ரூபாய் 60,000 கோடி மதிப்பிலான ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அனில் அம்பானி, தசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பிர் ஆகியோர் மீது முன்னாள் பாஜக அமைச்சர்களான யஸ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும்  வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும் சி.பி.ஐ-யில் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

இப்புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

1. “2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மோடியுடனான சந்திப்பின் போதுதான் பாதுகாப்பு துறையிலும் (அம்பானி) நுழைய வேண்டும் என்று மோடி கேட்டு கொண்டதாக அம்பானி ஊடகங்களிடம் ஒத்துக்கொண்டிருக்கிறார். அம்பானிக்கும் மோடிக்கும் இடையிலான புரிந்துணர்வு இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

இத்தேதியில் 2ஜி குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருந்தார் அம்பானி. குற்ற விசாரணையில் இருந்த அம்பானியுடன் முக்கியத்துவமிக்க பாதுகாப்புத்துறை குறித்து  பிரதமர் மோடி விவாதித்திருப்பது சாதாரணமாக கடந்து போகக் கூடிய விசயம் அல்ல. மேலும் அச்சமயத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான எந்த வர்த்தகத்திலும் அம்பானி ஈடுபடவில்லை. அம்பானி இதுவரை எந்த ஒரு முதலீடும் செய்திராத பாதுகாப்புத்துறை குறித்து  பிரதமர் விவாதித்தது சட்டரீதியான  உரையாடலும் அல்ல.

குற்றச்செயலுக்கு 37 நாட்களுக்கு முன்னதாக “பிப்பாவவ் இஞ்சினியரிங் லிமிடெட்” என்கிற நிறுவனத்தின் 17.7% பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் அதன் நிர்வாகத்திற்குள் நுழைகிறார் அம்பானி. அச்சமயத்தில் அம்பானியின் நிறுவனங்கள் மலையளவு கடனில் இருந்தன. மோடியின் ஆலோசனைப்படி கேந்திரமான பாதுகாப்பு துறையில் நுழைந்திருக்கிறார் அம்பானி. மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் பாதுகாப்புத் துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.

2. அப்புகாரில் “2014-ல் தசால்ட் மற்றும் எச்.ஏ.ல் நிறுவனங்களுக்கு இடையேயான வேலைப்பிரிவினை ஒப்பந்தத்தில் இந்தியாவில் தயாரிக்க போகும் ரஃபேல் விமானப் பணியில் தசால்ட் 70% வேலைகளையும், எச்.ஏ.எல் 30% வேலைகளையும் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல்10,2015 அன்று போடப்பட்ட அம்பானிக்கு அனுகூலமில்லாத இவ்வொப்பந்தம் மோடியால் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு 12 நாட்களுக்கு முன்னர்தான் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

modi-ambani-rafale-jet-scamமோடியின் செல்வாக்கை பயன்படுத்தி மிகக்குறைந்த விலைக்கு நிலத்தை ஆக்கிரமித்து, நிறுவனத்திற்கான லைசன்சையும் பெற்றுக்கொண்டு மோடியுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து அரசுக்கிடையிலான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நுழைந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் தயாரிப்பில் கூட்டு நிறுவனமாவதை உறுதி செய்வதற்கு மோடி தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். இந்திய விமானப்படை, எச்.ஏ.எல், வெளியுறவுத்துறை அமைச்சரகம், பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு எந்த அனுமதியும் அறிவிப்பும் செய்யாமல் அவர்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இதை செய்திருக்கிறார்.

3. “ பிரதமர் அலுவலகத்தையும், தனது பதவியையும் தவறாகவும் நேர்மையின்றியும் பயன்படுத்தி தசால்ட் நிறுவனத்திடமிருந்து ஆதாயம் அடைந்துள்ளார் பிரதமர் மோடி . அந்த ஆதாயம் மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனது அலுவலத்தையும், பதவியையும் கேடாக பயன்படுத்தியிருக்கிறார் என்று கருதத்தக்க வகையில் ரிலையன்சை சேர்த்துக்கொள்ள தசால்ட் நிறுவனத்தை வற்புறுத்தியிருக்கிறார் மோடி. இவ்வொப்பந்தத்தின் மூலம் அம்பானி இதுவரையிலும், இப்போதும், இனி மற்றொரு நாற்பது ஆண்டுகளுக்கும் ஆதாயமடைய இருக்கிறார்.” என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

4. “36 விமானத்திற்கான செலவு குறித்து ரிலையன்ஸ் – தசால்ட் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு மற்றும் தசால்ட் நிறுவனத்தில் நிதி நிலை அறிக்கை ஆகியவை வெளியாகிய பிறகுதான் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அவ்விரண்டு ஆவணங்களும் 36 விமானங்களுக்கான மொத்த செலவு 60,000 கோடி என்பதை தெரியப்படுத்துகிறன. இது முந்தைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தைவிட இரு மடங்கு அதிகம். அம்பானி அனுகூலம் பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக நாட்டின் பாதுகாப்பை காவு கொடுத்ததோடு அல்லாமல் தேசத்திற்கு 36,000 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.”

ஆகவே பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். பிரதமருடன் சேர்ந்து கூட்டுசதி செய்து பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக அம்பானி மீது விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதே போல மேற்கூறிய குற்றத்துக்காக தசால்ட் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

சி.பி.ஐ-யின் இயக்குநர் அலோக் குமார் வர்மாவுக்கு அனுப்பியுள்ள இப்புகாரில் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்றாலும் அதற்கான முதல்கட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள்.

படிக்க:
மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

“ குற்றஞ்சாட்டப்பட்டவரிடமே அவரைப்பற்றி விசாரிக்க அனுமதி பெற வேண்டிய துர்பாக்கிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெரியும். உங்கள் கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் தெரியும். அனாலும் அதற்கான முதல் அடியை எடுத்து வைக்க கோருகிறோம். ஆகவே ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 17(A)-ன் படி அரசிடம் அனுமதி கோருங்கள். இதன்படி மூன்று மாதங்களுக்குள் அரசு பதலளிக்க வேண்டும். அதே சமயம் அனில் அம்பானி மற்றும் டிராப்பியர் இழைத்த குற்றங்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளுக்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

”நான் தின்ன மாட்டேன், பிறரையும் தின்னவிட மாட்டேன்” எனச் சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்தவர் மோடி. இன்று அவரது முன்னாள் கூட்டாளிகளே மோடியின் யோக்கியதையைக் கிழித்துத் தொங்க விட்டுள்ளனர்.

சமீபத்தில் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் ஓடிய வாசகங்களே நம் நினைவுக்கு வருகின்றன. “மேரா பி.எம். சோர் ஹே” அதாவது “எனது பிரதமமந்திரி ஒரு திருடன்” என்பதுதான் மோடிக்கு இன்று மக்கள் வழங்கியிருக்கும் பட்டமும் கூட.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க