‘வணிகமுறை பால் உற்பத்திக்கு கலப்பினப் பசு தான் சிறந்தது. நாட்டுப் பசுவினங்களைக் கொண்டு அதிக பாலை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே தான் நாட்டுப் பசுவினங்கள் பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படுகிறது. இது தான் இன்றைய காலத்தின் கட்டாயம்’ என துறைசார் வல்லுநர்களே கூட ஆதங்கப்படுவதும் பின்னர் “ஒர் இனம் அழிவதும் (Extinction), மற்றொரு இனம் உருவாவதும் (Speciation) பரிணாமத்தின் (Evolution) ஓர் அங்கமே” என தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்வதையும் வெவ்வேறு தருணங்களில் காண முடிகிறது.

 • சீமை மற்றும் கலப்பினப் பசுக்கள் மட்டும் அதிகமாக பாலை சுரப்பது ஏன்?
 • நாட்டுப் பசுவினங்களையும் சீமை மற்றும் கலப்பினப் பசுக்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியாதா?
 • அப்படி மாற்ற முடிந்தால் நாட்டுப் பசுவினங்களையும் மக்கள் ஆர்வமாக வளர்ப்பார்கள் தானே?
 • நாட்டுப் பசுவினங்களும் அழியாமல் இம்மண்ணில் நீடித்திருக்கமுடியும் தானே?

வாருங்கள் ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வோம்.

*****

நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறதே! ஏன்?

ஒரு பசுவினத்தின் பால் உற்பத்திக்கும் (Milk Production) அதன் வளர்சிதை மாற்றத் திறனுக்கும் (Metabolic Rate) இடையே ‘மரபணு ரீதியான நேர்மறை சார்புத் தன்மை’ (Genetically Positive Correlation) உள்ளது. நாட்டுப் பசுவினங்களை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்களுக்கு வளர்ச்சிதை மாற்றத் திறன் அதிகம். எனவே தான் நாட்டுப் பசுவினத்தை விட சீமை மற்றும் கலப்பின பசுவினங்கள் அதிகமாக பாலை சுரக்கிறது.

அது சரி வளர்ச்சிதை மாற்றத் திறன் என்றால் என்ன? என்று தானே கேட்கிறீர்கள். ஒரு உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு, அவற்றை செரிக்கும் திறன், செரித்த உணவை உறிஞ்சும் திறன், உறிஞ்சிய உணவிலிருந்து உயிர்வேதி வினைகள் மூலம் வெளிப்பட்ட ஆற்றலை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகைப் பண்பே (Complex Trait) அவ்வுயிரினத்தின் வளர்ச்சிதை மாற்றம் எனப்படுவது.

சீமை மற்றும் கலப்பினப் பசுவினங்களுக்கு நாட்டுப் பசுவினங்களை விட அதிக வளர்ச்சிதை மாற்ற திறன் உள்ளதற்கு என்ன காரணம்?

சீமை மற்றும் கலப்பின பசுவினங்களின் பரம்பரை பரம்பரையாக (Generation after Generation) சந்ததிகள் (Ancestors) மூலம் கடத்தப்பட்டு (Inherited) வந்த மரபுத் திறனே (Genetic Potential) காரணமாகும்.

அப்படியென்றால் சீமையின பசுக்களுக்கு ‘ஆதியிலேயே’ அதிகளவு பாலை சுரக்கும் மரபுத் திறன் இருந்ததா?

இல்லவே இல்லை. சில நூறு வருடங்களுக்கு முன்னர் சீமைப் பசுக்களும் நாட்டுப் பசுவினங்களைப் போல மிகக் குறைந்த அளவிலேயே பாலை சுரந்தன. சீமைப் பசுக்களும், சீமை பொலிக் காளைகளும் தொடந்து பல சந்ததிகளாக பால் உற்பத்திக்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு (Selection) இனவிருத்தி (Breeding) செய்யப்பட்டன. அதாவது அதிகமாக பால் சுரக்கும் பசுக்களையும் (High Milk Yielding Cows), அதிகமாக பால் சுரக்கும் பசுக்களால் பெற்றெடுக்கப்பட்ட காளைகளையும் (Bull of High Milk Yielding Cow) மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகளை பெற்றெடுக்க அனுமதிக்கப்பட்டன.

படிக்க :
மாண்புமிகு எருமை மாடுகள் !
இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

மந்தையிலுள்ள மற்ற குறைந்த திறனுள்ள பசுக்களும், காளையும் கழித்துக் கட்டப்பட்டன (Culled). இப்படி அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவைகளை மட்டுமே இனவிருத்திக்கு பயன்படுத்தியதன் விளைவாக ஒவ்வொரு சந்ததிகளிலும் உள்ள பசுக்கள் மற்றும் காளையின் பால் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் (Genetic Potential for Milk Production) மேம்படுத்தப்பட்டது.  பால் உற்பத்தியை கணிசமாக உயர்த்தவும் முடிந்தது.  இன்னமும் அது தொடர்கிறது.

அதே காலகட்டத்தில் நம் நாட்டின பசுக்களும், பொலிக் காளைகளும் வேளாண் வேலைக்காக (Draught Power) தேர்ந்தெடுக்கப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டன. எளிமையாக சொல்வதென்றால் நமக்கும், மேலை நாட்டவர்க்கும் தேவைகள் (Demand) வெவ்வேறாக இருந்ததால் மாடுகளை இனவிருத்தி செய்வதன் நோக்கமும் (Breeding Goal) வெவ்வேறாக இருந்தது. அவர்களுக்கு பால். நமக்கு வேலைத் திறன்.

குளிர் தட்பவெப்ப காலநிலை (Cold Climate), பரந்த மேய்ச்சல் நிலம் (Extensive Grass Land), பெரிய அளவிலான பண்ணைய முறை (Large Scale Farming System), திட்டவட்டமான இனவிருத்திக் கொள்கைகள் (Planned Breeding Policies)… போன்ற பல காரணிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளில் (Temperate Countries) உள்ள பசுவினங்களை அதிக பால் உற்பத்தியை நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன.

அதைப் போலவே கோடை தட்பவெப்ப காலநிலை (Hot Climate), பரந்த சாகுபடி நிலம் (Extensive Cultivable Land), மிகமிகச் சிறிய அளவிலான பண்ணைய முறை (Micro and Small Scale Farming System) போன்ற பல காரணிகள் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் (Tropical Countries) உள்ள பசுவினங்களை அதிக வேலைத் திறன் நோக்கி மேலும் மேலும் பரிணமிக்க வைத்தன.

ரெட் டேன் (Red Dane) பசு.

இப்படி ஆதி காலத்து மாட்டு மந்தைகள் தான் வாழும் சூழல் (Ecosystem) சார்ந்து பாலுக்காகவும், வேலைக்காகவும் என இருவேறு கிளைகளாக பரிணமித்தன (Evolved). இன்றளவும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர் இயற்கை நிகழ்வாகும்.

ஆதியில் வெவ்வேறு நிலப்பரப்புகளில் மேய்ந்து திரியும் மாட்டு மந்தைகளாக மட்டுமே அறியப்பட்ட கூட்டங்களெல்லாம் கால ஓட்டத்தில் பாலுக்கான மந்தைகளாகவும், வேலைக்கான மந்தைகளாகவும், இறைச்சிக்கான மந்தைகளாகவும் மாற்றப்பட்டன.

பால், இறைச்சி போன்றவை வணிக பண்டங்களாக்கப்பட்ட (Commercial Commodity) பின் அவற்றின் உற்பத்தி ‘தேவையின் அடிப்படையில்’ (Demand Based) அமையாமல் ‘லாபத்தின் அடிப்படையில்’ (Profit Based)  மாற்றியமைக்கப்பட்டது. பெரிய பெரிய கறவைப் பண்ணைகள் முளைக்க ஆரம்பித்தன. பண்ணை முதலாளிகள் ஒன்று சேர்ந்து உற்பத்தியை மேலும் மேலும் பெருக்குவதற்கு திட்டத்தை வகுத்தனர். தொழில்நுட்பத்தையும் புகுத்த ஆரம்பித்தனர்.

மாட்டு மந்தைகள் பால் உற்பத்தி திறன் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு தனித்தனியாக இனவிருத்தி செய்யப்பட்டன. இவ்வாறு பல சந்ததிகள் தொடர்ந்து செய்யும் போது ஒவ்வொரு மாட்டு மந்தையும் தங்களுக்குள் ஒரே அளவிலான பால் உற்பத்தியையும், ஒரே மாதிரியான தோற்றத்தையும் பெற்றன. அவைகளுக்கு அவை வாழும் இடம் சார்ந்து ஒரு ‘பெயரும்’ சூட்டப்பட்டன. அப்பெயரே பிற்காலத்தில் இனத்தின் பெயராக (Breed Name) அறியப்பட்டது. இன்றளவும் அறியப்படுகிறது.

ப்ரௌன் ஸ்விஸ் (Brown Swiss) பசு.

இப்படி பெரும் பண்ணை முதலாளிகளால் தோற்றுவிக்கப்பட்டது தான் ‘இனம்’ எனும் கருத்துரு (Breed Concept). ஆக இனம் எனும் கருத்துரு பால் மற்றும் இறைச்சி வணிகமயப்படுத்த ஆரம்பித்த பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஒன்றேயாகும்.

ஒவ்வொரு இனத்தையும் வணிக ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்திற்காக பண்ணை முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டமைப்பு தான் “இனச் சங்கம்” (Breed Association) என்பது. இதன் முக்கிய நோக்கம் அது சார்ந்த இனத்தை பற்றிய உடல் தோற்றம், வளர்ச்சி, பால் உற்பத்தி, தீவனம் உட்கொள்ளும் அளவு, நோய் எதிர்ப்பாற்றல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முறையாக பதிவு (Recording) செய்வதும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இனவிருத்தியை மேற்கொள்ள ஆலோசனைகளை (Breeding Consultancy) வழங்குவதுமே ஆகும்.

இப்படியெல்லாம் சில நூறு வருடங்களாக செயல்பட்டுக் கொண்டுள்ள “இன மேம்பாட்டு திட்டம்” (Breed Improvement Programme) எனும் மிக நீண்ட திட்டத்தினால் விளைந்ததே இன்று நாம் கண்டு அதிசயிக்கும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீஷியன் (Holstein Friesian), ஜெர்சி (Jersey), ப்ரௌன் ஸ்விஸ் (Brown Swiss), ரெட் டேன் (Red Dane) போன்ற பால் உற்பத்திக்கு பிரசித்திப் பெற்ற சீமை பசுவினங்களெல்லாம்.

வேலை திறனுக்கு பிரசித்திப் பெற்ற நாட்டு மாட்டினங்களை சீமை பசுவினங்களைப் போல அதிக பாலை சுரப்பவையாக மாற்ற முடியுமா?

முடியும். நாட்டுப் பசுவினங்களின் பால் உற்பத்தி திறனை சீமை பசுவினங்களைப் போல அப்படியே மாற்ற முடியாவிட்டாலும் கணிசமாக (Significantly) கண்டிப்பாக உயர்த்த முடியும். ஒரு இனத்தின் பால், இறைச்சி உள்ளிட்ட உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் நாம் தொடர்ந்து செயல் படுத்த வேண்டியதெல்லாம் ”இன மேம்பாட்டு திட்டம்” எனும் திட்டமே ஆகும். குறைந்தபட்சம் சில நூறு வருட பொறுமையும், உழைப்புமே இதற்கு அடிப்படை. “மனமிருந்தால் மார்க்கமுண்டு.”

இன மேம்பாட்டு திட்டத்திற்கும், கலப்பினச் சேர்க்கை திட்டத்திற்கும் (Cross Breeding Programme) உள்ள வித்தியாசம் என்ன?

இன மேம்பாட்டு திட்டமென்பது ஒரு இனத்திற்குள்ளாகவே சிறந்த பசுக்களையும் காளைகளையும் தேர்ந்தெடுத்து பல சந்ததிகளுக்கு இனவிருத்தி செய்யப்படுவது. பல சந்ததிகளுக்குப் பிறகு இனத்தின் உற்பத்தி சார்ந்த மரபுத் திறன் கணிசமாக உயர்த்தப் படுகிறது. அதே சமயத்தில் இனத்தின் புறத் தோற்றத்தில் (Phenotypic Appearance) மாறுபாடு ஏற்படுவதில்லை.

படிக்க :
மத்தியப் பிரதேசத்தின் மாடுகள் சரணாலயம் – A Horror Story !
A1, A2 பால் – உண்மைதான் என்ன?

ஆனால் கலப்பினச் சேர்க்கை என்பது சீமை காளையையும் நாட்டு பசுவையும் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தி கலப்பின மாடுகளை பெறுவதாகும். கலப்பின பசுவானது சீமை மற்றும் நாட்டு மாட்டினங்களின் பண்புகளை ஒருங்கே (Combined) பெற்றிருக்கும். கலப்பின மாடு தோற்றத்தில் நாட்டு மாட்டினத்தைப் போல் இருக்காது. ஆகவே இங்கு நாட்டின மாடுகள் அழிக்கப்படுவதாக பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டு மாடினங்கள் பரிணமித்த இந்திய சூழலில் கலப்பின மாடுகளால் ஒரு போதும் பிரகாசிக்க முடியாது. இந்த முரண்பாடு தான் வர்த்தக கறவை பண்ணைகளின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலமாக இருக்கிறது.

இந்தியா பால் உற்பத்தியை பெருக்குவதற்காகஇன மேம்பாட்டு திட்டத்தைகைக்கொள்ளாமல்கலப்பினச் சேர்க்கை திட்டத்தைதேர்ந்தெடுத்தது ஏன்?

கலப்பினச் சேர்க்கை மூலம் பால் உற்பத்தியை குறுகிய காலத்திலேயே பெருக்க முடியும் என்பதால் தான். மேலும் கலப்பினச் சேர்க்கைக்கு தேவையான சீமை காளைகள் உறைவிந்து (Frozen Semen) வடிவில் மிக எளிதாக ‘உலகமய’ சந்தையில் கிடைத்ததும் மற்றொரு காரணம். வீடுகள் தோறும் சிதறிக் காணக்கிடந்த நாட்டின பசுக்கள், அவற்றை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் இருந்த கள பிரச்சினைகள், அன்று நிலவிய சமுதாய – பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணிகள் ‘இன மேம்பாட்டு திட்டத்தை’ கைக்கொள்வதை ஆதரிக்கவில்லை.

கலப்பினச் சேர்க்கை திட்டத்தை களத்தில் அமல்படுத்தும் போது தெரிந்தோ தெரியாமலோ இழைத்த சில தவறுகளால் நாட்டு பசுவினங்களை இன்று நாம் கணிசமாக இழந்திருக்கிறோம். மறுப்பதற்கில்லை. அதை உணர தொடங்கியதன் விளைவு தான் இன்று நாட்டு மாட்டினங்களின் மீது நாம் காட்டும் கரிசனம் என்பது.

இழந்த நாட்டு மாட்டினங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா?

முடியும். ஆனால் முடியாது.

புரியவில்லையே?

இழந்த நாட்டு மாட்டினங்களை கலப்பினச் சேர்க்கை மூலமே மீட்டெடுக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா?

ஜெர்சி (Jersey) பசு.

“கலப்பினச் சேர்க்கையால் தானே நாட்டு மாட்டினங்களை தொலைத்தோம். பிறகெப்படி அதே கலப்பினச் சேர்க்கை தொலைந்துப் போன நாட்டு மாட்டினங்களை மீட்டெடுக்கும்?” என்று தானே கேட்கிறீர்கள். இன்றுள்ள கலப்பினப் பசுக்களை நாட்டு மாட்டின காளைகளுடன் தொடர்ந்து ஆறு சந்ததிகளுக்கு இனச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது ஏழாவது சந்ததிகள் 100% நாட்டு மாட்டினமாக மாற்றமடைந்திருக்கும். இழந்த நாட்டு மாட்டினத்தை மீட்டெடுத்திருப்போம். எனவே தான் ‘முடியும்’ என்றேன்.

ஆனால் ஏழாவது சந்ததி பசுக்களின் பால் உற்பத்தி இன்றைய கலப்பின பசுக்களைப் போன்று அதிகமாக இருக்காது. நாட்டு மாட்டின பசுக்களை போன்று குறைவாகத் தான் இருக்கும். இதை நாம் விரும்புவோமா? மாட்டோம் தானே? கண் திறந்தது முதல் கண் மூடும் வரை பால் தானே நம் மூச்சு. எனவே தான் ‘முடியும் ஆனால் முடியாது’ என்றேன்.

முடியுமா, முடியாதா என்பதெல்லாம் நம் கையில் தான் உள்ளது!     கறவைப் பசுக்களில் நாட்டுப் பசு, சீமைப் பசு, கலப்பினப் பசு என்பதெல்லாம் ஒரு வகையான ஒப்பீட்டு சொல்லேயாகும். அதை தவிர உள்ளார்ந்த, மாற்ற முடியாத, மாற்றத்திற்குட்படாத பொருள் என்று எதுவுமில்லை.

– முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி.
உதவிப் பேராசிரியர்,
விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
மின்னஞ்சல்: jagadeesankrishnan@gmail.com
மாற்று மின்னஞ்சல்: jegadeesan.k@tanuvas.ac.in

குறிப்பு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கத்திற்கு கட்டுரையின் ஆசிரியரே பொறுப்பாவார்ஆசிரியர் சார்ந்துள்ள பல்கலைக்கழகமோவேறு சில அமைப்போ பொறுப்பல்ல.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

3 மறுமொழிகள்

 1. எளிதில் புரியும்படியான பயனுள்ள கட்டுரை. மேற்குலகில் பாலுக்காக இனவிருத்தி ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் எது? தட்ப வெட்ப நிலையை கடந்து அவர்களுக்கு வேலைதிறனுக்காக மாடுகள் தேவைப்படாததற்கு காரணம் என்ன? இயந்திரமயமாக்கல் காரணமா?

  அந்த காலகட்டத்தில் நாம் ஏன் முதன்மையாக உழைப்புக்காக மாடுகளை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். அவர்களைப்போல நம் நாட்டில் பாலுக்கான demand இல்லாமல் இருந்தது ஏன்? அம்பேத்கர் கட்டுரைகளில் எங்கோ படித்த நினைவு ஒடுக்கப்பட்ட சாதியினர் வெண்ணை பயன்படுத்தியதற்காக தாக்கப்பட்டனர் என்கிற சம்பவம். மக்களில் ஒரு பிரிவினர் பால் பொருட்களை பயன்படுத்தாமல்/பயன்படுத்தவிடாமல்/பயன்படுத்தமுடியாமல் இருந்தார்களா? அப்படி இருந்தால் அது காரணமாக இருக்கமுடியுமா?

  நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?அதனால் என்ன பயன்?

  படிக்கும் போது இது போன்ற கேள்விகள் எழுந்தன.

  • 1. மேற்குலகில் பாலுக்காக இனவிருத்தி ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் எது?
   18ஆம் நூற்றாண்டின் மத்தியில்… இராபர்ட் பேக்வெல் (Robert Bakewell) தான் விலங்கின இனவிருத்தியலின் தந்தை (Father of Animal Breeding) என போற்றப்படுகிறார்.

   2. தட்ப வெட்ப நிலையை கடந்து அவர்களுக்கு வேலைதிறனுக்காக மாடுகள் தேவைப்படாததற்கு காரணம் என்ன? இயந்திரமயமாக்கல் காரணமா?
   1. தட்பவெப்ப நிலை 2. வேளாண் வேலைக்கு “குதிரைகளை” அவர்கள் பயன்படுத்தியது. 3. தொழிற்புரட்சியின் தாக்கத்திற்கு நம்மை விட அவர்கள் தான் முன்னதாக ஆட்பட்டார்கள். ஆகவே இயந்திரமயமாக்கம் அவர்களிடையே அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையிலேயே அங்கு காணப்பட மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கான மரபணு பிறழ்வை (Gene Mutation favouring High Milk Production) பெற்றிருந்தது ஆகும்.

   3. அந்த காலகட்டத்தில் நாம் ஏன் முதன்மையாக உழைப்புக்காக மாடுகளை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். அவர்களைப்போல நம் நாட்டில் பாலுக்கான demand இல்லாமல் இருந்தது ஏன்?
   உணவில் பால் மற்றும் பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளும் “கலாச்சாரம்” நம்மை விட “அவர்களுக்கு” அதிகமாக இருந்தது. இன்றும் இருக்கிறது. அதற்கும் காரணம் அவர்களின் வாழும் “சூழலே (Ecosystem)”. நம் நாட்டில் கணிசமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உண்ணும் கலாச்சாரம் விரவிக் காணப்பட வில்லை. அதற்கு காரணம் இங்கு நிலவிய ”சூழலும் அதனையொத்த கலாச்சாரமுமே” ஆகும்.
   4. அம்பேத்கர் கட்டுரைகளில் எங்கோ படித்த நினைவு ஒடுக்கப்பட்ட சாதியினர் வெண்ணை பயன்படுத்தியதற்காக தாக்கப்பட்டனர் என்கிற சம்பவம். மக்களில் ஒரு பிரிவினர் பால் பொருட்களை பயன்படுத்தாமல்/பயன்படுத்தவிடாமல்/பயன்படுத்தமுடியாமல் இருந்தார்களா?
   இருக்கலாம். ஜாதிக்கும், உணவுக்கும் இடையே ஏராளமான தொடர்புகள் உள்ளன. இன்றும் ஏதோ சில குக்கிராமங்களில் இருக்கிறது. ஆனால் அது சார்ந்த வன்முறைகள் நடைபெறுவதில்லை. இதற்கு காரணம் இன்றுள்ள சட்ட பாதுகாப்பே ஆகும்.

   5. அப்படி இருந்தால் அது காரணமாக இருக்கமுடியுமா?
   இதை ஒரு நேரிடையான காரணமாக கொள்ள முடியாது.

   6. நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?அதனால் என்ன பயன்?
   இந்நிலம் சார்ந்த மாடுகள் என்பது இச்சூழல் சார்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாக மரபணு பிறழ்விற்கு உட்பட்டு பரிணமித்தவையாகும். அவற்றை நம் “நாக்கு ருசிக்காக” வேறொரு இனமாக “கட்டுப்பாடற்று” மாற்றுவது எதிர்காலத்தில் ”மீளமுடியாத” விளைவை (Irreversible Effect) ஏற்படுத்தும். மேலும் விவரங்களுக்கு 9566082013 தொடர்பு கொள்ளவும்.

   நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க