மார்க்ஸ் பிறந்தார் – 20
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 3

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பொருளாயத மதிப்புக்களின் உலகத்தை மட்டுமே செல்வமாகக் கருதுகிறது. அதற்குத் தொழிலாளி செல்வத்தைப் பெருக்குகின்ற சாதனமாகத்தான் இருக்கிறான்.

தொழிலாளி தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பணத்தையும் பொருள்களையும் சேமிப்பதற்காக வாழ்க்கை இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது.

எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, நாடகத்துக்கும் நடனத்துக்கும் சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின்படி பணம் இல்லாத, பொருள் இல்லாத மனிதன் ஒன்றுமே இல்லாதவனாவான். பொருள்களும் பணமும் அவனுக்குச் சமூகத்தில் அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தருகின்றன, அவன் மனதில் கூட அவனை முக்கியமானவனாகச் செய்கின்றன.

உங்களால் செய்ய முடியாத எல்லாக் காரியங்களையும் உங்கள் பணம் செய்ய முடியும். பணத்தைக் கொண்டு சாப்பிட முடியும், குடிக்க முடியும், நடனங்களுக்கு, நாடகத்துக்குப் போக முடியும், பிரயாணம் செய்ய முடியும், கலைப் பொருள்களை, புலமையை, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பொருள்களை, அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும்.

ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் இந்த “மஞ்சள் பிசாசின்” சர்வ வல்லமையைப் பற்றி ஏதன்ஸ் டைமன் கூறிய சொற்களை 1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார்:

இந்த மஞ்சள் அடிமை மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும், கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும், குட்ட நோயைப் போற்றச் செய்யும், திருடர்களுக்குப் பட்டம் வழங்கி அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும் பெருமையும் அருளும்……

ஷேக்ஸ்பியர் “பணத்தின் உண்மையான தன்மையை மிகச் சிறப்பான முறையில் சித்திரிக்கிறார்”, குறிப்பாகப் பணத்தின் இரண்டு தன்மைகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்று மார்க்ஸ் கருதுகிறார்.(1)

பணம் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுள்-எல்லா மனித மற்றும் இயற்கை குணாம்சங்களையும் அவற்றின் எதிர்நிலைகளாக மாற்றியமைத்தல், பொருள்களைச் சர்வாம்ச ரீதியில் குழப்புவதும் சிதைப்பதும்.

பணம் ஒரு பொதுவான விபசாரி, மக்களையும் தேசங்களையும் கவர்ந்திழுப்பது. பணம் என்பது அந்நியமாக்கப்பட்ட மனிதகுலத்தின் திறமை.(2)

ஷேக்ஸ்பியர் மற்றும் கேதேயின் கவிதைகளை ஆதர்சமாகக் கொண்ட இக்கருத்துக்களை மார்க்ஸ் பிற்காலத்தில் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, மூலதனம் ஆகிய நூல்களில் வளர்த்துக் கூறினார்.

படிக்க :
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்
♦ ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

இளம் மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் போல தலைகீழான உலகத்தில், அந்நியப்படுத்தலின் உலகத்தில் பொருளிட்டலே வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகிறது; உண்மையான மனிதத் தேவைகளை வளர்ப்பதற்கு மாறாக பொருள்களைப் பற்றிய காரியவாதமான, நுகர்வு அணுகுமுறை ஏற்பட்டுவிடுகிறது. பொருள் மனிதனுக்கு அளவுகோலாகி விடுகிறது, அதன் மறுதலை அல்ல. பொருளாயதச் செல்வம் மனிதத் திறமைகளுடைய செல்வத்தின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அந்நியப்படுத்தலின் உலகத்தில் செப்பமடையாத, பூர்விகமான தேவைகள் உடைமையாக வகைப்படுத்தப்படுகின்றன. “தனிச் சொத்துடைமை நம்மை அதிகமான அளவுக்கு முட்டாளாகவும் ஒருதலைச் சார்பாகவும் மாற்றியிருக்கின்றபடியால் ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் அல்லது அதை நேரடியாக வைத்திருத்தல், சாப்பிடுதல், குடித்தல், அணிதல், வசித்தல், மற்றும் இதர சந்தர்ப்பங்களின் போது மட்டுமே அது நம்முடையதாக இருக்கிறது.”(3) எல்லாப் புலன் மற்றும் ஆன்மிக உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை என்னும் புலன் வந்து விட்டது.

இதன் விளைவாகப் பொருள்கள் உழைப்பின் நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் வீட்டிலும் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பொருள்களின் மீது கவனத்தைக் குவிக்கின்ற மனிதன் அவன் பொருள்களின் ஊழியனாக மாறுவதை, அவை தன்னுடைய உழைப்பின் தன்மையையும் வேகத்தையும் மட்டுமல்லாமல் அவன் ஒய்வு நேரத்தைச் செலவிடுகின்ற தன்மையையும் முறையையும் மற்ற மனிதர்களுடன் அவனுடைய தனிப்பட்ட உறவுகளின் தன்மையையும் பாணியையும் ஆட்டுவிப்பதைக் கவனிப்பதில்லை.

மனிதத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்திலிருந்து அந்நியமாதலை அகற்றிவிடுவது மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுகளின் தன்மையில் மாற்றத்தை மட்டுமல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையின் மொத்த உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும்.

“மனிதன் மனிதனாக இருப்பதாக, உலகத்துடன் அவனுடைய உறவு மனிதத்தன்மை கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் அன்புக்கு அன்பை மட்டுமே, நம்பிக்கைக்கு நம்பிக்கையை மட்டுமே, இதரவை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் கலையை ரசிக்க விரும்பினால் நீங்கள் கலைப் பயிற்சியுள்ள நபராக இருக்க வேண்டும்; நீங்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த விரும்பினால், அவர்களிடம் சிந்தனையைத் தூண்டுகின்ற, உற்சாகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபராக நீங்கள் இருக்க வேண்டும்.

மனிதனுடனும் இயற்கையுடனும் உங்களுடைய உறவுகளில் ஒவ்வொன்றும் உங்களுடைய இலட்சியத்துக்குப் பொருத்தமான, உங்களுடைய உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையின் பிரத்யேகமான வெளியீடாக இருக்க வேண்டும். நீங்கள் அன்பைத் திரும்பப் பெறாமல் அன்பு செலுத்துவீர்களானால், அதாவது நேசித்தல் என்ற முறையில் உங்களுடைய அன்பு பரஸ்பரமான அன்பை ஏற்படுத்தாவிட்டால், அன்புள்ளம் கொண்ட நபர் என்ற உங்களுடைய ஜீவனுள்ள வெளியீட்டின் மூலமாக உங்களை அன்பிற்குரியவராகச் செய்து கொள்ள முடியாவிட்டால் உங்களுடைய அன்பு மலட்டுத்தனமானது-அது ஒரு துர்ப்பாக்கியமே”(4) என்று மார்க்ஸ் எழுதுகிறார்.

மதிப்புச் செல்வம் என்ற சுயபூர்த்தியுள்ள கோட்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மனித மறுப்பை முரணில்லாமல் போதிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

படிக்க :
♦ அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !

கம்யூனிஸ்ட் சமூகத்தில் பொருள்களின் செல்வம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும், அதாவது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல் முழுமையான மனித நடவடிக்கைக்கு ஒரு சாதனமாக இருக்கும். “அரசியல் பொருளாதாரத்தின் செல்வத்துக்கும் வறுமைக்கும் பதிலாகச் செல்வமுடைய மனித ஜீவனும் வளமான மனித தேவையும் ஏற்படும்.”(5)

மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்திலும் அதன் பூர்வாங்கமான நூல்களிலும் இக்கருத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறார். அவர் சமூகத்தின் மிக உயர்ந்த செல்வமாக, மிக உயர்ந்த மூலதனமாக-மனிதனுடைய உற்பத்திப் பொருளையல்ல – மனிதனை “தனிநபர்களின் தேவைகள், திறமைகள், நுகர்வுச் சாதனங்கள், உற்பத்திச் சக்திகள், இதரவற்றின் முழுதளாவிய தன்மையைப்”(6) பிரகடனம் செய்கிறார்.

கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லாச் சமூக உற்பத்திக்கும் மனிதனே குறிக்கோள்; பொருளாயத மதிப்புகள் இக்குறிக்கோள் நிறைவேறுவதற்குச் சாதனமாக, நிபந்தனையாக, அடிப்படையாக மட்டுமே இருக்கின்றன.

தொடக்க நிலையையும் (சுய அந்நியமாதல்) குறிக்கோளையும் எடுத்துக்காட்டிய பிறகு மார்க்ஸ் இக்குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதையை, அந்நியப்படுதலை அப்புறப்படுத்துகின்ற பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். இப்பிரச்சினை பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சமூகவியலாளர்கள் மற்றும் மார்க்சியவியலாளர்களுக்கு இடையில் மிகவும் காரசாரமான விவாதத்துக்குரிய பொருளாகவே இன்னும் இருந்து வருகிறது.

அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது என்ற உண்மையிலிருந்து மார்க்ஸ் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் முன்னேறுகிறார். தனிச் சொத்துடைமை “அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தி, முடிவு, அவசியமான விளைவு”,(7) பொருளாதார அந்நியமாதல்.

அந்நியமாதலின் வெவ்வேறு வடிவங்களின் (அரசியல், மத, தத்துவஞான, அறவியல், இதரவை) சாயல்களும் அம்சங்களும் பொருளாதார அந்நியமாதலில் குவிகின்றன. மொத்த மனித அடிமைத்தனமும் உற்பத்தி முறையில் தொழிலாளியின் உறவின் அடிமைத்தனத்தில் வெளிப்படுகிறது.” …அடிமைத்தனத்தின் எல்லா உறவுகளும் இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே.”(8) இங்கே மார்க்ஸ் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் உற்பத்தி உறவுகளின் தலைமையான பாத்திரத்தைப் பற்றிய கருத்தை வகுத்துரைக்கிறார்.

ஹெகலிடம் எல்லா அந்நியமாதலுமே கருத்தின் அந்நியமாதலாக இருந்தது, அகப்பொருளின் “உணர்வில்” இந்த ரகத்தைச் சேர்ந்த ஊடுருவுதலும் சாத்தியமாக இருந்தது. ஆனால் அவர் உலகத்துடன் தன்னுடைய உறவுகளின் அடிமைத் தன்மையை உணர்ந்து கொண்டிருப்பதால் அவருடைய அந்நியமாதல் மறையவில்லை, அது அதிகரிக்கிறது.

நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நீந்துவதாகக் கற்பனை செய்வது மட்டும் போதாது. சுதந்திரம் வேண்டுமென்றால் சுதந்திரமாக இருப்பதைப் போலக் கருதுவது மட்டும் போதாது. “தனிச் சொத்துடைமைக் கருத்தை ஒழிப்பதற்கு கம்யூனிசம் என்ற கருத்து போதுமானதாகும். உண்மையாகவே தனிச் சொத்துடைமையை ஒழிப்பதற்கு மெய்யாகவே கம்யூனிஸ்ட் நடவடிக்கை அவசியம்.”(9)

“வரலாறு இதற்கு இட்டுச் செல்லும்” என்பதை மார்க்ஸ் சந்தேகிக்கவில்லை. ஆனால் கற்பனாவாதிகளைப் போல தனிச் சொத்துடைமை ஒழிப்பு வேகமாகவும் துன்பமின்றியும் நடைபெறும் என்று மார்க்ஸ் கருதவில்லை. இது “மிகவும் கரடுமுரடான, நெடுங்கால நிகழ்வுப் போக்காக”(10)  இருக்கும் என்பதை அவருடைய வரலாற்று உணர்வு பிழையில்லாமல் எடுத்துக்காட்டியது.

தனிச் சொத்துடைமை முறை மந்திரக் கோலை ஆட்டியதும் திடீரென்று தோன்றிவிடவில்லை. அது பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்தது, வெவ்வேறு வடிவங்களை அடைந்தது. அதன் வளர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை. அது இப்பொழுது தொழில்துறை மூலதனம் என்ற வடிவத்தை அடைந்திருக்கிறது, அது சமூகத்தின் எல்லா இடுக்குகளுக்குள்ளும் நுழைந்து அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வரை, “அதன் உலகளாவிய வடிவத்தில் உலக வரலாற்றுச் சக்தியாகும்” வரை இந்த வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.

தனிச் சொத்துடைமை இந்த வளர்ச்சியடைந்த வடிவத்தில், முழு ஜீவனோடிருக்கும் பொழுது தன் எதிரியை, மரணத்தை, தொழில்துறைத் தொழிலாளர்களின் ஒடுக்குமுறைக்குள்ளான, அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை எதிரிடுகிறது.

அந்தத் தருணத்திலிருந்து அது தன் சொந்த அழிவை நோக்கிச் செல்கிறது, ஆனால் மரணத்தை நோக்கி அதன் பாதை முதிர்ச்சியை நோக்கி வளர்ச்சியடைந்த பாதையைப் போல இருக்கிறது: கம்யூனிச உருவாக்கத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் கட்டங்களிலும் அது தோன்றுகிறது. கம்யூனிசம் முதலில் கரடுமுரடான சமத்துவவாதக் கம்யூனிசமாகத் தோன்றுகிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார் (அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏழைகளின் கம்யூன்களை ஏற்படுத்துவதற்குச் செய்யப்பட்ட ஆரம்பகாலத் தவறுகளை மார்க்ஸ் மனதில் கொண்டிருக்க வேண்டும்).

“இக்கம்யூனிசம்” தனிச் சொத்துடைமையின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்குக் காட்டுமிராண்டித்தனமான சாதனங்களைக் கொண்டு எதிர்ப்பதைக் காட்டுகிறது. தனிச் சொத்துடைமை மற்றும் அது ஏற்படுத்துகின்ற சமத்துவமற்ற நிலைமையின் “தாக்கத்தில்” அது இன்னும் இருக்கின்றபடியால் ஒவ்வொருவரையும் (பெண்கள் சமூகம் உள்பட) பொதுவான தரத்துக்கு வகைப்படுத்துவதற்கு விரும்புகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒவ்வொன்றையும் எல்லோரும் பெற்றிருக்க முடியாத ஒவ்வொன்றையும் அழிப்பதற்கு முயற்சிக்கிறது.

ஆகவே கரடுமுரடான, பாசறைக் “கம்யூனிசம்” மனிதனுடைய திறமையிலிருந்து, அவனுடைய ஆளுமையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அது தொழிலாளியின் அந்நியப்படுத்தப்பட்ட உழைப்பை ஒழிப்பதற்கு ஏங்கவில்லை, ஒவ்வொருவரையும் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு விரும்புகிறது.

ஒவ்வொரு துறையிலும் மனிதனுடைய ஆளுமையை “மறுக்கின்ற” இவ்விதமான “கம்யூனிசம்” அதே சமயத்தில் “கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்த உலகத்தையும்” மறுப்பதாக இருக்கிறது. எவ்விதமான தேவையும் இல்லாத ஏழையின் இயற்கைக்குப் புறம்பான எளிமையே அதன் குறிக்கோள். இந்த “எளிமை” தனிச் சொத்துடைமைக்கு அப்பால் போக முடியாமற் போய்விட்டது மட்டுமல்ல அது இன்னும் அதைக் கூட எட்டவில்லை என்பதை இக்குறிக்கோள் நிரூபிக்கிறது.

படிக்க :
♦ நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
♦ மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

இந்த ரகத்தைச் சேர்ந்த “கம்யூனிசத்தில்” உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலுள்ள எதிர்நிலைத் தன்மை ஒழிக்கப்படவில்லை. உழைப்பு (அதன் மிகவும் ஆரம்ப வடிவத்தில்) ஒவ்வொரு மனிதனும் வைக்கப்பட்டிருக்கும் நிலையாகத் தோன்றுகிறது; மூலதனம் சர்வாம்ச மூலதனமாக மற்றும் சமூகத்தின் சக்தியாகத் தோன்றுகிறது.

இந்தக் “கரடுமுரடான கம்யூனிசம்” “தனிச் சொத்துடைமையின் வெறுக்கத்தக்க” வெளியீடு என்று மார்க்ஸ் கூறினார். இந்த விமர்சனம் இன்றைய தினத்திற்கும் அதன் தத்துவ ரீதியான மற்றும் செய்முறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, அதிதீவிரமான புரட்சிகர வாய்ப்பந்தலையும் மனிதகுலத்தை ஆனந்தமாக வைத்திருப்பதற்குப் பாசறை முறைகளையும் நேசிப்பவர்கள் மாபெரும் கம்யூனிசக் கருத்துக்களைக் கொச்சைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் எதிர்க்கும் போராட்டத்துக்கு உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.

மார்க்ஸ் சுட்டிக்காட்டுகின்ற இரண்டாவது வடிவம்-அவர் முதலாவதாகவும் முதன்மையாகவும் அக்காலத்திய கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் குறியடையாளமான, எதிர்காலத்தைப் பற்றிச் சிற்சில கருத்துக்களை மனதில் கொண்டிருக்கிறார் – தன்னுடைய அரசியல் தன்மையை இன்னும் இழக்காத கம்யூனிசமாகும். அது ஜனநாயகமாக இருக்கிறது அல்லது எதேச்சாதிகாரமாக இருக்கிறது. அது தனிச் சொத்துடைமையின் கைதியாக இருக்கிறது, அதனால் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

முடிவாக, மூன்றாவது வடிவம் மனிதகுலக் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மொத்தச் செல்வத்தையும் பாதுகாத்து வளர்த்துச் செல்கின்ற அடிப்படையில் அந்நியமாதலின் எல்லா வடிவங்களையும் உண்மையில் அகற்றுகின்ற முறையில் தனிச் சொத்துடைமையின் “ஆக்கபூர்வமான” அழித்தலை முன்னாகிக்கிறது. இந்தக் கம்யூனிசம் முழு வளர்ச்சியடைந்த மனிதாபிமானத்துக்குச் சமம்: “மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதலுக்கு இது உண்மையான தீர்வு.”(11)

வரலாற்றின் மொத்த இயக்கமுமே இக்கம்யூனிசத் தோற்றத்தின் உண்மைச் செயலே, அதன் வாழ்க்கையின் பிறப்பே. இப்பிரச்சினைக்குத் தீர்வு “புரிந்து கொள்வதைப் பற்றிய பிரச்சினையாக மட்டுமே ஒருபோதும் இருக்கவில்லை, அது வாழ்க்கையின் உண்மையான பிரச்சினை; தத்துவஞானம் இப்பிரச்சினையை வெறும் தத்துவ ரீதியான ஒன்றாக மட்டுமே கருதியதனால் தான் அதைத் தீர்க்க முடியவில்லை.”(12)

இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு மார்க்ஸ் இக்கருத்தைத் தன்னுடைய பிரபலமான ஆய்வுரையில் பின்வருமாறு வகுத்துரைத்தார்: “தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி மட்டுமே வந்திருக்கிறார்கள், ஆனால் அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்”.(13)

மார்க்ஸ் தன்னுடைய 1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தெரிவித்த கருத்துக்களை இதற்குப் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு அவர் அதிகமான செறிவுடனும் விவரத்துடனும் வளர்த்துக் கூறினார்.

உழைப்பு மற்றும் மூலதனத்தின் எதிர்நிலைத் தன்மை, தொழிலாளி பண்டமாக இருத்தல், பண்ட வழிபாடு, தொழிலாளியை உயிருள்ள இயந்திரமாக, பகுதியளவுக்கு இயந்திரத்தின் உறுப்பாக மாற்றுதல் முதலியன இத்தகைய கருத்துக்களாகும்; முதலாளி மூலதனத்தின் உருவமாகவும் பாட்டாளி உழைப்புச் சக்தியின் உருவமாகவும் இருக்கின்ற பண்ட உறவுகளின் உலகத்தில் மனித ஆளுமை அந்நியமாக்கப்படுதல் என்பதைப் பற்றிய கருத்துக்களும் இவற்றில் அடங்கும்.

“அந்நியமாதல்” என்ற தத்துவஞானக் கருத்தமைப்புக்குப் பதிலாகத் துல்லியமான, சந்தேகத்துக்கு இடமளிக்காத பொருளாதாரக் கருத்தமைப்புகளை மார்க்ஸ் மென்மேலும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்; ஆனால் இது சொற்பிரயோகத்தைப் பற்றிய பிரச்சினையே தவிர, கோட்பாட்டைப் பற்றியதல்ல.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் புதிய உலகக் கண்ணோட்டத்தின் மேதாவிலாசம் நிறைந்த உருவரை, ஒரு செயல்திட்டத்தின் உருவரை; அதை விரித்துரைக்கின்ற பணி கார்ல் மார்க்சின் எஞ்சிய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இப்புத்தகம் எழுதப்பட்டு சுமார் 90 வருடங்களுக்குப் பிறகு, அதன் ஆசிரியர் மரணமடைந்து சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தான் உலகம் இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது.

ஆனால் முக்கியமாக இருக்கின்ற ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுது எழுதப்பட்ட புத்தகத்தைப் போல அது உடனடியாக அதிகமான கவனத்தைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு இப்புத்தகத்தைப் பற்றிப் பல்வேறு நாடுகளில் ஏராளமான ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன, இன்னும் எழுதப்படுகின்றன, வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்திலிருந்து நாம் எவ்வளவு தள்ளி வருகிறோமோ அவ்வளவுக்கு இப்புத்தகம் அதிகமான உடனடி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்நூலில் எழுப்பப்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் மார்க்சியத்தைப் பற்றி மிகவும் வேறுபட்ட கருத்துக்களுக்கிடையில் – கொச்சையான வறட்டுச் சூத்திரவாதம் முதல் கொச்சையான திருத்தல் வாதம் வரை – மோதல் நடைபெறுகின்ற களமாக இருக்கின்றன.

இந்த இரண்டு “முனைக்கோடிகளும்” பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பது சுவாரசியமானதே. இளமைக் கால மார்க்ஸ், முதிர்ச்சிக் கால மார்க்ஸ் என்று இரண்டு மார்க்ஸ்கள் இருப்பதாகக் கூறி அவரிடத்தில் வேறுபாட்டைக் காண்கின்றன. எனினும் வித்தியாசம் என்னவென்றால் அவை வெவ்வேறு வழிகளில் இதைச் செய்கின்றன: முந்தியது இளமைக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறும் பொழுது பிந்தியது முதிர்ச்சிக் கால மார்க்ஸ்தான் “உண்மையான” மார்க்ஸ் என்று கூறுகிறது.

இரண்டு அணுகுமுறைகளுமே மார்க்சியத்தைப் பற்றி உருத்திரிபான, பூர்விகமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இவை அறிவு சார்ந்த சோம்பேறித்தனத்தினால் மார்க்சியத்தை வறட்டுக் கோட்பாட்டுவாத அளவுகளைக் கொண்டு அளக்கின்றன. கையேடுகளும் மூலதனமும் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கொள்கைகள் அல்ல; முதலாவதில் “மனிதாபிமானமும்” பின்னதில் “பொருளாதாரவாதமும்” மையமான இடங்களைப் பெற்றிருக்கின்ற இரண்டு முழுமையான தத்துவஞான அமைப்புகள் அல்ல.

அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்குமானால் அது பிறப்பிடமும் சிகரமும் என்ற முறைகளில் மட்டுமே; உலகறிந்த நிகழ்வுகளைப் பற்றிப் புதிய பகுப்பாய்வு முறை கண்டுபிடிக்கப்பட்ட நூல், அது கையாளப்படுகின்ற நூல் என்ற முறைகளில் மட்டுமே. தத்துவஞான பொருளாதார நூல், பொருளாதார-தத்துவஞான நூல் என்ற முறைகளில் மட்டுமே.

மார்க்சியத்தின் மூலவர்கள் அடிக்கடி வலியுறுத்தியதைப் போல அது ஒரு கோட்பாடு அல்ல, அது ஒரு முறை. எனவே வெவ்வேறு நூல்களில் தரப்பட்டிருக்கின்ற “முன்னரே தயாரிக்கப்பட்ட” வகுத்துரைத்தல்களைக் கூறுவதன் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இயக்கத்தில், கருத்துக்களின் பிறப்பில், முறையைத் தொடர்ச்சியாகப் பதுக்கித் தருவதில் மட்டுமே மார்க்சியத்தின் ஜீவனைப் புரிந்து கொள்ள முடியும்.

கோட்பாட்டுவாதக் குறுகிய அறிவு மூலதனத்தில் “மனிதாபிமானத்தைக்” காண்பதில்லை; ஏனென்றால் மார்க்சின் மொத்த பாரம்பரியத்தில் இப்புத்தகத்தின் இடத்தை அது புரிந்து கொள்வதில்லை. மார்க்ஸ் எத்தகைய மனித இலட்சியங்களுக்காகப் “பொருளாதார மனிதனைப்” பற்றி மிகவும் கருத்தூன்றி ஆராய்ந்தார் என்பதை அது புரிந்து கொள்வதில்லை. அது மார்க்சின் மனிதாபிமானத்தைப் பார்ப்பதில்லை, ஏனென்றால் அது தத்துவத் துறையில் பகற்கனவு காண்பவர்களின் போலிப் பரோபகார உணர்வை “மனிதாபிமானம்” என்று கருதிப் பழகிவிட்டது.

மறு பக்கத்தில் இளமைக் கால மார்க்சை விமர்சனம் செய்பவர்கள் – இவர்களும் அவர்களைப் போன்று குறுகிய அறிவுடையவர்களே – மார்க்சியத்தின் உருவாக்கத்தில் கையேடுகளின் மாபெரும் முக்கியத்துவத்தைப் பாராட்டக்கூடிய தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.

“அந்நியமாதல்”, “மனிதாபிமானம்” என்ற சொற்களைக் கேட்டவுடனே இவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள்-இக்கருத்தினங்கள் மார்க்சியமா? அவர்கள் மார்க்சைக் குறுகிய வறட்டுக் கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டவர்கள், அவர்களால் மார்க்சின் வளமான கருத்துக்களை ஜீரணிக்க முடிவதில்லை; எனவே அவர்கள் “பரிசுத்தமான” மார்க்சுக்கும் “அசுத்தமான” மார்க்சுக்கும், “முதிர்ச்சியடைந்த” மார்க்சுக்கும் “முதிர்ச்சியில்லாத” மார்க்சுக்கும் இடையில் வேறுபாடுகளைத் தேடுகிறார்கள்.

மார்க்சின் மனிதாபிமானம் தற்காலிகமான தத்துவ ஈடுபாடு அல்ல. “கரடுமுரடான கம்யூனிசம்” என்று மார்க்ஸ் பெயரிட்டுக் கண்டித்த சித்தாந்திகள் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ அப்படிச் சிந்திக்க விரும்புகிறார்கள். மனிதாபிமானம் மார்க்சியத்தின் ஒட்டுப் பகுதி அல்ல, அது மார்க்சியத்தின் இதயம், அதற்கு சக்தியும் வாழ்க்கையும் தருகின்ற உள்விசை மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காகப் போராடுகின்ற கோடிக்கணக்கானவர்களின் உலகக் கண்ணோட்டமாக மார்க்சியத்தை ஆக்கியிருப்பது அதுவே.

1844 -ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் (மற்றும் Deutsch Französische Jahrbücherஇல் எழுதப்பட்ட இதனை ஒட்டிய கட்டுரைகளும்) மார்க்சின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான சந்திக்குமிடமாக அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டத்துக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் மார்க்சியத்தை நோக்கி அவருடைய பாதையைக் குறிக்கின்றன என்றால், அதற்குப் பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் எல்லாப் பகுதிகளிலும், சிறப்பாக அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சியத்தின் வளர்ச்சியை, ஸ்தூலப்படுத்துதலை, விரித்துரைத்தலைக் குறிக்கின்றன.

1844 -ம் வருடத்தை விஞ்ஞான உலகக் கண்ணோட்டம் பிறந்த வருடம் என்று கூறலாம். ஆனால் இந்த உலகக் கண்ணோட்டத்தின் உருவாக்கம் பூர்த்தியடைந்த வருடத்தை நம்மால் கூற முடியாது. மார்க்சும் எங்கெல்சும் மரணமடைகின்ற வரை எழுதிய எல்லா நூல்களிலும் அது தொடர்ந்தது. அது இன்றும் தொடர்கிறது, மனித சமூகம் நீடிக்கின்ற வரை அது தொடரும்.

குறிப்புகள்:

(1) Marx, Engels, Collected Works, Vol. 3, pp. 323, 324.
(2) Ibid., pp. 324, 325.
(3) Ibid., p. 300.
(4) Ibid., p. 326.
(5) Ibid., p. 304.
(6) Karl Marx, Grundrisse der Kritik der politischen Okonomie. (Rohentwurt) 1857— 1858, Berlin, 1953, S. 387.
(7) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 279.
(8) Ibid., p. 280.
(9) Ibid., p. 313.
(10) Ibid.
(11) Ibid., p. 296.
(12) Ibid., p. 302.
(13) கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 1, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, பக்கம் 11.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !