Thursday, November 14, 2019
முகப்பு பார்வை விருந்தினர் விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?

விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?

கலப்பின மாடுகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்ன? இந்திய மக்களின் உண்மையான பால் தேவை எவ்வளவு ? நாட்டு மாடுகளை காக்க என்ன வழி ? விடைகாண படியுங்கள்...

-

விலங்குகள் புணர்ச்சியின் (Mating) போது இன்பத்தை உணருமா?

விலங்குகளுக்கு பாலுணர்ச்சி (Libido or Sexual Desire) உள்ளது. அதனாலேயே அவைகள் புணர்ச்சியும் கொள்கிறது. ஆனால் புணர்ச்சியின் போதோ அல்லது அதற்குப் பின் அதை பற்றி நினைக்கும் போதோ அவைகளுக்கு ’அந்த’ செயல் இன்பத்தை கொடுக்கிறதா… துன்பத்தை கொடுகிறதா… என்பவையெல்லாம் அவைகளுக்கே வெளிச்சம்.

புரியவில்லையே

அதாவது உணர்வு என்பது ஐம்புலன்களால் உணரப்படுவது. அவை தொட்டு உணர்தல், கண்டு உணர்தல், கேட்டு உணர்தல், முகர்ந்து உணர்தல், சுவைத்து உணர்தல் என்பன. இது கணநேரமே (Momentary) இருக்கக் கூடியது. ஆனால் இன்பம் அல்லது துன்பம் என்பது ஒருவித மனநிலை (A state of mindset).

இது பெரும்பாலும் ஒருவரின் எண்ண ஓட்டத்தை (Thought process) சார்ந்தது. விலங்குகளுக்கு எண்ண ஓட்டம் என்ற ஒன்று உள்ளதா? அவைகளால் யோசிக்க முடியுமா? அவைகளுக்குத் தான் பகுத்தறிவு (Rationality) கிடையாதே? பிறகெப்படி தான் கொண்ட புணர்ச்சியை ‘எண்ணி’ இன்பம் துன்பமெல்லாம் உணர முடியும். புணர்ச்சி கொள்ளும் அந்த சில நொடிகளில் வேண்டுமானால் பசுவும் காளையும் இன்பத்தையோ துன்பத்தையோ உணரலாம்.

இதை இப்படியும் புரிந்துக் கொள்ளலாம். மனபிறழ்வு (Mental Disorder) கொண்ட மனிதர்களால் ‘கலவியின்’ பொருட்டு இன்பத்தையோ துன்பத்தையோ உணர முடியுமா? முடியாது தானே? அப்படித்தான் விலங்குகளாலும்! விலங்குகளில் ‘புணர்ச்சி’ என்பது நூறு சதவீதம் இனவிருத்திக்காக மட்டுமே நடைபெறும் ஓர் செயலாகும். ஆனால் மனிதர்களில் அப்படியில்லை. புணர்வதால் ‘இன்பம்’ கிடைக்கும் அல்லது கிடைக்கிறது என்ற பொதுவான ‘மனநிலை’ இருக்கிறது. எனவே தான் ஒருவர் தன் வாழ்நாளில் இனவிருத்திக்காக கொள்ளும் புணர்ச்சியென்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இனவிருத்திக்காக பசுகாளை இணைகளின் இயற்கையானபுணர்ச்சியைதடுத்து அவைகளை செயற்கைமுறை கருவூட்டல் (Artificial Insemination) எனும் A.I. தொழில்நுட்பத்திற்கு உட்படுத்துதல் என்பது ஒருவகை வதை (Cruelty) தானே?

வதையென்பதை ஏற்கமுடியாது. வதை என்பது துன்பத்தை தருவதாகும். அந்தவகையில் காளையிடமிருந்து ‘முறையாக’ விந்துவை சேகரிப்பதாலோ (Semen Collection), அதை ‘முறையாக’ பசுவில் செலுத்துவதாலோ (Artificial Insemination) அவைகள் எந்தவிதமான துன்பத்திற்கும் உள்ளாவதில்லை என கூறலாம்.

இங்குமுறையாகஎன்பதில் தானேவதைஉள்ளது.

என்ன சொல்கிறீர்கள்?

இன்று எப்படிமுறையாககாளையிடமிருந்து விந்து சேகரிக்கப்படுகிறது என்பதை சொல்கிறேன். கேளுங்கள்.

மூன்று முதல் ஆறு மாத வயதில் காளைக் கன்றானது தன் தாயின் பார்வையிலிருந்து பிரிக்கப்படுகிறது. அதன் சகோதிரிகளிடமிருந்தும் அப்போதே விடுபடவும் வேண்டியிருக்கிறது. இவ்வாறு வளரிளம் காளைக்கன்றானது குடும்ப சூழ்நிலையிலிருந்து ஒருவருட காலத்திலேயே காளைப் பண்ணைக்கு (Bull Station) இடம் மாற்றப்படுகிறது.

இங்கு சொகுசான இருப்பிடம்,    சத்தான தீவனம், போதிய உடற்பயிற்சி, தேவையான மருத்துவ வசதிஇப்படி இராஜபோக வாழ்க்கை தான் அதற்கு. ஆனால் அவற்றால் இங்கு கிடேரி கன்றையோ, பசு மாட்டையோபார்க்க முடியாது. ஏனென்றால் காளை பண்ணை என்பது காளைகளின் ஹாஸ்டலாயிற்றே (Bulls Hostel)… இங்கு பெண் மாடுகளுக்கு அனுமதியில்லைபெண் வாசமேயில்லாமல் பருவமடைய வேண்டிய கட்டாயம் தான் இந்த வக்கத்த காளைகளுக்கு

பருவம் வந்த இந்த இரண்டு வயது காளைகள் சிலகாலம் சீனியர் காளைகள் பொய் பசுவில் (Dummy Cows) தாவுவதை (Mounting) வேடிக்கை பார்க்க வேண்டும். அப்பப்போ இவைகளுக்கும் தாவுவதற்கு பயிற்சியும், வாய்ப்பும் தரப்படும். பசுக்களின்பருவச் சத்தம்கேட்டுகிளர்ச்சியுற்றுகளம் கண்டுமுகம் உரசியோனி முகர்ந்துஉதடு சுருட்டி… ’பசு வாசம்குடித்துவீறுகொண்டுமுன்னங்கால் தூக்கிமுதுகு தழுவிநின்று ஆடிபீச்சியடிக்க வேண்டிய விந்துவைகட்டாயப்படுத்தி கறக்கின்றனர் இந்ததொழில்நுட்பவித்தகர்கள்.

தீவனமிட்டு பசும்பாலைக் கறக்கலாம். ஆனால் விந்துப்பாலை கறக்க முடியாது. முன்னது உடல் சார்ந்தது. பின்னது உணர்வு சார்ந்தது. காளையின் நரம்புகளை பசுவால் மட்டுமே மீட்ட முடியும்பசுவின் வால் காளையின் குறிக்கு மட்டுமே வழிவிடும்சதையாலான குறிகள் நுழைய வேண்டிய யோனிக்குள் ஸ்டீல் குச்சிகளை (A.I. Gun) நுழைக்கலாமா?… இப்போது சொல்லுங்கள் இந்தமுறையானசெயல்களெல்லாம் வன்மமில்லையா…? வதையில்லையா…?

உணர்ச்சிவசப் படாமல் உண்மையை சொல்லுங்கள். மேலே சொன்னவற்றில் காளையோ, பசுவோ எங்கே துன்புறுத்தப் படுகிறது? அதற்கு எங்கேயாவது உடலளவில் வலி ஏற்படுத்தப்படுகிறதா?

வலி உடலில் இல்லை. ஆனால் உளவியல் (Psychology) ரீதியாக ஏற்படுத்தப் படுகிறது. காளையின் கம்ளெய்ண்ட்டை கேளுங்கள்.

கிடேரி கன்றுகளோடு வளர முடியவில்லைபெண் வாசனையை நுகர முடிவதில்லைசரியான வயதில் பருவத்திற்கு வர முடியவில்லைஅப்படி வந்தாலும் முழுவதுமாக பாலுணர்ச்சியை வெளிப்படுத்த முடிவதில்லைசிவந்து, உப்பிய யோனியை நுகராமல் குறியை முறுக்கேற்ற முடியவில்லைபொம்மை பசு மீது மோகம் கொள்ள முடியவில்லைரப்பர் பலூனில் யோனிக் குழாயின் கதகதப்பை உணர முடியவில்லைசில நாட்களில் லேட்டக்ஸ் யோனியின் சூட்டை தாங்க முடியவில்லைவருடக் கணக்கில் ஒரே இடத்தில், ஒரே பொம்மைமீது தாவ முடியவில்லைபெண்ணைக் காணாமல் என் ஆண்மையை நிரூபிக்க முடியவில்லை…” இவையெல்லாம் வதை இல்லையா

மாதிரி படம்

இது வள்ளலார் யுகமில்லை… வாடிய பயிரை கண்டு வாடுவதற்கு… இது ஒரு வணிக யுகம் (Commercial Era). இப்போது அன்னம் தானத்திற்கானதல்ல. விற்பனைக்கானது. பசு அன்று கோமாதா. இன்று கோ மெஷின். கன்றின் சத்தம் கேட்டு பாலை சுரந்தாள் கோமாதா அன்று. ஆக்ஸிடோசின் (Oxytocin) போட்டு இயந்திரம் கொண்டு உறிஞ்சும் உலகம் இன்று. அன்று கால்நடைகள் மனிதனோடு வளர்ந்தன. இன்று வளர்க்கப்படுகின்றன.

மாடுகள் வேளாண் வேலைக்காகவே பயன்படுத்தப்பட்டது. ஏரோடும், வண்டியோடும் பூட்டிய எருதுகளோடு தானும் ஓர் அங்கமாகவே இருந்தான். எருதுகளோடு தானும் முன்னும் பின்னும் நடநடந்து ஏற்றம் இறைத்தான். எருதுகள் களைப்படைந்தால் தானும் களைப்புற்றான். அயர்ச்சியுற்றான். மாட்டோடு மாடாய் வாழ்ந்தான். காளைக் கன்றுகளையே பசுவிடமிருந்து எதிர்பார்த்தான். பால் என்பது பசுவின் பேறுகால போனஸாகவே (Bonus) கருதினான். சாணத்தையும், மூத்திரத்தையும் மண்ணில் முதலீடு செய்தான். அடுத்த போகத்திலே நவமணிகளாய் அறுவடை செய்தான்.

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?

அவ்வப்போது போனஸ் சுகம் கண்ட அவனுக்கு அன்றாடம் போனஸ் தேவைப்பட்டது. இந்தியாவில் பெருகிவரும் பால் தேவைக்கு A.I. தொழில்நுட்பம் தவிர்க்கமுடியாததாகிறது.

பெருகிவரும் பால் தேவையா? யாருக்கு? கன்றுக்குட்டிக்கா…?

இந்த லொள்ளு தானே வேண்டாங்கிறது. இந்தியர்களுக்கு பாலின் தேவை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ஏன் இந்தியர்களுக்கு பாலின் தேவை அதிகமாகிக் கொண்டே வருகிறது?

இந்தியர்களின் உணவுக் கலாச்சாரம் கடந்த 25 ஆண்டுகளில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பால் மற்றும் பால் சார்ந்த்த உணவுப் பொருட்களை மக்கள் முன்பைவிட இப்போது அதிகம் விரும்பி உண்கிறார்கள்.

ஏன் இந்த கலாச்சார மாற்றம்? எப்படி இது நடந்தது?

புதிதாய் ஒன்றை பார்த்தால் அதன் மீது மோகம் வருவது இயற்கை தானே. அப்படித்தான் இந்த கலாச்சார மாற்றமும். அறிவியல் தொழில்நுட்பம் தான் இதற்கும் அடிகோலியது.

புரியவில்லையே

1980-90ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சியின் வருகை இந்தியர்களிடையே மிகப் பெரிய கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளூர்மயத்தில் அடைபட்டு கிடந்தவர்கள் தொலைக்காட்சி மூலமாக புதியதோர் உலகை கண்டுகொள்ள ஆரம்பித்தனர். பெருநிறுவனங்களின் விளம்பரம் கல்வியறிவற்ற, அறியாமை இருட்டில் மூழ்கிகிடந்த வெகுஜன மக்களிடையே ஒரு வித ஈர்ப்பையும், மயக்கத்தையும் ஏற்படுத்தியது. மூளைச் சலவை செய்யப்பட்டது. எண்ண ஓட்டங்கள் மாறின. உள்ளூர் கலாச்சாரங்கள் காலச்சக்கரத்தில் நசுக்கப்பட்டன. மாற்றங்களனைத்திற்கும் வளர்ச்சி சாயம் பூசப்பட்டது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பதை மறந்து நாம் அந்நிய கலாச்சாரத்தை ஆரத்தழுவிக் கொண்டோம். அவற்றை அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே ஆக்கியும் கொண்டோம். நம் கலாச்சாரத்தை நல்லநாள் பெருநாள் மட்டும் கைக்கொண்டு களிப்புற்றோம். இப்படியாக நம் உணவு, உடை, உறைவிடம் என அனைத்தும் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது.

குழந்தையும், முதியோறும், நோயுற்றவனும் மட்டுமே அருந்திய பாலை இன்று வயது வந்தோரும், வாலிப பருவத்தோரும் அருந்துகிறோம். காலையில் கண்விழித்ததும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்த நாம் இப்போது ‘பெட் காஃபி’ குடிக்கிறோம். பழைய சோறையும், புளிச்சத் தண்ணியையும் கரைத்துக் குடித்த நாம் ‘கெல்லாக்ஸில்’ பால் கலந்து ப்ரேக் பாஸ்ட் என்கிறோம்.

அக்னி வெயிலுக்கு கம்மங்கூழ், கேப்பைக்கூழ், சின்ன வெங்காயம், மோர் மிளகாய் என்றிருந்த நாம் பட்டர் ஸ்காட்ச், ஹாசல்நட், சாக்லேட், ஃபலூடா என்கிறோம். சாயங்காலத்தில் அவிச்ச வேர்கடலை, தாளித்த சுண்டல், வேகவைத்த கிழங்கு, முளைகட்டிய பச்ச பயிறு இவற்றையெல்லாம் மலையேற்றி பாதாம் மில்க், மில்க் ஷேக், பீட்ஸா என வந்துவிட்டோம். பன்னீர் பட்டர் மசாலா இல்லாமல் டின்னர் இல்லை. மணிக்கொருமுறை டீ, காஃபி. இப்படி கண்விழித்தது முதல் கண் மூடும் வரை பால் சூழ் உலகில் நீந்தி திளைக்கிறோம். தொடர்ந்து குதூகளிக்க மேலும் மேலும் பால் தேவைப்படுகிறது.

அது சரி. பெருகிவரும் பாலின் தேவையை A.I. எனும் தொழில்நுட்பம் எப்படி தீர்க்கும்?

ஒவ்வொரு பசுவும் தன் திறனுக்கேற்ற அளவில் பாலை சுரக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் உள்நாட்டுப் பசுக்கள் (Indigenous Cows) சுரக்கும் பாலின் அளவு நாம் நீந்தி திளைக்கத் தேவைப்படும் அளவைவிட மிக மிக குறைவே. அதாவது ’யானைப் பசிக்கு சோளப்பொறியை’ போல. பிரச்சினையை தீர்ப்பதெப்படி? ஒன்று நாம் அண்மையில் அணைத்துக் கொண்ட அந்நிய உணவு கலாச்சாரத்தை (Exotic Food Culture) உதறிவிட்டு பாலின் தேவையை குறைத்துக் கொள்ளுதல். இரண்டு நாம் கொண்டுள்ள உள்நாட்டு பசுவினங்களை மாற்றி பால் உற்பத்தியை பெருக்கிக் கொள்ளுதல். நாம் கட்டிக்கொண்ட வெளிநாட்டு உணவு கலாச்சார மாற்றத்தை உதறுவதா? நாம் கொண்டிருக்கும் உள்நாட்டு பசுக்களை இன மாற்றம் செய்வதா? இதுதான் நம் முன் உள்ள சவால். முன்னது மனிதன் சார்ந்தது. பின்னது மாடு சார்ந்தது.

பசுக்களின் இனத்தை (Breed) மாற்ற முடியுமா? எப்படி?

கால்நடைகளில் ஓர் இனத்தை மற்றொரு இனமாக மாற்றலாம். இந்த மாற்றம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நிகழும். இயற்கையாக நிகழும்போது சூழல் மாற்றமும் (Environmental Changes), பரிணாமமும் (Evolution) காரணமாகிறது. செயற்கையாக நிகழும்போது மனிதனின் தேவைகளும் (Demand), பயன்பாடுகளும் (Utility) காரணமாகிறது. இங்கு நமக்கு ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள பாலின் தேவையே உள்நாட்டு பசுக்களை இனமாற்றத்திற்கு தள்ள நம்மை நிர்பந்தித்தது. இன்றளவும் நிர்பந்திக்கிறது.

இந்த இனமாற்றத்தை நடத்திக்காட்ட துறைசார் வல்லுநர்களால் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கொள்கை தான் “உள்நாட்டு பசுக்களை வெளிநாட்டு காளைகளுடன் கலப்பினச் சேர்க்கை (Crossbreeding) செய்ய வேண்டும்” என்பதாகும். இதன் அடிப்படையில் தான் 1965 முதல் 1998 வரை உள்ள காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ”கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை முறை” (Cooperative System of Milk Production and Marketing), “பால் பெருக்கு திட்டம்” (Operation Flood) எனும் “வெண்மை புரட்சியாகும்” (White Revolution). இப்போது இந்தியா தனது பாலின் தேவைக்கு வெளிநாட்டு காளைகளை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.

அதுசரி A.I. இங்கு எங்கு வந்தது?

இந்திய பசுக்களை கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டுமென முடிவெடுத்த பின்னர் அதை எப்படி அமல்படுத்துவது என்பதே அடுத்த கேள்வி? இந்தியாவெங்கும் விரவிக் காணப்படும் அத்தனை உள்நாட்டுப் பசுக்களையும் வெளிநாட்டு பொலிக் காளைகளைக் கொண்டு “இயற்கைமுறை கருவூட்டல்” (Natural Insemination) செய்வதென்பது அந்த காளைகளாலேயே முடியாது.

இயற்கைமுறையில் கருவூட்டல் செய்வதற்கு தேவையான எண்ணிக்கையில் காளைகளை வாங்குவதற்கு இந்தியா தயாராயிருந்திருந்தாலும் அந்த எண்ணிக்கையில் விற்பனை செய்வதற்கு வெளிநாடுகளில் பொலிக்காளைகள் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அறிஞர் பெருமக்களென்ன கோலிவுட் சூப்பர் ஸ்டார்களா புவியீர்ப்பு விசையை மீறி சாகசம் புரிவதற்கு? ஏதோ அவர்களுக்கு தெரிந்தது அன்றைக்கு இருந்த “செயற்கைமுறை கருவூட்டல்” (Artificial Insemination) எனும் A.I. தொழில்நுட்பம் தான். அதைத் தான் அவர்களும் பரிந்துரைத்தனர். அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது.

ஆக உணவுக் கலாச்சார மாற்றம் தான் பாலின் தேவையை அதிகப்படுத்தியது. அது தான் கறவை மாடுகளில் கலப்பினச் சேர்க்கையை நோக்கி நம்மை தள்ளியது. அதனால் தான் நாம் A.I. எனும் தொழில்நுட்பத்தை கைக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த A.I. தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தான்முறையாககாளையிடமிருந்து விந்து சேகரித்தலும், ‘முறையாகவிந்துவை பசுவில் செலுத்துதலும். இந்தமுறையில்உள்ளஉளவியல்வதையை பசுகாளை இணைகள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். நாமும் இதை கண்டும் காணாமலும் இருக்க வேண்டும். அப்படித்தானே?

அப்படியில்லை. இதற்கு ஒரு தீர்வு உள்ளது.

அப்படியா? என்ன அது?

பால் மனிதனுக்கு அவசியமா ஆசையா என ஆராய வேண்டும். பாலில் மனிதனுக்கு அவசியமான அல்லது தேவையான அப்படி என்ன தான் உள்ளது என்பதை மீண்டும் மறுவாசிப்பு செய்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வேளை வளர்ந்த மனிதனுக்கு பால் அவசியமில்லையென்றும், குழந்தைகளுக்கும் வயோதிகர்களுக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கு மட்டுமே அவசியமென்றும் கருதுவோமெனில் அதைப் பற்றிய விழிப்புணர்வை நோக்கி திரும்பலாம் தானே.

பாலுக்கான தேவை குறைந்தால் கலப்பினச் சேர்க்கைக்கான அவசியமும் குறையும். உள்நாட்டு பசுவினங்களும் பால் வணிகத்தின் அழுத்தமில்லாமல் அழியாமல் இருக்கும். நம் முன்னோர்களின் வரலாறு இதைத் தானே கற்றுத் தருகிறது.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பால் குடிப்பவர்கள் தான் பசு-காளை இணையின் வதைக்கு காரணம் என்பது போலல்லவா இருக்கிறது.

நான் எப்போது அப்படி சொன்னேன். பால் குடிப்பதை குறைத்துக் கொண்டால் பசு-காளை இணை மீதுள்ள அழுத்தம் குறையுமென்று தானே சொல்கிறேன்.

– முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி.
உதவிப் பேராசிரியர்,
விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
மின்னஞ்சல்: jagadeesankrishnan@gmail.com

குறிப்பு : கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கத்திற்கு கட்டுரையின் ஆசிரியரே பொறுப்பாவார். ஆசிரியர் சார்ந்துள்ள பல்கலைக்கழகமோ, வேறு சில அமைப்போ பொறுப்பல்ல.

  1. Congrats for your bold venture.after undergoing famine and witnessing suffering of shortage all people started thinking of more production with globalisation influence . is it necessary to produce more..prevent diseases and allow nature ravaging community.

    • Sir
      Thank you for the response. The point is are we not exploiting TOO MUCH in the name of food production … are we not doing everything in the name of PROFIT…

  2. Sir
    Thank you for the response. The point is are we not exploiting TOO MUCH in the name of food production … are we not doing everything in the name of PROFIT…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க