நடந்தாய் வாழி மக்கள் அதிகாரம்

பொங்கி வரும்
விடுதலைப் பெரு நதிகள்
சற்று,
தங்கிச் செல்லும்
தடுப்பணைகள்
சிறைக் கூடங்கள்.

போராட்ட நதி பெருக்கே!
ஓடும் போது
நீ விவசாயம்
தடுக்கும் போது
நீ மின்சாரம்.

ஆனால்… ஆனால்..
அணைகள் உடையும்
காலம் இது!

மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் சொல்லப்படும் அவலம்.

கட்டமைப்பே
காலாவதி
கொள்ளிடத்தின் மீதென்ன
குற்றம்?

மணல் திருடர்கள்
சொல்கிறார்கள்,
கரை மீறிய காவிரி
பயங்கரமாம்!

மலைத் திருடர்கள்
சொல்கிறார்கள்,
நிலம் சரியும்
நீல மலை
ஆபத்தாம்!

வனக் கொலையாளிகள்
‘ஸ்னைப்பர்’ துப்பாக்கியின்
ஆவி பறக்க
கதை அளக்கிறார்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
வன்முறையைத்
தூண்டுகின்றனவாம்!

தேசக் கொள்ளையர்கள்
தெரிவிக்கிறார்கள்,
மக்கள் அதிகாரம்
தேசவிரோதியாம்!
மக்களை,
தூண்டி விடுகிறார்களாம்.

தூண்டுதல் இன்றி
துலங்கும் காட்சி ஒன்று
உலகில் உண்டா?

இயற்கையின் தூண்டுதல்
இப் புவிக்கோளம்.
புவி அமைப்பின் தூண்டுதல்
நம் உயிர்க் கோலம்.

ஈரம் வந்து
வேரைத் தூண்டாமல்
ஏது செடி?

செடியை வந்து
ஒளிக்கதிர் தூண்டாமல்
ஏது மலர்?

மலரை வந்து
வண்டு தூண்டாமல்
ஏது தேன்?

காணும் ஒவ்வொன்றிலும்
தூண்டுதலின் இயக்கம்
மக்கள் அதிகாரம்
மக்களின் இதயத்தின்
இயக்கம்!

நதிகளும்
நாங்களும் ஒன்று,

காவிரி காய்ந்தால்
கழனிகள் காயும்,

கழனிகள் காய்ந்தால்
கருவறையும் காயும்,

மகசூல் இல்லாத
ஊரில்
மகவு சூலும்
இல்லாது போகும்…

ஆனாலும்…
காய்ந்தது போல்
தோன்றும்…

நடை
ஓய்ந்தது போல்
தோன்றும்,

திடீரென
பாய்ந்து வரும்
உணர்ச்சிப் பெரு நதியை
தடுக்க முடியாமல்,

பொய் நா தெறித்து
புறம் பேசும்
நாணல்கள்
தலை சுற்றும்!

பழைய கோலங்கள்
மாறும்.
புதிய நியாயங்கள்
வாழும்!

கண் துஞ்சாது
பசி அறியாது
கடை மடைக்கு
நீர் பாய்ச்சி
விளை நிலத்தை
பாதுகாக்கும்
விவசாயி போல்,
வன் நெஞ்ச அரசின்
பொய் – களையெல்லாம்
வேரறுத்து,
மண்பசை காத்த
மாண்புமிகு வழக்கறிஞர்களே!

தண்டனையை விட
தாளாத கொடுமை
சட்டப்போராட்டம்!

சாதாரணமல்ல,
உயிர் வலி தாங்கி
பனிக்குடம் உடைத்து
வேதனையின் முடிவில்
புத்துயிர் களிக்கும்
போராட்ட மகிழ்ச்சியின்
தாய்மடி நீங்கள்.

உங்கள்,
தன்னலமில்லா
உழைப்பின் ஈரத்தில்
தாய் நிலம் சிலிர்க்கிறது!
தரு நிழலும் வாழ்த்துகிறது!

நெஞ்சின்
கரு மணலை
நெறித்த போதும்,

நிழலாடும்
உழைக்கும் மக்களோடு
உறவாடும்,

அன்பின் பொழுதையெல்லாம்
பறித்த போதும்,

உண்மையின் உதடுகளை
சிதைத்த போதும்,

ஊற்றுக் கண்களையே
ஒடுக்கிய போதும்,

அக்கரையில் தவிக்கும்
அக்கா குருவியின்
ஒற்றைக் குரலுக்கும்
பொறுப்பான  அக்கறையோடு,
இத்தனைக்கும் பிறகும்
கரை வந்த
காவிரி போல்
சிறை மீண்ட தோழர்களே!

உணர்வுகளை
சிறைபடுத்த மறுத்ததால்
உங்கள்
உடல் சிறைபட்டது.

ஆனாலுமென்ன,
மக்களுக்காக வாழும்
உங்கள் உணர்ச்சிகள்
பலர் உடலெங்கும்
வெளிப்பட்டது! செயல்பட்டது!

நீங்கள்,…
மண்ணின் விசை
மக்கள்,
கண்ணின் பசை!
வையமே வாழ்த்துகிறது
நடந்தாய் வாழி காவிரி!
நடந்தாய் வாழி
மக்கள் அதிகாரம்!

 துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் | துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்