NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !

தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

NSA-வில் கைது  செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை ! கொலைகார போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் இராஜு உரை !

வன் குற்றவாளியோ அவனே அந்த வழக்கை விசாரித்தால் எப்படி இருக்கும்? அத்தகையதொரு சூழலின் நேரடி சாட்சியம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளும், கைதுகளும். படுகொலை செய்த போலீசு, மக்களையும் மக்களுக்கு ஆதரவாக நின்ற புரட்சிகர, ஜனநாயக அமைப்பினரையும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது.

குறிப்பாக மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்து அச்சுறுத்தியது. மக்கள் அதிகாரம் அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அது பயங்கரவாத அமைப்பு என்று பரப்புரை செய்தது. தூத்துக்குடி போராட்ட பேரணியில் கலந்து கொண்ட 6 மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது.

இத்தனை ஒடுக்குமுறைகளையும் சட்டரீதியாகவும், மக்கள் மத்தியில் பிரச்சாரமாகக் கொண்டு போய் எதிர்கொண்டது மக்கள் அதிகாரம் அமைப்பு. குற்றம் செய்த போலீசு அதிகாரவர்க்கத்தின் பொய்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று அறைகூவியது. இது தொடர்பாக போலீசு போட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும், பிற பொய்வழக்குகளையும் எதிர்த்தும், போலீசின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்வைத்து வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 14, 2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் சிடிசெல்வம், பஷீர் அகமது ஆகியோர் வழங்கினர். இத்தீர்ப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் செல்லாது என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கில், போலீசுத் துறையின் கீழ் செயல்படும் சிபிசிஐடி போலீசே குற்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசை விசாரிப்பதை ஏற்கமுடியாது என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ எடுத்த நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு வெகு சாதாரணமாகக் கிடைத்த தீர்ப்பல்ல. தூத்துக்குடி படுகொலையில் போலீசே குற்றவாளி என்பதை நிரூபிக்கவும், சட்டவிரோதமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் தகர்க்கவும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் பெரும்பங்கு செலுத்தியுள்ளனர்.

இந்த வழக்குகள் கடந்து வந்த பாதையையும், போலீசின் பொய்கள் முறியடிக்கப்பட்ட பின்னணியையும் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராஜு.

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்