மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

மோடியின் “உலகின் மிகப்பெரிய அளவிலான” பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டமும் மக்களின் வரிப்பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதற்கே.

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று “உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன் பெயர் ”பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா”.

மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு மருத்துவத் திட்டங்கள் வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த ’பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’தான்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாஇத்திட்டம் குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது மோடி அரசு. அமெரிக்காவின் “ஒபாமா கேர்” என்ற மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தோடு இதனை ஒப்பிட்டு அப்போது இத்திட்டத்தை மோடி ஆதரவு ஊடகங்கள், ’மோடி கேர்’ திட்டம் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தன.

இத்திட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் மோடி.

உலகில் எந்த நாடும் செய்திராத அளவிலான அரசு நிதியளிக்கும் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் இது என்றும் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமான அளவிலான மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார் மோடி.

ஆனால் உலகின் மிகப்பெரிய திட்டம் என்று மோடியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ.2000 கோடி மட்டுமேயாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டம், நாடு முழுவதும் 1,50,000 சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களை உருவாக்குவது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1200 கோடியை ஒதுக்கியது மோடி அரசு. அதாவது ஒரு மையத்துக்கு ரூ. 80,000 மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த 80,000 ரூபாயை வைத்துக் கொண்டு பழைய சுகாதார மையங்களுக்கு பெயிண்ட் அடித்து புதுப்பிக்க முடியுமே அன்றி கண்டிப்பாக புதிய மையங்களை உருவாக்க முடியாது. ஆயுஷ்மான் பாரத்தின் திட்டத்தின் கீழ் வரும் இத்திட்டமும் ஒரு ஜூம்ளா-தான் என்பதை இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை வைத்தே சொல்லாமல் சொல்லியிருக்கிறது மோடி அரசு.

ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டமான இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நடப்பாண்டு நிதிநிலையறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2000 கோடி ஆகும். இத்திட்டம்தான் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் மோடி.

இத்திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கவிருப்பதாக நடப்பாண்டு  நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது மத்திய அரசு. ஒரு சிறிய கணக்கு ஒன்றை போட்டுப் பார்ப்போம். இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்கள் தலா ரூ.5,00,000 வரையிலான மருத்துவக் காப்பீட்டுத்தொகையாக பெறமுடியும். இத்தொகையில் 1% (ரூ.5000) தொகையை மட்டுமே 10 கோடி குடும்பங்கள் கோரிப் பெறுகின்றனர் என்று வைத்துக் கொண்டாலுமே குறைந்தபட்சம் ரூ. 50,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்ட 1% என்பது மிகச் சிறியது. நடைமுறையில் இதை விட அதிகமான தொகையே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோரப்படும்.

இவர்கள் ஒதுக்குவதாக கூறியுள்ள தொகையைக் கொண்டு கணக்கிடுவோம். 10 கோடி குடும்பங்கள் பயனடையவிருக்கின்றனர் எனில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்கப்படக் கூடிய தொகை வெறும் ரூ.1100 ஆகும். எனில் நடைமுறையில் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு ஒருமுறை பல் பிடுங்க மட்டுமே இந்த பணம் போதுமானதே ஒழிய எவ்விதத்திலும் இது மக்களை நோயிலிருந்து காக்கப் போவது இல்லை.

மோடியின் அறிவிப்புப் படி சரியாக 50 கோடி பயனர்களுக்கு இந்த தொகையை பிரித்துப் போட்டால், நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.220 மட்டுமே இன்சுரன்ஸ் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகையும் கூட அந்த ரூ.10,000 கோடியை மோடி அரசு ஒதுக்கினால்தான்.

மோடி அரசு சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்த வரலாறையும் சிறிது பார்க்கலாம். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட போது ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கு 11.8% அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டிருப்பதாக பெருமை பீற்றியது மோடி அரசு. ஆனால் சிறிது நுணுக்கமாக கணக்கிட்டால் மோடி அரசின் பித்தலாட்டம் அம்பலப்படும்.

மோடிகடந்த 2017-2018 –ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்துக்கு ரூ.48,878 கோடி ஒதுக்கிய பிறகு மறுமதிப்பீட்டு நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.53,294 கோடியாகும். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.54,600 கோடியாகும். இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெறும் 2.7% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

“உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத்திட்டம் என்பதும் மிகப்பெரிய கட்டுக்கதையே. ஒதுக்கப்படும் நிதியை வைத்துப் பார்த்தாலும் கூட உலகிலேயே மிகப்பெரிய திட்டம் எனக் கூற முடியாது. ஏனெனில் பல்வேறு நாடுகள் இதனை விட அதிகமாக செலவிடுகின்றன. உலக நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி)  பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதி அளவின், சராசரி 5.99% ஆகும். ஆனால் இந்தியா வெறும் 1.2% மட்டுமே ஒதுக்குகிறது.

கணக்கில் முன் பின் இருந்தாலும் இந்த காப்பீட்டுத்திட்டம் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். ஏற்கனவே 1 இலட்சத்திற்கும் குறைவாக இருந்த காப்பீட்டுத்தொகை தற்போது 5 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். அது நல்லதுதான். ஆனால் யாருக்கு நல்லது என்பதுதான் கேள்வி.

இந்தியா முழுவதும் அரசு சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏழை மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இன்றி நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் போக்கவே இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இனி மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் என்று மோடி உட்பட அனைத்து தனியார்மயதாசர்கள் கூறிவருகின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் அரசு மருத்துவமனை போதுமான அளவில் இல்லை என வருத்தப்படுபவர்களாக இருந்தால் 1,50,000 மருத்துவமனைகளைக் கட்ட வெறும் தலா ரூ.80,000 –ஐ ஒதுக்கியிருப்பார்களா?

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களான கலைஞர் காப்பீட்டுத்திட்டம், அம்மா காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் ராஸ்டிரிய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா” போன்றவற்றின் கீழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு போவது யார்?

ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்று எடுத்துக் கொண்டால், அதனை அரசு மருத்துவமனையில் எவ்வித கூடுதல் கட்டணமின்றியும் செய்து கொள்ள முடியும். இதையே காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் செய்யும் போது, புதிய புதிய மருந்துகள், தேவையற்ற கூடுதல் மருந்துகள், உபகரணங்கள் என அவற்றிற்கு தனியாக பணம் பிடுங்கி வெளியே அனுப்புவதுதான் வாடிக்கை.

அரசு மருத்துவமனைகளுக்கான அடிப்படை வசதிகளைக் கைவிட்டு விட்டு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்கு பணம் ஒதுக்குகிறார் மோடி

கூடுதலாக உங்களது காப்பீட்டின் கீழ் எவ்வளவு பணம், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு நாட்கள் உங்களை மருத்துவமனையில் இருத்தி வைத்திருப்பது, ஒரு வேளை உங்களது மருத்துவக் காப்பீட்டின் பணம் குறைவாக இருந்தால் 4 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வைப்பதற்குப் பதிலாக 2 நாட்களில் கிளப்பி விடுவதும் நடைமுறையில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளாக இருக்கின்றன.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல், அங்குள்ள சிறப்புப் பிரிவுகளை தனியார்வசம் ஒப்படைக்கும் வேலைகளை சத்தமின்றி செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் காப்பீட்டு அட்டையின் அடிப்படையில் கிடைக்கும் தொகையைக் கொண்டு தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இது மருத்துவ சேவையிலிருந்து அரசு தமது கையைக் கழுவிக் கொள்ளும் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியே. இப்போது அதனைத் தீவிரப்படுத்தவே இத்தகைய காப்பீட்டுத் தொகை உயர்வை அறிவித்து கொள்ளைப் புற வழியே அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழாவை நடத்துகிறது மோடி அரசு.

கடந்த 2017-ம் ஆண்டு அத்தியாவசிய மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்தி, மருந்து மாஃபியாக்களின் கொள்ளையைக் கட்டுப்படுத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் ஸ்ரீநிவாசனை அப்பதவியிலிருந்து மோடி அரசு வெளியேற்றியது நினைவிருக்கலாம்.

அடுத்ததாக அப்பதவிக்கு வந்த பூபேந்திர சிங், ’ஸ்டெண்ட்’ என்னும் மருத்துவ உபகரணத்திற்கான விலையைக் கட்டுப்படுத்தி உத்தரவிட்டார். இது பல வெளிநாட்டு ஸ்டெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்குக் குடைச்சலைக் கொடுத்தது. இதன் காரணமாக அப்பதவியிலிருந்து பூபேந்திர சிங் அவர்கள், மோடி அரசால் தூக்கியெறியப்பட்டார்.

இவ்விரு சம்பவங்களிலிருந்துமே மோடி அரசு யார் நலனுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கு ரூ.5,00,000 மருத்துவக் காப்பீட்டுப் பணம் என்ற மோடியின் இந்த அறிவிப்பை, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி அறிவித்த ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15,00,000 போடுவதாக மோடி கூறிய வாக்குறுதியோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். மோடியின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும்.

2 மறுமொழிகள்

  1. மோடி கேர் மருத்துவகாப்பீட்டுத்திட்டம் பல் புடுங்கக்கூட இல்லை *மயிரு” புடுங்ககூட(எச்ச ராஜா கூறிய அதே மயிர்) பயன்படாது….

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க