அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள் ? கருத்துக் கணிப்பு

கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கித் தந்தது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயமரியாதையும் அது மூட்டிய கோபக் கனலும்தான். நீதிமன்றம் அதை மறுத்திருந்தால் கூட மக்கள் மன்றம் அதை மீட்டிருக்கும் நிலை இருந்ததா இல்லையா?

“கலைஞரின் நினைவேந்தலுக்கு அமித்ஷாவை அழைத்தது குறித்த விமர்சனங்கள் கடுமையாக இருக்கின்றன. அழைத்தது அமித்ஷாவை அல்ல, பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவரை.

விசிக தலைவர் திருமாவளவனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “எதிரிகளை ஜனநாயகப்படுத்துவதில்தான் தொடங்குகிறது இலக்கு நோக்கிய வெற்றி ”

என்கிறார், நியூஸ் 7 நெல்சன் சேவியர்.

தத்துவஞானி சேவியரின் மேற்கோளில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று அமித்ஷா வேறு, பாரதிய ஜனதா வேறு. நீங்கள் அமித்ஷாவை வெறுத்தாலும் பாரதிய ஜனதா எனும் ஆளும் கட்சியை அங்கீகரித்தாக வேண்டும். இரண்டாவதில், பாரதிய ஜனதாவோ, அமித்ஷாவோ உங்களது எதிரிகளே என்றாலும் அவர்களை திருத்துவது அதாவது ஜனநாயகப்படுத்துவது உங்களது இலட்சிய பயணத்தின் தொடக்கம்.

காரியவாதத்திற்கு பொருத்தமான வார்த்தைகள் அதாவது நியாயப்படுத்தும் விளக்கங்கள் கிடைக்காத போது கைப்பிள்ளையே களத்தில் இறங்கி “கையப் பிடிச்சி இழுத்தியா – இழுப்பதும் கையே, இழுக்கப்படுவதும் கையே, இரண்டுமே கைகள்தான், இனி இருக்கப்போவதும் இணைக்கப்போவதும் ஒரு ஜோடி கை அல்ல, ஒராயிரம் இல்லையில்லை, பலப்பல கோடி ஜோடி கைகளே! என்பதாக புது தத்துவம் கசிகிறது.

கட்சி வேறு, நபர் வேறு என்பதை மூளை வேறு கிட்னி வேறு என்று கூட பொருள் கொள்ளலாம். இல்லையில்லை இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்றால் பழமொழியை அனுபவிக்கணும், ஆராயக் கூடாது எனும் ஆழ்வார்பேட்டையின் சித்திரத்தில் கிரேஸ் மோகன் அருளிய நவீன கவிதையைக் கூட ஆதாரம் காட்டலாம்.

நேல்சன் சேவியரின் “அண்ணன் வேறு அமைப்பு வேறு” கவிதையை இன்னும் இழுத்தால்…

அழைத்தது சங்கரராமன் புகழ் ஜயேந்திரன் அல்ல, சங்கர மடத்தின் தலைவரை
அழைத்தது கோகுல் புகழ் யுவராஜை அல்ல, கொங்கு இளைஞர் அணி தலைவரை
அழைத்தது எச்.ராஜாவை அல்ல, தேசியக் கட்சியின் செயலர் ஒருவரை
அழைத்தது ஹிட்லரை அல்ல, நாசிக் கட்சியின் தலைவரை
அழைத்தது நிர்மலாதேவியை அல்ல, கல்லூரி பேராசிரியர் ஒருவரை

இப்படியாக அழைத்துப் பார்த்தால் இறுதியில் ஊழல் எதிர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் கூட்டம் ஒன்றிற்கு நீங்கள் அழைத்தது வைகுண்டராஜனை அல்ல, தாது மணல் விவி மினரல்ஸ் ஆலை அதிபர் மற்றும் நியூஸ் 7 தமிழ் உடமையாளரை…….

எதிரியை ஜனநாயகப்படுத்துவதில் துவங்குகிறது நம் இலட்சியப் பயணத்தின் வெற்றி எனும் தத்துவ முத்தை எப்படி விளங்கிக் கொள்வது?

இர்ஷத் ஜஹான் போலி மோதல் படுகொலையின் குற்றவாளிகளை தண்டிப்பதெல்லாம் ஜனநாயகத்தில் வராதா? தபோல்கர்,  கௌரி லங்கேஷ் இன்னபிற ஜனநாயகவாதிகளைக் கொன்றவர்களை நியாயப்படுத்தி கொலைகாரர்களின் பின் நிற்கும் இயக்கங்கள், கட்சியினர், பிரதமரெல்லாம் எந்த ஊர் ஜனநாயகத்தில் வருகிறார்கள்?

ஜனநாயகத்தின் பாதுகாப்போடு துரோகம், சந்தர்ப்பவாதம், காரியவாதம், பிற்போக்குத்தனம் போன்றவற்றை ஒருவரோ ஒரு கட்சியோ செய்தால் மக்களிடையே அவர்களை அம்பலப்படுத்துவர்களா இல்லை இதுதான் இலட்சிய ஜனநாயகம் என்பீர்களா?

ஆளுக்கொரு வாக்கு என்பது கூட்டுறவு சங்கத் தேர்தலின் ஜனநாயகம், பங்குக்கொரு வாக்கு என்பது கம்பெனிகளின் ஜனநாயகம். எனில் ரிலையன்ஸ் அம்பானியும், தஞ்சாவூர் கூட்டுறவு சங்க விவசாயத் தலைவரும் சரிக்கு சமமான ஜனநாயகவாதிகளா?

நெல்சன் சேவியரின் கல்லூரித் தோழரும், தி.மு.க-வின் பேச்சாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா திராவிடர் கழகத்தின் Prince Ennares Periyar எழுதிய பதிவை வழிமொழிகிறார். இதன் மூலம் பிரசன்னா என்ன கூற விரும்புகிறார்?

#அமித்ஷா_வருகை – வெகு இயல்பானது. நிறைய யோசிக்கவோ, வருந்தவோ அவசியமில்லை. இறப்பின் பின்னான நிகழ்வுகள் வழக்கமான அரசியல் பார்வையின்றி பார்க்கப்படவேண்டியவை. அப்படித் தான் நாம் பழகியிருக்கிறோம். எதிரியே ஆயினும் நாம் நடந்துகொள்ளும் விதம் அது தான். go back modi, go back amitsha போட்டு விரட்டிய நாம் தான் கலைஞர் புகழைக் காண, திராவிட இயக்கத் தலைவரின் புகழைக் காண அழைக்கிறோம். வந்து பார்த்துச் செல்லட்டும்…..

அவர்களின் வருகையால் மேடை தீட்டுப்பட்டுவிடாது. அதீத சுத்தவான்களாக நம்மைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அதே நாகரிகத்தை நாம் முன்னெடுப்பதே நமது பண்புக்குச் சான்று. இந்தியாவை ஆளும் கட்சி என்னும் வகையில், அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும், அதற்கு யார் வரலாம் என்று அவர்கள் முடிவெடுக்கிறார்களோ, அவர்களை ஏற்று வரவேற்பதும் அத்தகைய பண்பின் அடிப்படையிலானதே!

தீட்டு, சுத்தம் போன்றவை பார்ப்பனியம் உருவாக்கிய அநாகரீகங்கள். அந்த அநாகரிகங்களது அரசியல் அதிகாரத்தின் சின்னமான பா.ஜ.கவை பார்க்காமல் இருப்பதும், அழைக்காமல் இருப்பதும் அதீத சுத்தம் பார்க்கும் மேட்டிமைத்தனமாம். தம்பி வில்சனை அண்ணன் பிரசன்னா அட்சரம் பிசகாமல் பின் தொடர்கிறார்.

அதன்படி கௌரி லங்கேஷ் கொலைகாரர்களையோ, பெஹ்லுகான் கொலைகார்களையோ கொலைகாரர்களை கருத்து – களத்தில் ஆதரிக்கும் கயவர்களையோ அழைத்து மேடையேற்றினால் ஒன்றும் குடி முழுகிவிடாது. மட்டுமல்ல, அந்தக் கயவர்களுக்கு கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” கதையை போட்டுக் காட்டி அசத்துகிறார்களாம்!

அமித்ஷா அழைப்பை ஒட்டி தி.மு.க. உடன் பிறப்புகளின் விளக்கங்கள் இப்படித்தான் இருக்கின்றன. தேர்தல் அரசியலின் வரம்பு இதுதான் என்று சமாதானப்படுத்திக் கொள்பவர்களும் தேர்தல் அரசியலை எதோ ஒரு ‘ஒழுக்கம்’ சார்ந்து எதிர்ப்பவர்களும் இந்தப் பிரச்சினை மூலமாக ஒன்றை அறிவது சாலச்சிறந்தது. தேர்தல் அரசியல் என்பது ஏதோ நல்லதை தெரிவு செய்யும் சுத்தபத்தமான ஜனநாயக நெய் அல்ல! இந்தியாவைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொழுப்பை மணமாகவும், ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நீட்டிக்கும் ‘காயகல்பமாகவும்’ இருக்கிறது.

அதாவது ஆளும் வர்க்கத்தின் இருப்பை முற்றிலும் எதிர்ப்போரை சற்று தளர்வுறச் செய்வதற்குத்தான் தேர்தல் அரசியலே அன்றி அதன் மூலம் நமக்கு சமத்துவமோ, நீதியோ கிடைப்பதில்லை. சொல்லப் போனால் நீதி கிடைப்பதான மாயையை உருவாக்குவதே அதன் மூலம். மட்டுமல்ல இது  போலி ஜனநாயகமும் கூட.

ஆனால் இந்த போலி ஜனநாயக அமைப்பு பலரையும் தின்று சீரணித்து விட்டது. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 இனப்படுகொலை, மாட்டுக்கறி படுகொலைகள் இதையே எத்தனை காலம் சொல்வீர்கள்? என்று கொஞ்ச நஞ்சம் முற்போக்கு பேசியவர்கள் சிலர் கூட இன்று பாரதிய ஜனதாவை ‘திருத்தும்’ வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் என்ன இருந்தாலும் அது ஆளும் கட்சி, அரசு, பெரிய கட்சி, தேசியக் கட்சி என்ற சமாளிப்புகள்……

தமிழகத்தில் மோடி ஆட்சிக்கு பிறகு பாரதிய ஜனதா ஒரு மாபெரும் கட்சி என்பதாக அரசு எந்திரம், ஊடகங்கள், மூலம் பொதுப்புத்தியில் நிலை நாட்டப்பட்டு வருகிறது. இன்று என்ன தலையங்கம் எழுத வேண்டும், என்ன விவாதம் நடைபெற வேண்டும், யாரெல்லாம் அதில் பங்கேற்க வேண்டும் வரை அனைத்தையும் கமலாலயமே தீர்மானிக்கிறது.

கல்வியில் தமிழ் இல்லை, நீட்டில் தமிழ் மாணவர்களுக்கு இடமில்லை, நீதிமன்றத்தில் தமிழ் இல்லை, கோவில் கருவறைகளில் சூத்திர பஞ்சமர்களுக்கு இடமில்லை, தனியார்மயம் காரணமாக அரசு வேலையே இல்லை எனும் இட ஒதுக்கீடும் இல்லை………. இந்த இல்லையில்லை எனும் முழு அம்மண நிலையில் தி.மு.க உடன்பிறப்புகள் எந்த இலட்சியப் பயணத்தை செய்யப் போகிறார்கள்? அமித்ஷாவை மேடையேற்றினால் தவறில்லை என்றால் திராவிட இயக்கத்தின் சமூகநீதியோ சமத்துவமோ இனி பெரிய அளவுக்கு சாத்தியமில்லை என்று ஒத்துக் கொள்ளலாமே?

கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கித் தந்தது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயமரியாதையும் அது மூட்டிய கோபக் கனலும்தான். நீதிமன்றம் அதை மறுத்திருந்தால் கூட மக்கள் மன்றம் அதை மீட்டிருக்கும் நிலை இருந்ததா இல்லையா?

தி.மு.க-வின் அமித்ஷா டிப்ளமசியை பல்வேறு தி.மு.கவினரே கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். அந்தக் கண்டிப்பு தமிழகத்தின் முற்போக்கு அரசியல் பேசும் மக்களின் பலத்தில் இருந்து எழுகிறது. தமிழகம் இந்துத்துவத்தின் கல்லறை என்பதை சாத்தியப்படுத்த நாம் இன்னமும் அதிகமாய்  போராட வேண்டியிருக்கிறது.

இனி கருத்துக் கணிப்பின் கேள்வி:

அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள்?

கடுமையான கண்டனம்
அரசியல் நாகரீகம்
தவறு, பெரிய பிரச்சினையில்லை
தேர்தல் அரசியலில் சகஜம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

4 மறுமொழிகள்

  1. திமுக வேறு , கருணாநிதி வேறு என்று பொழிப்புரை எழுதிய வினவை என்ன செய்யலாம்?!

Leave a Reply to mohan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க