அழித்தொழிக்கப்பட வேண்டியர்கள் என்றும் மதிப்பிட்ட மார்க்சையும் எங்கெல்சையும் புறக்கணிக்கிறது மக்கள் அதிகாரம்.

    2.பராசக்தி படத்தின் வசனம் பேசுவதற்கு வர்க்க கோபம் என பொழிப்புரை எழுதுகிறார் . அந்த வசனத்திற்கு முன் தனது சம்பாத்யத்தை தாசி வீட்டில் தொலைத்திருப்பார் குணசேகரன். எந்த வர்க்கத்தின் கோபம் என எல்லோருக்கும் இப்போது புரிந்திருக்குமே.

    நக்சல்பாரிகள் பரிந்து பேசும் வர்க்கம் எது என்பதற்கு துல்லியமான சர்ஜிகல் ஸ்ட்ரைக் இதுதான்

    3.மாநிலங்கள் உள்நாட்டு காலனியா என்ற கலைஞரின் வாதங்களோடு ஒத்துப்போகிறது மக்கள் அதிகாரம். அப்படியானால் அவர்களை வழிநடத்தும் மாநில அமைப்பு கமிட்டிக்கு இந்திய புரட்சியும் மக்கள் அதிகாரத்துக்கு தமிழ் தேசிய புரட்சியும் என்ற இரட்டை மாட்டுச் சவாரி தானா மக்களின் தலையெழுத்து ?

    4.டெல்லியிடம் அவர் சரண்டைந்தாலும் அவர்கள் வெறுப்பது இவரைத்தான் என உச்சிமுகர்கிறார். இது அவமானம் இல்லையா ?

    5.அதிருக்கட்டும் சமத்துவபுரமும் அண்ணா நூலகமும் தேர்தல் அரசியலின் வரம்பை மீறியதாக எப்படி உங்களுக்கு தோன்றியது?

  5. நரகலில் நல்லரிசியை தேடுவதைப்போல, நல்லரிசியில் நரகலைத் தேட முனைகிறார் “நான் மணி”

    கலைஞர் மறைவிற்கு வினவில் என்ன மாதிரி எதிர்வினை இருக்கும் என்று ஆவலுடன் பார்த்தால் வினவின் கட்டுரை ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. கிரிமினல் ஜெ வுக்கும் கலைஞருக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி நம்மை சீராக வழிநடத்துகிறது வினவு.

    கலைஞர் மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருடனான நட்பை சரிபார்க்க வினவு ஒரு உரைகல்லாக இருக்கிறது.

  6. கலைஞர் என்றால் கலகம்,
    சனாதனவாதிகளுக் கெதிராய்;
    சமூக, மத, சாதீய மூடத்தனங்களுக் கெதிராய்;
    கலைத்துறையிலும், ஊடகங்களிலும் அரைநூற்றாண்டாய் திராவிடச் சிந்தனையின் அடையாளம்; தமிழனின் தன்மானம்.
    இறந்தும் கலகம், அவரது உயிரற்ற உடலை மெரினாவை நோக்கி உந்தித் தள்ளும் தமிழனின் உணர்வாய்.

  7. கலைஞ ரென்றால் கலகம்
    சனாதன வாதிகளுக் கெதிராய்;
    சமூக, சாதீய, மத மூடத்தனங் களுக்கெதிராய்.
    கலைத் துறையிலும், ஊடகத் துறையிலும் அரைநூற்றாண்டாய் திராவிடச் சிந்தனையின் அடையாளம், தமிழனின் தன்மானம் அவர். இறந்தும் கலகம்; தமிழனின் உணர்வு மெரினாவை நோக்கித் தள்ளும் அவரது உடலை.

  8. வாழும்பொழுது இகழ்ந்தாலும் இறந்தபொழுது புகழவேண்டும் என்பது தமிழ் நிலக்கிழாரிய பண்பாட்டின் வெளிப்பாடு. சமரசவாதி என்கிற மென்மையான விமர்சனத்தோடு இப்படி ‘புகழ்வது’ தமிழ் நிலக்கிழாரிய பண்பாட்டின் 2.0 வெர்சனோ?

  9. கழிவுகளான மலம்,மூத்திரத்தை சுமந்துதிரிபவன்தான்மனிதன் அரசியல்அழுக்குஆதாயத்துக்காக நீதிமறந்துவளர்பவன்தான் நடப்பு அரசியல்வாதி கழிவைசுமப்பதால்மனிதனைகழிவாக கருதமுடியுமா?நீதிமறந்தவர்களையும் நீதியைகொன்றவர்களையும் நேர் கோட்டில்பார்க்கமுடியுமா? கழுதையும்,குதிரையும் விலங்கென்றாலும் இரண்டுக்கும்வித்தியாசம்உண்டு வகைபடுத்திபுரிந்துக்கொள்வோம் கலைஞரின்மறைவுக்கு வருத்தம் கொள்வோம். (ப .தர்மராஜ்,திருச்சி)

  10. சமச்சீர் கல்வி திட்டம் என்னும் அரைகுறை திட்டத்தை கொண்டு வந்ததோடு பிளஸ் டூ தேர்வில் இஷ்டத்துக்கும் அதிக மார்க் வழங்க செய்து தமிழக கல்வி துறையில் சீரழிவை தொடங்கி வைத்தவர். தமிழகத்தின் முதல் தர பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் சீரழிவு இவர் ஆட்சியில் (2006ல்) தான் தொடங்கியது. குடும்ப சுயநலம் என இன்னும் எத்தனையோ சொல்லலாம். எனினும் எளிய பின்னணியில் இருந்து போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டு முன்னேறியவர். இந்தியாவை பிடித்து ஆட்டும் பார்ப்பனீய ஆதிக்கத்தையும் மதம் சார்ந்த மூடத்தனங்களையும் தன் வாழ்வின் கடைசி முனை வரை எந்த சமரசமும் இல்லாமல் எதிர்த்தவர். நம் தமிழ் மொழியை உலகத்தின் முன் உயர்த்தி பிடித்தவர். இவற்றின் அடிப்படையில் அவர் மறைவுக்கு வருத்தப்படுவோம்.

  11. விமர்சணத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல கலைஞர். ஆனால் விமர்சிப்பதற்கு மட்டுமே உரியவரும் அல்ல. அவர் நாத்திக கொள்கை, சமச்சீர் கல்வி , இலவச மிண்சாரம், திணந்தோறும் மாணவர்களுக்கு முட்டை அடுக்கி கொண்டே போகலாம். பதவியில் இருந்தால் யோக்கியனாக இருக்க முடியாது என்று சொன்ன பெரியார் காமராசர் அண்ணாவை ஆதரித்தார். அது அவர்களின் செயல்பாட்டால். அது போல் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லை என்றாலும் கலைஞரை விணவில் ஆதரிப்பது மகிழ்ச்சியே. உங்களுக்கு களப் பங்களிப்பு இல்லை என்றாலும் அதிக நிதிப்பங்களிப்பு தருபவர்கள் பெரும்பாண்மை முற்போக்கு சிந்தனை கோண்ட திமுகவினரே.

  12. AAYIRAM VIMARSANANGAL IRUNTHALUM KALAINJARIN AALUMAI ENNAI VIYAKKA VAIKIRATHU…..
    PARASAKTHI, POOMBUGAR MATRUM PALA PADANGALIL AVARIN VASANGAL UNMAYIL PURATCHIKARAMANAVAI…….

    AVAR KONDUVANTHA SILA SATTANGAL AVARAI ENDRUM NINAIVIL VAITHUKOLLA VENDIYAVA..
    =YAAR VENDUMANAL POOSAGARAGA MARALAM
    =PENGALUKANA SOTHURIMAI
    =THIRUNGAIGAL
    =MAATRU THIRANALIGAL
    IVAI ANAITHUM PURATCHIKARAMANATHUM, THOORANOKU UDAYA THITTANGAL AAGUM….

    IPPADI ORU PAKUTHARIVU VAATHI INI VARUVAANA?

  13. விடுதலை நாளேட்டிற்காக அந்த பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தவர்கள் இன்று என்ன தலையங்கம் எழுதலாம் என்று பெரியாரிடம் ஒருநாள் கேட்டபோது தி ஹிந்து பத்திரிகையில் என்ன தலையங்கம் வந்துள்ளதோ அதற்கு எதிர்மறையான கருத்துடன் தலையங்கம் எழுத சொன்னாராம்.ஆக இங்கு கருணாநிதிக்கு எதிர்க்கருத்து இடுபவர்களின் நிலைப்பாட்டையும் அவ்வாறே கொள்ளவேண்டும் .கட்டுரையிலேயே சுட்டியதுபோல் பார்பனீயத்துக்கு ஒற்றை எதிர் இலக்காக துலங்கியவர் கருணாநிதியே..தலைமுறை தாண்டியும் பார்ப்பனர்களின் வெறுப்பு கருணாநிதியை நோக்கியதே .

  14. திமுக தொண்டர்களே உஷார்!

    இது நாள் வரை கலைஞரைத் திட்டிக் கொண்டிருந்நிருந்த கூட்டம் இன்று கலைஞர் கொள்கைகளை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறது

    ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி போன்ற போராட்டங்களைக் கடத்தியது போல், உங்கள் மத்தியிலும் நுழைய முயற்சிக்கிறது. ஜாக்கிரதை!!

  15. மார்க்சியம் சொல்லி கொடுக்கும் ஒரு அமைப்பு இது போல் எழுதுவது மிகவும் வேதனையாக உள்ளது… சரி இனி உங்களிடமிருந்து பதில் எதிர் நோக்கி எனது இரு கேள்விகள்…
    1. ஒருவர் இறந்துவிட்டால்அவரது தவறான அம்சங்களை பேசக்கூடாது என்பது பிற்போக்கான பூர்சுவா வர்க்கபண்பாகும்…
    ஒருவரது உடல்தான் மரணிக்கின்றதே தவிர,அவரது அரசியல் அல்ல. -லெனின்.
    2. கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏழை மக்கள் மீது பாசம் கொண்டவர் அதனால் அவரது சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்- ஆவண செய்வீர்களா?

  16. கட்டுரையில், “அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது”.———— என்ற வரிகளில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இல்லை என்பது போல சொல்லபட்டுள்ளது. கவனிக்கவும். தேவையென்றால் மாற்றவும்.

  17. மேற்படி அஞ்சலி கட்டுரையில், “அடுத்து இந்தியாவின் ஏகபோக திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, இன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதை போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்து.” ———– என்ற வரிகளில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இல்லை என்பது போல சொல்லபட்டுள்ளது. கவனிக்கவும். தேவையென்றால் மாற்றவும்.

  18. திமுக தொண்டர்கள் உஷார்!

    இது நாள் வரை கலைஞரைத் திட்டிக் கொண்டிருந்நிருந்த கூட்டம் இன்று கலைஞர் கொள்கைகளை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறது

    ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி போன்ற போராட்டங்களைக் கடத்தியது போல், உங்கள் மத்தியிலும் நுழைய முயற்சிக்கிறது. ஜாக்கிரதை!!

  19. மனம் மற்றும் மூளையை பயன்படுத்தி எழுத முனைந்த வினவு , மனத்தை மட்டுமே பெருமளவுக்கு செலவிட்டு எழுதியிருக்கும் இரங்கல்பா இது.! மூளையை பயன்படுத்தினால் விமர்சனங்களை அதிகம் சேர்க்கவேண்டியிருக்குமே!

    • உண்மை நண்பரே!
      வினவை விட தி.மு.க.வை விமர்சித்தவர்கள் இல்லை.(தமிழ் தேசிய வியாதிகளின் தரங்கெட்ட விமர்சனங்களை தவிர்த்து)
      ஆனால் இப்போது இருக்கும் பாசிச அபாய சூழலில் பிரச்சினைகள் அடிப்படையில் நட்பு சக்திகளை ஒன்றிணைக்கும் செயல் திட்டம் மூலம் வினவு சரியான பாதையில் பயணிப்பதாகத்தான் படுகிறது.

  20. பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம்
    அரசுப்பணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம்
    மேற்கண்ட இரண்டும் பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி தலைவர்
    கலைஞரின் சாதனைகள்.
    கலைஞரின் நிறைகுறைகள் இரண்டையும் இவ்வேளையில் நடுநிலையோடு
    பதிவுசெய்திருக்கும் வினவிற்கு என் பாராட்டுக்கள்.

  21. கலைஞர் சாதனை பார்ப்பன எதிர்ப்பில்/திராவிட அரசியலில் மகத்தானது. ஆனால் தற்போது உள்ள கள கட்சிக்கும் இணைய திமுக விற்கும் துளியும் சம்பந்தமே இல்லை. இணைய திமுக ஆதரவாளர்கள் முட்டுக்கொடுக்குது. ஆனா களத்துல திமுக மற்றும் அதிமுக ஒரே மாதிரி ஜாதியை வைத்தே இயங்குது. பெரிய வித்தியாசம் இல்லை.

  22. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்
    செயல்படுத்திய திராவிடக் கருத்தியல்
    சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டதில்லை.
    எனவே நூறாண்டு கால திராவிடக் கருத்தியல்
    பார்ப்பனர்களுக்குப் பதில் இடைச்
    சாதியினரின் (பிற்பட்ட சாதியினர்)
    ஆதிக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர,
    சாதியின் ஆணிவேரை அசைத்துக் கூடப்
    பார்க்கவில்லை. அன்று பார்ப்பன ஆதிக்கம்.
    இன்று சூத்திர ஆதிக்கம். இது மட்டுமே
    வேறுபாடு.ஆக, திராவிடக் கருத்தியல் ஒருநாளும் சாதியை
    ஒழிக்காது என்ற உண்மையையும் கலைஞரின்
    95 ஆண்டு கால வாழ்க்கை வெளிப்படுத்தி
    இருக்கிறது

  23. இதற்கு ஒரே வழி CPI – CPIM சேர்ந்து திமுகவுடன் அய்க்கிய முன்னணி கட்டுவது மட்டுமே

  24. இந்திய முதலாளித்துவத்தின் மிகப்பெரிய ஊழலை பிராமணிய சதி என்று கூறியதன் மூலம் முதலாளித்துவத்திற்கு நேரடியான ஆதரவையே வழங்கிவிட்டீர்கள்.

  25. மக்கள் அதிகாரம்-மக இக தானே..மகஇக ஏற்கனவே திமுக கழகத்தின் கிளை அமைப்புதானே தோழர்..ஏன் இத்தனை விமர்சனம்..ஆழ்ந்த அஞ்சலி என்றால் போதாதா ?
    ஒரு புரட்சி அமைப்பு தன் வர்க்க எதிரிக்கு அஞ்சலி செலுத்துவது ஒருபோதும் புரட்சிக்கு உதவப் போவதில்லை.கருணாநிதி எந்த வர்க்கம்என்பதைஅவரின் செயல்களை வைத்து கண்டுகொள்ளலாம் .
    வர்க்கப் போராட்ட அரசியலைக் கைவிட்டு வர்க்கசமரச அமைப்பாக உருவெடுத்த மக்கள் அதிகாரம் பண்பாட்டு அரசியலை முன்னெடுத்து பார்ப்பனிய எதிர்ப்பை மட்டுமே பிரதானப்படுத்தி பொருளியல் அடிப்படைகளுக்கான ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகளை விமர்சிப்பதை புறந்தள்ளி தி.மு.க.வோடு கூடிக் குலாவுவதற்காக 2G ஊழலைக்கூட கருணாநிதி பாணியிலேயே வக்காலத்து வாங்கியபிறகும் அது புரட்சிகரக் கட்சி என்று பேசுவது புரட்சியாளர்களைக் குழப்பி காயடிக்கும் வலது சந்தர்ப்பவாதமே!.
    தொழிலாளர் வர்க்க கட்சி எந்த முதலாளி வர்க்க கட்சியின் ஒட்டுப் பகுதியாகவும் ஒரு போதும் இருக்க கூடாது. அது சொந்த இலட்சியத்தையும் சொந்த கொள்கைகளையும் கொண்ட சுதந்திரமான கட்சியாக இருக்க வேண்டும் -மார்க்ஸ். மார்க்ஸ் மக்கள் அதிகாரத்தைப் பற்றித்தான் கூறுகிறார்.

    மருதையன் முன்னுரையோடு முழக்கத்தோடு கோவன் பாடும் இந்தப் பாடலின் காண்பிக்கப்படும் காட்சியமைப்பில் ஜெயலலிதாவை மட்டுமே டாஸ்மாக்கிற்கான குற்றவாளியாக காட்டுகிறார்கள்.
    ஜெயலலிதாவல் தான் டாஸ்மாக் தொடங்கப்பட்டது என்பது மட்டுமா பிரச்சனை. அவருக்குப் பிறகு ஐந்தாண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்துள்ளார். டாஸ்மாக்கை மூடுவதற்கு கருணாநிதி என்ன செய்தார் என்று ம.க.இ.க.வினர்தான் விளக்கமளிக்க வேண்டும். சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற தேர்தல் அரசியலை மையமாகக் கொண்ட கட்சிகள் கூட்டணி சமயத்தில் சார்புத்தன்மையோடு செயலாற்ற்வதில் ஒரு காரணம் இருக்க முடியும்.
    தேர்தல் பாதை திருடர் பாதை எனத் தொண்டை கிழிய கத்திவிட்டு சார்பு நிலை எடுப்பது திருட்டுத்தனத்தில் தானே சேர்க்க முடியும்.

  26. “அதிமுக பிரிவு”- ல் இவ்வளவு பெரிய அறிவாளியா?
    “கழுதை மேய்க்கிற பயலுக்கு இம்பூட்டு அறிவா?” ன்னு பொறாமை படப்போறாங்க . . .!!!
    சுத்திப் போடச் சொல்லுங்க வீட்ல . . .

Leave a Reply to Stalin பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க