பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை கிளை சார்பில், “பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்: போராடாமல் விடிவில்லை!” என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பாலியல் குற்றங்களை யார் செய்வது? யார் தூண்டுவது? எப்படி குறைப்பது? என்கிற பல்வேறு கேள்விகளோடு, சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு அதனைப் பதிவு செய்து வருகிறது, பெ.வி.மு. இப்பதிவில், தோழர் தியாகு மற்றும் ஓவியா ஆகியோரது கருத்துரைகள் இடம்பெறுகிறது.

பெண்ணை சக  உயிராக மதிக்கும் தன்மை, மனித சமூகத்தில் எழும்போதுதான்
பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும். – தோழர் தியாகு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு உரையாற்றினார்.

அதில், “இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் முதல் குற்றவாளியாக இருப்பது அரசுதான். இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் உள்ளிட்ட இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது இராணுவமும் போலீசும்.

படிக்க:
பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை முறையிலேயே பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கும் வழக்கம் ஊறியிருப்பதால்தான் பொதுவுடைமைச் சமூகத்தில் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்ற அவதூறைப் பரப்பினர் முதலாளித்துவவாதிகள். அதற்கு தக்க முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பதிலளித்தார் மார்க்ஸ்.

இங்கு ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக  உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.” என்று கூறினார்.

தோழர் தியாகுவின் முழுமையான உரையைக் காணத் தவறாதீர்கள்.

ஆணாதிக்க சிந்தனையே பாலியல் வன்முறைகளின் அடிப்படை – தோழர் ஓவியா

பெண்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து “புதிய குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஓவியா பேசுகையில் “சாதிய சமூகமாக இருக்கும் இந்தியாவில், தாழ்த்தப்பட்ட பெண்களின் உடல் என்பது உயர்சாதி ஆண்களின் உடைமைகளாக கருதப்படும் நிலை பல்லாண்டுகளாக நீடித்து வந்திருக்கிறது. இன்று இது குறைந்திருக்கலாம். ஆனால், இதன் அடிப்படை காரணத்தை நாம் பார்க்க வேண்டும்.

படிக்க:
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

சமூகத்தில் பொதுவாகத் திகழும் ஆணாதிக்க சிந்தனை பெண்களை ஒடுக்குவதற்கு அவர்கள் உடலை சிதைப்பது, முகத்தில் திராவகம் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ஆண்களைத் தூண்டுகிறது. போலீசின் கையில் சிக்கிய பெண்ணின் நிலையும் மோசமானதாகவே இருக்கிறது. பெண்ணின் பாதுகாப்பு ஒரு ஆணின் ஆளுகையில் இருப்பதாகவே நிலைமை இருக்கிறது. பெண் என்பவள் ஆளுமையுள்ளவளாக இங்கு கருதப்படுவதில்லை. இந்நிலை மாறும் போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும்” என்று கூறினார்.

அவரது முழு உரையை காணொளியில் காணத் தவறாதீர்கள்