வெப்ப மண்டல நாடான இந்தியாவின் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிப்பது இயல்பு. எனினும் ஒவ்வொரு கோடையிலும் இந்த ஆண்டு வெயில் அதிகம் என்று பேசுவது மக்கள் வழக்கம். இதற்கு சூழலியல் காரணம் இருந்தாலும் கடினமாகி வரும் வாழ்க்கைச் சூழலால் மக்கள் வெயிலை எதிர்கொள்ள முடிவதில்லை. தீபாவளியும் கூட இனி ” முன்ன மாதிரி இல்லை” எனும் வழக்கில் இடம் பெற்று விட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, எரிபொருள் விலை உயர்வு என மும்முனைத் தாக்குதலில் தீபாவளி கொண்டாட்டமும் தப்பவில்லை.

தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கைத் தவிர பட்டாசு விற்பனை, ஜவுளி வியாபாரம் அனைத்தும் புஸ்வாணமாகி இருக்கிறது. பண்டிகை நாட்களும் வழக்கமான நாட்களைப் போன்று  கடந்து செல்லும் நாட்களாகி உள்ளன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வினர்  என்னதான் இந்து, இந்து ராஷ்டிரம், பாரதக் கலாச்சாரம் பேசினாலும், “பொருளாதார நெருக்கடிகள்” பண்டிகை கலாச்சாரத்தை நொறுக்கி வருவது உண்மை. தீபாவளி அன்று, சென்னையில் வசிக்கும் மக்களிடம்  “இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.

பவளவண்ணன், பட்டாசு விற்பனையாளர்.

நீதிமன்ற தீர்ப்பால் தொழில் பாதிப்படைந்துள்ளது உணமைதான். ஆனால் இந்த தீர்ப்பு நாட்டிற்கு நல்லது என்ற அடிப்படையில் வரவேற்கிறோம். சென்ற ஆண்டு 1 மணிக்கெல்லாம் பட்டாசு காலி ஆகிவிட்டது. இந்த ஆண்டு விற்பனையாகவில்லை. பொதுவாக பண்டிகை காலம்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதனை மனதில் வைத்துக்கொண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். சில இயற்கை ஆர்வலர்கள் சொல்வதைக் கொண்டு தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதுதான் விற்பனை தொய்வு ஏற்பட்டதற்கு காரணம்.

என்னுடைய ரெகுலர் கஸ்டமர் ஒருவர், ரூ.40,000-க்கு பட்டாசு வாங்குவார்.  இந்த ஆண்டு ஐந்தாயிரத்துக்கு மட்டுமே வாங்கினார். கேட்டால் “இரண்டு மணி நேரத்தில் இதுமட்டும்தான் வெடிக்க முடியும்” என்கிறார்.

லோகேஷ், தீபக், தனுஷ், சுப்பிரமணி –  +2  மாணவர்கள்

போன வருஷம் முழுக்க முழுக்க பட்டாசுதான். இந்த வருஷம் ஒன்லி படம்தான். இப்ப சர்கார் பார்த்துட்டு வர்றோம். ஒரு ஆளுக்கு டிக்கெட் 300 ரூபா. இந்த வருஷம் துணி எடுக்கவும், படத்துக்கு பணம் புரட்டவுமே பெரும்பாடு பட்டோம். வீட்டுல காசு கேட்டா கஸ்டமா இருக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டாங்க.. இருந்தாலும் போராடி ஒவ்வொருத்தரும் 1500 ரூபாய் வாங்கினோம். அதுல ஒரு ஆளுக்கு ட்ரெஸ்ஸு 1100 ரூபா. 300 ரூபா படம்… வந்து போறதுக்கு 100 ரூபா.

”எங்க அம்மா ஜூனியர் ஆர்டிஸ்ட்… ஷூட்டிங் போனாதான் காசு. இப்ப வேலையே இல்ல. இந்த நெலைமையில எப்படி செலவு பண்ண முடியும். ஒவ்வொரு வருஷமும் நெலம மாறிக்கிட்டே இருக்கு. போன வருஷம் மாதிரி இப்ப இல்லை” என்கிறார் லோகேஷ்.

அண்ணாமலை, ஆட்டோ ஓட்டுநர் – வடபழனி.

எங்க சார்… கஷ்டமா இருக்கு.  எவ்ளோதான் ஓட்டினாலும் ஒரு நிமிஷம் வீட்டுல உக்காந்து சந்தோஷமா இருக்க முடியல. ஆட்டோ ஓட்டினாதான் வீட்டுக்கு போகும்போது எதையாவது வாங்கிட்டு போக முடியும். பண்டிகையின்னா எதையாவது பண்ணியாகணும்னு இருக்கு. காசு இல்லன்னு பசங்கள சும்மா விட்டுட முடியுமா?

இந்த வருஷம் கடன் வாங்கிதான் செலவு பண்ணியிருக்கேன். போன வருஷம் 4,800 ரூபா செலவு பண்ணேன். இந்த வருஷம் 2,000 ரூபாயில பசங்களுக்கு மட்டும் சிம்பிளா துணி எடுத்தேன். போகும்போது கொஞ்சமா பட்டாசு வாங்கிட்டு போகணும்.

திருப்பதி – பழைய புத்தக விற்பனையாளர்.

“எந்த வருமானமும் இல்லை சார். எப்பவாது புத்தகம் விற்பனையாகும். அதுவும் அய்யர் வீட்டு பெண்கள்தான் வாங்குவாங்க. அதை எந்த செலவும் செய்யாம தேவை வரும்போது எடுத்து செலவு பார்த்துப்பேன். ஒருநாளைக்கு 200, 300 ரூபாய் வருமானம் வரும். அதுல தினமும் 70 ரூபாய் பெட்ரோல் போட்டுடுவேன். தினமணி பேப்பர் வாங்குவேன். இவ்ளோதான் செலவு. பசங்கள அரசுப் பள்ளியில சேர்த்திருக்கேன். சொந்த வீடு இருக்கு. அதனால சமாளிக்க முடியுது சார்.

பசங்களுக்கு துணி, பட்டாசு எதுவும் எடுத்து தரலை. கூடுதலா கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதிச்சதால சவுரியமா போச்சி. அதனால செலவு இல்லை. உங்களைப் போன்ற  இளைஞர்கள் எப்போ புத்தகம் படிக்கும் பழக்கத்தை கைவிட்டார்களோ அப்போதே தொழில் முடிஞ்சு போச்சு. வேறு தொழில் தெரியாதுன்றாதல இதுலயே உழல வேண்டி  இருக்கிறது. என்னோட பையன் துப்பாக்கி சுடும் போட்டியில முதல் இடத்துல இருக்கான். ஆனா அவனுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவைக் கூட வாங்கிதர முடியவில்லை” என்கிறார் கவலையோடு.

சுப்பிரமணி- ஆட்டோ ஓட்டுநர்.

இப்ப இதகேட்டு இன்னா ஆவப்போவுது… சொல்லுங்க? சர்க்கார் படத்துக்கு போவணும். பாக்கெட்ல 200 ரூபா இருக்கு. இன்னும் 50 ரூபா சவாரி கெடச்சா படத்துக்கு போயிடலாம். அதுக்கு தான் அலஞ்சிகிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு 500 கெடச்சாலே பெரிய விசயமா கீது… ஓலா வந்த பிறகு 200 ரூபா கூட கெடக்க மாட்டேன்’து. டீசல் வெலை எல்லாம் ஏறிடுச்சி. நாங்க எக்ஸ்ட்ரா சார்ஜ் கேட்டா மக்கள் மொறைக்கிறாங்க. அதனால நம்ம ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கினாதான் வாழ முடியுது…!

மூர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்.

மாசம் பதிமூனாயிரம் சம்பளம் வாங்குறேன்… இதுல எப்படி பட்ஜெட் போட்டு வாழ முடியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆட்டோகார் 5 ரூபா ஏத்திக் கேட்டா தர்லன்னு சொன்னாரு. அது அவரோட நெலமை. அதை தர முடியாத நெலமதான் எங்களுக்கு இருக்கு. பார்க்க சின்ன பொருளா இருக்கும்.. ஆசையா வாங்கலாம்னு விலைய கெட்டா அதிர்ச்சியா இருக்கு… அமைதியா திரும்பி வந்துடுறோம். இதான் நெலமை.  கம்பனியில ஐந்தாயிரம் போனஸ் கொடுத்தாங்க… அப்படியே வீட்டுல கொடுத்துட்டேன். அதை வச்சி அவங்க என்ன பண்ணாலும் இனி அவங்க பாடுதான். அதுக்கு மேல என்ன பண்ண முடியும்?

பூமிநாதன், கரும்பு ஜுஸ் கடை.

சொந்த ஊரு ராமநாதபுரம்.. சின்ன வயசுல இங்க வந்துட்டேன். ஊர் திருவிழா தவிர வேற எந்த பண்டிகையும் கொண்டாடுறதே இல்ல. குறைந்தது 15,000 ரூபா இருந்தாதான் குடும்பத்தோட ஊருக்கு போக முடியும். அதுக்கேத்த வருமானமும் இல்ல.

வெய்யில் காலமா இருந்தாலும் பரவாயில்ல… சம்பாதிச்சிடுவேன். இது மழைக்காலம். தினமும் 500 ரூபா தான் வருது. இந்த மிஷினுக்கு தினமும் 250 ரூபாய்க்கு டீசல் போட்டுடுறேன். ரெண்டு பேருக்கு டீ 60 ரூபா செலவாகிடுது. மிச்ச பணத்த வச்சி என்ன பண்றது? எனக்கு ஒரே பையந்தான். அவனுக்கே எதுவும் எடுத்து தரல. பட்டாசும் வாங்கல. கறி சோறுகூட சாப்பிட முடியல. மூணு வேளையும் சோறுதான்.

விஜய்- வங்கி ஊழியர்,  சுகைன் – சுய தொழில் செய்பவர்.
விஜய் – சுகைன்

“இன்னைக்கு இருக்க கூடிய கடும் நெருக்கடியில அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். மளிகை, காய்கறி, பால் இதுக்கே வாங்குற சம்பளத்துல துண்டு விழுது. அப்படி இருக்கும்போது விழாவை எப்படி சமாளிக்க முடியும்? போனஸ் கொடுத்தா சமாளிக்கலாம்.

ஏற்கனவே பல பண்டிகை காணாமல் போயிடுச்சி. இதனையும் விட்டுட்டோம்னா மகிழ்ச்சியே இல்லாம போயிடும்.  டென்சனா இருந்தா அதை மறக்க இந்த பண்டிகை பயன்படுது. அதே சமயம்.. பணம் பற்றாக்குறையா வரும்போது பிரச்சனையாயிடுது”  என்கிறார் விஜய்.

சுகைன்

இது தீபாவளி மாதிரி தெரியவில்லை. மூனு வருசத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு முதல்நாளே அமர்களமாகிடும். இப்ப அந்தமாதிரி இல்ல. கடந்த மூனு வருஷமா எல்லாத்தையும் இழந்துட்டோம்.  இந்த அரசாங்கத்தால எந்த பலனும் இல்ல. எல்லாம் கார்ப்பரேட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் தருது.. இதை கேட்க பப்ளிக் லீடர்சும் இல்லை. என்ன சொல்றது.. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல.

ரமேஷ், அரசு கார் ஓட்டுநர்.
ரமேஷ் (வலது)

இந்த ஆண்டு அர்ரியர்ஸ் போட்டுட்டாங்க. மொத்தம் நாற்பதாயிரம் வந்ததால பிரச்சினை இல்ல. இல்லனா வீட்டுல இருக்க பொருட்களை கொண்டு போயிட்டு அடமானம் வச்சிருக்கணும். அதுவும், இல்லையா… எங்க அய்யாகிட்டதான் (நீதிபதி) வாங்கியிருப்பேன். காசு வந்ததும் வீட்டுல எல்லாரும் கெளம்பி காஞ்சிபுரம் போயிட்டாங்க. ரூ.30,000-க்கு துணி எடுத்துட்டாங்க… 5,500-க்கு பட்டாசு வாங்கிருக்காங்க. அதனால போன வருஷம் மாதிரி எனக்கு இந்த வருஷம் இல்ல.

நடராஜன், பழைய புத்தக விற்பனையாளர்.

“மக்கள் கிட்ட பணப்புழக்கம் சுத்தமா இல்ல. அப்புறம் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்.   ரமணிச்சந்திரன் புத்தகம் பெண்கள் வாங்குவாங்க, ராஜேஸ்குமார் நாவல் ஆண்கள் வாங்குவாங்க. பழைய புத்தகம் என்பதால 10 ரூபாய்க்கு கொடுப்பேன். அவங்க படிச்சிட்டு வந்து திருப்பி தருவதாக இருந்தால் 5 ரூபாய் வாங்கிப்பேன். இதுக்கே யாரும் வரது இல்ல.” என்கிறார் விரக்தியாக!

அண்ணாமலை – மூர்த்தி, கோயம்பேடு வாகன டோக்கன் போடுபவர்கள்.
அண்ணாமலை – மூர்த்தி

வீட்டில் இருந்தால் செலவுன்னுதான் இந்தப் பக்கம் வந்துவிட்டோம். ஓனர் ரூ.1000 போனஸா கொடுத்தார். அதைத்தான் வீட்டில் கொடுத்தோம். அதையும் பசங்க சினிமாவுக்கு போறேன்னு புடுங்கிட்டு போயிட்டானுங்க. இன்னா பண்றது? இந்த வருஷமே இப்படின்னா… இன்னும் வர வருஷம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியல.

ஜமால், துணி வியாபாரம்.

”தம்பி, நான் முசுலீம். இருந்தாலும் நீங்க கேட்டதால் சொல்லுறேன். இருபது வருஷமா இந்த வியாபரம் செய்யுறேன்.  சரியா ஒரு வாரத்துக்கு நல்ல சேல்ஸ் இருக்கும். இந்த முறை ஞாயித்துக்கிழமை மட்டும்தான் போச்சி. இன்னைக்கு காலையில இருந்து ஒன்னும் ஓடல. அதான் மூட்டை கட்டிடலாம்னு இருக்கேன்.”

இப்படியாக பார்க்குமிடமெல்லாம் தீபாவளி ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு பெரும் சோகத்தையே அளித்துள்ளது. பண்டிகை என்பதால் குடும்பதினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கித் தரவேண்டும் என்பதே அந்தக் கவலையின் குவி மையம். அரசு, தனியார் நிறுவனங்களில் ஓரளவு நல்ல மாத சம்பளம் வாங்குவோரைத் தவிர இதர பிரிவினர் அனைவருக்கும் தீபாவளி மகிழ்ச்சியாக இல்லை. இம்மக்கள்தான் பெரும்பான்மையினர். அங்காடிகளின் தள்ளுபடி விற்பனைகள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், ஊடகங்களின் கொண்டாட்டங்களைத் தாண்டி உண்மையான தீபாவளியின் யதார்த்தம் இதுதான்.