ரியான் ஜார்ஜ், 47 வயதான கேரள மீனவர். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து தனது மீன்பிடி படகுடன் கிளம்பி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 150 பேரைக் காப்பாற்றி இருக்கிறார் மரியான். மத்திய அரசிடம் இருந்து கோரிய அளவுக்கு ஹெலிகாப்டர்களோ மீட்புப் படையோ வந்து சேராத நிலையில், மக்களைக் காப்பாற்ற சுமார் 2,800 மீனவர்கள் களமிறங்கி உள்ளனர்.

இம்மீனவர்கள் பெரும்பாலும் தமது சொந்தப் படகுகளையே மீட்புப் பணிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவர்கள் காப்பாற்றப்படுபவர்களிடம் இருந்து கூலியையோ வேறு சன்மானங்களையோ எதிர்பார்ப்பதும் இல்லை, அவர்களாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதும் இல்லை. எனினும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அரசு சார்பாக உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் ஈடுபடும் தன்னார்வலர்களும் மீனவர்களும்

கேரளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், மொத்த இந்தியாவையும் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மொழி இன பேதமின்றி எல்லாத் தரப்பு மக்களுக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர். மசூதிகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோவில்களிலும் மதம் கடந்து எல்லாப் பிரிவு மக்களும் தஞ்சமடைந்துள்ளனர். இது பக்ரீத் நாள். மலப்புரத்தில் உள்ள நிலாம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள் இசுலாமிய மக்களோடு சேர்ந்து ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கேரள மீனவர்களோடு தமிழக மீனவர்களும் இணைந்துள்ளனர். உதவிகள் பல்வேறு திசைகளில் இருந்தும் குவிந்து வருகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வரும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைத் துயரில் இருந்து மீட்க தங்களால் இயன்ற அளவுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். எனினும் இந்தப் பேரவலத்திலும் நெற்றிக் காசைத் திருடித் தின்னும் ஈனத்தனங்கள் நாம் எதிர்பார்த்த திசையில் இருந்து வருவதையும் காண முடிகின்றது.

சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள உதவித் தொகை வெறும் 600 கோடி ரூபாய். இந்நிலையில் ஐக்கிய அரேபிய அமீரக அரசு, கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்க முன்வந்ததுள்ளது. எனினும், பேரிடர் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை ஏற்றுக் கொள்வது மரபில்லை என்பதால் இத்தொகை கேரள அரசுக்குக் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக வரி செலுத்தும் தென்னிந்திய மாநிலங்களிடம் இருந்து அட்டையாக உறிஞ்சிக் கொள்ளும் இந்திய அரசு, இந்த மாநிலங்களின் துயரைத் துடைக்காமல் இருப்பதோடு  வெளியில் இருந்தும் உதவிகள் கிடைப்பதை சில்லறையான விதிமுறைகளைக் காரணம் காட்டித் தடுக்க முயற்சிக்கின்றன. இது ஒருபுறம் என்றால், ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீட்புப் பணியில் ஈடுபடும் பொதுமக்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதைச் செய்வது தங்களது தொண்டர்கள்தான் என்று விளம்பரம் செய்து வருகின்றது.

(கேரள விவசாயத்துறை அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தைப் போட்டு ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டதாக ஒரு சங்கி பரப்பிய செய்தியை அம்பலப்படுத்தியிருக்கிறார் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்)

மேலும், தங்கள் அமைப்பான சேவா பாரதியை தவிர வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தால் அதைக் கொண்டு முசுலீம்களையும் கிறித்தவர்களயுமே பாதுகாப்பார்கள் என்று இன்னொரு பக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்  இந்துத்துவக் காலிகள். இது ஒரு நோய் பீடித்த மனநிலை.  இந்த மனநிலை கேரளத்திற்கு வெளியில் மட்டுமில்லை – உள்ளேயும் இருக்கத்தான் செய்கிறது.

பல பிராமண இந்துக்கள் தம்மைத் தொடாமல் படகில் ஏற அனுமதித்தால் மட்டுமே படகில் ஏறுவதற்குச் சம்மதித்ததாகக் கூறுகிறார் மீனவர் மரியான் ஜார்ஜ்

இந்தச் செய்திக் கட்டுரையின் துவக்கத்தில் அறிமுகமான மரியான் ஜார்ஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லத்தை அடுத்துள்ள பகுதி ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை அறிந்து அவர்களை மீட்கச் செல்கிறார். மரியானின் படகைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள்,  ”நீ ஒரு கிறித்தவனா?” எனக் கேட்டுள்ளனர். மரியான் ’ஆம்’ என பதிலளித்ததும், ”உனது படகில் நாங்கள் ஏற மாட்டோம்” என மறுத்துள்ளனர்.

மீண்டும், ஐந்து மணி நேரம் கழித்து அதே பகுதிக்குச் சென்றுள்ளார் மரியான். இப்போதும் காப்பாற்ற யாரும் வராததால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அவர்கள் மரியானை உதவிக்காக அழைத்துள்ளனர். எனினும், தங்கள் வீட்டார் யாரையும் மரியான் தீண்டக் கூடாது என்கிற உத்தரவாதத்தின் பேரிலேயே அவர்கள் படகில் ஏறியுள்ளனர். மரியான் மட்டுமின்றி தன்னுடன் பேசிய வேறு சில மீனவர்களுக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது என்கிறார் சி.என்.என் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட போது சேதாரமான தனது படகுடன் அருண் மைக்கேல்

அருண் மைக்கேல் என்கிற மற்றொரு மீனவர் சுமார் 1500 பேரை மீட்டுள்ளார். வெள்ள பாதிப்பை அறிந்த உடன், தனக்கு சொந்தமான 32 அடி நீள படகை லாரியில் ஏற்றி பத்தனம்திட்டாவுக்குச் சென்றுள்ளார். அருணின் அனுபவத்தில், மேட்டுக்குடியினர் பலரும் மீட்புப் பணிக்கு வரும் மீனவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைத் திருடிச் சென்று விடுவார்களோ என அஞ்சியுள்ளனர். வேறு சிலர் தங்கள் செல்லப் பிராணிகளை முதலில் படகில் ஏற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். மற்றும் சிலர் வீட்டிலிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை விட்டு வர மனமின்றி உணவை மட்டும் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

“எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” – அருண் மைக்கேல் தனது மகளுடன்

இது போன்ற புறக்கணிப்புகளால் மீனவர்கள் மனம் சோர்ந்து விடவில்லை என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. ”இப்போது என்ன நடந்ததோ, அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். நாளையே எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” என்கிறார் அருண் மைக்கேல்.

எளிய மனிதர்களின் எளிய மனங்கள்தான் எத்தனை வெளிப்படையாக இருக்கின்றன… பார்ப்பனிய சூது-வாதுகள் அந்த மனிதர்களை அடைந்து விடாமல் கடல் தடுத்து நிறுத்தும் என்று நம்புவோம்.

மேலும் படிக்க:

Kerala floods: Some fishermen recruited for rescues say survivors insulted them